உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் – 13. சல்வடார் டேலி

Share

இவர் ஸ்பெயின் நாட்டு ஓவியர்.

1904 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி ஸ்பெயினில் உள்ள ஃபிகூய்ரெஸ் என்ற ஊரில் பிறந்தார் சல்வடார் டேலி.

இவருடைய தந்தை கௌரவமான நோட்டரியாக பணிபுரிந்தார். சின்ன வயதிலேயே டேலியிடம் ஓவியத்திறமை பளிச்சிட்டது. பத்து வயதிலேயே ஓவியப்பாடத்தை கற்கத்துவங் கினார். பிரபலமான ஸ்பானிய இம்ப்ரசனிஸ்ட் ஓவியர் ரமோன் பிச்சோட் டேலிக்கு ஆசிரியராக இருந்தார்.

மாட்ரிட்டில் இருந்த ராயல் அகாடமி ஆப் ஆர்ட் எனும் கலைக் கூடத்தில் ஓவியம் கற்கத் தொடங்கினார். ஒரு சில காரணங்களால் அவர் அகாடமியில் இருந்து இரண்டு முறை நீக்கப்பட்டார். அவரால் இறுதித் தேர்வை எழுத முடிய வில்லை. தனக்கு பரீட்சை வைப்பவர்களை விட தன்னுடைய தகுதி அதிகம் என்று அவர் கூறினார்.

1928ல் சல்வடார் டேலி பாரீஸ் சென்றார். அங்கு அவர் ஸ்பானிய ஓவியர்கள் பாப்லோ பிகாசோ, ஜோஆன் மிரோ ஆகிய ஓவியர்களை சந்தித்தார். சர்ரியலிஸ்ட்டு குழுவினருடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். சர்ரியலிசக் கோட்பாட்டு ஆசிரியர் எனப்பட்ட ஆன்ட்ரே ப்ரெட்டன் மற்றும் அவரை சுற்றியிருந்த சர்ரியலிச ஓவியர்களுடன் சேர்ந்துகொண்டார். அவர்கள் மத்தியில் தன்னை மிக முக்கியமானவராக நிலைநிறுத்தினார்.

ஆனால் சில வருடங்க ளில் ப்ரெட்டன், சல்வடார் டேலியுடன் முரண்பட்டார். அளவுக்கு மீறி சுயவிளம்பரம் தேடுகிறார், பாசிசத்தை ஆதரிக்கிறார், பணத்தாசை பிடித்தவராக இருக்கிறார் என்று சல்வடார் டேலி மீது ப்ரெட்டன் சரமாரியாக குற்றம் சாட்டினார்.

1929ல் சல்வடார் டேலி ஓவியத்தில் தனக்கென்று ஒரு தனிப்பாணியை கண்டுபிடித்தார். அந்தப்பாணிதான் அவரை புகழ் பெற்ற ஓவியராக்கியது. நமது அடிமன உலகம் நமது கனவுகளில் வெளிப்படுகிறது என்பது உளவியலாளர் சிக்மண்ட் பிராய்டின் கோட்பாடு. இதை அடிப்படையாகக் கொண்டது சர்ரியலிசக் கோட்பாடு. அவர் தனது ஓவியத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகளை கையாண்டார். இதனால் அவருடைய ஓவியங்கள் புகைப்படங்களை ஒத்திருந்தன.

சல்வடார் டேலி, காலாவை சந்தித்தது, அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையான காலகட்டம். காலா ரஷ்யவிலிருந்து ஸ்பெயினுக்கு வந்து குடியேறியவர். சல்வடார் டேலியைக் காட்டிலும் 10 வயது மூத்தவர். காலா ஏற்கனவே திருமணமானவர். கணவர் பெயர் பவுல் எலுவார்ட்.

சல்வடார் டேலியுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு அவர் மீது காதல் ஏற்பட்டது. கணவரை விட்டு பிரிந்து வந்து டேலியுடன் வசித்தார். அவரது ஓவியங்களுக்கு மாடலாக இருந்தார். அவரது தொழிலை நிர்வகிக்கும் நிர்வாகியாக இருந்தார். டேலிக்கு எல்லாமே காலாதான் என்று இருந்தார். காலாவின் ஒத்துழைப்பால் 1930ம் ஆண்டு ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் வெற்றிகரமாக ஓவியக் கண்காட்சி களை நடத்தினார் டேலி.

