16 அடி பாயும் குட்டிப்புலி ஸ்டாலின் – ஆதனூர் சோழன்

Share

எழுதத் தெரியாவிட்டால் என்ன? தூய தமிழில் பேசத்தெரியாவிட்டால் என்ன? சிலருடைய நடவடிக்கைகளே இலக்கியத் தரம் மிக்கவையாக இருக்கும். அதிலும் அந்த நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டோரின் நலன் சார்ந்ததாக, ஒரு இனத்தின் பெருமையை மீட்டெடுப்பதாக, ஒரு நாகரிகத்தின் தொன்மையை பாதுகாப்பதாக, ஒரு மொழியின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்தால் அது எத்தனையோ இலக்கிய படைப்புக்கான கருக்களை வாரி வழங்கும்.

அந்த வகையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இலக்கியப் படைப்புகளுக்கு கருக்களை வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்.

1975 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய அளவில் இயங்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூடினார்கள். இவர்களை ஒருங்கிணைத்ததில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞருக்கு முக்கிய பங்கு இருந்தது.

ஏனென்றால், 1971 பேரவைத் தேர்தலுக்கு பின், கலைஞர் தமிழ்நாட்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்திய அளவில் பாப்புலராகி இருந்தன. 1969லேயே கலைஞர் மத்திய அரசைத் தாங்கிப்பிடித்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்திருந்தார். ஆம், இந்திராவின் புதிய சோசலிஸ கொள்கைகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான காமராஜர், மொரார்ஜிதேசாய், சஞ்சீவரெட்டி போன்றோர் ஆதரிக்கவில்லை. எனவே காங்கிரஸ் கட்சி உடைந்தது. இந்திராவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் அவருக்கு திமுக ஆதரவளிக்கும் என்று கலைஞர் அறிவித்தார்.

காங்கிரஸின் மூத்த தலைவர்கள், இந்திராவின் திட்டங்கள் பெருமுதலாளிகளுக்கு எதிராக இருக்கும் என்பதால் எதிர்த்தனர். அவர்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்தனர். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் உணவுப்பஞ்சம், வறுமை தலைவிரித்தாடியது. விவசாயிகள் ஏழ்மையின் பிடியில் சிக்கியிருந்தனர். வறுமையே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்த இந்திரா, அதை நிறைவேற்ற வங்கிகளை நாட்டுடமை ஆக்கவும், பசுமைப் புரட்சிக்கான அறிவியல் ஆராய்ச்சிகளை வேகப்படுத்தவும், புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவும் திட்டமிட்டார். இந்தத் திட்டங்களுக்கு திமுக ஆதரவளிக்கும் என்று முதல்வர் கலைஞர் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.

அதேசமயம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை முழக்கத்தையும் கலைஞர் ஓங்கி ஒலித்தார். மாநிலத்தில் அரசுத் துறைகளிலும், தலைமைச் செயலகத்திலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வாரி வழங்கப்பட்டன. உயர்பதவிகளிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பார்ப்பனர்களின் வாய்ப்புகள் பறிபோனதாக பதறினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் இருந்த பிற்படுத்தப்பட்ட தலைவர்களின் கவனத்தை கவர்ந்தன. மாநிலத்துக்கு தனிக்கொடியை கலைஞர் வடிவமைத்தார். தமிழ்நாடு அரசின் முற்போக்கான, புரட்சிகரமான திட்டங்கள் பார்ப்பனர்களை அதிர்ச்சியடையச் செய்தன. அதிலும் குறிப்பாக நில உச்சவரம்புச் சட்டம், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற அறிவிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் பார்ப்பனர்களின் அடிமடியில் கைவைத்தது.

அவர்கள் கலைஞர் அரசுக்கு எதிராக அணிதிரண்டனர். இந்நிலையில்தான், உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் இந்திரா வெற்றிபெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்திரா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி நடந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநாட்டில்தான் கலைஞர் கலந்துகொண்டார்.

அந்த மாநாடுதான் இந்தியாவில் நெருக்கடிநிலையை இந்திரா பிரகடனம் செய்ய காரணமாக அமைந்தது. தனது அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்வதாகக் கூறித்தான் நெருக்கடி நிலையை அறிவித்தார். அதையடுத்து அனைத்திந்திய அளவில் முக்கியமான தலைவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார்.

மீண்டும் அந்தக் காலகட்டத்தை நினைவூட்டும் வகையில் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளை அமைந்திருக்கின்றன. ஆம், முற்போக்கு முகத்துடன் சர்வாதிகாரியாக முயன்ற இந்திரா என்ற அபாயத்துக்கு நிகராக இன்றைக்கும் இந்தியாவை வர்ணாச்சிரம சர்வாதிகார அபாயம் சூழ்ந்திருக்கிறது.

