சூர்யாவுக்கு எத்தனை விருதுகள்? ஜெய்பீம்- விமர்சனம்

Share

கருப்புக்கோட்டுக்கும், காக்கி சட்டைக்கும் நடுவே நடக்கிற யுத்தம்தான் ஜெய்பீம். இருட்டுக்கு வாக்கப்பட்ட இருளர் சமூகத்திற்காக ஒரு மெழுகு வர்த்தியை மட்டுமல்ல, ஒரு சூரியனையே கொளுத்தி வைக்கிறார் சூர்யா. விண்ணுக்கும் மண்ணுக்குமாக அடிக்கிற இந்த வெளிச்சத்தில், பல உண்மைகள் பளிச் பளிச்!

ஏழைகளின் உயிரென்றால் இளப்பமா? இதையெல்லாம் கண்டும் காணாமலிருக்கதான் படிச்சமா? என்று பொங்கி எழுகிற அந்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சந்துரு. இவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைதான் படமாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஃபிரேமும் உயிர் ஜுவாலை! இப்படியொரு காவியத்தை எடுக்கவும், நடிக்கவும் முன்வந்த சூர்யா பேமிலிக்கு முதல் வணக்கம். அதை தன் இம்மி பிசகாத திரைமொழியால் பதிவு செய்திருக்கும் இயக்குனர் த.செ.ஞானவேலுக்கு இரண்டாம் வணக்கம்.

‘என்னா ஆளுடா நீ’ என்று போலீஸ் கேட்கும் அந்த முதல் காட்சியிலேயே ஈரக்குலை நடுங்க ஆரம்பித்துவிடுகிறது. குறவர், இருளர் போன்ற அப்பாவி ஏழைகள் மீது அடுக்கடுக்காக பொய் வழக்குகளை போட்டு, நிலுவையிலிருக்கிற வழக்குகளை முடித்து வைக்கிற கொடூரம் அது. அப்படியொரு காட்டுமிராண்டி போலீஸ் வசம், அப்பாவி இருளர் இளைஞன் ஒருவன் சிக்கிக் கொள்ள, அவன் மீது திருட்டுப்பழி சுமத்துகிறது போலீஸ். செய்யாத தப்பை ஒத்துக்கோ ஒத்துக்கோ என்று மிருக வெறியோடு தாக்குகிறது. கடைசியில் லாக்கப்பிலிருந்து தப்பிவிட்டான் என்று கதையை முடித்து ஃபைலை குளோஸ் பண்ணுகிற நேரத்தில்தான் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கண்ணீருக்கு விடைதேடி கிளம்புகிறார் வழக்கறிஞர் சந்துரு. முடிவு என்ன என்பதுதான் இரண்டேமுக்கால் மணி நேரப் படம். நேரக்கணக்குதான் இப்படி. ஆனால் நிஜக்கணக்கு வேறு. ஐந்தே நிமிடத்தில் படம் முடிந்த உணர்வு.

வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா. பேச்சு, அசைவு, பார்வை, நடை என்று எல்லாவற்றிலும் கூர்மை கூர்மை அப்படியொரு கூர்மை. எடை மிஷினில் அளந்து வைத்தது போல அப்படியொரு கூடக் குறையாத நடிப்பு. இந்தப்படம் அள்ளப் போகும் விருதுகளில் சூர்யாவுக்கு மட்டும் எத்தனை எத்தனையோ? இனி எண்ண வேண்டியதுதான் பாக்கி.

லாக்கப்பில் சிக்கிக் கொண்ட அப்பாவியாக மணிகண்டன். பிரித்து மேயும் போலீஸ், ‘நான்தான் திருடுனேன்‘ என்ற ஒற்றை வார்த்தைக்காக தவிக்கிறது. ‘காயம் கூட ஆறிடும். ஆனா திருடன்ங்கிற சொல் சாகுற வரைக்கும் துரத்தும்‘ என்பதற்காக பிடிவாதமாக மறுக்கும் மணிகண்டன், அதற்காக வாங்குகிற அடி… நமக்கு வலிக்கிறது. இவருடன் கூடவே சிக்கிக் கொண்ட அந்த மேலும் சிலரால் நமக்கு உள் ஜுரமே வந்துவிடுகிறது. நடிப்பா? நிஜமா? என்று தவிக்க விடுகிறார்கள் அத்தனை பேரும்.

மணிகண்டனின் மனைவி செங்கேணியாக லிஜாமோல் ஜோஸ். வயிற்றிலும், மனசிலும், கண்களிலும் பெரும் சோகத்தை சுமந்தபடி வருகிறார். இப்படியொரு நடிப்பை மெனக்கெட்டு வாங்கினார்களா, இல்லை அவரே கொடுத்தாரா? படத்தில் அவரை கண்ணகி என்கிறார்கள். நிஜத்தில் அவர் சாவித்ரியும், பத்மினியும் போல நடித்திருக்கிறார். தேசிய விருதை வாங்குவதற்கு இப்பவே டெல்லிக்கு ஒரு டிக்கெட் போட்ரு தாயீ…

இனி சாலையோரங்களில் தனியாக நடந்தால் கல்லடி நிச்சயம். அப்படியொரு வெறுப்பை சம்பாதிக்கிறார் எஸ்.ஐ.குருமூர்த்தியாக நடித்திருக்கும் தமிழ். இருட்டப்பன், மொசக்குட்டி, மைத்ரா என்று கேரக்டர்கள் அனைத்தும் கச்சிதம்.

போலீஸ்ல நல்ல போலீசும் உண்டு என்பதை நிரூபிக்கும் பிரகாஷ்ராஜ், குற்றவாளிக் கூண்டில் ஏறி நிஜத்தை போட்டு உடைப்பதெல்லாம் கைதட்டல் காட்சிகள்.

ஷான் ரோல்டன் இசையில் ஒரு சில பாடல்கள்தான். ஹிட் ரகம் என்றாலும் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஷான்.

ஒரு நிமிஷம் கூட தொய்வில்லாத திரைக்கதைக்கு, பொருத்தமாக அமைந்திருக்கிறது பிலோமின்ராஜின் எடிட்டிங்.

கந்தகத்தை மடித்து வைத்த காகிதம் போல, இப்படியொரு ரத்த களறியான சப்ஜெக்டை தன் மனதில் எத்தனை காலம் பூட்டி வைத்திருந்தாரோ இப்படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல்? பக்குவமாக இறக்கி வைத்திருக்கிறார். இறக்கி வைத்த இடமெல்லாம் சுடுகிறது…

ஜெய் பீம்- இதுதான் நிஜமான குரலற்றவர்களின் குரல்!

ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply