டி.எஸ்.ரவீந்திரதாஸ் 9 ஆம் ஆண்டு நினைவு நாள்

Share

பணி புரியும் பத்திரிகை நிறுவனங்களாலும், அரசு அதிகாரிகளாலும் ஒதுக்கப்பட்டு உரிமைகளையும் இழந்து ஊமைகளாய் வாழ்ந்த 90% ஊரக பத்திரிகையாளர்களை அமைப்பு ரீதியாக ஒன்றுதிரட்டி, போராடி அவர்களுக்கு பல சட்டபூர்வ உரிமைகளை பெற்றுத்தந்த இயக்கம் டி. யூ. ஜே எனவும், இந்த இயக்கத்தை 22 ஆண்டுகளாக கட்டிக்காத்து வழிநடத்திய பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் தலைவர் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் என அவரது 9ஆம் ஆண்டு நினைவு நாளில் டி. யூ. ஜே. மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 1990 ஆண்டு மே மாதம் 27ந் தேதி முன்னாள் பிரதமரும் பத்திரிகையாளருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தில், பத்திரிகையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க போர்க்குணம் மிக்க அமைப்பான தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் உருவானது.

பத்திரிகைகளைபாதுகாப்போம்! பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்போம்!! பத்திரிகையாளர்களைப் பாதுகாப்போம்!!! என்கின்ற 3 முக்கிய உன்னதமான குறிக்கோள்களை தனது கொள்கையாக அறிவித்து, அந்த கொள்கையின் அடிப்படையில் 30 ஆண்டுகளைக் கடந்து தற்போது 31வது ஆண்டில் பீடுநடை போடுகிறது.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் உருவான பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் பத்திரிகையாளர்களை மாவட்டம், வட்டம், ஒன்றியம், புறநகர் என அனைவரையும் அமைப்பு ரீதியாக ஒன்று திரட்டிய பெருமை டி.யூ.ஜே.வுக்கும், அதன் முன்னாள் தலைவர் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் மற்றும் அனைத்து நிர்வாகிகளையுமே சேரும்.

அன்று சென்னை தலைநகர் மற்றும் மதுரை, கோவை, திருச்சி ஆகிய 3 மண்டலங்களிலிருந்து, நாளிதழ்கள் உருவாகி, பின்னர் மாவட்டத் தலைநகரங்களில் அச்சிடப்பட்டன. இந்த நிலையில் சென்னை மாநகரிலும் மற்றும் மண்டலங்களிலும், மாவட்ட அளவிலும் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு மட்டுமே அரசின் அங்கீகாரமும் மாவட்ட அளவிலான ஆட்சியர் அதிகாரிகளின் அங்கீகாரமும், கருணைபார்வையும் கிடைக்கும். இவர்களது நலன்களை பாதுகாக்கவே அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

அதேபோல், சென்னையில் உள்ளது போல் மற்ற மாவட்டங்களில் பிரஸ் கிளப், ரிப்போர்டர்ஸ் கில்டு போன்ற அமைப்புகளை புதிதாக உருவாக்கி, அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவமும். அரசின் சலுகைகளும் வழங்கப்பட்டன.

மழை, புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரழிவு காலங்களில் தமிழகம் முழுவதும் உள்ள 95 விழுக்காடுக்கும் மேற்பட்ட வட்டார, ஒன்றியம், புறநகர்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான பத்திரிகையாளர்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

இதன்விளைவாக அடிமட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களின் நலன்களை காக்கவும், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், தமிழகம் தழுவிய ஒரே அமைப்பாக உருவானதுதான் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ், பதிவெண் 2016/1990) என்று கடந்த 199ம் ஆண்டில் தொழிற்சங்க அமைப்பாக, தொழிலாளர் நல ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டு இயங்கி வருகிறது.

இயக்கத்தின் முதல்பணியாக வட்டார, ஒன்றிய, ஊரக மட்டத்தில் பகுதிநேர செய்தியாளர்கள் என்ற பெயரில் நிறுவனங்களின் அடையாள அட்டைகூட வழங்கப்படாமல் முழுநேரமாக செய்தி சேகரிப்பது மற்றும் விளம்பரங்கள் பெற்றுத்தந்த செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் அனைவரையும் சங்கத்தில் சேர்த்து, சங்கத்தின் அடையாள அட்டையை வழங்கி அவர்களது பணிகளை அங்கீகாரம் செய்தது.

கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று மாவட்ட, மண்டல, மாநில அளவிலான மாநாடுகளை நடத்தி வலியுறுத்தினோம்.

கோரிக்கைகளின் விவரம் வருமாறு

தாலுகா அளவிலான அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், இலவச பேருந்து பயண சலுகைகளை வழங்கவேண்டும்.

மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே தமிழக அரசால் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. தாலுகா அளவிலான பத்திரிகையாளர்களுக்கும் இலவசமாகவும், மானியவிலையிலும் வீட்டுமனைகள் வழங்கப்படவேண்டும். அவர்கள் பணி ஓய்வு பெற்றால் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். அதனடிப்படியில் தற்போது பல மாவட்டங்களில் வீட்டுமனைகள் இலவசம் மற்றும்¢ மானியவிலையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

பத்திரிகைகளை பாதுகாப்பது, பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பது, பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது என்ற முப்பெரும் தாரக மந்திரங்களை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் இச்சங்கம் செய்துள்ள சில சாதனைகளை குறிப்பிட விரும்புகிறோம்.

குறிப்பாக, பத்திரிகையாளர்கள் மீது, பத்திரிகைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக பல்வேறு இயக்கங்களும் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

பத்திரிகைகளை பாதுகாக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் கடந்த காலத்தில் இந்து, தினகரன், தினமலர், தினபூமி, மாலைமுரசு, முரசொலி, நமது எம்.ஜி.ஆர்., நக்கீரன், தராசு, நெற்றிக்கண், ஜூனியர் விகடன், சன் டி.வி., ஜெயா டி.வி. போன்றவைகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.

மேலும், நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மீதும் தமிழக அரசு பொய் வழக்கு புனைந்தும், கைது செய்யப்பட்டபோதும் அதை கடுமையாக எதிர்த்து பத்திரிகைகள் வேறுபாடின்றி அரசியல் வித்தியாசமின்றி அனைவருக்குமாக டி.யூ.ஜே. போராடியுள்ளது.

தினகரன் நாளிதழ், தராசு வார இதழ் ஆகியவற்றில் பணிபுரிந்த தலா 2 பேர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும், மாலைசெய்தி ஆசிரியர் சௌந்தரபாண்டியன், தினகரன் செய்தி ஆசிரியர் முத்துப்பாண்டியன், நக்கீரன் ஆசிரியர் கோபால், நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி போன்றவர்கள் கைது செய்யப்பட்டபோதும், இந்து என்.ராம், கே.பி.சுனில் போன்றோரை போலீசார் கைது செய்ய முயன்றபோதும், ஆனந்தவிகடன் கார்ட்டூனுக்காக அதன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் மீது சட்டப்பேரவை அவமதிப்பு வழக்கு வந்தபோதும், முரசொலி ஆசிரியர் செல்வம் சட்டசபை கூண்டில் கைதியாக நிறுத்தப்பட்டபோதும் டி.யூ.ஜே. மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன இயக்கத்தை நடத்தியது.

மேலும், இதுதவிர, தனிப்பட்ட பல பத்திரிகையாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காரணங்களை சொல்லி, பல்வேறு அரசியல் கட்சியினராலும், உண்மைகளை வெளிப்படுத்தியதால் சமூகவிரோதிகளாலும், காவல்துறையினராலும் ஏராளமான சம்பவங்கள் நடைபெற்றபோது இதை எதிர்த்து வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

பத்திரிகையாளர்களின் நலம் காக்க மட்டுமன்றி இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை கண்டித்து தேசத்தின் ஒருமைப்பாட்டை காக்கவும், உலகில் சமாதானம் நிலவவும் அதன் மேன்மைக்காகவும் பல்வேறு பொது இயக்கங்களையும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (டி.யூ.ஜே.) நடத்தியுள்ளதை சுட்டிக்காட்டுவதில் பெருமை அடைகிறோம்¢.

அவை வருமாறு

1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னை பூந்தமல்லி அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டதை நடத்தினோம். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மாநில அளவிலும், மாவட்டம் தோறும் மதநல்லிணக்க மாநாடுகள் நடத்தப்பட்டன.

1996ஆம் ஆண்டு அக்டோர் 2ந் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியின் கையில் கோரிக்கை மனுவினை, நாங்கள் வாயில் கறுப்பு துணி அணிந்து அளித்தோம். இந்தப் போராட்டத்தில் பங்குபெற்ற 300 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் காவல் நிலையம் மற்றும் அருகில் இருந்த மண்டபங்களிலும் அடைக்கப்பட்டோம். இந்தியாவிலேயே முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஒரேநாளில் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் இந்தியாவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சென்னையில் நடந்த இந்த போராட்டம் அகில இந்திய அளவில் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் சிறப்பு செய்தியாக வெளியிடப்பட்டது.

