திருச்சி மாநில மாநாடு – அன்பில் அழைக்கிறார் 2 – C.N.ANNADURAI

Share

தம்பி,

“நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து’’ நின்று, தமது ஆட்சியின் பயனாக ஏற்பட்டுள்ள அமைதியையும், அந்த அமைதியால் விளைந்த வளத்தையும், வளம் உண்டு வாழும் மக்களுடைய மகிழ்வையும் கண்டு, கொற்றம் உடையோம், குறை ஏதும் தந்தோமில்லை என்று மனதிலே எண்ணி மகிழ்வுறும் மன்னர்களல்லவா, தாயகத்தில் ஆண்டு வந்தனர் என்று நமக்கு இலக்கியம் கூறுகிறது – இன்றைய ஏடுகள் கூறுவது என்ன?

வெள்ளமென்றும் வெந்தழல் என்றும், பஞ்சமென்றும் பட்டினி என்றும், குட்டமென்றும் காசமென்றும், குறை கூறித் திரியும் மக்கள், தேசத் துரோகிகள் – என்றல்லவா, நீதி நெறி விளக்கமளித் திடக் காண்கிறோம்! சிலம்பு ஒலித்த திருநாட்டிலே, இன்று, செய்வதென்னவென்று தெரியாதோரின் புலம்பலொலி அல்லவா கேட்கிறது! சீறும் புலியெனச் சிங்களத் தீவின்மீது படை எடுத்துச் சென்ற இனத்தான், “கள்ளத்தோணி’ என்றல்லவா ஏளனம் செய்யப்படுகிறான்?

முத்தெடுத்து மூலை முடுக்குகளில் உள்ள நாடுகளுக்கெல்லாம் அனுப்பிய தமிழன் இன்று பிச்சை எடுத்துப் பிழைக்க “அனுமதி’ கிடைக்கும் நாடு எது என்றல்லவா கேட்கிறான். ரோம் நாட்டு மாவீரர்களைக் கட்கமெடுத்து விளையாடியது போதும், கண்ணாளா! கனகப் பந்தளிக்கிறேன், விளையாடிட வாராய்! என்று அழைத்த, கண்டாரைக் கொல்லும் கட்டழகிகள் அந்தக் கவர்ச்சியினைப் பெற்றது, நந்தம் நாட்டினர் நெய்து அனுப்பிய பொன்னார் இழையும் துகிலும் என்று கவிவாணர் நமக்குக் கூற, இன்று கைத்தறியாளர் தம் கைக்குழந்தையை, காற்படி அரிசிக்கு விற்றிடும் கொடுமைக்கல்லவா ஆளாயினர்! கலம் கட்டினர் தமிழர் என்கிறது கல்வெட்டு; கல் உடைத்துப் பிழைக்க, கண்காணா நாடு செல்கின்றனரே அவர்தம் வழி வந்தோர், பிற்காலப் புலவர்கூட, “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!’’ என்று பாடினார். இன்றோ, செந்தமிழ் நாடெனும் போதினிலே, நெஞ்சில் செந் தீயாய் வேகுது டில்லி செங்கோட்டையிலே என்றல்லவா, கதற வேண்டி இருக்கிறது.

நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றம் காண்போம், வருகிறாயா, தம்பி! வா, சிந்தனைச் சிறகணிந்து வா, செந்தமிழ் நாடு இருந்த நிலையைச் சற்றே கண்டு வரலாம் வா.

பாண்டிய மன்னன், அரண்மனை மேல்தளத்தில், அமைத்துள்ள நிலாமுற்றம் – இங்கு நின்றால், திங்களின் எழிலைப் பருகிடலாமல்லவா! என்ன தம்பி, வாய்பிளந்து நிற்கிறாய்? மேல் தளத்தில் அருவி ஏது? அருவி ஓசை கேட்கிறதே என்றா ஆச்சரியப்படுகிறாய் – அருகே சென்று பார்த்திடலாம், வா! நீர் நிறைந்த நிலையமொன்று இருக்கிறது இந்த நிலா முற்றத்தில் – குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன அந்த நீரினைக் கொண்டு செல்ல. இதோ பார்த்தாயா, மீனின் வாய் வழி நீர் கொப்பளித்துக் கொண்டு கீழே விழுவதை! ஆமாம் தம்பி! குழாயை மீன் வடிவத்தில் அழகுற அமைத்துள்ளனர். அந்த நீர் விழும் ஒலிதான் நீ கேட்டது.

