எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குனு தனக்கு பிடிக்காத மாநில அரசுகளை கலைப்பதை மத்திய அரசுகள் வாடிக்கையாக கொண்டிருந்தன.
அரசியல் சட்டத்தில் 356 பிரிவை பயன்படுத்தி, இந்தக் கலைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநர்களிடம் அறிக்கை பெற்று, அதன் அடிப்படையில் ஆட்சியைக் கலைத்தார்கள்.
1989 ஏப்ரல் 21 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருந்த எஸ்.ஆர்.பொம்மை அரசாங்கத்தை பெரும்பான்மை இழந்ததாக கூறி கலைத்தார்கள்.
அங்குதான் வினை வந்தது. தனது ஆட்சியைக் கலைத்தது செல்லாது என்றுகூறி வழக்கு தொடர்ந்தார் பொம்மை. கர்நாடக உயர்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 1994 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.
நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒப்புதல் அளித்தால்தான் ஒரு மாநில அரசை கலைக்க முடியும். தேவைப்பட்டால் மாநில அரசின் செயல்பாடுகளை குடியரசுத்தலைவர் முடக்கி வைக்கலாம். அந்த உத்தரவை நாடாளுமன்றம் ஏற்க மறுத்தால், இரண்டு மாதங்களில் முடக்கப்பட்ட மாநில சட்டமன்றம் செயல்படும் என்று அந்த தீர்ப்பு கூறியது.
அதுமாதிரி ஒரு தீர்ப்பை ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயமாக முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய பல மசோதாக்களை தனது சீட்டுக்கு அடியில் போட்டு உட்கார்ந்துகொண்டு, தமிழ்நாடு மக்களின் விருப்பங்களை உதாசீனப்படுத்தும் ஆளுநர் ஆர்என்.ரவிக்கு எதிராக விரைவில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடரும் என்று தெரிகிறது.
இந்த வழக்கு ஆளுநர்களின் நியமனத்தை ரத்து செய்தோ, அல்லது அவர்களுடைய அதிகாரத்தை வரையறுத்தோ தீர்ப்பை பெறும் என்று நம்பலாம்.•
-ஆதனூர் சோழன்