1932ம் ஆண்டு காலா அவரது கணவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்துப் பெற்றார். 1934ல் பாரீசில் டேலியும் காலாவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். 1952ல் காலாவின் முன்னாள் கணவர் இறந்தார். அதன்பிறகு 1958ல் இருவரும் வெகு விமரிசையாக தேவாலயம் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். 1965ல் இருவரும் ஒன்றாக இருக்கும் நேரம் மிகவும் குறைந்தது. ஆனாலும் காலா டேலியின் தொழில் விவகாரங்களை தொடர்ந்து கவனித்து வந்தார்.

1933ல் நியூயார்க்கில் தலியின் ஓவியங்கள் மட்டுமே இடம் பெற்ற கண்காட்சி நடந்தது. அவரது ஓவியங்கள் மட்டும் இடம் பெற்ற முதல் கண்காட்சி இது. பின்னர் ஒரு வருடம் கழித்து ஓவியர் பாப்லோ பிகாசோவின் கடன் உதவியில் முதன் முதலாக அமெரிக்கா சென்றார் டேலி. இரண்டாம் உலகப் போரில் இருந்து தப்பிப்பதற்காக டேலி அமெரிக்காவை தேர்வு செய்தார். 1940ல் அமெரிக்காவில் அவர் நிரந்தரமாகக் குடியேறினார். அதன்பிறகு தொடர்ந்து உயிர்த்துடிப்பு மிக்க ஓவியங்கள் இடம்பெற்ற கண்காட்சிகளை நடத்தினார்.


மகத்தான பல ஓவியங்களை ஒருபுறம் வரைந்து கொண்டி ருந்த அதே சமயம் மற்றொருபுறம் டேலி ஒரு சர்ரியலிஸ்ட் கோமாளி போல நடந்து கொண்டார். இது ஊடகங்களின் கவனத்தை கவர்ந்தது. அவருக்கு எக்கச்சக்கமாக பணம் குவிந் தது. டேலிக்கு ‘அவிடா டாலர்ஸ்’(பணத்தாசை பிடித்தவன்) என்று ப்ரெட்டன் பெயர் வைத்தார். அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரமுகர்களின் பிரியத்துக்கு உரியவரானார் டேலி. ஜாக் வார்னர், ஹெலினா ரூபின்ஸ்டெய்ன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இவருடைய தூரிகைக்கு முன் காத்துக் கிடந்தனர்.

1948ல் டேலியும் காலாவும் ஐரோப்பாவுக்கு திரும்பினர். அவர்களுடைய நேரத்தை பெரும்பாலும் ஸ்பெயின், பாரீஸ் அல்லது நியூயார்க்கில் செலவழித்தனர். இதற்கிடையில் விஞ்ஞானம், மதம் மற்றும் வரலாற்று விஷயங்களில் டேலிக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவற்றை தனது ஓவியங்களில் இணைத் தார். தனக்குத் தேவையான அறிவியல் விஷயங்களை பிரபலமான விஞ்ஞான பத்திரிகைகளில் இருந்து எடுத்துக் கொண்டார்.

ஓவியத்துறையில் முதல்தரமான படைப்பாளிகள் என கருதப்பட்ட ரபேல், வெலாஸ்குவெஸ், பிரெஞ்சு ஓவியர் இன்க்ரெஸ் போன்றவர்களின் படைப்புகளால் கவரப்பட்டார் டேலி.

டேலியின் சர்ரியலிசபாணியை மற்ற ஓவியர்கள் கிண்டல் செய்தனர், ‘எப்போதும் சர்ரியலிஸ்ட் ஆக இருப்பதற்காக அவர் தனது வாழ்க்கை முழுவதையும் கண்களையும் மூக்குக ளையும் வரைவதிலேயே கழித்தார்.’ என்று அவர்கள் கூறினர்.

1958ல் மிகப்பெரிய அளவிலான வரலாற்று ஓவியங்களை வரைந்தார். ஒவ்வொரு வருடமும் வரலாற்று நினைவு சின்ன ஓவியம் ஒன்றை வரைந்தார். லிகாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடையில் அவர் அந்த ஓவியங்களை வரைந்தார். அதில் மிகவும் புகழ் பெற்ற ஓவியம் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிந்ததை சித்தரிக்கும் தி டிஸ்கவரி ஆஃப் அமெரிக்கா பை கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற ஓவியம்தான்.