உற்றுக்கேள்…. தெரிகிறதா… மயில், தம்பி, புள்ளிக் கலாப மயில், அதன் அகவலும் கேட்கிறது. அரண்மனையின் எழிலை மேலும் காணலாம்; சுவர்கள்தான், தகடுகளல்ல! செம்பினால் செய்தாற்போல அமைந்துள்ளது. அரண்மனைச் சுவர். சுவரிலே பல வண்ணப் பூக்கள் குலுங்கும் கொடிகளைப் படரவிட்டனர் என்றுதானே எண்ணிக் கொண்டாய்; தொலைவிலிருந்து பார்த்தால் அப்படித்தான் தோற்றமளிக்கும். ஆனால் அது ஓவியனின் கை வண்ணம்! வெள்ளி நிறச் சாந்து பூசி, அதிலே கொடியும் மலரும் தீட்டி வைத்திருக்கிறான்! போதும் காட்சி, விரைந்து சென்று விடுவோம், வா. தம்பி, மன்னனின் கண்ணில் மட்டும் நாம் பட்டுவிடக் கூடாது, அகம் தெரியுமா என்று கேட்டு விடுவான். அறியோமே என்று கூறிடின், தமிழனல்லவோ என்று கேட்டிடுவான், நமக்கேன் வம்பு, வா, வா, “இந்திக்கு வந்தனை செய்திடுவோம், அதை ஏற்காதவர் மீது காய்ந்திடுவோம்‘ என்று ஏற்றம் பெற்றுள்ள இன்றைய தமிழ் நாட்டுக்குச் சென்றிடுவோம்.

முடியாது, அண்ணா! முடியாது. ஜாதி முடைநாற்ற மடித்துக் கொண்டு, தரித்திரத் தேள் கொட்டிக்கொண்டு கிடக்கும் அடிமைப் படுகுழியாகிவிட்டுள்ள தமிழகத்துக்கு நான் வரமாட்டேன், நான் இங்கேயே, நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்திலேயே உலவப் போகிறேன் என்கிறாயா, தம்பி! வந்ததே வம்பு. எனக்குத் தெரியுமே உன் இயல்பு. உன்னிடம் திராவிடத்தைக் காட்டினால், இப்படித்தான் நீ பிடிவாதம் செய்வாய் என்று நான் பயந்தேன் சரியாகி விட்டது, தம்பி! காலத்தின் தாக்குதலாலும், கயவரின் சதியாலும், நமது ஏமாந்த தன்மையாலும் தகர்க்கப்பட்டுப்போயுள்ள அந்த முற்றத்தையும் கொற்றத்தையுமே எண்ணி எண்ணி ஏங்கி என்ன பயன்? உண்மை, உன்னையும் என்னையும், பிடித்திழுத்து வந்து, பேதமும் பீடையும், அடிமைத்தனமும் அறிவீனமும், கொடுமையும் பிறவும் நெளியும் இன்றைய நாட்டிலே கொண்டு வந்துதானே விடும் ? எப்படித் தப்புவது? தவிர்க்க முடியாததாயிற்றே.

ஆயினும், அண்ணா! அந்தக் காட்சியை…. தன்னாட்சியின் உயர்வினை, எண்ணுந்தோறும்…. என்று பேசி, என்னை உருக வைக்கிறாய்; நான் என்ன செய்வேன் தம்பி, நாம் இழந்த இன்பம் மகத்தானதுதான் பிற எந்நாட்டவரும் பெற்றிராத எழிலைத்தான் பெற்றிருந்தோம், இழந்து விட்டோம், மீண்டும் அதைக் காணலாம், என்கிறாயா? காண்பது கடினம் – ஆனால், இயலாதது அல்ல!!

