எளிய மருத்துவக் குறிப்புகள் – 18.வயிற்றுவலிக்கு நிழக்குமிழஞ்செடி

Share

சுகாதாரமான வாழ்க்கை, சுத்தமான நீர் என என்ன தான் கவனமாக வாழ்க்கை நடத்தி வந்தாலும்கூட, பலவகையான நுண்கிருமிகள் காற்று, நீர், உண்ணும் உணவு மற்றும் உடலிலுள்ள காயங்களின் மூலமாக உடலில் புகுந்துவிடுகின்றன. அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள், உணவகங்களில் உணவு உண்பவர்கள், திருமணம் போன்ற விசேஷங்களில் விருந்து உட்கொள்பவர்கள் வயிற்று உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.

முதலில் ஏப்பம், வயிறு ஊதல், வயிற்றுப் பொருமல் எனத் தொடங்கும். இது நாள் செல்லச்செல்ல கடும் வயிற்றுவலியை ஏற்படுத்தி, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத் துவதுடன் நாளுக்கு நாள் உணவின் மேல் வெறுப்பு உண்டாகி எதை சாப்பிட்டாலும் வயிறு பாதிக்குமோ என எண்ணத் தோன்றும்.

சுத்தமான உணவை உட்கொண்டு நுண்கிருமிகள் நீக்கப்பட்ட நீரை அருந்தி வருவதே வயிற்று தொல்லைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழியாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பழங்களையும், செரிமானப் பாதையை பலப்படுத்தும் நார்ச்சத்து நிறைந்த கீரை, காய்கறிகளையும் உட்கொள்வதே நல்லது.

உணவுப்பாதையில் தோன்றும் நுண்கிருமிகளை நீக்கி, அதனால் தோன்றும் வயிற்றுவலியைக் கட்டுப்படுத்தும் அற்புத மூலிகைதான் நிலக்குமிழ் என்ற குமிழம்.

ஜெம்லினா ஏசியாட்டிகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெர்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த பெருஞ்செடி வகையான நிலக்குமிழஞ் செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இலைகளும், வேரும் மருத்துவத்தில் பயன்படுகின்றன.

நிலக்குமிழ் இலை மற்றும் வேர்களிலுள்ள பியுரோபியுரான் வகையைச் சார்ந்த லிக்னான்கள் ஈ-கோலி மற்றும் ஸ்டெபிலோகாக்கஸ் வகையைச் சார்ந்த நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் படைத்தவை என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளன.

நிலக்குமிழ் வேர், சிறுதேக்கு, தேவதாரு, நிலவேம்பு, பப்படப்புல், கொட்டை நீக்கிய கடுக்காய், தோல் நீக்கிய சுக்கு, நார் நீக்கப்பட்ட கோரைக்கிழங்கு, தோல் நீக்கிய வசம்பு ஆகியவை சம பங்கு, பொரித்த பெருங்காயம் கால்பங்கு ஆகியவற்றை எடுத்து உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

35 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டுக் காய்ச்சி, 125 மிலியாக சுண்டிய பின்பு வடிகட்டி, தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர மேல் வயிற்றுவலி, நாட்பட்ட இருமலால் தோன்றிய வயிற்றுவலி மற்றும் கிருமியால் தோன்றிய குடற்புண்கள் ஆகியன நீங்கும்.

உடல் உஷ்ணத்தால் தோன்றும் வயிற்றுவலி நீங்க நிலக்குமிழ் இலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டி, வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்துவர உடல் உஷ்ணம் தணியும். இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடமிட மூட்டுவலி நீங்கும்.

Leave A Reply