தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு: ஆன்லைனில் நாளை கருத்து கேட்பு

Share

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக நாளை ஆன்லைன் மூலம் மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்துகளை கேட்க, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்த நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் இந்திய அளவில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா பரவலின் நிலையைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மாணவர்களின் நலன் முக்கியம் என்பதால் தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலைகளுக்கிடையில் தேர்வு நடத்துவது கடினம் என்பதால் தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் அறிவித்தார்.

நிச்சயமாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என இதுவரையில் கூறிவந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கேட்டபின் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார். 

மேலும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதில் மாணவர்களுக்கிடையே இருவேறு கருத்துகள் உள்ளதாக கூறிய அமைச்சர், மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறினார். 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது என்றும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக நாளை ஆன்லைன் மூலம் மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்துகளை கேட்க,  பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply