அரசு நிகழ்வுகளை சமஸிடம் அப்டேட் செய்கிறாரா இறையன்பு?

Share

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அன்றன்றைக்கு நடக்கும் கூட்டத்தையே சமஸின் தலையங்கத்தின் அடிப்படையில்தான் நடத்துவார் போல.

ஏற்கெனவே முதலமைச்சர் ஸ்டாலினை அதிகாரிகள் ஆட்டிப் படைப்பதாகவும், அவர்கள் சொல்படிதான் ஆடுவதாகவும் கோட்டையில் பத்திரிகையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் அதிகாரிகளின் ராஜ்ஜியமே இன்னும் நடப்பதாகவேறு கட்சிக்காரர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்க ரொம்ப நல்லவரூ என்று முதலமைச்சரை புகழ்ந்து புகழ்ந்தே அவரை கட்சியிடமிருந்து விலக்கி வைக்கும் முயற்சி நடப்பதாக நல்லோர் பலர் வேதனை தெரிவிக்கிறார்கள்.

தன்னையும் கட்சியையும் உயிராக நேசித்து தொண்டை வரள முழக்கங்களை எழுப்பி ஆட்சிக் கட்டிலுக்கு கொண்டுவர உழைத்தவர்கள் ஒரத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், தன்னைத் திட்டியவர்களுக்கு பதவிகளும் விருதுகளும் கொடுத்து அவர்களுடைய பாராட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் முதல்வர். காலம் முழுவதும் தன்னுடனும் தனது தந்தையுடனும் பயணித்த மூத்த தலைவர்களைக்கூட தன்னிச்சையாக செயல்பட விடாமல் அதிகாரிகளின் பிடிக்குள் அடங்கிக்கிடக்கும்படி செய்கிறார் முதல்வர் என்று விமர்சனம் செய்கிறார்கள்.

ஒரு ஆட்டுக்குட்டி முதலமைச்சரை நோக்கி ஓயாமல் கத்திக்கொண்டே இருக்கிறது. அதை அடக்க முடியவில்லை. ஆனால், சொந்த கட்சியின் நிர்வாகிகளையும், தலைவர்களையும், அடிமட்ட தொண்டர்களையும் கதறவிட்டிருக்கிறார் முதல்வர் என்பதை செய்தியாக்கி அவரை மகிழ்விக்க அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள்.

ஜெயலலிதாவை பின்பற்றுவது என்று முடிவெடுத்துவிட்டால், அவர் தனது கட்சிக்காரர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, ஸ்டாலின் ஏன் கொடுக்க மறுக்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

சரி, விஷயத்துக்கு வருவோம். இணையஇதழ் பத்திரிகையாளர் சமஸ் தன்னைப் பற்றி எழுப்பி வரும் பில்டப் பிம்பம் தலைமைச் செயலாளரின் பொது அறிவையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. அவருடைய யோசனைகள் படியே அன்றாட அரசுச் செயலாளர்கள் கூட்டம் நடப்பதைப் போன்ற பிம்பம் எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை.

அடுத்ததாக, நூலக இதழ்த் தேர்வுக் குழுவில் ஒரு உறுப்பினரான அவர், நூலக ஆணைக்குழு தலைவரைப் போல பதில் அளிப்பது எந்த வகையில் நியாயம் என்பதையும் அரசுதான் விளக்க வேண்டும்.

அரசின் விருது பெற்றவர். சில குழுக்களில் இடம்பெற்றவர் என்பதற்காகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒரு பத்திரிகையாளர் அதீதமாக உரிமை எடுத்துக் கொள்வது எப்படி சரியாகும்?

உள்ளுக்குள்ளேயே பலர் புலம்பிக் கொண்டிருந்தார்கள். சில நல்ல உள்ளத்தினர் வெளிப்படையாக சமூக ஊடகங்களில் தங்கள் கருத்தை தெரிவித்திருந்தனர்.

அவர்களுடைய மனக்குமுறல்களை திமுக ஆதரவாளன், திமுகவுக்காக தொடர்ந்து பல இழப்புகளை சந்தித்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் எழுதிவிட்டேன். இனி நடப்பதைப் பார்க்கலாம்.

Leave A Reply