எளிய மருத்துவக் குறிப்புகள் – 26.இதயத்திற்கு நன்மை தரும் சதகுப்பை!

Share

சீரகச் செடியைப் போல நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும்.

அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். ஒவ்வொரு காம்பிலும் நூற்றுக்கணக்கான மலர்கள் தோன்றும். அதனால் இது “சதபுஷ்பா” என்று பெயர் பெற்றது.

இந்தச் செடி எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. மலர்களில் விதைகள் தோன்றும். பழுத்ததும் தனியாகப் பிரிக்கப்படும். இலை இனிப்பும் கார்ப்பும் கலந்த சுவையுடன் வெப்பத்தை அதிகரிக்கும். லகு குணம் வெப்பத்தன்மை கொண்டது. சடராக்கினிக் குறைவையும் கிருமிகளையும் போக்கும். விந்துவைக் குறைக்கும். இதயத்திற்கு நன்மை தரும். மலத்தைக் கட்டும். இதன் வேரும் விதைகளும் மருந்தாகப் பயன்படுகின்றன. சூடு இருமல், வாந்தி, கபம், வாதம், பெண் குறியில் தோன்றும் நோய்கள் முதலியவற்றைப் போக்கும் மருத்துவக் குணம் உடையது.

வேறு பெயர்கள்: சோயிக்கீரை, விதை, மதுரிகை.

ஆங்கிலப் பெயர்: Peucedanum grande; Umbelliferae

மருத்துவக் குணங்கள்:

சதகுப்பைச் சூரணம் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வரப் பசியின்மையைப் போக்கும். வாதநோயைக் கட்டுப்படுத்தும். இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றில் உள்ள மாசுகளை அகற்றும்.

சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி சம அளவு பனை வெல்லம் சேர்த்து அரைத்து 5 கிராம் காலை, மாலை இருவேளை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து சோம்புக் குடிநீர் குடித்து வர உதிரச் சிக்கல், நீங்கிக் கருப்பை பலப்படும்.

சதகுப்பை இலையைக் கைப்பிடியளவு அரைத்து எடுத்து 500 மி.லி விளக்கெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்த நோய்க்கு 5 சொட்டு வீதம் 3 வேளை கொடுக்கலாம். இதையே சூதகசந்தி, சூதகக்கட்டு, காக்கை வலிப்பு முதலியவற்றிற்கும் கொடுக்கலாம்.

சதகுப்பை இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 15 கிராம் எடுத்து சிறிது சர்க்கரையுடன் கலந்து 3 வேளை சாப்பிட்டு வர தலைநோய், காது வலி, பசி மந்தம், கீழ்வாய்க் கடுப்பு, மூக்கு நீர்ப் பாய்தல் முதலியவை குணமாகும்.

சதகுப்பை இலையை விளக்கெண்ணெய் தடவி வதக்கி கட்டி களுக்கும், வீக்கங்களுக்கும் வைத்துக் கட்டி வர சீக்கிரம் பழுத்து உடையும். தோல் சிவக்கும்படி இலையை இடித்து வைத்தும் கட்டலாம்.

சதகுப்பை இலையைக் காயவைத்துப் பொடியாக்கி நோயாளியின் படுக்கை அறையில் வைத்துப் புகைக்க தலை நோய், காது வலி, மூக்கில் நீர்பாய்தல் கட்டுப்படும்.

சதகுப்பை இலையை அரைத்து 15 கிராம் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளையாகக் குடித்து வர பசி மந்தம், மூக்கு நீர்ப் பாய்தல் குணமாகும்.

சதகுப்பை இலைச்சாறு 10 முதல் 20 துளிகள் தேன் அல்லது கோரோசனையுடன் கலந்து 4 மணிக்கு ஒரு தடவையாகக் கொடுத்து வர குழந்தைகளுக்கு உண்டாகும் இசிவு, வயிற்றுப் புழு வெளியேறும்.

சதகுப்பை இலையைக் கைப்பிடியளவு எடுத்து இடித்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி பிள்ளை பெற்றவருக்குக் குடிக்கக் கொடுக்க உதிரச் சிக்கல் அகலும்.

சதகுப்பை விதையை இடித்துப் பொடியாக்கி 30 கிராம் எடுத்து 500 மில்லி வெந்நீரில் ஊற வைத்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், பெரியவர்களுக்கு உண்டாகும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், குணமாகும். இத்துடன் சுண்ணாம்பு தெளிந்த நீரைச் சிறிது சேர்த்துக் கொடுக்க இது அதிகப் பலனைக் கொடுக்கும்.
சதகுப்பை விதையை அரைத்து, வெந்நீராவியில் வேகவைத்து இதன் வேருடன் அரைத்து கீல் வாயுவிற்குப் பற்றுப் போட நல்ல பலன் கிடைக்கும்.

சதகுப்பைப்பூ ஒரு பங்கு, நீர் 20 பங்கு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 200 மில்லியளவு குடிக்க குருதிச் சிக்கலை அறுத்து வெளியேற்றும்.

Leave A Reply