ஓய்வூதியப் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுபோலவே, பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் அல்லது இறந்த ஓய்வூதியரின், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு, பொருளாதார நலன் கருதி அரசால் ஓய்வுதியம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநா்கள் மற்றும் கருவூல அலுவலா்களுக்கு 22.07.2020 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதம் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதில், “ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் 6 மாதங்களாக பணப் பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாவிட்டால் அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கி, ஓய்வூதியம் செலுத்தும் அதிகாரி அல்லது கருவூல அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழ் அளிக்கவோ அல்லது கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாகவோ ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில், ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் இருந்து சேமிப்பைத் தவிர ஓய்வூதிய பணத்தை திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஓய்வூதியதாரா், குடும்ப ஓய்வூதியதாரா் இறப்புக்குப் பிறகும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. இதனைத் தடுத்து, அந்தத் தொகையை அரசின் கணக்கில் வரவு வைக்க வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக ஓய்வூதியத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்து பயன்படுத்தாத ஓய்வூதியதாரர்களின் விவரங்களைச் சேகரித்து பட்டியலிட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரானா காலத்தில் வாழ்வுச் சான்றிதழை சமர்பிக்க வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுவுமில்லாமல் கொரானா தொற்று காரணமாக மூத்த குடிமக்களை வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நேரத்தில் வங்கிகளுக்கு சென்றால் அவர்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.
அத்துடன் வங்கி பாஸ் புக், ஏடிஎம் கையில் வைத்திருக்காதவர்கள், வெளியிடங்களில் வசிப்பவர்கள் வங்கிக்கு நேரில் சென்று பணம் எடுப்பது இயலாத காரியம், சில பணிகளுக்கு தேவைப்படும் என்பதால் கூட பணத்தை எடுக்காமல் அப்படியே சேமிப்பில் வைத்திருப்பார்கள், இந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.