அந்த ஓவியம் புளோரிடா, செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள டேலி அருங்காட்சியகத்தில் இப்போதும் இடம்பெற்று இருக்கிறது. இதுபோன்ற ஓவியங்களை அவர் வரைந்த காலத்தை ஓய்வெடுத்த காலம் என்று சொல்லலாம். பின்னா ளில் அவர் வரைந்த ஓவியங்கள் எல்லையில்லாத கற்பனை வளத்துடன் சிறந்த படைப்புகளாக இருந்தன.

ஓவியர், சிற்பி, அலங்கார வடிவமைப்பாளர். கியூபிசம், ப்யூச்சரிசம், மெட்டபிசிக்கல் போன்ற பல்வேறு ஓவிய வடிவங்களை இவர் கடந்தார்.

1929ல்தான் சர்ரியலிஸ்ட்டுகளுடன் சேர்ந்தார். அதன்பிறகு, தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்வதில் திறமை மிக்கவரானார். அதுவே அவரை பிரபலமாக்கியது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் விசித்திரமான போக்கு கொண்டவராக இருந்தார். 1936ல் நடைபெற்ற லண்டன் சர்ரியலிஸ்ட்டுகள் கண்காட்சியின் திறப்பு விழாவில் நீச்சல் உடையுடன் கலந்து கொண்டார்.


இதுபோன்ற நடவடிக்கைகள் தனது படைப்பாக்க திறனை வளர்ப்பதாக அவர் கூறினார். அவர் தனது ஓவிய பாணிக்கு ஆட்டோமேட்டிசத்தின் சர்ரியலிச கோட்பாட்டை எடுத்துக் கொண்டார். அதை உருமாற்றி அதற்கு அவர் கிரிட்டிக்கல் பாரனோயா என பெயரிட்டார். இந்த கோட்பாட்டின்படி ஒருவர் கிளினிக்கல் பேரனோயாவில் தோன்றுவதை போன்ற அசலான மாயத்தோற்றங்களை வளர்க்க வேண்டும். அந்த நேரத்தில் மிச்சமிருக்கும் காரண காரியங்களால் கட்டுப்படுத்தப் படும் மனதின் பிரக்ஞை நிலையை ஒருவர் வேண்டுமென்றே இழக்க வேண்டும்.

இந்த வழிமுறை, ஓவியங்களை உருவாக்கும் போதும் கவிதைகளைப் படைக்கும் போது மட்டுமே பின்பற்றப்பட வேண்டும். ஆனால் அன்றாட வாழ்க்கையிலும் இதை பின்பற்ற வேண்டும் என்றார் சல்வடார் டேலி. அவரது ஓவியங்களில் எதார்த்தமற்ற கனவு வெளியையும், அவரது கற்பனையில் இருந்து வெளிப்பட்ட அன்னியமான மாயக் கதாப்பாத்திரங் களையும் அவர் சித்தரித்தார். அவரது படங்களை ‘கையால் வரையப்பட்ட கனவுப் புகைப்படங்கள்’ என்று அவர் கூறினார்.

பாதி திறக்கப்பட்ட மேசை டிராயரில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் மனித முகம், எரியும் வரிக்குதிரை, உருகும் மெழுகில் செய்யப்பட்டது போல் உருகி வழியும் கடிகாரங்கள் என அவரது ஒவியங்கள் அனைத்தும் சர்ரியலிச பாணியில் வரையப்பட்டவை.

1937ல் சல்வடார் டேலி இத்தாலிக்கு சென்றார். அப்போது அவரது ஓவியங்களில் பாரம்பரிய பாணியை கையாண்டார். அவர் ஜெனரல் பிரான்கோவின் ஆதரவாளராக இருந்தார். எனவே, தனது ஓவியங்களில் அரசியல் கருத்தை வெளிப்படுத்தி னார். இதனால் சர்ரியலிஸ்ட்டுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

1940ல் அமெரிக்கா சென்றார். 1955 வரையில¢ அங்கு இருந்தார். இந்த காலகட்டம் முழுவதையும் சுயவிளம்பரத் திற்கே செலவிட்டார். அவரது ஓவியங்கள் மதம் தொடர்பான கருத்துக்களை கொண்டிருந்தன. தி க்ரூஸிஃபிக்ஸன் ஆஃப் செயின்ட் ஜான் ஆஃப் தி க்ராஸ் என்னும் ஓவியத்தை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இதேபோல பாலியல் தொடர்பான கருவை கொண்டிருக் கும் ஓவியங்களையும் வரைந்தார். அவரது பல ஓவியங்கள் அவரது மனைவி ‘காலா’வை மையப்படுத்தி இருந்தன. 1955ல் சல்வடார் டேலி ஸ்பெயின் திரும்பினார். வயதான காலத்தில் அவர் ஒரு துறவியைப் போல தனித்து வாழ்ந்தார்.

