தலைமுறைகளை பாதுகாத்த தலைமுறை இடைவெளி!

Share

தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளிதான் பல தலைமுறைகளுக்கு பாதுகாப்பளிக்க உதவியது என்பது எனது கருத்து. தந்தை பெரியாரின் கொள்கைகளில் வேறுபட்டு அண்ணா அவரிடமிருந்து விலகவில்லை. காலத்துக்கேற்ற மாற்றம் வேண்டும் என்ற அண்ணாவின் விருப்பத்தை பெரியார் தவறாக புரிந்துகொண்டார் என்பதே உண்மை.

நமது கொள்கைகளை நிறைவேற்ற அரசுகளுக்கு எதிராக போராடி ஏன் சிரமப்பட வேண்டும்? விடுதலை நமக்கு அதிகாரத்தை பெறும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. நாமே ஏன் ஆட்சியை அமைத்து நமது கொள்கைகளுக்கு சட்ட வடிவம் கொடுக்கக்கூடாது என்பதே அண்ணா உள்ளிட்டோரின் விருப்பமாக இருந்தது.

பெரியார் புரிந்துகொள்ளாவிட்டாலும் அதுவே உண்மை, அது நிச்சயமாக சாத்தியமாகும் என்பதை நிரூபித்தார் அண்ணா. மகனை புரிந்துகொள்ளாத தந்தையாக பெரியார் இருந்தார். தந்தையின் பெயர் சொல்லும் பிள்ளையாக அண்ணா இருந்தார் என்பதே வரலாற்று உண்மை.

இருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான காலகட்டத்தை படித்தால் இந்த உண்மை இன்றைய தலைமுறைக்கு விளங்கும்.
1936 ஆம் ஆண்டிலிருந்து 1939 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நிகழ்ச்சிகள் பெரியாரின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானித்தன.

1939 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் வெடித் தது. காங்கிரஸ் தலைவர்களைக் கேட்காமல் பிரிட்டன் உலகப்போரில் இந்திய வீரர்களை ஈடுபடுத்த முடிவு செய்தது. இதைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலக முடிவு செய்தன.

சென்னை மாகாணத்தில் ராஜாஜி அமைச்சரவை விலகியதைக் கண்டு பெரியாரும் நீதிக்கட்சியினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
காங்கிரஸ் அமைச்சரவைகள் அனைத்தும் விலகியதைக் கண்டு முஸ்லிம்லீக் தலைவரான முகமது அலி ஜின்னா மகிழ்ச்சி அடைந்தார்.

அத்துடன் முதன்முதலாக ஒரு புதிய கோரிக்கையையும் வெளியிட்டார்.

“முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்கின்ற வடகிழக்கு, வடமேற்குப் பிரதேசங்களைத் தனி நாடாகப் பிரிக்க வேண்டும். அதற்கு பாகிஸ்தான் என்று பெயரிட வேண்டும்” என்றார். இதுதான் ‘பாகிஸ்தான்’ என்ற பெயரை பிற்காலத்தில் பெற்றது’.

முஸ்லிம் லீக் எழுப்பிய தனிநாடு கோரிக்கை பெரியாரின் சிந்தனையிலும் திராவிடநாடு கோரிக்கையை எழுப்பியது.

சென்னை ராஜதானியில் உள்ள நான்கு மொழி பேசும் குழுக்களையும் கொண்ட தமிழ்தேசம் திராவிடநாடு என்ற கூட்டுப் பெயரில் இருக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார்.

அதுவரை “தமிழ்நாடு தமிழருக்கே” என்று நீதிக்கட்சி முழங்கி வந்தது. அது இப்போது, “திராவிடநாடு திராவிடருக்கே” என்று மாற்றி அமைக்கப்பட்டது.

பெரியாரின் இந்தக் கோரிக்கைக்கு முதலில் ஆதரவு தெரிவித்த ஜின்னா, பிறகு பின் வாங்கிவிட்டார்.

