தப்பித்தார் சுல்தான்! தப்புவாரா கர்ணன்?

Share

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் லாக்—டவுன் அமலுக்கு வந்தால், கார்த்தியின் ‘சுல்தான்’ ரிலீசுக்கு சிக்கலாகிவிடும் என்ற உஷார்த்தனத்தால் ஏப்ரல் 02—ஆம் தேதியே படத்தை ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. படமும் ஹிட்டடித்துவிட்டது. இப்பவெல்லாம் வெள்ளிகிழமை ஒரு படம் ரிலீஸ் சனி—ஞாயிறு தொடர்ச்சியாக பத்து ஷோ ஓடினால் ஹிட். திங்கள்—செவ்வாயையும் தாண்டி ஓடினால் அந்தப் படம் மெகா ஹிட்.

அந்த வகையில் சுல்தானும் திங்கள் கிழமை தாண்டியும் ஹவுஸ் ஃபுல்லானதால், புதன்கிழமை, அதாவது ஓட்டுப் பதிவு முடிந்து மறுநாளே படத்தின் சக்சஸ் மீட்டை வெற்றிகரமாக நடத்தினார்கள்.

படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவைத் தவிர, படத்தில் நடித்த அனைவரும் சக்சஸ் மீட்டில் ஆஜரானார்கள். குணசித்திர நடிகர் பொன்வண்ணன் தனக்கு மாமனாராக நடித்தால் அந்தப் படம் ஹிட் என பருத்திவீரனை நினைவுபடுத்தி, சுல்தானிலும் மாமனாராக பொண்வண்ணன் நடித்ததை செண்டிமெண்டாக பேசினார் கார்த்தி.

கார்த்தியின் கடின உழைப்பையும் அவரின் வளர்ச்சியையும் வெகுவாகப் பாராட்டினார் பொன்வண்ணன்.
சக்சஸ் மீட்டில் பேசிய அனைவருமே தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பாராட்டினார்கள்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ்—டைரக்டர் மாரி செல்வராஜ் காம்பினேஷனில் உருவான ‘கர்ணன்’ படம் ஏப்ரல்—09—ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சுல்தானின் சக்சஸ் மீட்டும் நடந்திருந்ததால் மகிழ்ச்சியில் இருந்தது கர்ணன் படக்குழு.

ஆனால் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமானதால் லாக்டவுன் மாதிரி, ஆனா லாக்டவுன் இல்ல என்ற கதையா சில கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10—ஆம் தேதி முதல் அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன். அந்தக் கட்டுப்பாடுகளில் முக்கியமானது சினிமா தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் தான் அனுமதி என்ற விதிமுறையால் ரொம்பவே நொந்துவிட்டார் தயாரிப்பாளர் தாணு.

ஆனாலும் நொம்பலத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், திட்டமிட்டபடி 09—ஆம் தேதி ‘கர்ணன்’ படம் ரிலீசாகும், அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும் பாதுகாப்புடனும் தியேட்டர்களில் திரையிடுவோம்” என சமாளித்துள்ளார் கலைப்புலி.

50% இருக்கைகள் மூலம் போட்ட பணத்தை எடுக்க முடியுமா? ‘கர்ணன்’ கரையேறி தப்பிப்பாரா என்பது வருகிற திங்கள் கிழமை தெரிந்துவிடும். ஏன்னா சக்சஸ் மீட் நடத்துவதில் கலைப்புலியும் சளைத்தவரல்ல.

-சீமராஜா

Leave A Reply