அதிமுகவைக் காட்டிலும் திமுக என்ன சொம்பையா?

Share

இந்தக்கேள்வி கொஞ்சம் கடுமையாக இருந்தாலும், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் இப்படித்தான் கேட்கிறார்கள்.

2019 நவம்பரில் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. உடனடியாக கட்சி நிர்வாகத்தையும் அதிமுகவில் மாற்றிவிட்டார்கள். ஆனால், திமுகவில் தொடர்ந்து காஞ்சி வடக்கு மாவட்ட திமுக என்றும், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக என்றும் நீடிக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளும் இருக்கின்றன. இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்றும், ஒன்றியங்களை இரண்டாக பிரித்து புதிய ஒன்றியச் செயலாளர் பொறுப்புகளும் உருவாக்கப்படும் என்றெல்லாம் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அந்தத் தீர்மானம் சில மாவட்டங்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டது. சரி அதுபோகட்டும், அரசு அலுவல் ரீதியாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை திமுக ஏன் இன்னமும் அங்கீகரிக்காமல் இருக்கிறது என்ற கேள்வி புதிராகவே இருக்கிறது.

எம்ஜியார் காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா பெயரை வைத்தார். காஞ்சிபுரத்துக்குத்தான் வைக்க வேண்டும் என்று கலைஞர் கோரினார். அதுவரை காஞ்சி அண்ணா மாவட்டம் என்றும் திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்றும் அழைக்க திமுக முடிவு செய்தது.

இப்போது அப்படிப்பட்ட பிரச்சனை ஏதும் இல்லை. பிறகு ஏன் தயங்குகிறது. இத்தனைக்கும் அதிமுகவில் இந்த மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் தேர்தலை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்கட்சி குழப்பத்தில் இருக்கிற அந்த கட்சியிலேயே தேர்தல் நடக்கப்போகிறது. அந்தக் கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

ஆனால், திமுகவில் ஏன் இன்னும் பழைய அமைப்பு முறையையே தொடரவேண்டும். அதிமுகவைக் காட்டிலும் நாங்கள் சொம்பைகளா? விரைவில் தலைமை இந்த மாவட்டங்களுக்கான சீரமைப்பை வெளியிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

கடந்த பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை இழந்ததற்கும், மதுராந்தகம் ஒன்றிய தலைவர் பதவியை இழந்ததற்கும் தொண்டர்களின் அதிருப்தியே காரணம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

Leave A Reply