நக்கீரன் கோபாலுக்கு அமைதிக்கான தூதர் விருது!

Share

நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு அமைதிக்கான தூதர் விருதை வழங்கி இங்கிலாந்தில் இயங்கும் யுனிவர்ஸல் பீஸ் ஃபெடரேஷன் என்ற தொண்டு நிறுவனம் கவுரவித்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்திற்காகவும், உண்மைகளை துணிச்சலாக வெளிக்கொண்டு வந்ததற்காகவும் அவரை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் (Universal Peace Federation) என்ற தொண்டு நிறுவனம் இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கிளைகளைக் கொண்ட ஒரு சர்வதேச தொண்டு நிறுவனம் இது. இந்த அமைப்பு ஆண்டுதோறும் ‘அமைதிக்கான தூதர்’ விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டிற்கான ‘அமைதிக்கான தூதர்’ விருதுக்கு (Ambassador for Peace) நக்கீரன் ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷனின் அறங்காவலரான டாக்டர். அப்துல் பாசித் சையத், நீதியை நிலைநாட்டவும், பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டவும், அச்சமின்றி உண்மையை அம்பலப்படுத்துவதற்காக துணிச்சலான முயற்சிகளை மேற்கொண்ட ‘நக்கீரன் ஆசிரியர்’ குறித்து இந்த அமைப்பின் செயலாளர் ரோபின் மார்ஷிடம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நக்கீரன் ஆசிரியருக்கு ‘அமைதிக்கான தூதர்’ விருது வழங்க முடிவு செய்த யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன், அதற்கான அழைப்பு கடிதத்தை நக்கீரன் ஆசிரியருக்கு வழங்கியிருந்தது.

நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் தனது குடும்பத்தினருடன்…

அதன் தொடர்ச்சியாக, லண்டனில் உள்ள யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் தொண்டு நிறுவனத்தின் தலைமையிடத்தில் இன்று (23/03/2022) பிற்பகல் 01.30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு ‘அமைதிக்கான தூதர்’ விருது வழங்கப்பட்டது.

பிபிசி – ஏசியாவின் முன்னாள் ஆசிரியரும், காமன்வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான திருமதி ரீதா பெய்ன் இவ்விருதை வழங்கினார்.

Leave A Reply