நேபாள வரலாறு 1 – வானத்தைச் சந்திக்கும் பூமி – ஆதனூர் சோழன்

Share

கிழக்கு மேற்காக 2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் நீண்டு கிடக்கிறது.

6 லட்சத்து 12 ஆயிரம் சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு பரந்து கிடக்கிறது.

இமயமலைத் தொடரின் பிரமாண்டம் கற்பனைக்கு எட்டாதது.

மத்திய ஆசியாவையும் இந்திய துணைக் கண்டத்தையும் பிரிக்கிறது இந்த பனிமலைகத் தொடர்.

ஹிமா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு பனி என்று அர்த்தம். ஆலயா என்றால் உறைவிடம் என்று அர்த்தம்.

ஆம். பனியின் உறைவிடம் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்.

வானத்தைக் குசலம் விசாரிக்கும் உயரத்தில் எவரெஸ்ட் சிகரம்.

அந்த எவரெஸ்ட் சிகரத்தை நேபாள மக்கள் எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா?

ஸாகர்மாதா!

நேபாள மொழியில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

கடல் தேவதை!

மலைச் சிகரத்திற்கு எப்படி ஸாகர் மாதா என்று பெயர் வைக்கலாம்?

இப்போது வேண்டுமானால் அது மலைச் சிகரமாக இருக்கலாம். ஆதியில் அந்த மலை உருவான அறிவியல் விந்தையை தெரிந்து கொண்டால் அந்தப் பெயர் பொருத்தமானது என்பதை ஒப்புக் கொள்வீர்கள்.

25 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் நிலப்பரப்பு முழுவதும் ஒரே கண்டமாக கிடந்தது. அதை பாங்கியா என்று அழைத்தார்கள்.

20 கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த நிலப்பரப்பு வடக்கிலும் தெற்கிலுமாக இரண்டு மிகப்பெரிய கண்டங்களாக பிரிந்தது.

தெற்கில் கோண்ட்வானா என்றும் வடக்கில் யுரேசியா என்றும் அந்தக் கண்டங்கள் பிரிந்து கிடந்தன. இரண்டு கண்டங்களுக்கும் இடையே டெதிஸ் என்ற கடல் கிடந்தது.

18 கோடி ஆண்டுகளுக்கு முன் கோண்ட்வானா கண்டத்தில் ஒட்டியிருந்த நிலத்தட்டுகள் வடக்கு நோக்கி நகர்ந்தன. ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய நிலத்தட்டுகள் வெவ்வேறு திசைகளில் நகர்ந்தன.

இந்திய நிலத்தட்டு வடக்கு நோக்கி ஆண்டுக்கு 15 சென்ட்டி மீட்டர் விகிதத்தில் நகர்ந்தது. ஆறரைக் கோடி ஆண்டுக்கு முன் அது பூமத்திய ரேகையை கடந்தது. அங்கிருந்து யுரேசியா நிலத்தட்டை அது மோதி மேல் நோக்கி எழுப்பியது. மலைகளும் சமவெளிகளும் உருவாகத் தொடங்கின.

இந்தக் காலகட்டத்தில் கடலுக்கடியில் மிகப் பிரமாண்டமான உயிரினங்கள் வாழ்ந்தன. கடலுக்கடியில் இருந்த உயிரினங்களும் கடல் பாறைகளும் மேல்நோக்கி எழுந்தன. இமயமலையின் உச்சியில் கடல் உயிரினங்களின் படிமங்களும், கடலுக்கடியில் இருந்த வண்டல் பாறைகளும் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் எவரெஸ்ட் சிகரத்திற்கு கடல் தேவதை என்ற பெயர் பொருத்தமா, இல்லையா?

இமயமலை பனியின் உறைவிடம் மட்டுமல்ல.

பல்வேறு வளங்களையும் பொத்திப் பாதுகாக்கும் பூமி.

வெறும் மலைக் குன்றுகளாக மட்டும் அது அமையவில்லை. சமவெளிகளையும் ஏரிகளையும் கொண்டிருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தின் பகுதி, சிக்கிம் ஆகிய இந்திய மாநிலங்கள் இமயமலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளன.

நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இமயமலையின் உச்சியிலேயே அமைந்திருக்கின்றன.

மேற்கே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வடக்கே திபெத் வரை இமயமலைத் தொடர் விரிந்து வியாபித்திருக்கிறது.

இந்தியர்களுக்கும் நேபாளிகளுக்கும் திபெத்தியர்களுக்கும் இமயமலை என்பது வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது.

அதுதான் அவர்களுடைய தாய்.

அந்தத் தாய் மனிதர்களை எப்போது தனது கருப்பையில் சுமந்தாள்?

அவள் சுமக்கவில்லை.

மனிதர்கள்தான் அவளுடைய அழகிய மடியில் போய் தஞ்சம் புகுந்தனர். தஞ்சம் புகுந்தவர்களை தனது பிள்ளைகளாக அவள் பேணிப் பாதுகாக்கிறாள். அவர்களை ஊட்டி வளர்க்கிறாள்.

அது சரி. இமயத்தின் மடியில் மனிதர்கள் எப்போது போய் விழுந்தார்களாம்?