இரண்டாம் உலக யுத்தம் முடிந்தது. ஆங்கிலேய அரசாங்கத்துக்கு நீதிக்கட்சி ஆதரவளித்தது. ஆனால், நீதிக் கட்சியை ஆங்கிலேய அரசாங்கம் மதிக்கத் தவறியது.

நீதிக் கட்சியை மக்களும் ஆதரிக்கவில்லை. அந்தக் கட்சியை ஆங்கிலேயரின் அடிவருடியாகவும், பெரிய பணக்காரர்களின் கட்சி என்றும் மக்கள் கருதினர்.

இதை பெரியாரின் தளபதியாக கட்சியில் கருதப்பட்ட சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட இளம் தலைவர்கள் உணர்ந்தனர்.

இந்த இடத்தில் அண்ணாதுரையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

சி.என்.அண்ணாதுரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறந்த பேச்சாளராக இருந்தார்.

திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மகாநாட்டில் முதன்முறையாக பெரியாரைச் சந்திக்கும் வாய்ப்பு அண்ணாதுரைக்கு கிடைத்தது. அவருடைய பேச்சுத்திறன் பெரியாருக்குப் பிடித்தது.

அதிலிருந்து பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும் பலமான நட்பு ஏற்பட்டது. பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் அண்ணாதுரைக்கு ஏற்கனவே ஈடுபாடு உண்டு.

விரைவிலேயே அண்ணாதுரை ‘குடி அரசு’ப் பத்திரிகையின் உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அவருடைய எளிய தமிழ்நடையும், கவர்ச்சியான உரையும் சேர்ந்து அவரை வெகுவிரைவில் நீதிக்கட்சியில் பிரபலமடையச் செய்தது.

பெரியார் அளித்த உதவியுடன் அண்ணாதுரை 1942 ஆம் ஆண்டு ‘திராவிட நாடு’ பத்திரிகையைத் துவக்கினார்.

இந்நிலையில்தான், 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி நீதிக்கட்சியின் 11வது மாநாடு சேலத்தில் தொடங்கியது. அப்போது கட்சியின் செயலாளரான சி.என். அண்ணாத்துரை முக்கிய தீர்மானத்தை முன் மொழிந்தார். 9 அம்சங்கள் கொண்ட அந்தத் தீர்மானம் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்ற வேண்டுமென கோரியது.

அத்துடன் கட்சியை சீரமைக்க பல்வேறு அதிரடி முடிவுகளையும் இந்த தீர்மானம் உள்ளடக்கி இருந்தது. அந்த முடிவுகள் கட்சிக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயரை நீக்கும் என்று அண்ணாதுரை கூறினார்.

இந்தத் தீர்மானம் ஒருமனதாக மாநாட்டில் ஏற்கப்பட்டது.

சேலம் மாநாட்டிற்குப் பிறகு ஆங்கிலேய அரசாங்கத்தை பெரியார் செல்லும் இடங்களில் எல்லாம் விமர்சிக்க ஆரம்பித்தார்.
1946 ஆம் ஆண்டு மத்திய சட்டசபைக்கும் மாகாண சட்டசபைகளுக்கும். தேர்தல் நடைபெற்றது. திராவிடர் கழகம் இதில் போட்டியிடவில்லை.

தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றிபெற்று அமைச்சரவைகளை அமைத்தது.

1946-47 ஆம் ஆண்டுகளில் இந்திய சுதந்திரத்திற்கான இறுதிச் சுற்றுப் பேச்சு முடிவுறும் வரை பாகிஸ்தான் என்றும் திராவிடஸ்தான் என்றும் தனி நாடுகள் அமையும் என்று பெரியார் நம்பினார்.

ஆனால் அவரது நம்பிக்கை உடைந்து போய் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திரம் பெறும் என்றும் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெறும் என்றும் உடன்பாடு ஏற்பட்டபோது பெரியார் கோபமடைந்தார்.