இதன்பின்னர் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் உள்ளிட்ட எங்களைப் போன்ற நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அப்போது வட்ட, ஒன்றிய ஊரக செய்தியாளர்களின் பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைத்தோம். பின்னர், அன்றைய செய்தித்துறை அமைச்சர் முல்லைவேந்தன் அவர்களை வரவழைத்து அவரிடம் பேசும்படி கூறினார்.

பின்னர் 1996ல் மார்ச் மாத பட்ஜெட்டிற்கு முன்பு அமைச்சர் முல்லைவேந்தன், தோழர் டி.எஸ்.ஆர்., நான் உள்ளிட்ட முக்கிய சங்க நிர்வாகிகளும், செய்தித்துறை செயலாளர், இயக்குநர், செய்தித்துறை அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகள் ஆகியோர்களை கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன் பிறகுதான் 1997ல் பட்ஜெட் கூட்டத்தொடரில், ஓய்வூதியம் ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டது. பணியின் போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.25,000 நிதி வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாயின.

அதேபோல் ஏழ்மை நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை உள்ளிட்ட டி.யூ.ஜே. வலியுறுத்திய அனைத்து கோரிக்கைகளுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இன்று ஓய்வூதியம் ரூ.10,000-, குடும்ப ஓய்வூதியமாக ரூ.5,000- பணியின்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததையடுத்து சென்னையில் தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

முன்னதாக, சென்னையில் கடற்கரை சாலையில் நடைபெற்ற ஒரு அரசியல் கட்சியின் பேரணியின்போது போலீசார் கடுமையான தடியடி பிரயோகம் செய்தார்கள். இந்த செய்திசேகரித்துவந்த பத்திரிகையாளர்கள், புகைப்படநிபுணர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். இதையடுத்து பத்திரிகையாளர்களை தாக்கிய காவல்துறையினர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டி.யூ.ஜே. சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுபோல் காவல்துறையினர் எதிர்காலத்தில் தடியடி பிரயோகம் பத்திரிகையாளர்களின் மீது நடைபெறாவண்ணம் தடுக்க டி.யூ.ஜே.வின் முன்முயற்சியில் தோழர் டி.எஸ்.ஆர்.தலைமையில் அன்றைய மாநகர போலீஸ் கமிஷனர் திரு.முத்துகருப்பன் உள்ளிட்ட உயர்போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்சங்க பிரதிநிதிகள் மற்றும் தடியடியால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களை அழைத்து நேரு ஸ்டேடிய மாநாட்டு அரங்கில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்விளைவாக தடியடி சம்பவத்தில் நடந்த விவகாரங்கள் குறித்து உண்மையறியும் குழு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

1988ம் ஆண்டுவாக்கில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கான வீட்டுமனை திட்டம் திருவான்மியூரில் அமல்படுத்தப்பட்டது. இதில் பலனடைந்த பத்திரிகையாளர்களில் பெரும்பகுதியினர் இந்து, எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றி, பணிபாதுகாப்பு பெற்ற பத்திரிகையாளர்களாகவே இருந்தனர்.

சென்னையில் இருந்த மொத்த பத்திரிகையாளர்களில் மிக சொற்பமான அளவு பத்திரிகையாளர்களே இந்த பலன் பெற்றனர். இத்திட்டத்தில் 155 பேருக்கு மட்டுமே வீடு கிடைத்தது. வீடு கிடைக்காத மற்ற பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சித்ததின் பலனால், கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது, டி.யூ.ஜே. தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் தலைமையில் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினோம். பத்திரிகையாளர்களுக்கு உதவ முன்வந்த கலைஞர், இதுசம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

அதே சமயத்தில் சென்னையில் பெரிய அளவில் இடம் கிடைப்பது சாத்தியமில்லை, எனவே, சென்னை மாகரையொட்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் ஏதேனும் இடம் இருப்பது தெரியவந்தால் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று கூறினார்.

முதலமைச்சரின் சந்திப்பு குறித்து தோழர் ரங்கராஜன் உள்ளிட்ட இதர பத்திரிகையாளர்கள் சங்க தலைவர்களிடம் எடுத்துக்கூறி, ஒன்றிணைந்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர்களும் அமோதித்து, தோழர் டி.எஸ்.ரவீந்தரதாஸ் இம்முயற்சிக்கு பொறுப்பு ஏற்று நடத்தவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

டி.எஸ்.ரவீந்திரதாஸ் சங்கப்பணிகள் அதிகம் இருப்பதால் தலைமை ஏற்க மறுப்பு தெரிவித்தார். அப்போது அவர்கள் டி.எஸ்.ஆர்.தலைமையேற்றால் தாங்கள் இணைந்து செயல்படுவதாகவும், இல்லாவிட்டால் விட்டுவிடலாம் என்றும் தெரிவித்தனர். திட்டத்தை கைவிட விரும்பாத டி.எஸ்.ஆர். தலைமையேற்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தனித்தனியாக குழு அமைக்கப்பட்டு அதில் இருந்த பத்திரிகையாளர் பிரதிநிதிகள் கண்காணித்து செயல்படுத்தினர்.

அதன்படியே, சோழிங்கநல்லூர் பகுதியில் ஏறக்குறைய 36 ஏக்கர் இடம் அடையாளம் காணப்பட்டது. இந்த இடத்திற்கு அருகே தான் கிரிக்கெட் அகாடமி மற்றும் சினிமா தொழிலாளர்களுக்கான பெப்சிஅமைப்புக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.

நாம் குறிப்பிட்டு காட்டிய 36 ஏக்கர் நிலத்தில் இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரே குடையின்கீழ் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தனித்தனி வீடுகளாகவும், அடுக்குமாடி வீடுகளாகவும், எல்.ஐ.ஜி., எம்.ஐ.ஜி., எச்.ஐ.ஜி. என மூன்று வகையான வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக டி.யூ.ஜே. சார்பில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதற்கிடையில் பத்திரிகையாளர்களிடம் இருந்து வீட்டுமனை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து தரக்கோரி அனைத்து பத்திரிகையாளர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்கள் திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் செயல்பட்டுவந்த டி.யூ.ஜே. மாநில தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பித்தனர்.

இதன்படி ஏறக்குறைய 1200க்கும்¢ மேற்பட்டோர் அளித்த விண்ணப்பங்களை அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த மகாகவி பாரதியின் மகள்வழி பேரன் ராஜாராமன் அவர்களிடம் சமர்ப்பித்து, பத்திரிகையாளர்களுக்கான இடஒதுக்கீடு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டதின் அடிப்படியில், அதிகாரிகளிடம் அந்த இடத்தை ஆய்வுசெய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த பணிகள் நடந்துகொண்டிருந்தபோதே, தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அந்த பணியில் கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகைதந்த பல்வேறு புதிய ஆட்சியர்களிடம் தொடர்ந்து இத்திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தியபோதிலும், மேலிட உத்தரவின் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதற்கிடையே தோழர் ரவீந்திரதாஸ் தலைமையேற்று இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து சங்கத்தினர் முடிவு செய்ததன் அடிப்படையில், தோழர் ரவீந்திரதாஸ் இந்த பொறுப்பினை ஏற்று செயல்பட்டு இந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றவேண்டும் என்று முயற்சி செய்தும் மேலிட உத்தரவினால் இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் நிராகரிக்கப்பட்டதால் தோழர் தாஸ் மீது சிலர் அவதூறு பரப்பினார்கள்.

இந்த அவதூறுகளை பொறுத்துக்கொள்ளமுடியாத ரவீந்திரதாஸ், அரசு நிலத்தை பெற்றுத்தரும் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டு, படப்பையை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் தனியாரிடம் இருந்து நிலங்களை பெற்று எந்தலாப நோக்கமும் இல்லாமல் பத்திரிகையாளர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