எமெர்ஜென்சியை எதிர்த்து பேனாவால் களமாடிய கலைஞருக்குப் பதிலாக, வர்ணாச்சிரமத்துக்கு எதிராக பெரியாரின் தடியோடு களத்தில் நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்திராவின் சர்வாதிகாரம் சோசலிஸ முகத்தை கொண்டிருந்தது. நாட்டின் முன்னேற்றத்தை முன்மொழிந்தது. எது எப்படியோ, மதசார்பற்ற நாடு என்ற முத்திரையை அழுத்தமாக பதித்தது. இந்திராவின் மகன் சஞ்சய்காந்தி செய்த சில அட்டூழிய நடவடிக்கைகளைத் தவிர, இந்திரா அன்றைக்கு அரசியல் சட்டத்தில் மதசார்பற்ற என்ற வார்த்தையைச் சேர்த்ததை மறக்க முடியாது.

எப்படிப்பார்த்தாலும் அது ஒரு மதசார்பற்ற சர்வாதிகாரம்தான். அதற்காக அதை ஏற்கமுடியாது. அதேசமயம், பாஜக உருவாக்கி வருவது மனுவாத சர்வாதிகாரம், அல்லது பார்ப்பனீய சர்வாதிகாரம் என்றுகூட சொல்லலாம். இந்திராவின் சர்வாதிகாரம் எதிர்காலத்துக்கு இந்தியாவை கொண்டு செல்வதற்காக என்று சொல்லப்பட்டது.

ஆனால், இப்போதுள்ள பார்ப்பனீய சர்வாதிகாரமோ, நம்மை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப் பார்க்கிறது. இப்போதே அதற்கான பல நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. நீங்கள் எங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். நாங்கள் உங்களை கண்டுகொள்ள மாட்டோம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் கார்பரேட்டுகளுடன் கைகோர்த்து பார்ப்பனீய சர்வாதிகாரம் செயல்படுகிறது.

இத்தகைய சர்வாதிகாரத்தை எதிர்த்துதான் பெரியாரின் கைத்தடியோடு களத்தில் நிற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆம், சங்கிகளை கதறடிக்கவும், களத்தில் அடித்து வீழ்த்தவும் எந்த ஆயுதம் சரியானதோ அதை அவர் கையில் எடுத்திருக்கிறார்.

நீட் தேர்வு எதிர்ப்பிலிருந்து, கோவில்கள் பராமரிப்பு வரை எல்லாவற்றிலும் பார்ப்பனீய சர்வாதிகாரம் எதிர்பார்க்காத வகையில் அடித்து விளையாடுகிறார் ஸ்டாலின். வடக்கே அரசியலை இந்து முஸ்லிம் என்று இரண்டு மதங்களுக்கு இடையே சுருக்கிவிட்ட நிலையில், தெற்கே, தந்தை பெரியாரின் சமூகநீதி தடியை ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார்.

கலைஞரும் அவருடைய காலகட்டத்தைதச் சேர்ந்த வட இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களும் மண்டல் கமிஷன் அமைக்கவும், அந்தக் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தவும் போராடினார்கள். மண்டல் கமிஷன் அமைப்பதற்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக இருந்தது. 1989ல் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த அன்றைய பிரதமர் வி.பி.சிங்கை வலியுறுத்தி அவருடைய பேனாவால் ஆணை பிறப்பிக்க காரணமாக இருந்தவர் கலைஞர்தான்.

இப்போது, மண்டல் பரிந்துரைகளால் பயன்பெற்ற இந்திபேசும் மாநிலங்களை இந்துத்துவா மாநிலங்களாக மாற்றும் முயற்சியில் மோடியும் யோகியும் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மீண்டும் நீட் மற்றும் இடஒதுக்கீடு விவாதத்தை அரசியலிலும், நீதிமன்றங்களிலும் தொடங்கி அதிர வைத்திருக்கிறது.

திமுகவின் வளர்ச்சி என்பது, சமூகநீதி, நலத்திட்டம், பகுத்தறிவு ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்தது. எனவேதான், 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தபிறகு, எல்லா மாநிலங்களில், மதவாத அரசியல், மனுவாத அரசியல் தலைவிரித்தாடத் தொடங்கியது. சமூகநீதி அரசியல் தனது பிரகாசத்தை இழக்கத் தொடங்கியது. ஆனால், சமூகநீதி அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்ட திமுகவும் அதன் தலைவர் ஸ்டாலினும் பாஜகவின் மதவாத அரசியலுக்கு சவாலாக எழுந்து நிற்கின்றனர்.

ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து பார்ப்பனீய சதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அடுத்தடுத்து அறிவிக்கிறார். அவருடைய அறிவிப்புகளும் திட்டங்களும் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வட மாநிலங்களின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியிருக்கிறது.

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்” என்று சொல்லி பதவியேற்ற நாள் முதல், மக்களுடனே நிற்கும், மக்களுடனே பயணிக்கும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். பொறுப்பேற்ற சமயத்தில் மாநிலம் முழுவதும் கொரோனா தாக்கிய நோயாளிகளுடன் மருத்துவமனைகள் முன் ஆம்புலன்ஸுகளின் அலறல் கேட்டபடியே இருந்தது. தடுப்பூசிகள் பற்றாக்குறை இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. மத்திய அரசு தடுப்பூசிக்கு விலை வைத்திருந்தது.