சுதந்திரநாளை துக்கநாளாகக் கொண்டாடும்படி அறிக்கைவிடுத்தார்.

“சமுதாய விடுதலையின்றி வெறும் அரசியல் விடுதலையால் பயனில்லை” என்று அந்த அறிக்கையில் பெரியார் கூறினார்.

இது தவறான பார்வை, தீங்கான முடிவு என்று திராவிட கழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அத்தகைய எதிர்ப்பைத் தெரிவிப்பதில் முதன்மையாக இருந்தவர் சி.என். அண்ணாதுரை.

சுதந்திரத்திற்கு முன்னர் 1946 ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

விடுதலைக்கு எதிரானவர்களுக்கு இது எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பெரியார் அதை உணரவில்லை.

மாறாக, சுதந்திர தினத்தை துக்க நாளாக கடைப்பிடிக்கும்படி கட்சித் தலைவர் என்ற முறையில் உத்தரவிட்டார். ஆனால் அந்த முடிவு அண்ணாதுரை போன்ற இளம் ஜனநாயகவாதிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. சுதந்திர நாளை மகிழ்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று அண்ணாதுரை விரிவான அறிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து திராவிடக் கழகத்திற்குள் பனிப்போர் தொடங்கியது.

கால மாற்றத்தை புரிந்துகொண்டவர் அண்ணாதுரை. அதற்கு தகுந்தபடி கட்சியின் அமைப்பும், அணுகுமுறையும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அவருக்கு திராவிட கழகத்தில் இருந்த இளைஞர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது.

பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும் இடையே பிளவு அதிகரித்துக் கொண்டிருந்தது. அது முழுமையடைய ஏதாவதொரு காரணத்திற்காக காத்துக் கொண்டிருந்தது.

பெரியார் -மணியம்மை திருமணம் நல்ல காரணமாக அமைந்தது.

மணியம்மை வட ஆற்காடு மாவட்டம் வேலூரைச் சேர்ந்த சுயமரியாதை இயக்க ஆதரவாளர் கனகசபையின் மகள். கனகசபையின் குடும்பம் முழுவதுமே சுயமரியாதைக் குடும்பம். 1943 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் இறந்துவிட்டார்.

17 வயது நிரம்பிய மணியம்மை பெரியாரிடம் வந்து சேர்ந்தார். மணியம்மை நன்றாக தமிழ்மொழியில் பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக பெரியார் அவரை குலசேகரப்பட்டினத்தில் உள்ள சி.டி. நாயகத்திடம் அனுப்பி வைத்தார்.

பயிற்சி முடித்து வந்தபின் மணியம்மை பெரியாரின் உதவியாளர் போன்றும், நர்ஸ் போன்றும் செயல்படத் தொடங்கினார். அவரது கொள்கைப் பற்றும் தீவிரமாக இருந்தது. ‘குடி அரசு’ இதழில் 1943 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி வெளியான அவருடைய அறிக்கை இயக்கப் பார்வையை விளக்குவதாக அமைந் திருந்தது.

கட்சிக்குள் தனக்கெதிரான போக்கு வலுத்துவருவதைக் கண்ட பெரியார். மணியம்மைத் தவிர வேறுயாரையும் நம்பக்கூடாது என்ற முடிவுக்கு வந்தார். கட்சியின் சொத்துக்களுக்கு ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி மணியம்மையை தனது வாரிசாக்குவது என்றும், தனது வாரிசு என்று அறிவிக்க வேண்டுமானால் அவரை சட்டப்படி திருமணம் செய்தாக வேண்டும் என்பதால் திருமணம் செய்யவும் முடிவுசெய்தார்.

இதற்குப் பின்னர் 1949 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி திருவண்ணாமலையில் பெரியாரும் மணியம்மையும் ராஜாஜியைச் சந்தித்தனர். ராஜாஜி அப்போது இந்தியாவின் கவர்னர்-ஜெனரல்.