ஓவியங்கள் தவிர சிற்பம், பத்திரிகைகளில் ஓவியம், நகை அலங்காரம், அரங்கங்களை வடிவமைத்தல் போன்ற துறைகளி லும் சிறந்து விளங்கினார். திரைப்பட இயக்குனர் லுயிஸ் பூனுயெல் உடன் சேர்ந்து உன் சியென் அன்டாலவ் (1929) எல் ஏஜ் டி (1930) ஆகிய படங்களை எடுத்தார். இதில் சியென் அன்டாலவ் படம் முதல் சர்ரியலிஸ்ட் படமாகும்.

இயக்குனர் ‘ஆல்ப்ரட் ஹிட்ச்காக்’கின் ஸ்பெல் பவுண்ட்(1945) படத்தில் ஒரு கனவுக்காட்சியை அமைப்பதில் சல்வடார் டேலி பங்காற்றினார். ஹைடன் ஃபேசஸ் என்ற நாவல்(1944)ஒன்றையும் அவர் எழுதினார். பல வால்யூம்களைக் கொண்ட சுயசரிதை எழுதினார். 20ம் நு£ற்றாண்டின் பிரபலமான ஓவியர்களில் ஒருவராக சல்வடார் டேலி விளங்கினார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவரு டைய நடவடிக்கைகள் முரண்பாடு மிக்கவையாக இருந்தன. 1930களில் அவர் படைத்த மகத்தான சர்ரியலிச ஓவியங்களுக்கு பிறகு அவரது படைப்புகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக ஒரு கருத்து உள்ளது. சல்வடார் டேலி ஓவியங்களுக் கென்றே ஸ்பெயினில் அவர் வசித்த நகரமான ஃபிகுவேரஸ், புளோரிடாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பார்க் ஆகிய இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைந்தன. அவர் உயிரோடு இருக்கும் போது பல்வேறு சர்ச்சைகள் அவரைப்பற்றி எழுந்தாலும் 1989ல் அவர் இறந்ததற்குப் பிறகு, அவரது பெயர் பல்வேறு பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் இடம் பிடித்தது.

எந்த ஒரு ஓவியனுக்கும் அவனுடைய வாழ்நாளிலேயே, அவனது ஓவியங்கள் மட்டுமே இடம் பெறக்கூடிய இரண்டு அருங்காட்சியகங்கள் அமைந்தது இல்லை. ஆனால் டேலிக்கு அத்தகைய அருங்காட்சியகங்கள் அமைந்தன. டேலி அருங்காட்சியகம் 1971ல் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. டேலியின் ஓவியங்களை சேகரித்த ரசிகர் ஏ.ரெனால்ட்ஸ் மோர்ஸ் மற்றும் அவரது மனைவி எலினார் ஆகியோர் இந்த அருங்காட்சியகத்தை அமைத்தனர். முதலில் அவர்கள் வசித்த (ஓஹியோ, க்ளீவ்லேண்ட்டில்) வீட்டிற்கு அருகிலேயே டேலியின் ஓவியங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். பின்னர் புளோரிடாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பார்கிற்கு இந்த அருங்காட்சியகத்தை மாற்றினர். இங்கு டேலியின் 95 ஆயில் பெயிண்ட்டிங்குகள் உள்ளன. இதில் அவர் வரைந்த 6 பெரிய வரலாற்று ஓவியங்களும் அடக்கம்.

1918 டேலிக்கு 14 வயதானபோது அவரது முதல் ஓவியக்கண்காட்சி ஸ்பெயினின் ஃபிகூரெஸ் நகரில் உள்ள முனிசிபல் தியேட்டரில் நடந்தது. பின்னாளில் டேலி புகழ் பெற்ற ஓவியரானவுடன் அந்த முனிசிபல் தியேட்டரை அருங்காட்சியகமாக மாற்ற முயற்சித்தார். 1970ல் இருந்து இதற்காக அவர் போராடினார். கடைசியில் 1974ம் ஆண்டு அந்த முனிசிபல் தியேட்டர் அதிகாரப்பூர்வமாக டேலி அருங்காட்சியகமாக திறந்து வைக்கப்பட்டது.