ஒரே மாதத்தில் நிலைமையை தலைகீழாக மாற்றியது ஸ்டாலின் விடுத்த அறிக்கைகள். ஆம், தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தடுப்பூசி தயாரிக்க மாநில அரசுக்கு உரிமை வேண்டும். அதற்கான தொழிற்சாலைகளை மாநில அரசுக்கு தரவேண்டும். ஆக்சிஜன் தயாரிக்க எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் தயாரிக்க உத்தரவிட்டார். ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்ககைகள் ஆயிரக்கணக்கில் உருவாக்கப்பட்டன. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள், மத்திய அரசை பணியவைத்தன. அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இதுதான் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளில் மிக முக்கியமானது. மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு பெற்ற முதல் வெற்றி இது. அதுவரை மத்திய அரசை நோக்கி எந்த மாநில அரசும் இப்படி எதிர்க்குரல் எழுப்பியதில்லை.

பொறுப்பேற்றதும், குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை. மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லா பேருந்துகள் அறிவிப்பு. பால் விலை குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை என்று தொடங்கிய அரசாணைகள் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் பல்வேறு திட்டங்கள் என நீடித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக அறநிலையத்துறையின் சொத்துக்கள் மீட்பு, அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள். அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், அதிகமான மாணவர்களை சேர்க்கவும் முடிவு. மாஸ்டர் ஸ்ட்ரோக்காக அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமன ஆணையுடன் பெண்களுக்கும் வாய்ப்பளிக்க முடிவு.

இதெல்லாம் ஸ்டாலின் சொல்லிவிட்டு செய்ததில்லை. செய்துவிட்டே சொன்னார். ஆம் கலைஞரைப்போல இல்லை ஸ்டாலின். கலைஞர் ஒரு விஷயத்தை செய்யப்போகிறார் என்றால் அதற்கான அறிவிப்புகளை முதலில் வெளியிடுவார். அதனால் ஏற்படும் பயன்களை விளக்கி அறிக்கையோ கடிதமோ எழுதுவார். பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பார்.

இதையடுத்து, அந்த விஷயம் குறித்து எதிர்மறைக் கருத்துகளை பரப்பவும், அதை நிறைவேற்ற விடாமல் தடுக்க நீதிமன்றம் செல்லவும் எதிராளிகளுக்கு இடம் கொடுத்துவிடுவார். ஆனால், ஸ்டாலின் அப்படி அல்ல. ஸ்டாலின் ஒரு விஷயத்தை செய்யும்போதுதான் அதுகுறித்த விவரமே தெரியவரும்.

ஆம், ஸ்டாலின் ஒரு காரியத்தை செய்து முடித்தபிறகு அது ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தப்போகிற தாக்கம் குறித்து விரிவாக எழுதினார்கள். பேசினார்கள். அவர் பேசாமல், எழுதாமல், அவரைப்பற்றி பேசவும் எழுதவும் வைப்பது ஸ்டாலின் பாணியாகிவிட்டது.

மருத்துவக்கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடங்களை பார்ப்பனீய மனுவாதிகள் கைப்பற்றியிருந்த கொடுமையை யாருமே கேள்வி கேட்காத நிலையில், இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைவருக்குமாக, ஸ்டாலின்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி, இன்றைக்கு இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களை ஸ்டாலின் பின் அணிவகுக்க செய்திருக்கிறது.

இதோ, அனைத்திந்திய அளவில் சமூகநீதி மற்றும் கூட்டாட்சிக்கான அமைப்பை உருவாக்கப் போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தவுடன் அவருக்கு ஆதரவாக தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுகிற திராவிட சமூகநீதி மாடல் இந்திய அளவில் காவிகளை கதறக்கதற விரட்டியடிக்கும் என்பது மட்டும் நிச்சயம். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாஜக இழைக்கும் அநீதியை அம்பலப்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கமாக இருக்கும்.

காவிகளுக்கு எதிராக ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளை பார்த்தால், அவர் ஒரு முடிவோடு செயல்படுவதை காணமுடியும். தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு மாறாக, ஆளுநர் ரவி பேசிய பேச்சுகளுக்கு முரசொலி மூலம் கொடுத்த பதிலாக இருக்கட்டும், காந்தி நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவாக இருக்கட்டும், எல்லாமே தயவுதாட்சண்யம் இல்லாமல் அடித்து நொறுக்கும் வகையைச் சேர்ந்தவைதான்.

தாய் கலைஞர் எட்டடி பாய்ந்தால், குட்டி ஸ்டாலின் 16 அடி பாய்கிறார். அதனால்தான், கலைஞரைக் காட்டிலும் ஸ்டாலின் ஆபத்தானவர் என்கிறார்கள். ஆம், கலைஞர் எதிரிகளுக்கு யோசிக்கவும், எதிர்வினையாற்றவும் அவகாசம் கொடுத்தார். ஸ்டாலின் அவகாசமே கொடுப்பதில்லை. •

Leave A Reply