பெரியார் திருமணம் செய்து கொள்ளப் போவது பகிரங்கமாக தெரிந்தவுடன் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவருக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன. கட்சித் தலைவர்கள் பலர் நேரிலேயே அவரிடம் வாதாடிப் பார்த்தனர்.

ஆனால் பெரியார் தனது முடிவிலேயே இருந்தார். 1949 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி பெரியார் – மணியம்மை திருமணம் சென்னையில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது. அப்போது, பெரியார் வயது 70, மணியம்மை வயது 31.

இயக்கத்தில் ஈடுபாடு, பெரியாருக்கு தொண்டு செய்யும் ஆர்வம் இவைகளில் உந்தப்பட்டுத்தான் மணியம்மை, பெரியாரை திருமணம் செய்து கொண்டார் என்பது நன்கு விளங்கும்.

பெரியார் உயிருடன் இருந்தவரை மணியம்மை அவரை கண்ணுங் கருத்துமாகப் பாதுகாத்தார். பணிவிடை செய்தார். அவர் மறைந்த பின்பு பல ஆண்டுகாலம் கட்சியின் தலைவராயிருந்து பெரியாரின் கொள்கைகளை பரப்ப பாடுபட்டார்.

பெரியார், சுயமரியாதை நிறுவனத்திற்குரிய சொத்துக்களை மணியம்மை பெயருக்கு எழுதி வைக்கவில்லை. ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி தனது மறைவுக்குப் பிறகு அந்த டிரஸ்டில் இருந்து மாதச் சம்பளம் பெறும் செயலாளராக மணியம்மையை நியமித்தார்.

பெரியார் தனது சொந்த சொத்துக்கள் சிலவற்றை மணியம்மை பெயருக்கு எழுதி வைத்திருந்தார். பெரியார் மறைவுக்குப் பின் மணியம்மை அதையும், இயக்கத்திற்கே கொடுத்துவிட்டார்.

எது எவ்வாறிருந்தபோதிலும் பெரியார்-மணியம்மை திருமணம் திராவிடர் கழகத்திற்குள் இருந்த குமுறலை வெளியே கொண்டு வந்தது.

அண்ணாதுரையும், அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்கள். ‘கண்ணீர்த் துளிகளுடன் வெளியேறுகிறோம்’ என்று அண்ணாதுரை அறிக்கை விடுத்தார்.

1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. அது மக்கள் இயக்கமாக வளரத் தொடங்கியது.

திராவிடர் கழகத்தின் கொள்கைகள்தான் தங்களுடைய கொள்கைகள் என்று அண்ணா அறிவித்தார். ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா மாற்றிக் கொண்டார்.

தி.மு.க.வும் தி.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படும். தி.மு.க.வுக்கு தலைவர் இல்லை. அந்த நாற்காலி பெரியாருக்காக காத்திருக்கும் என்று அண்ணா சொன்னாலும் தி.மு.க.வை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.

அரசியலுக்கு போய்விட்டால் கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டும் என்பதால்தான் பெரியார் தேர்தல் அரசியலை வெறுத்தார்.அவர் தனது பகுத்தறிவு பிரச்சாரத்தை வழக்கம்போல தொடர்ந்தார். கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு, சமூக நீதி ஆகியவற்றுக்காக போராட்டங்களை அறிவித்து நடத்தினார்.

இப்போது அவர் தந்தை பெரியார் ஆகிவிட்டார். ஒடுக்கப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அவரை அப்படித்தான் அன்போடு அழைத்தார்கள்.

சமூக அவலங்கள் எதுவாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தீமையான எதுவாக இருந்தாலும் அவற்றை கடுமையாக எதிர்த்தார்.

பிராமணர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காக அவர் சிந்திக்காத விஷயங்களே இல்லை.

