குத்திக் குத்தி விளையாடுவோமா? – மருத்துவர் ரைஸ் Raize

Share

‘நாம செத்து செத்து விளையாடலாமா?னு ஒரு படத்தில் வடிவேலு கிட்ட காமெடியன் முத்துக்காளை கேட்பார். அனேகமா அது ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ன்ற படமா இருக்கும். அது மாதிரி ‘குத்தி குத்தி விளையாடலாமா?’ எனும் ஒரு மாபெரும் தத்துவம் பற்றிய பதிவு இது!

வருசத்துல எப்பவாச்சும் ஒரு நாள் எவனெவனெல்லாமோ போறான்னேன்னு நாமலும் ஜிம்முக்கு போயிட்டு வந்தா உடம்பு வலியெல்லாம் மறந்து ஜிவ்வுன்னு ஒரு ஃபீல் வருமே? அது எதனால தெரியுமா? என்டோர்பின்ஸ் மற்றும் என்ஸெபாலின்ஸ் (Endorphins and Encephalins) எனும் இயற்கையான வலி நிவாரண திரவங்கள் நமது மூளையில் சுரப்பதால்தான்! இது ஒரு தற்காலிகமான விசயம்தான்.

தலைவலி நங்குநங்குன்னு நடு மண்டையில தெறிக்கும்போது டைகர் பாமையும் கோடாரி தைலத்தையும் பரபரன்னு தீ பத்துற மாதிரி தலையில தேய்ச்சா எப்படி தலைவலி குறையுது? அது counter irritant (கோயம்புத்தூர் கவுண்டர் இல்லை) எனும் மெக்கானிசம்தான்.

ஒரு வலி இருக்கும் போது இன்னொரு வலியை ஏற்படுத்தினால் நமது மூளையில் வலியை உணர வைக்கும் பாதையில் ஒரு பை பாஸ் மாதிரி நடை மாற்றம் நடப்பதால் தான்! (பெட்ரோல் விலை ஏத்திட்டானேனு கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது கேஸ் விலையையும் ஏத்தினா மாதிரி) இப்ப துபாய் மாமா கொண்டு வந்த கோடாரி தைலம் லேசா எரிச்சலையும் கொமட்டலையும் கொடுத்தாலும் ஏனோ தலைவலி மறந்ததால் நமக்கு ஒரு தற்காலிக சந்தோசம்!

ஆக, இந்த இரண்டு தற்காலிக மெக்கானிசமும் கலந்ததுதான் அக்குப்பஞ்சர் எனும் ஊசிக் குத்து வைத்தியம்.

பல நூறு வருடங்களுக்கு முன் சீனாவில் கண்டுபிடித்த ஒரு வலி நிவாரண முறை. கூராக தீட்டப்பட்ட கற்களையும் எலும்புகளையும் பின்னர் ஊசிகளையும் பயன்படுத்தி வலியைப் போக்கினர்.

நமது உடலில் இருக்கும் Qi (chee) எனும் சக்தி தாறுமாறாக ஓடும் போதுதான் நோய்கள் வருகின்றனவாம். அதை சீர் செய்யத்தான் ஊசியை வைத்து தோலில் உள்ள 12 மெரிடியன்ஸ் (Meridians) எனும் அக்குப் புள்ளிகளை குத்துகிறார்களாம்.

அப்படியென்றால் நல்ல ஆரோக்கியமாக இருப்பவனுக்குக் குத்தினால் Qi எக்குத் தப்பா மாறி ஓடி ஏடாகூடமாயிடுமோ? பயமாத்தான் இருக்குது!

ஆக மொத்தத்தில அக்கு பஞ்சர் வலி நிவாரணி மட்டும்தான் என்பது நிரூபணமாயிருக்கிறது என வச்சிக்குவோம். அப்ப எதுக்கு கூகுள் யூனிவர்சிட்டிலயும் வாட்சாப் காலேஜ்லேயும் ஆறுநாள் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல அக்கு படிச்சவன்லாம் பெரிய படிப்பு படிச்சது மாதிரி ‘அக்கு ஹீலர்’ ன்னு போட்டுக்கிட்டு எல்லா நோய்க்கும் (கோவிட் 19, கிட்னி ஃபெய்லியர், உடலின் உள்ளே உள்ள கட்டிகள் உட்பட) நிவாரணம் சொல்லுறான்? வலியை மட்டும் தானே போக்கனும் அவன்?

இப்பத்தான் ஃபங்ஷனல் எம்ஆர்ஐ (functional MRI) மூலம் உடலில் எங்கே என்ன பண்ணினால் என்ன மாற்றம் நடக்குது என அறிய முடியுமே, அப்படியென்றால் தோலில் உள்ள 12 மெரிடியன் (meridian) புள்ளிகளில் ஊசிகளால் குத்துவது மூலம் உடலின் உள்ளே உள்ள உறுப்புகளோ அல்லது மூளையோ தூண்டப்படுவதை அல்லது நோய் குணமாவதை நிரூபிக்கமுடியுமா?

அக்குப்பஞ்சர் வலியை கட்டுப்படுத்தும் என்றால் அதன் மூலம் ஒரு முழுமையான அறுவை சிகிச்சையை மயக்க மருந்து கொடுக்காமல் நடத்திக் காட்ட முடியுமா?

சரிப்பா, அக்குப்பஞ்சர் வலி நிவாரணி என்று ஒப்புக் கொள்கிறோம். ஒருத்தனுக்கு காலையில ஹேங்க் ஓவர், லைட்டா தலைவலி, ஒரு பத்து பைசா பாராசிட்டமாலை போட்டுட்டு வேலைக்குப் போய் ஜோலிய பாக்காம ஏன் அவன் வெட்ட வெயில்ல ஒரு ‘அக்கு ஹீலர’ போய் தேடி அலையனும்?

டைரக்டா மூக்க தொடுறதுக்கு பதிலா ஏன்பா நான் தலைய சுத்திச்சுத்தி அப்புறம் காலயும் சுத்தி மூக்கத் தொடனும்? சிம்பிளான விசயத்தை ஏம்பா காம்ப்ளிக்கேட்டா ஆக்குறீங்க?

உடம்புல இத்தினி ஊசியக் குத்தற நீ ஒத்த ஊசி வேக்சின குத்த மாட்ட, ஏன்னா அது நவீன மருத்துவம். ஆனா தனக்கு ஏதாவது நோவு வந்தா பின் வாசல் வழியாக நவீன மருத்துவர்க்கிட்ட ஓடுறது!

ஆமா, எவனோ ஒருத்தன் நாலு நாள் அக்குபஞ்சர் கோர்ஸ் நடத்தி நாட்டில் உள்ள குடிமக்கள் எல்லாத்தையும் அக்குஹீலராக ஆக்குறானாமே? அவன ஃபாலோ பண்ணி தனக்கு நோவு வந்தா நைசா நவீன மருத்துவர்கிட்ட போறானா இல்லை தனக்குத்தானே உடம்பு பூரா ஊசிக் குத்துக்கிறானான்னு பாக்கனும்! என்னமோ போங்க நீங்களும் உங்க புத்திக்கெட்ட குத்தி குத்தி வைத்தியமும்! •

Leave A Reply