நோய்கள் பரப்பியதாக இந்துக்களை விரட்டிய அமெரிக்கர்கள் – வரலாறு சொல்லும் பாடம்!

Share

இஸ்லாமியர்கள் கொரோனா நோயைப் பரப்புவதாக இந்துமத வெறியர்கள் இப்போது செய்திகளை பரப்புகிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் இதே செய்தித்தாள்களும், அறிவுஜீவிகளும் இணைந்து இதேபோல நஞ்சுகலந்த பொய்ச் செய்திகளை பரப்பினார்கள். ஆக, நீண்டகாலமாகவே, இத்தகைய இனவெறி, மற்றும் மதவெறி விஷம் கலந்த பொய்ச் செய்திகள் அரசியலின் முக்கிய அம்சமாக தொடர்கிறது என்பதை ஆதாரபூர்வமாக இந்தக் கட்டுரை அலசுகிறது.

இன்றைக்கு கொரோனா தொற்று நோயை குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் பரப்பிவிடுவதாக தொடர்ந்து பொய்ச் செய்திகள் பரப்பிவிடப்படுகின்றன. இந்தக் காலத்தில் நடப்பதைப் போலவே முந்தைய காலங்களிலும் உண்மைக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்கள் நடந்திருக்கின்றன. அதுபோன்ற மோதல் ஏற்படும் சமயங்களில் எல்லாம் அதில் மோசமான அரசியல் இருந்திருக்கிறது.

ஸ்ரீராஜசேகர் பாப்பி கோரித்தாலா என்ற இந்தியர் ஒரு ஆய்வு செய்திருக்கிறார். “1790 முதல் 1997 ஆம் ஆண்டுக்கு இடையிலான ஆசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் குறித்த வரலாற்றுப் பார்வை” என்ற தலைப்பிலான அவருடைய ஆய்வில் பல அதிர்ச்சிகரமான உண்மைகளை பதிவு செய்திருக்கிறார். அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் வெளிநாட்டில் தங்களுடைய பாதம் பட்டவுடன் சந்தித்த அந்த நாட்டின்
நம்பிக்கைகளுக்கு மாறான விரோதங்கள் எத்தகையவை என்பதை ்வர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் இந்தியர்களுக்கும், ஆசியர்களுக்கும் எதிரான இனவெறியராகவும், ஏகாதிபத்தியவாதியாகவும் இருந்தவர் என்று இந்த ஆய்வில் கூறியிருக்கிறார். அதேசமயம், இந்தியர்களுக்கு உதவிய தாராள மனங்கொண்ட அமெரிக்கர்களும் இருந்தனர். வரலாற்றுப் பூர்வமாக மரியாதைக்குரிய மனிதர் என்று கருதப்படும் ரூஸ்வெல்ட்டை மிக மட்டரகமாக விமர்சனம் செய்ததற்காக அமெரிக்காவில் கோரிதாலாவை யாரும் தேசவிரோதி என்றோ, ஆன்ட்டி அமெரிக்கன் என்றோ சொல்லவில்லை என்பது பெரிய விஷயம்.

1880களின் தொடக்கத்தில், இனவெறி தொடங்காத நாட்களில் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்தார்கள். வர்த்தகரீதியாக, ராஜாவின் மகள், கங்கையின் கண்புரை போன்ற நாடகங்களை நடத்தினார்கள். தி இந்துப் பெண் என்ற பாடல்கூட பாப்புலராக இருந்தது.

ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் மோசமான நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவுக்கு குடியேறினார்கள். அவர்களில் பெரும்பாலோர் சீக்கியர்கள். வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, கலிபோர்னியாவிலிருந்து கனடா வரை அவர்கள் குடியேறினார்கள். குடியேறிய இந்தியர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா, வாஷிங்டன் மாகாணங்களில் இருந்த மர அறுவை ஆலைகளிலும், ரயில் ரோடு அமைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டார்கள்.

கலிபோர்னியாவின் சேக்ரமெண்ட்டோ பகுதியில் உள்ள பண்ணைகளில் இந்தியர்கள் சிறப்பாகவே வேலை செய்தார்கள். ஆனால், அவர்களை அமெரிக்கர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களை துரோகிகள் என்றும், இழந்தவர்கள் என்றும், சுத்தமற்றவர்கள் என்றும் நோய்க்கிருமிகளை சுமந்திருப்பவர்கள் என்றும் அமெரிக்கர்கள் கருதினர். இந்தியர்களின் சமூக பழக்கங்கள், மத நம்பிக்கைகள் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

சாரா இசபெல் வாலெஸ் இதுகுறித்து தனது “தங்குவதற்கு பொருத்தமற்றவர்கள்: பொது சுகாதார பீதியும், விலக்கப்பட்ட தெற்காசியர்களும்” புத்தகத்தில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார். இனவெறியும், தொழிற் போட்டியுமே இத்தகைய விலக்கல் நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைந்தது.

தெற்காசியர்களை விலக்குவதை நியாயப்படுத்த, அரசியல் தலைவர்களும், மருத்துவர்களும், தொழிற்சங்கத் தலைவர்களும், அரசு ஊழியர்களும் பத்திரிகையாளர்களும் இந்த பொதுச் சுகாதார கவலைகளை பரப்பத் தொடங்கினார்கள்.

1907 ஆம் ஆண்டு பிளைன் ரிவியூ என்ற பத்திரிகையில் ஒரு கதை வெளியாகியது. முந்தைய இலையுதிர்காலத்தில் மக்களை ஆட்டிப்படைத்த மூளைக்காய்ச்சலுக்கு மர அறுவை ஆலைகளில் பணிபுரியம் புதிதாக வந்த தெற்காசியர்கள்தான் காரணம் என்று அந்தக் கதை சொல்லியது.

அந்தச் சமயத்தில் அமெரிக்காவுக்கு ஒரு பாதிரியார் வந்தார். அவர் 30 ஆண்டுகளாக இந்தியாவில் குடியிருந்தவர். அவர் பெயர் ஜேம்ஸ் மில்ஸ் தோபர்ன். அமெரிக்காவுக்கு குடியேறிய இந்துக்களால் பெரிய அளவில் பிளேக் நோய் தொற்றும் என்று அவர் கூறினார். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களை கொள்ளை கொண்ட பிளேக் நோயிலிருந்து தப்பவே இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வந்ததாகவும், பிளேக் நோய்க் கிருமிகளை அவர்கள் சுமந்து வந்ததாகவும் அவர் பீதியை ஏற்படுத்தினார்.

பாதிரியார் சொன்னது பொய்ச் செய்திகள் என்ற பிரிவில் இருந்தாலும், அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், நோய்த் தாக்குதலுக்கு அஞ்சிய அமெரிக்கர்களுக்கு குடியேற்ற இந்தியர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது.

அமெரிக்காவில் குடியேறிய சீக்கியர்களும் இந்துக்களாகவே கருதப்பட்டார்கள். அவர்கள் நீளமான தாடி, தலைமுடி, தலைப்பாகை ஆகியவற்றுடன் இருந்தார்கள். அவர்களுடைய தோற்றம் அமெரிக்கர்களுக்கு பிடிக்கவில்லை. அதுபோக, அவர்களுடைய குறைவான கூலிக்கு அதிக உழைப்பைத் தரும் அவர்களால் அமெரிக்கத் தொழிலாளர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டது. இந்தியாவில் உள்ள மதங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கே ஒன்றும் தெரியாது. இந்தியர்கள் மீதான வழக்கில் சத்தியம் வாங்குவதற்கு குரான் புத்தகத்தை பயன்படுத்தினார்கள்.

மெதுவாக, ஆசிய எதிர்ப்பு வெறி கனடாவிலும் அமெரிக்க பசிபிக் கடற்கரையிலும் எதிரொலித்தது. 1905 ஆம் ஆண்டில்,
இனவெறிபிடித்த அமெரிக்கர்கள், ஜப்பானிய மற்றும் கொரியர்களை புறக்கணிக்கும் அமைப்பை உருவாக்கினர், 1907 ஆம் ஆண்டில் கனடாவைச் சேர்ந்த ஒருவர், ‘ஆசியர்களை புறக்கணிக்கும் அமைப்பைத்’ (ஏஇஎல்) தொடங்கினார்.

1906 ஆம் ஆண்டில், வான்கூவரில் வசித்த மேரி வில்சன், உள்ளூர் செய்தித்தாளுக்கு ஒரு கடிதம் எழுதினார்: “நாங்கள் ஒரு இந்து நகரத்தையோ அல்லது கடைத்தெருவையோ முன்மொழியவில்லை. அவற்றால் விரும்பத்தகாத பிளேக் நோயும் காலராவும் நமக்கும் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. உரிய நேரத்தில் அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று எழுதியிருந்தார்.

