அஸ்திவாரத்திற்கு ஒரு ஆராதனை – ஆதனூர் சோழன் கவிதைகள்

Share

அப்பா,
நீ
கடைசியில் எனைவிடுத்து
மண்ணுக்குள் புதைந்துபோனாய்.

உன்போக்குகளை யெதிர்த்து
போர்புரிந்த மகனின்
செயல்நியாயம் காணாது
விழிமூடி விலகினாயா?

கதம்பச்சரத்தில் ரோஜாவாய்
கனவுகண்ட உன்மகனின்
நனவாக்கும் முயற்சிகளை
இனியிருந்து இயக்குவதார்?

முட்டாளல்ல முழுமனிதன்
ஆகியபின் முரசறையயினி
யார்செவிகள் கேட்டென்ன…

கொடுப்பினையில்லை எனக்கு!

என்நிலை தாழாது நான்
வெகுண்டெழுந்த சமயங்களில்
பின்னணியில் உன் ஜாடை
பிறழாததை உணர்ந்திருந்தாய்?

மாடிழுக்கச் சிரமப்படும்
பாரவண்டி ஆரக்கால்கள்
முறுகிய உன்கையழுந்தி
சுழன்ற உன் நாட்களெண்ணி…

கருத்தொற்றுமை நானறிந்து
என்தந்தை நீ என்பதில்
அல்லாது வேறு எதில்…

எனக்கொன்றும் நினைவில்லை!

உதிக்கின்ற ஆசைகளின்
கால்களில் விலங்குபிணைந்து
மேன்மை சேர்க்கத்தூண்டிய
தூண்டுகோலே… ஏன் துண்டாடினாய்?

துயரங்களில் பாடங்கற்க
துயரங்களை வழங்கிய வள்ளலே
உமைவென்று சிரிக்கவைத்து
சிரிக்கயெண்ணி… அடஏன் செத்தாய்?

நீ எனக்குக் கற்றுத்தந்தது ஏராளம்
அது ஆனால் புரிந்துகொள்ளப்படாமல்!

நான் நினைத்த எல்லாமும்
நிறைவேற்றும் உத்வேகம்… அருளிச்செத்தாய் நன்றி!

Leave A Reply