முதல்கட்டமாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு சொந்தமான அனுபவ பாத்தியமான இடத்தை விலைபேசி வாங்கி, அந்த இடத்தை சீர்செய்து, குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த 200 பத்திரிகையாளர்களுக்கு தலா 1,800 சதுர அடி வீதம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இந்த தகவல் அறிந்த இந்து உள்ளிட்ட மற்ற பத்திரிகைகள், தொலைக்காட்சிகளை சேர்ந்த பத்திரிகையாளர்கள் தங்களுக்கும் வீட்டுமனை பெற்றுத்தர கோரியதன் அடிப்படையில் நாவலூர், காஞ்சிவாக்கம் மற்றும் ஆரம்பாக்கம் கிராமங்களில் உள்ள விவசாய நிலத்தின் சொந்தக்காரர்களிடம் நேரிடையாக பேசி, விலை நிர்ணயித்து, இடத்தை பெற்று இந்தியாவிலேயே வேறுஎங்கும் இல்லாதவகையில், ஒரு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் 1200 பேருக்கு பட்டா நிலம் வழங்கப்பட்ட சாதனை டி.யூ.ஜே.வுக்கு மட்டுமே உண்டு.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நோய்வாய்ப்பட்டு தோழர் ரவீந்திரதாஸ் கடந்த 2012ம் ஆண்டில் ஜூன் மாதம் 22ம் தேதி காலமானார். Êசங்கத்திற்கு பேரிடியாக இருந்த டி.எஸ்.ஆரின் மறைவுக்குப்பிறகு டி.எஸ்.ரவீந்திரதாசின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற அகில இந்திய பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் தலைமையில் அன்று மாலையே அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ரவீந்திரதாசுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு நடந்த கூட்டத்தில் துயரமான நேரத்தில் சங்கத்தை வழிநடத்திச்செல்ல பொறுத்தமான ஒரு தலைமையின் கீழ் சங்கம் செயல்பட வேண்டும் என்று கருதி துணை தலைவர்களில் ஒருவராக இருந்த என்னை (பி.எஸ்.டி.புருஷோத்தமன்) பொறுப்பு தலைவராக தேர்வு செய்யவேண்டும் என்று ஒரு ஆலோசனையும் முன்வைத்தனர். இதை அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு பொறுப்புதலைவரை தேர்வு செய்தனர்.

நான் பொறுப்பு தலைவராக தேர்வு செய்யப்பட்ட கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் ஒரு ஆலோசனையும் முன்வைத்தனர். டி.யூ.ஜே. அமைப்பு விதிகளின்படி ஒரு நிர்வாகி மறைவுற்றால் அந்த இடத்திற்கு புதிய நிர்வாகியை தேர்வு செய்யும் உரிமையும், அதிகாரமும் மாநில நிர்வாக குழுவுக்கு மட்டுமே உள்ளது. எனவே, தோழர் புருஷோத்தமன் அவர்கள் தோழர் ரவீந்திரதாஸ் அவர்களின் நினைவஞ்சலி கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டு நிரந்தரமான தலைவரை தேர்வு செய்ய மாநில நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி புதிய தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில் தோழர் ரவீந்திரதாஸ் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறியது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய தலைவர்கள் மீண்டும் புதிய தலைவரை தேர்வு செய்ய 21 நாட்கள் முன்னதாக மாநில நிர்வாக குழு கூட்டத்தை கூட்டும் அறிவிப்பை பொதுச்செயலாளர் மூலம் வெளியிட்டு அந்த கூட்டத்தை கூட்ட ஆலோசனை வழங்கினர்.

அதனடிப்படையில் வந்தவாசியில் புதிய தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் ஆணையரும் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கு அழைப்புவிடுத்தபோது, யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததாலும், நானே தலைவராக இருக்கவேண்டும் என்று மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அப்போது எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதாலும், தினபூமி நாளிதழின் செய்தி ஆசிரியராக இருப்பதாலும், பல்வேறு பணிச்சுமைகள் இருந்ததாலும்¢ என்னால் முழுமையாக பணியாற்றமுடியாது, எனவே, வேறு தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று நான் கூறியபோதும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் தான் பொறுத்தமான நபர் என்று என்னை தேர்வு செய்தனர்.
தோழர் ராவீந்திரதாஸ்
மறைவிற்கு இக்கட்டான சூழலில்
இயக்கத்தை வழி
நடத்த யாரும்
முன்வராத காரணத்தினால்,
சங்க தோழர்களான உங்களின்,ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்போடு
சங்கத்தை கடந்த-9 ஆண்டுகளாக வழிநடத்தி வருகிறோம்.

இனி வருங்காலத்தில்,பத்திரிகைகளை
பாதுகாப்போம்!
பத்திரிகை சுதந்திரத்தை
பாதுகாப்போம்!!

பத்திரிகையாளர்கள் வாழ்வாதாரத்தை
பாது காப்போம்!!!

என்கிற நமது குறிக்கோள்களை
தூக்கி பிடித்து போராடி, வெற்றி
பெறுவோம், என
தோழர் டி.எஸ். ராவீந்திரதாஸ்
9-ஆம் ஆண்டு
நினைவு நாளில்
சபதம் ஏற்போம்!

Leave A Reply