எதிர்மறைச் செய்திகளுக்கு இருக்கும் பரபரப்பை பயன்படுத்திக்கொள்ள பத்திரிகைகள் ஆர்வமாகின். அந்த வகையில் இந்தியர்களுக்கு எதிரான விரோதம் பத்திரிகைகளை மயக்கியது. 1906 ஆம் ஆண்டு, பியூஜெட் சவுண்ட் அமெரிக்கன் என்ற பத்திரிகை ஒரு தலைப்புச் செய்தியை வெளியிட்டது. தனது வாசகர்களிடம் அது, “நமக்கு ஒரு மங்கலான ஆபத்து இருக்கிறதா?” என்று கேட்டது. அத்துடன் இதன் பொருள் தெளிவாகத் தெரியவில்லை என்றால்: “இந்துப் படைகள் அமெரிக்காவை ஆக்கிரமிக்கின்றனவா?” என்று விளக்கமும் அளித்தது? அந்தச் செய்திக்கு, ஒரு வாசகர், “இந்த நாட்டில் அவர்களின் (இந்துக்கள்) வருகை மிகவும் விரும்பத்தகாதது என்று நான் கருதுகிறேன்… அவர்களின் ஒழுக்க நெறிமுறை மோசமானது (எங்கள் பார்வையில்) மற்றும் அமெரிக்காவில் அவர்கள் இயல்பாக எதிர்பார்க்கும் சுதந்திரத்தை அனுமதித்தால், இறுதியில் நமக்கு தொந்தரவாகிவிடுவார்கள்” என்று எழுதியிருந்தார்.

1907 மே மாதம் பசிபிக் மந்த்லி என்ற இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது. ‘இந்து படையெடுப்பு; ஒரு புதிய குடியேற்றச் சிக்கல்’ என்ற தலைப்பில் முன்னணி அமெரிக்க பத்திரிகையாளரான பிரெட் லாக்லி அதை எழுதியிருந்தார். “தூர கிழக்கில் உள்ள எங்கள் உறவினர்கள் (இந்தியர்கள்) தங்கள் முகங்களை மேற்கு நோக்கி திருப்புகிறார்கள். சிறிய அளவில் உள்ளே நுழையத் தொடங்கிய அவர்கள், சிற்றோடையாகி, பெருவெள்ளமாக உருவெடுத்தால், அமெரிக்கர்களின் நிலங்களும் நிறுவனங்களும் அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடுமா?” என்று அதில் கேட்டிருந்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், அந்த நேரத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தொடங்க அனுமதிக்கவில்லை. நல்லவேளை இப்போதுவரை அமெரிக்காவில் அதுபோன்ற ஒன்று இல்லை.

ஆனால், ஏ.இ.எல். அமைப்பின் முதல் பொதுக் கூட்டம் 1907 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12 அன்று நடைபெற்றது, அதில் வான்கூவர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொணடு பேசினார். “ஒவ்வொரு மாதமும் நம் நாட்டிற்குள் திரண்டு வரும் ஆசியர்களின் படையெடுப்பும், இந்த பெரும் வருகையின் தவிர்க்க முடியாத விளைவாக, ஆசியாவின் மஞ்சள் இனம் ஏற்கனவே இங்குள்ள வெள்ளை இனத்தை பின்னுக்குத் தள்ளுகிறது” என்றார்.

அடுத்த நாள், வான்கூவர் வேர்ல்ட் செய்தித்தாள் அதன் முதல் பக்கத்தில் – ‘அனைத்துக் கட்சிகளும் ஆசியர்களுக்கு எதிர்ப்பு’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது, மேலும் அதன் தலையங்கத்தில் “ஏதெனியன் என்ற நீராவி கப்பலில் 160 இந்துக்கள் வந்ததுடன், கடந்த செவ்வாயன்று ஹோனலூலுவிலிருந்து புறப்பட்ட இன்டியானா என்ற கப்பலில் 2,000 ஜப்பானியர்ள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பிரிட்டிஷ் கொலம்பியாமீது ஆசியர்களின் படையெடுப்பு தொடர்கிறது என்பது தெளிவாகிறது.” (இன்றைய அடிப்படையில், இந்த கூற்று பொய் என்றும், இந்தியானா கப்பலில் 275 ஜப்பானியர்கள் மட்டுமே இருந்தார்கள் என்றும் உறுதியாகிறது. ஆனால், அந்த செய்தித்தாள் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை.

மக்களை ஊக்கப்படுத்துவதற்காக, ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை என்று பெரும்பாலும் கூறப்படுவது வழக்கம். அதேபோல், கலவரம் ஒரே நாளில் நடக்காது. மனம் முழுக்க முழுக்க பொய்களும், விஷமும் நிறைந்திருக்கும்போதுதான் கலவரம் நிகழ்கிறது. ஆகவே, 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பெல்லிங்ஹாமில், சுமார் 500 வெள்ளையர்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ‘இந்துக்களை விரட்டுங்கள்’ என்று கத்தி, சுமார் ஐந்து மணி நேரம் அவர்களது வீடுகளையும் உடமைகளையும் சூறையாடினர். மேலும் பல ஆண்களை வெளியே இழுத்துப்போட்டு தாக்கினர். இது ஒரு சம்பவம் அல்ல. அன்று இரவு, 200 இந்தியர்கள் சிட்டி ஹாலில் அடைத்து வைக்கப்பட்டனர், மீதமுள்ளவர்கள் காணாமல் போனார்கள்.

