ஜோதிகாவும் கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாத கோவில்களும்!

Share

நடிகை ஜோதிகா அப்படி என்னத்த சொல்லிட்டாங்கனு இப்படி பொங்குறாங்களோ தெரியலை. கோவில் உண்டியலில் போடுவதைப் போல பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் பண உதவி செய்யுங்கனு சொன்னது தப்பா?

இதுக்கு பார்ப்பனர்கள் பொங்குறாங்கனா அதுல ஒது நாயம் இருக்கு. உண்டியல் வருவாய் போச்சுனா, அவுங்க வருவாய் போச்சு. ஆனால், ராஜராஜனின் பரம்பரைனு சொல்லிட்டு ஒருத்தர் ஏன் ஜோதிகாவை காய்ச்சி எடுக்கிறார்னுதான் தெரியல.

கோவில் கட்டியதையும், நாடுகளுடன் சண்டையிட்டதையும், அதுவும் சக தமிழர்களோடு சண்டையிட்டதையே பெருமையாக பேசும் ஆண்ட பரம்பரைகளுக்கு என்னத்த சொன்னாலும் புரியாது.

இருந்தாலும் நாம் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். கல்வி ஆராய்ச்சிக்கும், சுகாதாரத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கும் அரசுகளே சிறந்த அரசுகள் என்று வரலாறு நிரூபிக்கிறது.

ராஜராஜனின் பரம்பரைக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்ட கல்விக்கூடங்கள் ஏதேனும் வரலாற்றில் இடம்பெற்று இருக்கிறதா? சுகாதார வசதிகள் ஏதாச்சும் சொல்லப்பட்டிருக்கிறதா?

தமிழர் பெருமையை காப்பாற்றினார் என்று பீற்றுகிறீர்களே, பிறகு ஏன் பாண்டியர்களுடனும், சேரர்களுடனும் சண்டையிட்டு அவர்களுடைய நாட்டை பறித்தார்? சக தமிழர்களுடன் ஒற்றுமையை பாதுகாக்க முடியாத ராஜராஜன் தமிழர் பெருமையை காப்பாற்றினாரா?

ராஜராஜன் காலத்தில்தான் பார்ப்பனர்களுக்கு சலுகைகள் அதிகரித்தன. உழைக்கும் மக்களின் நிலத்தை பறித்து பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கும் பழக்கத்தை தொடங்கி வைத்ததே ராஜராஜன்தான்.

அதாவது, தமிழர்களை பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக நிலத்தில் உழைக்கும் வழக்கத்தை தொடங்கிவைத்தவன் ராஜராஜன்தான்.

தஞ்சை பெரிய கோவிலையும் ராஜேந்திர சோழபுரத்தையும் மிகப்பெரிய சாதனைகள் என்று அவனுடைய பரம்பரைகள் மட்டுமின்றி பலரும் பெருமை பீற்றுகிறார்கள்.

தஞ்சை பெரியகோவில் கட்டுவதற்காக மக்களிடம் பறித்த வரிப்பணம் எவ்வளவு? கோவில் கட்டும் பணியில் அந்தக் கோவிலுக்கு அடியில் புதைந்த அப்பாவி உயிர்கள் எத்தனை? இப்படியெல்லாம் காலங்காலமாக கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ஆனால், அதையெல்லாம் மறைத்துவிட்டு, கோவிலின் பெருமைகளை மட்டும் பேசுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

கோவிலைக் கட்டிய ராஜராஜன், கருவறைக்குள் சமஸ்கிருதத்தையும், வெளியே தமிழையும் நிறுத்தினான் என்பதை சொன்னால் கோபப்படுகிறார்கள். தமிழே தெரியாத கடவுளுக்கு எத்தனை உயரத்தில் கோவில் கட்டினால் தமிழனுக்கு என்ன பெருமை வந்துவிடப் போகிறது?

தமிழர்களின் சொத்துக்களை வந்தேறி பார்ப்பனர்களுக்கு வாரிக்கொடுத்த வள்ளல் என்று பலனடைந்தவர்கள் கொண்டாடலாம். வெள்ளைத்தோலுக்கு மயங்கி நாடு நகரங்களை தானமாக எழுதிக்கொடுத்த மன்னனை எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது.

ஜோதிகா மருத்துவமனைகளுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் நிறைய செலவு செய்ய வேண்டும் என்று கூறியதையே சகிக்க முடியாமல் கதறுகிறார்கள். அவரை இஸ்லாமிய பெண் என்றும் நாலாந்தர நடிகை என்றும் வசை பாடுகிறார்கள். ராஜராஜன் யோக்கியதை அவனுடைய அந்தப்புரத்தில் நாற்றமெடுத்ததை மறைக்கிறார்கள்.
ஷாஜகான் தாஜ்மகால் கட்டியதை விமர்சனம் செய்கிறார்கள். இந்துக் கோவிலை இடித்து தாஜ்மகால் கட்டப்பட்டதாக ஆர்எஸ்எஸ் சங்கிகள் பரப்பும் கதையை ராஜராஜனின் பரம்பரையும் பரப்புகிறது.

ஷாஜகான் தாஜ்மகால் கட்டியதையும், அதற்காக மக்கள் பணத்தை செலவழித்ததையும் அவருடைய மகன் அவுரங்கசீப் ஏற்கவில்லை. அதனால்தான் அவரை சிறையில் அடைத்தான்.

மக்களுடைய வயிற்றுப் பசியையும், அறிவுப்பசியையும் போக்கிய தமிழ் மன்னர்களின் பட்டியல் எடுத்தால் அதில் நிச்சயமாக ராஜராஜனின் பெயர் இல்லவே இல்லை. அவன் எழுதி வைத்த வரலாற்றி்ல்கூட இருப்பதாக தெரியவில்லை.
கொரோனா வைரஸிடமிருந்து காப்பாற்ற முடியாத கோவில்களுக்கு செலவழிப்பதைவிட மருத்துவ மனைகளுக்கு செலவழிக்கலாம் என்று ஜோதிகா சொன்னது நியாயம்தானே.

Leave A Reply