படிப்பு தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று பிராமணர்கள் சட்டம் வகுத்திருந்தார்கள். பெண்களை அடிமைகளாக அடுப்பூதவும், பிள்ளை பெறவும் மட்டுமே பயன்படுத்தினார்கள்.

தங்களைத் தீண்டக் கூட மற்றவர்களுக்கு உரிமையில்லை. சமூகத்தின் ஒரு பெரும்பகுதி மக்கள் தங்களை பார்க்கக் கூட அருகதையில்லை என்று ஆக்கி வைத்திருந் தார்கள்.

பெரியார் என்ற பூகம்பம் பிராமணர்களின் விதிகளை தகர்த்து தரைமட்டமாக்கியது.

கல்வி வாய்ப்புகளிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தன.

பெரியார் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்து இட ஒதுக்கீடு வேண்டும் என்று வற்புறுத்தினார்.

மக்கள் தொகைக்கு ஏற்றபடி கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தினார்.
பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்று மேடை தோறும் முழங்கினார்.

பெண் உரிமையை தனது வீட்டிலிருந்தே தொடங்கினார் பெரியார். தனது மனைவி நாகம்மையையும், தங்கை கண்ணம்மாளையும் சமூக அரசியல் போராட்டங்களில் நேரடியாக ஈடுபடுத்தினார்.

தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் என்பது அவர் வாழ்க்கையில் கிடையவே கிடையாது.

இரண்டு பெண் குழந்தைகள் இருப்பவர்கள்கூட ஆண் குழந்தை வேண்டும் என்று முயற்சிக்கிறார்களே எனறு பெரியாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பெரியார் அளித்த பதில் இது…

“இந்த எண்ணம் மக்கள் மனசிலேருந்து மாற வேண்டும் என்றால், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் என்றும் ஆண்களுக்கு 50 சதவீதம் என்று இருக்க வேண்டும். ஒரு அலுவலகத்தில் 100 பேர் வேலை செய்தால் 50 பெண்கள் இருக்கிறார்களா என்று கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் செய்யும்படி சொல்ல வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால், பெற்றோருக்கு ஆண் இருந்தாலும் பெண் இருந்தாலும் ஒண்ணுதான் என்ற நினைப்பு வரும். இன்றைக்கு ஆண்கள் மட்டுமே வேலைக்கு போகிறார்கள். பெண்கள் எல்லாம் வீீட்டில் இருக்கிறார்கள்.. அதனால்தான் நமக்கு சம்பாதித்து போடுவதற்கு ஆண் குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதை நாம் சரிசமமா பண்ணிட்டா போதும்.”

அப்படி செய்தால் ஆண்கள் எதிர்க்க மாட்டார்களா? என்று கேட்டார்கள். அதற்கு பெரியார்,

“எப்படி எதிர்ப்பார்கள்? அட, நீங்கதான் எப்படி எதிர்ப்பீங்க? உங்கள் மகளுக்கும், உங்க தங்கைக்கும் வேலை கிடைக்கும் என்றால், எப்படி எதிர்ப்பீங்க? அதனால் 50 சதவீதம் வேலை வாய்ப்பு பெண்களுக்கு என்று சட்டமே போட்டுடுங்க” என்று பதில் அளித்தார்.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னரே, ஆசிரியர் பணியிடங்களில் பாதிக்கு மேல் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பெண்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று சொன்னவர் பெரியார்.

அவர் அன்று சொன்னது அனைத்தும் இப்போது நிறைவேறுகிறது. பெண்களை பூட்டி வைத்து போகப் பொருளாக நினைத்தவர்கள் இன்றைக்கு பெண்ணுரிமை பற்றி நிறைய பேசுகிறார்கள்.

அவர்கள் வீட்டு பெண்களுக்கும் சேர்த்துத்தான் பெரியார் போராடினார்.

குழந்தைத் திருமணம் வழக்கமாக இருந்தது. அதனால், சிறுவயதிலேயே நிறைய பெண்கள் விதவைகள் ஆனார்கள். விதவைகளை பார்ப்பது தீட்டு என்று பார்ப்பனர்கள் கூறி வைத்தார்கள்.

குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவைகள் மறுமணத்தையும், ஜாதி மத வேறுபாடு இன்றி திருமணம் செய்வதையும் பெரியார் ஆதரித்தார். தனது மேடைகளில் இதுபோன்ற ஆணும் பெண்ணும் மாலை மாற்றி கொண்டு கணவன் மனைவியாக வாழ்வதை பெரியார் உறுதிப்படுத்தினார்.

இந்தியாவிலேயே புரோகிதர்கள் சடங்குகள் இல்லா மல் மிக எளிமையாக திருமணங்களை அறிமுகப்படுத் தியது பெரியார் மட்டுமே.
இன்றைக்கு நாம் உபயோகப்படுத்தும் தமிழ் எழுத்துக்களில் பெரியார் செய்த மாற்றங்கள் முக்கியமானவை. ணா, னை, லை உள்ளிட்ட எழுத்துக்கள் பெரியார் மாற்றி உபயோகித்தவை.

தமிழ் மொழியை 64 எழுத்துக்களில் அடக்கி விடலாம் என்று பெரியார் சொன்னார். 26 எழுத்துக்களைக் கொண்டு வெள்ளைக்காரன் உலகத்தையே புரட்டுகிறான். ஐந்து வயதுச் சிறுவன்கூட ஒரு மாதத்தில் ஆங்கில எழுத் துக்களை கற்றுக் கொள்கிறான். தமிழனுக்கு மட்டும் ஏன் 216 எழுத்துக்கள் என்று பெரியார் வினா எழுப்பினார்.

தமிழ் மொழி காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை வசப்படுத்திக் கொள்ளவில்லை என்று பெரியார் வருத்தப்பட்டார்.

பள்ளிகளும் கல்லூரிகளும் ஹோட்டல்களைப் போல வர்த்தக நிலையங்களாகி விட்டன. பெரும்பான்மையான பள்ளிகள் லாபத்தில் நடத்தப்படுகின்றன. ஆசிரியர் என்பவர் ஹோட்டல் முதலாளி போல் பள்ளி நடத்துகின்ற முதலாளி சொல்லுகிறபடி கல்வியை பரிமாறுகிறார் என்று பெரியார் குறைகூறினார்.

65 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்ன நிலை இன்றும் மாறியிருக்கிறாதா என்பதை நினைத்துப் பார்த்தால் அவர் எந்த அளவுக்கு எதிர்காலத் தலைமுறை குறித்து சிந்தித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

பெரியார் அளவுக்கு எல்லா புராணங்களையும் கரைத்து குடித்தவர்கள் யாருமில்லை. அவற்றைப் படித்துவிட்டே, அவற்றில் உள்ள புரட்டுகளை அம்பலப்படுத்தினார்.

அந்தப் புராணங்களில் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் எந்த அளவுக்கு மனிதர்களைக் காட்டிலும் இழிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார்.

பெரியாருக்கு எதையும் ஒளித்து மறைத்துப் பேசத் தெரியாது. தனது மனதுக்கு சரியெனப் பட்டதை நேருக்கு நேராக சொல்லி விடுவார்.

தனது தாயார் மரணத்தின் போது அவர் எழுதிய குறிப்பு முக்கியமானது.

“மூட நம்பிக்கைகளுக்கும் குருட்டு அனாச்சாரங்களுக்கும் தாயகமாய் இருந்த என் தாயார் தனது 95 ஆவது வயதில் முடிவெய்தி விட்டார். அந்த அம்மையாருடைய கோரிக்கை எனக்கு ஒரு கல்யாணம் செய்துவிட்டு சாக வேண்டும் என்பதுதான். என்னுடைய கோரிக்கையோ எனக்கு முன்னதாகவே அந்த அம்மையார் முடிவெய்திட வேண்டும் என்பது. என் இஷ்டம்தான் நிறைவேறியது” என்று எழுதியிருந்தார்.

