சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்…கண் கலங்கிய துரைமுருகன்!

Share

சென்னை: தமிழக சட்டசபையில் பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் துரைமுருகனை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பாராட்டி புகழாரம் சூட்டினர்.

திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து பணியாற்றுகிறார். சட்டசபையில் துரைமுருகனின் அனுபவம் 50 ஆண்டுகள். இன்று சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனின் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அண்ணன் துரைமுருகனுடைய மானியக் கோரிக்கை (நீர்வளத்துறை) இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சபையில் இந்த துறையின் சார்பில் முதன் முதலில் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்வது மகிழ்ச்சிக்குரியது; பெருமைக்குரியது; வரவேற்கிறேன்.

100 ஆண்டு வரலாறு கொண்டிருக்கும் சட்டசபைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே வந்தவர் நம்முடைய அமைச்சராக இருக்கக் கூடிய துரைமுருகன். 50 ஆண்டுகளாக இந்த சபை நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கக் கூடியவர் அவர். இந்த சபையை அலங்கரித்துக் கொண்டிருக்கக் கூடிய முக்கிய மூத்த உறுப்பினர்தான் நம்முடைய அமைச்சர் துரைமுருகன். அதனால்தான் இந்த சபையின் முன்னவராக நின்று வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் மறைந்த பிறகு மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடிய எனக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியவர்தான் அண்ணன் துரைமுருகன். என்னை பற்றி சொல்லும்போதெல்லாம் இளம் வயது ஸ்டாலினாக பார்க்கிறேன் என பலமுறை மேடைகளில் சொல்லி இருக்கிறார். இந்த சபையின் மாண்பை கட்டிக் காப்பதில் நல்ல வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார் துரைமுருகன்.

எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் அப்படியே வெளிப்படுத்துபவர். திமுக கட்சிக்கும் இந்த அரசுக்கும் உறுதுணையாக இருக்கிறார் துரைமுருகன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெரும் அன்பைப் பெற்றவர். கருணாநிதிக்கு பக்கத்தில் மட்டுமல்ல, அவரது மனதிலும் ஆசனம் இட்டு உட்காந்து இருப்பவர் அமைச்சர் துரைமுருகன். சட்டசபையில் உறுப்பினர்களை அழவைக்க நினைத்தால் அழ வைப்பார்; சிரிக்க வைக்க நினைத்தால் சிரிக்க வைப்பார். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அனைத்து கட்சியினர் பாராட்டு

அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக பாசம் காட்டக் கூடியவர்; சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் துரைமுருகன் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். சிந்தனை, செயல் ஆற்றல் மிக்க தலைவர் என்று பா.ம.க.வின் எம்.எல்.ஏ. ஜி.கே. மணி கூறினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசுகையில், அனைத்து உறுப்பினர்களுக்கும் முன்னோடியாக திகழ்பவர்; நவரச நாயகனாக திகழ்பவர் துரைமுருகன் என்றார். வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் பேசுகையில், 50 ஆண்டுகாலம் வற்றாத ஆளுமை கொண்டவர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் என்றார். விசுவாசத்துக்கு எடுத்துகாட்டாக திகழ்பவர் துரைமுருகன் என்று பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த சபையில் முதல்வருக்கு சாணக்கியராக திகழ்பவர் அமைச்சர் துரைமுருகன் என்றார். பின்னர் துரைமுருகனின் 50 ஆண்டுகால சட்டசபை பணிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய துரைமுருகன், இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவரப்படும் என நான் நினைத்து பார்க்கவே இல்லை. முதல்வர் ஸ்டாலினின் அன்பும் பேச்சும் என்னை அப்படியே கிறுகிறுக்க வைத்து விட்டது என கூறி ஆனந்த கண்ணீர் வடித்தார். இதனால் சபையில் நெகிழ்ச்சியான சூழ்நிலை உருவானது.

Leave A Reply