அதற்காகவே, கற்பனைச் சிறகணிந்தது போதும், கண்ணீர் மலிந்த திராவிடம் செல்வோம், வா என்று அழைக்கிறேன். சென்று, மேலும் கூறுவோம், மேதினி போற்றிட மேலான நிலையிலிருந்த நந்தம் நாடு, இன்றுள்ள சீர் கெட்ட நிலையினைக் கூறி, திருந்தாத மனத்தினரையும் திருத்தி நம்பால் அவர்களையும் சேர்த்துக் கொண்டு, இன்பத் திராவிடம் காண்பதற்கான பணியில் ஈடுபடுவோம். கன்னியை எண்ணிக் கொண்டு உதட்டைக் குவித்துச் சத்தம் செய்தால், முத்தத்தின் சுவையா கிட்டும்!! இன்பத் திராவிடத்தை ஏடுகள் மூலம் மட்டுமே கண்டு, திருப்தி கொள்ள முடியுமா? இழந்ததைப் பெற வேண்டும், இன்பத் திராவிடத்தைக் காண வேண்டும்.

முடியுமா-முடியும் என்று எண்ணுவோரின் தொகையையும் வகையையும், அவர்தம் உறுதியையும் உற்சாகத்தையும், அவர்தம் உள்ளத்தில் பொங்கி, கண்வழி வழியும் பேரார்வத்தையும், காட்டுகிறேன் வாரீர் என்று அழைக்கிறார், அன்பில்!!

இலட்சக்கணக்கில் கூடப் போகிறார்கள் – இலட்சிய முழக்கம் கேட்கப் போகிறது.

சிங்களத் தீவிலிருந்தும் திருநெல்வேலிச் சீமையிலிருந்தும், சிங்காரச் சென்னையிலிருந்தும் பிற மாவட்டம் பலவற்றிலிருந்தும் அடலேறுகளும், அவர்கட்குக் காதல் தேனில் வீரத்தைக் குழைத்தளிக்கும் குமரிகளும், வீரரைப் பெற்றெடுத்த தாய் மார்களும் அவர்தம் இளமை வளத்தை எண்ணிக் களித்திடும் முதியோரும், வரலாறு அறிந்த மாணவர்களும், புதிய வரலாறு காணும் பாட்டாளித் தோழர்களும் அணிஅணியாக வரப் போகிறார்கள், கடலலையை மிஞ்சும் களிப்பொலி எழுப்பியபடி, குடும்பம் குடும்பமாக வரப்போகிறார்கள் – குதூகலம் காணப் போகிறார்கள்.

குன்றெடுக்கும் நெடுந்தோளையும், குளிர்மதிப் பார்வையையும், இன்று கண்டோம் இனி வென்றோம் என்று எவரும் ஆர்வத்துடன் கூறிடத்தக்க முறையில் திரண்டு வருகிறார்கள், திரு இடத்தவர்! காண வாரீர், கடமையை உணர வாரீர்; கருத்தளிக்கவும் காரியமாற்றவும்; கலங்கா உள்ளம் படைத்தோரே! திரண்டு வாரீர்! தீரரும் வீரரும், திரு இட மீட்புக்கு எத்துணை எழுச்சியுடன் அணி வகுத்து நிற்கின்றனர் என்பதை எவரும் அறியத்தக்க விதத்தில் வந்து சேருமின்! தாயகம் அழைக்கிறது! தளை உடைபடும் வேளை எது எனக் கேட்டு அழைக்கிறது.