1980ல் டேலியை முடக்குவாத நோய் தாக்கியது. அவரது கைகளில் நடுக்கமும் பலவீனமும் ஏற்பட்டது. அவரால் து£ரிகை பிடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகளில் காலா இறந்தார். அடுத்தடுத்த சோதனைகளால் டேலி மிகவும் சோர்ந்துபோனார். பூபோல் சென்று, அங்கு ஒரு அரண்மனையை வாங்கினார்.
அதை காலாவின் நினைவுச் சின்னமாக வடிவமைத்தார். 1984ல் அவர் தூங்கிக் கொண்டி ருந்தபோது தீவிபத்து ஏற்பட்டு உடலெங்கும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன.

1989ம் ஆண்டு ஜனவரி 23ந்தேதி டேலி தனது சொந்த மியூசியத்தில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

1949ல் டேலியின் சகோதரி அன்னா மரியா டேலியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். டேலியின் இளமைக் காலங்கள் மிகவும் சாதாரணமாகவும் அதே சமயத்தில் சந்தோஷமாகவும் இருந்ததாக அவர் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த மகத்தான சர்ரியலிஸ்ட் கலைஞன் மிகவும் மூர்க்கத்தனமாகவும் ஆபாசமாகவும் வரைந்த ஒரு ஓவியத்தை அவரது சகோதரிக்கு எதிராக வரையப்பட்டதாகக் கூறலாம்.

ஆனால், அவர் ஓரளவுக்கு இயல்பான மனிதராகத்தான் இருந்தார் என அவரிடம் நீண்டகாலம் செயலாளராக இருந்த ராபர்ட் டெஸ்ச்சார்ன்ஸ் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

டேலியின் ஓவியங்கள் உலோகத்தில், மரத்தில், என பல்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்டன. அவரது கிராபிக் வேலைப்பா டுகள் தனித்தனியாகவோ அல்லது தொகுப்பாகவோ, புத்தகங்களிலோ பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. டேலியின் படைப்புகள் பற்றிய செய்திகளை அவரது ஒப்புதலுடன் நியூயார்க்கில் உள்ள டேலி ஆர்ச்சிவ் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குனர் ஆல்ஃப்ரட் ஃபீல்ட் என்பவர் 40 வருடங்களாக சேகரித்து வந்தார்.

1980 வரையில் டேலியின் படைப்புகள் நன்றாக விற்பனையாயின. ஓவியர் டேலி தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றதற்குப் பிறகு, புதிய படைப்புகள் விற்பனைக்கு வராமல் போனது. பழைய படைப்புகளின் போலிகள் சந்தையில் உலா வர ஆரம்பித்தன. 1922ல் லீ கேட்டரால் தி கிரேட் டேலி ஃப்ராட் அதர் டிஸெப்ஷன்ஸ் என்ற புத்தகத்தை வெளியிட் டார் . டேலியின் போலிப்படைப்புகளை வெளியிட்டதற்காக பல பதிப்பக உரிமையாளர்கள், ஓவிய விற்பனையாளர்கள், டேலியின் முன்னாள் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டனர்.
டேலியின் பெயரால் அவரது போலி கையெழுத்துகளுடன் அவரால் எழுதப்படாத ஓவியங்கள் எல்லாம் விற்பனைக்கு வந்தன.

உண்மையான ஓவியங்களின் போலி நகல்கள் வெளிவந்தன. டேலி நியூயார்க், ஸ்பெயின், பாரீஸ் என்று அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருந்தார். எனவே, அவரது ஓவியங்களை பதிப்பகத்தார் வெளியிடுவதில் தாமதம் ஏற்படா மல் இருக்க, வெள்ளைத் தாள்களில் அவர் தனது கையெழுத்துக்களை போட்டுக் கொடுத்திருந்தார். இந்த கையெழுத்துக்களைத்தான் போலிகளை உருவாக்கியவர்கள் பயன்படுத்திக்கொண்டனர் என ஃபீல்ட் கூறினார்.

Leave A Reply