ஆனைமுத்து மறைவுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அஞ்சலி!

Share

பகுத்தறிவு தந்தை பெரியாரின் அடியொற்றி, சுயமரியாதைப் பாதையில், பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தை கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களை பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்தவர்.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான கருவறை தீண்டாமையை ஒழிப்பதற்காக போராடி இறுதி வரை உறுதியாக நின்ற மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் அய்யா ஆனைமுத்து அவர்கள் தனது 96வது வயதில் பகுத்தறிவுப் பணியை நிறுத்திக் கொண்டுள்ளார்.

1957ல் பெரியாரால் அறிவிக்கப்பட்ட அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு 18 மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே அவரது உரைகள், எழுத்துகள் ஆகியவற்றைத் தொகுக்க ஆரம்பித்த அய்யா ஆனைமுத்து, அவற்றை ‘பெரியார் – ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்ற பெயரில் 2170 பக்கங்கள் கொண்ட பிரம்மாண்ட தொகுப்பாக வெளியிட்டார். பின் விரிவாக்கம் செய்யப்பட்டு, 20 பாகங்களாக வெளியாயின. பெரியார் சிந்தனைகள் குறித்த ஆய்வில், ஆனைமுத்துவின் இந்தத் தொகுப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவை தவிர, “சிந்தனையாளர்களுக்கு சீரியவிருந்து”, “தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம்”, “பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?”, “விகிதாச்சார இடஒதுக்கீடு செய்” ஆகிய புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

அய்யா ஆனைமுத்து அவர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் எமது மாணவர்களை நேரில் சந்தித்தும், பல்வேறு போராட்டங்களில் எம்மோடு கலந்து கொண்டும், தமது இயக்கத்தினரை கலந்துகொள்ள வைத்தும், அவரது இயக்கப் பத்திரிக்கையான சிந்தனையாளனில் கருவறை தீண்டாமைக்கு எதிரான செய்திகளை தொடர்ச்சியாக எழுதியும் வந்துள்ளார்.

90 வயதுக்கு மேலாகியும் ஒரு இளைஞனைப் போல சுறுசுறுப்பாகவும், துடி துடிப்பாகவும் இருந்த அவரின் செயல்பாடு எமக்கு ஊக்கம் தந்ததுடன், எம்மை அழிக்க நினைத்த பார்ப்பன மேலாதிக்கவாதி களுக்கு எதிரான நெருப்பாகவும் இருந்தார்.

அனைத்து தமிழ் ஆலயங்களையும் கைப்பற்றி பார்ப்பன மேலாதிக்கத்தினை அனைத்து வகையிலும் நிறுவுகின்ற திட்டத்தை மேற்கொண்டு வரும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் கிரிமினல்கள் விஷமத்தை பரப்பி வரும் இந்த சூழலில், அர்ச்சகர் உள்ளிட்ட அனைத்து திருக்கோயில் பணியிடங்களிலும் இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தும் போராட்டங்களை கட்டமைக்க வேண்டிய வரலாற்று தருணத்தில் அய்யாவின் மறைவு எமக்கும், தமிழகத்தின் சமூக நீதி இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.

அய்யாவின் குடும்பத்தாருக்கும் அவரின் அமைப்பினருக்கும் ஏனைய பெரியார் தொண்டர்களுக்கும் எமது அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறது. அய்யா ஆனைமுத்துவின் புகழ் ஓங்குக!

வா.ரங்கநாதன் தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம். தமிழ்நாடு
தொடர்புக்கு.9047400485

Leave A Reply