பெற்றேனே, இத்தகைய மக்களை, மாற்றான் எனை ஏச, கூசாது கேட்டுக்குனிந்த தலையுடன் கிடந்தனரே, என்னால் சீராட்டி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் என்று கூறிக் கொண்டிருந்த தாயகம், இன்று, மக்களிடம் ஏற்பட்டுள்ள விழப்புணர்ச்சியையும் வீரத்தையும் கண்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “நான் பெற்ற செல்வங்களே! தீர்ந்ததடா என் துக்கம். இனி, என் தளைகளை உடைத்திடுவீர் என்ற நம்பிக்கை பிறந்ததடா!’’ என்று வாழ்த்தி வரவேற்கிறது. அன்னையின் பணிக்காக, அருமந்தமக்காள், அனைவரும் வருக…. என்றெல்லாம் கூறி அழைக்கிறார், அன்பில் தர்மலிங்கம்.

தம்பி! அன்பில் அழைப்பிற்கிணங்க, நீயும் நானும் உடன் வர இசைவோரையும் அழைத்துக் கொண்டு சென்றால், உன் உள்ளத்தில் உவகைகொள்ளச் செய்யும் இன்பத் திராவிடத்தைப் பெறுவதற்கான, வழிவகை பற்றிக் கலந்து பேசவும், கருத்துக் காணவும், திட்டம் தீட்டவும், செயல்படவும் வாய்ப்பு ஏற்படும். அன்பில் அழைப்பதும் அதற்குத்தான்.

“நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றம்‘’ காண விழைகிறாயல்லவா, தம்பி, அது தனியே கிடைத்துவிடாது, நமக்கென்று ஓர் அரசு அமைந்தால் மட்டுமே, அத்தகைய முற்றம் கிடைக்கும், மன்னர்கட்கு மட்டுமே சொந்தமானதாக அல்ல, மக்களுக்குச் சொந்தமான முற்றம்.

மே 17, 18, 19, 20 ஆகிய நாட்களில், திருச்சியில் நடைபெறும் நமது மாநில மாநாடு, உன்னையும் என்னையும், உன்னதமான அறப்போர் வீரர்களாக ஆக்குவதற்கான பாடிவீடு என்று கூடச் சொல்லலாம். நம்மையெல்லாம் வரவேற்று உபசரித்திட வகைவகையான எண்ணங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார், வரவேற்புத் தலைவர், அன்பில் தர்மலிங்கம். பொல்லாத மனிதர்! என்னை எதிரில் வைத்துக்கொண்டே, சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டைவிட, எங்கள் திருச்சி மாநாடு, பன்மடங்கு கவர்ச்சியுள்ளதாக, எழுச்சிமிக்கதாக, பயன்தரத் தக்கதாக அமையப் போகிறது என்று கூறுகிறார். நானும், அதை மறுப்பதற்கில்லை; உண்மையை மறைத்திடும் திறமையை நான் எங்கே பெற்றிருக்கிறேன்!

திருச்சியில், நிச்சயமாகச் சென்னையை மிஞ்சும் வகையில்தான் மாநாடு நடைபெறும் – ஐயமில்லை.

சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணப்பட்டு வந்திருக்கிறோம் – முதல் மாநில மாநாட்டிலிருந்து இரண்டாவது மாநில மாநாட்டுக்கு இடையே நாம் பெற்றுள்ள எழுச்சியும் பயிற்சியும் சாமான்யமா! எவ்வளவு வியர்வையும் குருதியும் கொட்டினோம், எத்துணைத் தொல்லைகளைத் தாங்கிக் கொண்டோம், எத்தகைய களமெலாம் கண்டோம் – இவை கிடக்கட்டும், எவ்வளவு இழிமொழியும் பழிச்சொல்லும் வீசி நம்மை மிருகமாக்க முயற்சித்தனர்!! மாலை மதியமும் உன் மலர்முகமும், காற்றினிலே கலந்துவரும் கீதமும், நம்கன்னல் மொழிக் குழவியின் யாழும் கண்ணே! என்னை எங்கெங்கே அழைத்துச் செல்கிறது தெரியுமா என்று அவன் கேட்க, இன்னுயிரே! எங்கு வேண்டுமாயினும் அழைத்துச் செல்லட்டும், இன்னொருத்தி மனைக்கு மட்டும் சென்றீரோ, ஆமாம், இந்தப் பேசும் புறா பிறகு பாயும் புலியாக வேண்டியதுதான், என்று அவன் உள்ளத்துக்கரசி கூறிட, இன்புற்று இருக்க வேண்டிய பருவத்தினரெல்லாம், நமது கழகக் கட்டளையை ஏற்று, கடும் சிறை புகுந்து, கஞ்சிக் கலயம் தரும் காவலாட்களின் உரை கேட்டு, உள்ளத்தில் ஓராயிரம் எண்ணங்கள் ஊற்றெடுக்க, பொறு மனமே பொறு! திரு இடத்தின் மீட்புப் பணியில் ஈடுபடும் போதும், காதற் சுவையையும் இழக்க வேண்டியது தான் வரும், என் செய்வது என்று தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொண்டனர்.

எந்த நாட்டு விடுதலை வரலாற்றிலும், எழிலுள்ளது என்று கருதத்தகும் காரியம் பல ஆற்றியிருக்கிறோம், ஆணவத்தைச் சந்தித்திருக்கிறோம், ஆத்திரத்தை வரவிடாமல் தடுத்து மிருக்கிறோம். தூற்றலைக் கேட்டோம், நெஞ்சத்தினவுக்கு இடமளிக்க மறுத்து விட்டோம். சதியும் பழியும் பகையை உமிழ்ந்தன – சட்டை செய்ய மறுத்துவிட்டோம். அடக்குமுறை அகோரப் பசியுடன் வந்தது, இரை கொடுத்தோம்! இன்னுயிரை ஈந்தனர் வீரர் சிலர்! கரம் இழந்தோர், காலிழந்தோர் உளர், எவரும் நெஞ்சுரம் இழந்தாரில்லை! நேர்மையை இழந்தாரில்லை!

சென்னையிலிருந்து திருச்சிக்கு வருகிறபோது, இவ்வளவு கண்டிருக்கிறோம் எனில், அன்பில் கூறுவதுபோல, திருச்சி ஏன் சென்னையை மிஞ்சாது! நிச்சயமாக, எழிலும் பயனும் மிகுதியாகவே இருக்கும்.

இங்கு, தம்பி, உன் வேட்கை தணியுமளவுக்குக் கருத்து விருந்தளிக்கப் பல திட்டங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளனர், வரவேற்புக் குழுவினைச் சேர்ந்தவர்கள்.

இடமும் கிடைத்துவிட்டது – மாநாட்டுக்கு!

இதிலென்ன, அண்ணா! பெருமிதம் என்று கேட்பாய், தம்பி, ஏனெனில், நீ, திரு இடம் நமதாயிற்றே, இங்கு மாநாட்டுக்கா ஒரு இடம் கிடைப்பது அரிது என்று கேட்பாய்! ஆனால், இடம் பெறப் பட்டபாடு கொஞ்சமல்ல.

வயலாக இருந்தால், மழை வந்துற்றால் என்ன ஆகும் என்ற பயம் வருகிறது – வெட்ட வெளியாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் நகரைவிட்டு நெடுந்தொலைவில் இருந்தால் தொல்லைமிகுமே என்று அச்சமும் கவலையும் குடைகிறது.

பெரிய பெரிய திடல்கள் உள்ளன கல்லூரிகளிடம் – அவை அத்தனையும் நேரு துரைமகனாருக்கு மட்டுமே தருவது என்று “சட்டம்‘ இருக்கிறது! என் செய்வது!

திருச்சியில், ஜல்லடை போட்டு ஜலித்தாயிற்று – சலிப்பே வந்து விட்டது.