9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது என்று தொல்லியல் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, திபெத்-பர்மா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இன்றைய நேபாளத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறியதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.
சரி. கதைக்கு வருவோம்.

நேபாளம் அமைந்துள்ள இடம் இமயத்தின் அடிவாரம்.

அந்தப் பொருள் படும்படிதான் அந்த நாட்டுக்கு நேபாளம் என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.

“நிபாலயா” என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து நேபாள் என்ற பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள். இதற்கு “மலையின் அடிவாரத்தில்” என்று அர்த்தம்.

திபெத்திய மொழியில் “நியம்பல்” என்று ஒரு வார்த்தை இருக்கிறது. அதற்கு “புனிதமான நிலம்” என்று அர்த்தம். அந்த வார்த்தையிலிருந்தும் நேபாள் என்ற பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

“நே” என்றால் கம்பளி என்று அர்த்தம். “பாள்” என்றால் கூரைவேய்ந்த வீடு என்று அர்த்தம். நெடுங்காலத்திற்கு முன் இங்கு ஏராளமான கம்பளி உற்பத்தி செய்யப்பட்டது. அந்தக் கம்பளி அனைத்தும் கூரைவேய்ந்த வீடுகளில் சேமிக்கப்பட்டது. இதன்காரணமாகவும் நேபாள் என்று பெயர் வந்திருக்கலாம்.

ஆனால், நேபாள அறிஞரான ரிஷிகேஷ் ஷஹா என்பவர் புராதன குறிப்புகளை வைத்து வேறு ஒரு பெயர்க் காரணத்தை கூறியுள்ளார்.

முன்பொரு காலத்தில் நே என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார். அவர்தான் இந்த நிலத்தை பாதுகாத்து முதல் அரசாங்கத்தை நிறுவினார். பா-லா என்றால் நிலத்தை பாதுகாத்தவர் என்று அர்த்தமாம். நே முனிவரால் பாதுகாக்கப்பட்ட நிலம் என்பதால் நேபாள் என்று அழைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

எத்தனையோ கதைகள் கட்டப்பட்டாலும், நேபாளத்தில் முதன்முதலாக மனிதர்கள் குடியேறிய வரலாறு எதுவும் முறையாக பதிவாகவில்லை.

ராமாயணத்தில் சீதை பிறந்ததாக கூறப்படும் மிதிலை நகரம் நேபாளத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். அந்த நகரம் இப்போது ஜனக்பூர் என்று அழைக்கப்படுகிறது.
ராமாயணத்தை எழுதிய வால்மீகி தங்கியிருந்த ஆஸ்ரமும் இங்கேதான் இருப்பதாக கூறப்படுகிறது.

ராமாயணத்திற்கு பிறகு எழுதப்பட்ட மகாபாரதத்தில் கிராத வம்சம் குறித்து இடம்பெற்றுள்ளது. கிராத வம்சத்தில் முதல் அரசராக யாலம்பார் என்பவரை கூறுகிறார்கள். மாகாபாரத யுத்தத்தில் அவர் கொல்லப்படுவதாக வருகிறது.

ஆனால், நே முனிவரின் வாரிசுகள் அடுத்தடுத்து 491 ஆண்டுகள் நேபாளத்தை ஆட்சி செய்ததாக குறிப்புகள் இருக்கின்றன. அவர்கள் பசுக்களை வளர்க்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை எருமைகள் வளர்க்கும் இந்திய வம்சாவளியினரான ராஜபுத்திரர்கள் வெற்றி கொண்டதாகவும் வரலாறு இருக்கிறது.

லிச்சவி வம்சத்தினர் காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றில் கூட லிச்சவி வம்சத்தினரின் ஆட்சிக் காலத்திற்கு முன் கிராத வம்சம் ஆட்சி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, கி.மு. 800களில் தொடங்கியே நேபாளத்தின் வரலாறு முறைப்படி பதிவாகி இருக்கிறது. அதுவும் கூட பெரிய அளவில் கிடைக்கவில்லை.

கிராத வம்சத்தினர் எங்கிருந்து நேபாளத்திற்கு வந்தார்கள். எப்படி அவர்கள் நேபாளத்தில் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள் என்பது சரியாக தெரியவில்லை.

கிராத வம்சத்தினரை கிரந்தி வம்சத்தினர் என்றும் கிராதிகள் என்றும் அழைக்கிறார்கள். இவர்களுடைய மூலவேர் சீனாவிலிருந்து தொடங்குவதாக வழிவழிக் கதைகளில் கூறப்படுகிறது. கிரந்தி வேதம் என்ற நூலில் இவர்கள் மங்கோலியாவிலிருந்து சீனா வழியாக நேபாளத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

யஜுர் வேதத்தில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள். கிராதா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து கிரந்தி அல்லது கிரந்த் என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

“இவர்கள் அழகிய மலைவாழ் மக்கள் என்றும் வனத்தில் வேட்டையாடி வாழ்கிறவர்கள்” என்றும் யஜுர் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாபாரத கதையில், இவர்களை கிர்டர்ஜுனியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராத வம்சத்தினர் கிரந்த் முந்தம் என்ற மதத்தை பின்பற்றினர். இந்துமதம் எல்லாம் இவர்களுக்கு தெரியாது. இந்தியாவில் எப்படி இந்துமதம் திணிக்கப்பட்டதோ அதுபோலத்தான் ஆரியர்கள் நேபாளத்திற்குள்ளும் இந்துமதத்தை திணித்தார்கள் என்பது கதைகளிலிருந்தே தெரிகிறது.