ஆனால் அவர்கள் எவரெட்டுக்கு தப்பினாலும், அது அவர்களுக்கு உதவவில்லை, 1907 நவம்பர் 5 ஆம் தேதி மீண்டும் கலவரம் நடந்தது, முன்புபோலவே, காவல்துறை கலவரத்தை வேடிக்கை

பார்த்தது. அடுத்த நாள், உள்ளூர் செய்தித்தாள்கள் ‘காவல்துறையினர் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இருந்தார்கள்’ என்றும் ‘அனைத்து அதிகாரமும் முடங்கிப்போயுள்ளன’ என்றும் செய்தி வெளியிட்டன.

கும்பலில் இருந்து ஒரு நபர்மீது கூட வழக்குத் தொடரப்படவில்லை. கைதும் செய்யப்படவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு, 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி, வான்கூவரில் உள்ள தி வேர்ல்ட் என்ற பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டது. ‘ஓரியண்டல்ஸ் ஆயுதங்களை வாங்குகிறது. நூற்றுக்கணக்கான ஆசியர்கள் துப்பாக்கிகள் வாங்குகிறார்கள்’ என்ற அந்தச் செய்தியைத் தொடர்ந்து ஆயுத விற்பனை நிறுத்தப்பட்டது.

கலவரங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 10, 1907 அன்று பெல்லிங்ஹாம் ஹெரால்டு என்ற பத்திரிகை, ‘இந்துக்கள் நம்மவர்கள் அல்ல. ஒருபோதும் நம்மவராக இருக்க முடியாது… அவர்கள் நமது நாட்டுக்காக எதையும் கொண்டுவரவில்லை. நோய்களையும் அசுத்தத்தையும் கொஞ்சம் உழைப்பையும் தவிர வேறு எதையும் அவர்கள் கொண்டுவரவில்ல. அதற்கு பதிலாக அவர்கள் நமது மூலதனத்தை சிதைக்கிறார்கள்’ என்று எழுதியிருந்தது. அந்தச் செய்தித்தாள் அமெரிக்கர்களின் வன்முறையை கண்டித்தபோதும், ‘இந்துக்கள் நல்ல குடிமக்கள் அல்ல’ என்று முடித்திருந்தது. தி ரெவெய்ல்லே பத்திரிகை, “எந்த நல்ல குடிமகனும் வேலை செய்யும் வழிமுறைகளை எதிர்க்க வேண்டும் என்றாலும், இந்துக்களுக்கு எதிரான சிலுவைப் போரின் விளைவாக அவர்கள் வெளியேறுவது எந்த வருத்தத்தையும் ஏற்படுத்தாது” என்று எழுதியிருந்தது.

சியாட்டில் மார்னிங் டைம்ஸ் என்ற பத்திரிகை, “இனம் இங்கே பிரச்சனையல்ல… ஊதியம்தான்” என்று வாதிட்டது; ஆண்கள் இங்கே பிரச்சனை அல்ல… ஆனால் வாழ்க்கை முறைகள்தான் பிரச்சனை. தேசங்கள் இங்கே பிரச்சனை அல்ல… ஆனால் வாழ்க்கை பழக்கவழக்கங்கள்தான் பிரச்சனை” என்று வாதிட்டது.

இனவெறி மற்றும் மதவெறி அமைப்புகள் மட்டுமின்றி, அவை பரப்பிய பொய்களை நம்பிய அறிவுசார் வர்க்கமும் இந்தியர்களுக்கு எதிராக இருந்தது. 1908 ஆம் ஆண்டு ஆசியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதற்காக ஒரு சட்டத்தை இயற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

“உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்றால் இந்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களியுங்கள்” என்ற பிரச்சாரம் தூள்பறந்தது.

இதன் விளைவாக 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆசியர்களை தடைசெய்யும் சட்டத்தை அமெரிக்கா இயற்றியது. ஆசியாவில் இந்தியாவையும் உள்ளடக்கி அந்தச் சட்டம் தடைவிதித்தது. இந்துக்களுக்கு எதிரான அந்த கலவரம் இந்தியாவுக்கு எதிராக அமைந்தது.

நாம் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்போம். தவறுகளை திரும்பச் செய்யாமல் தவிர்ப்போம். மனிதர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் தவறு செய்வதைத் தவிர்ப்போம். மதிப்புமிகுந்த மனித உயிர்கள் விஷயத்தில் அரசியல் விளையாட்டுகளை தவிர்ப்போம்.

Leave A Reply