கடைசியில், எங்காவது குக்கிராமமாகப் பார்த்துக் கொண்டு போய்விடுவது என்று முடிவு செய்தோம் – அந்த வேளையில், கிடைத்தது, வயலாகவுமின்றி, ஊருக்கு நெடுந்தொலைவில் அமைந்ததாகவுமின்றி, திருச்சி ஜங்ஷனுக்குப் பக்கத்திலேயே, ஒரு ஆறு பர்லாங்கு தொலைவிலே ஒரு பரந்த வெளி. பாடு அதிகம் இதைப் பெற. மேலும் அதிகமாகப் பாடு பட்டாக வேண்டும், அந்த இடம், எழிலிடமாக! எனினும், பார் அண்ணா, இந்த வெட்ட வெளியை எவ்வளவு அழகான விழா இடமாக்கிக் காட்டுகிறேன் பார்! என்று அன்பில் கூறுகிறார் – பொல்லாத ஆசாமியல்லவா, செய்தாலும் செய்துவிடுவார் – எதற்கும் அவருடைய அந்த முயற்சிக்கு நானும் துணை இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்.

துவக்கமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாக அமைந்தது-அன்று அந்த வெட்ட வெளியை, வேகும் வெய்யிலில் காணச் சென்ற “குழு’ சாதாரணமாக, ஆண்டுக்கொருமுறையோ ஆறு திங்களுக்கு ஒரு முறையோதான் ஒருசேரக் காணக் கூடியது – அன்று அன்பிலின் ஏற்பாட்டின் திறம் பாருங்கள், நாவலரும், கருணாநிதியும், நடராசனும் உள்ளூர் நண்பர்களும், நானும் சம்பத்தும், இவ்வளவு பேரும் சென்று பார்த்தோம்.

மைல் கணக்கில் விரிந்து பரந்து கிடக்கிறது திடல் – பார்ப்போம், எனக்குப் போர்வை தர உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது பார்க்கலாம் என்று மிரட்டுவது போலவே இருந்தது. எனினும் நாங்கள் திகைத்துப் போய் விடவில்லை.

தம்பி! எங்கள் கண்களைத்தான் திடல் மிரட்டிற்று – நீ காணும்போது, அங்கு ஒரு சிறிய – சீரிய எழிலூர் காணப்போகிறாய்!

பகலின் பகலவன் பகைவனாகப் பார்க்கக்கூடும் – அதை பந்தல் முறை கொண்டு தடுத்திடத் திட்டமிட்டிருக்கிறார் தருமு. மாலையும் இரவும், மதியழகு உனக்கு விருந்தாக இருக்கும் – உள்ளத்து வெப்பத்தையும் போக்கிடும் மென் காற்றும் கிடைக்கும் – ஒளி, திரு இட மீட்புக்காக உன் கண்களில் தோன்றுகிறதே ஆர்வம், அது போலிருக்கும். செலவு சற்று அதிகமாகத்தான் இருக்கும். தர்முதான் சொல்லிவிட்டாரே, திருச்சி சென்னையை மிஞ்சும் என்று; எனினும், சற்றுத் தாராளமாகவே இருக்க வேண்டியதுதான் என்று நான் நமது நாவலருக்கும், அவர் எனக்கும், தைரியம் கூறிக்கொண்டிருக்கிறோம் – எல்லாம் உன்னுடைய கைவண்ணத்தைத் தாராளமாகப் பெற முடியும் என்ற நம்பிக்கையால்தான்.

