கவிதை அல்ல இது
ஒரு உயில்.
மரணமல்ல
மலைகள் கொள்ளும் துயில்.
உயிரோடு மெய்கலந்தால்
உறவுக்கும் துறவுக்கும் ஒருவகையில் உறவு.
இரவின் முடிவில் உதயம்
அச்சத்தில் ஒளிந்திருக்கும் அஞ்சாமை.
அடக்குதலை அடக்கி நிற்கும் எழுச்சி.
பழமையில் விலகிவரும் நவீனம்
பாதையைத் துறந்துசெல்லும் பயணம்.

சமூகத்தைச் சார்ந்திருக்கும்
சரித்திரங்கள் நிலைத்திருக்கும்.
நீர்போகும் போக்கில்
சாய்ந்திருக்கும் கோரைப்புற்கள்.
அழும்குழந்தை பாலருந்திப்
பசியாறிப் பிழைத்திருக்கும்.
தாயின்சேலை மீந்திருந்தால்
பிள்ளை நிர்வாணம் போக்கும்
பத்துக்கல் எறிந்தால் ஒருகல்
குறிமீது பட்டுவிடும்.
முனகல்கள் மூண்ட பின்னர்
முடிவில் எழும் முழக்கங்கள்.
விடியலின் பின் புறப்பாடு
பொருந்தாத வெளிப்பாடு