மக்கள் பகுத்தறிவாளர்களாக மாறவேண்டும் என்பது தான் பெரியாரின் ஆசை. சாதி ஒழிய வேண்டும். தமிழர்கள் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காகவே அவ்வப் போது பல கட்சிகளுக்கும் ஆதரவளித்ததாக பெரியாரே கூறி இருக்கிறார்.

“சுயநலத்துக்காக அல்ல. மக்கள் நலனுக்காக எந்தக் கட்சியை எதிர்ப்பேனோ, எதை ஆதரிப்பேனோ எனக்கே தெரியாது” என்றார் பெரியார்.

தனது கோரிக்கை நிறைவேறாவிட்டால் தான் ஆதரித்த கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி சிறைக்கு செல்லவும் தயங்க மாட்டார்.

அதுபோலவே, பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லா தவர். கடவுள் சிலைகளை உடைப்பார். கடவுள் சிலைகளுக்கு செருப்படி கொடுப்பார். இவை அனைத்தும் பிராமணியத்துக்கு எதிரான அவர் போராட்டங்கள்.

அதேசமயம், கடவுள் நம்பிக்கை உள்ள யாரேனும் அவருக்கு விபூதி கொடுத்தாலோ, குங்குமம் கொடுத்தாலோ அதை பணிவோடு வாங்கி பக்கத்தில் இருப்பவரிடம் கொடுத்து விடுவார்.

வாழ்நாள் முழுவதும் பெரியார் படித்துக் கொண்டே இருந்தார். சிறிய எழுத்துக்கள் தெரியாத காலத்திலும் லென்சுகளை பயன்படுத்தி படிப்பார். படித்தவற்றை குறிப்பெடுத்து வைப்பார்.

அவர் கேள்வி கேட்காத விஷயங்களே இல்லை. தனது கூட்டங்களிலும் பங்கேற்போரை கேள்வி கேட்கும்படி சொல்லி அந்த கேள்விகளுக்கு தயங்காமல் பதில் அளிப்பார்.

1967 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வரை பெரியார் தி.மு.க.வை எதிர்த்தார். பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களை கடுமையாக சாடினார். காமராஜரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். ஆனால், அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.

முடிவுகள் வெளியானவுடன் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் திருச்சியில் தங்கியிருந்த பெரியாரை நேரில் போய்ச் சந்தித்தனர்.
“இந்த ஆட்சி பெரியாருக்கு காணிக்கை” என்றார்கள்.

அண்ணா முதல்வரானதும் பெரியார் நடத்திவைத்த சுயமரியாதைத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்று அறிவித்தார்.

பெரியாரின் கொள்கைகள் நியாயமானவை. கோரிக்கைகள் அர்த்தமுள்ளவை. ஆனால், அவற்றை நிறைவேற்ற ஆளுங்கட்சிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி சிறை செல்ல வேண்டியிருந்தது.

இப்போது, அவருடைய உண்மையான சீடர்கள், சமூக நீதியில் அக்கறை உள்ள அவருடைய பிள்ளைகள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன் யாரையும் கேட்காமலேயே ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் கிடைக்கத் தொடங்கின. பெரியார் செய்ய வேண்டிய வேலைகளை தி.மு.க. அரசாங்கம் நிறைவேற்றத் தொடங்கியது.

கடைசி காலத்தில் தள்ளாத நிலையிலும் மூத்திரப் பையை ஏந்தியபடி அவர் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார். அவருடைய கைத்தடி தமிழர்களுக்கு எதிரான எல்லாவற்றையும் தட்டிக் கேட்டது. கூனிக்குறுகிக் கிடந்த தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ அடித்தளம் போட்டார்.

அவருடைய வாழ்நாளிலேயே அவருடைய விருப்பங்கள் நிறைவேறுவதை பார்த்து மகிழ்ந்தார்.

Leave A Reply