கிராத வம்சத்தில் லிம்பு, ராய், யக்கா, சுனுவார் உள்ளிட்ட பல்வேறு பூர்வகுடியினரும் இணைகிறார்கள். ராய் பிரிவினர் சும்னிமா என்ற பெண் கடவுளை வணங்கினர். அதுதான் அவர்களுடைய உயர்ந்த கடவுள். அதுதவிர, குட்டி தெய்வங்களும் ஏராளமாக இருந்தன. பயிரிடும் பருவத்தையும் அறுவடை பருவத்தையும் விழாவாக கொண்டாடும் பழக்கம் இருந்தது.

கிராத வம்சத்தின் லிம்பு பிரிவினர் முக்கிய கடவுளாக டகேரா நிங்வாபுமாவை வணங்கினர். சிவனுக்கு மூத்த கடவுளாக இவரை கூறுகிறார்கள். இதுதவிர, குலதெய்வமாக யுமா சம்மாங், யுத்த கடவுளாக தேபா சம்மாங் ஆகிய கடவுளர்களையும் இவர்கள் வணங்கினார்கள்.

வனத்தில் கன்னிவைத்து விலங்குகளை வேட்டையாடுவதுதான் கிராத வம்சத்தினரின் முக்கிய தொழிலாக இருந்தது.

மகாபாரதக் கதையில் வரும் பீமன் கதாபாத்திரத்திற்கு கடோத்கஜன் என்ற மகன் இருந்ததாக வரும். அந்த கடோத்கஜன் கிராத வம்சத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமாயணத்தை எழுதிய வால்மீகியும் கிராத வம்சத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள். வேட்டையாடும் வம்சத்தில் சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற ஒரு அறிவாளி இருந்ததாக பிராமணர்கள் ஒப்புக் கொள்வார்களா?

பிராமணராக மாறி சமஸ்கிருத புலமை பெற்றதாக அங்கேயும் கதை புனையப்பட்டுள்ளது.

கிராத வம்சத்தினரை நெப் என்றும் அழைக்கிறார்கள். இதிலிருந்தே நேபாளத்திற்கு பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இமயத்தின் கிழக்குப் பகுதி முழுவதும் கிராத வம்சத்தினரின் இருப்பிடமாகியதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் வசித்த பகுதியை கிம்புர்ஷ தேசம் என்று சமஸ்கிருதத்தில் கூறுகிறார்கள்.

ஆனால், ஆயிரம் ஆண்டுகள் வரை காத்மாண்டு சமவெளியில்தான் இவர்கள் வசித்திருக்கிறார்கள். இங்கே வசித்தவர்கள்தான் பிற்காலத்தில் நேவார் பிரிவினராக மாறியதாக கூறப்படுகிறது.

கிராத வம்சத்தின் லிம்பு பிரிவினர் காத்மாண்டுவிலிருந்து விலகி நேபாளத்தின் கிழக்குப் பகுதி மற்றும் சிக்கிம் இணைந்த கோஷி பிரதேசத்தில் குடிபுகுந்தனர்.

அருண் நதிக்கும் மெச்சி நதிக்கும் இடைப்பட்ட இவர்களுடைய நிலப்பகுதியை லிம்புவான் என்று அழைத்தார்கள்.

புராதன இந்தியாவில் இருந்த முடியாட்சிகளில் கிராத வம்சத்தினரின் ஆட்சியும் இடம்பெற்று இருந்தது. கிராத வம்சத்தினரில் கணக்கற்ற தலைவர்கள் இருந்தனர். அவர்ள் எப்போதும் வேட்டையாடுவதையே தொழிலாக கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் பழங்களையும் கிழங்குகளையும் மட்டுமே உணவாக கொண்டனர். தோல் மற்றும் மரப்பட்டைகளை உடைகளாக அணிந்திருந்தனர்.

தொடக்கத்தில் ஹிமாவத் என்று அழைக்கப்பட்ட திபெத்திலும், சூரியன் உதிக்கும் மலைக்கு பின்புறம் என்று அழைக்கப்பட்ட அருணாச்சல பிரதேசத்திலும், வங்கதேசத்தில் ஓடும் கங்கை நதிக்கரையிலும், பாகிஸ்தானில் ஓடும் சிந்து நதிக் கரையிலும் அவர்கள் குடியிருப்புகள் இருந்தன. இந்தப் பிரதேசத்தை கருஷா என்று அழைத்தனர். கிழக்கு அசாம் மேற்கு அருணாச்சல பிரதேசத்தில் இவர்கள் வசித்த இமயமலைச் சரிவுகள் லோகித்யா என்று அழைத்தனர்.

(தொடரும்)

Leave A Reply