சுற்றிலும், ஒரு சிறிய ஊருக்கு மதில் அமைவதுபோல், தட்டி அடைப்பு; வண்டிகள் நிற்கத் தனியிடம். வாயிற்புறங்கள் ஐந்து. முகப்பு வாயிலில் கண்ணுக்குக் காட்சியும் கருத்துக்கு விருந்துமான முறையில் வண்ணம், ஓவியம். இதிலே, தம்பி, நீ பூரிப்புடன் உள்ளே நுழைந்ததும், ஓங்கி வளர்ந்துள்ள கொடி மரத்தில் நமது கழகக்கொடி பட்டொளி வீசிடக் காண ஏற்பாடாகி இருக்கிறது; அதைத் தொட்டுக் கொண்டு பிறை வடிவத்தில் நூற்றுக்கணக்கான கொடி மரங்கள் – அவைகளிலே கிளைக் கழகக் கொடிகள் குதூகலத்தைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும்; ஒரு புறம் பார்வையைச் செலுத்தினால் ஓவியக் காட்சிச்சாலை அழைக்கும்; மற்றோர் புறம், தொண்டர்கள் முகாமும், மருத்துவ விடுதியும் காட்சி தரும். சற்றுத் தொலைவிலே அங்காடி நிறுவப்படும் – அழகுற விளங்கும். மேலும் சற்றுத் தொலைவு நடந்து சென்றால், மாவட்ட முகாம்கள் இருக்கும்; உண்டிச் சாலைகள் வேண்டுமளவு இருக்க ஏற்பாடாகி வருகிறது; பொதுக்குழு உறுப்பினர்கள் கூடிப்பேசக் கொட்டகை, பொதுச் செயலாளர் காரியம் கவனிக்க மற்றோர் கொட்டகையும் இருக்கும், பெண்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளவும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு வசதி தரவும் தனிக்கொட்டகை போடப்படும். இவை யாவும் புடை சூழ, மாநில மாநாட்டுச் சொற்பொழிவுக் கூடம், ஆயிரம் அடி நீளமும் அறுநூறு அடி அகலமும் கொண்டதாய், அலங்கார மேடையும் அழகளிக்கும் வேறு அமைப்புகளும் கொண்டதாய் விளங்கும்.

தம்பி! புறம் இது! மாநாட்டு அகச்சிறப்பு, நீயல்லவா அளிக்க வேண்டும். உன்னாலா முடியாது!!

எனக்கு இப்போது, “புற’ க் காட்சி அமைப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முயற்சியின் அளவும் பணச் செலவின் மிகுதியும்தான் தெரிகிறது – புரிகிறது – மிரட்டவும் செய்கிறது.

மணி நான்கு – விடியப் போகிறது, தம்பி, இதை எண்ணி எழுதிக் கொண்டிருக்கிறேன். கோவையில் ஒரு ஓட்டல் அறையில் – கோமான்களும் சீமான்களும், மாளிகைகளிலே ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!! இல்லை தம்பி!! இல்லை! அவர்களும் தூங்கிக் கொண்டில்லை, “என்னையா, அக்ரமம்! ஒரு மாநில மாநாடு, பல இலட்சம் பேர் கூடுவது என்றால், இலட்சக் கணக்கிலே செலவாகுமே, பணம் ஏது இதுகளிடம்?’’ என்று எண்ணிக்கொண்டு, “இதுகள்’ இப்படியே வளர்ந்து கொண்டே போனால், நிலைமை என்ன ஆகும் என்ற நினைப்பும் சேர்ந்து அவர்களைத் தூக்கம் கொள்ளாமல் புரளச் செய்யும் – சிலரையாவது.

அவர்கள் அறியமாட்டார்கள், திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ள செல்வத்தை.

உன் ஆர்வமும் எழுச்சியும் பெற்றுத் தரும் பெரும் பலனை, அந்தச் சீமான் பேழையில், கோழைபோலப் பதுங்கிக் கிடக்கும் பணம் பெற்றுத் தருமா, என்ன!! அதை நம்பியா, நாம் கழகம் நடத்துகிறோம்! வெள்ளியையும் தங்கத்தையும், வைரத்தையும் சர்க்கார் சின்னம் பொறித்த காகிதத்தையுமல்லவா, அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

கழகமோ, தம்பி! உன் எஃகு உள்ளத்தை நம்பிக் கொண்டிருக்கிறது. அன்பில் தர்மலிங்கம் அதற்காகத்தான் உன்னை அழைக்கிறார்.

அன்புள்ள,

1-4-1956

Leave A Reply