திராவிட நாடு குறித்து பெரியாரின் நிலைப்பாடும், அண்ணாவின் விளக்கமும்!

Share

வடநாடு தென்னாடு என்று ஏன் பேசத் தொடங்கினோம்? வடநாடு ஆதிக்கம் செலுத்துவதால் – எப்படி? மொழியால், கலையால், அரசியலால், பொருளாதாரம் பிடிப்பினால், சுரண்டலினால். தம்பி! இதை நான் விளக்குவதைவிட, முன்பு விடுதலை தந்த விளக்கத்தை அப்படியே தருவது மெத்தச் சுவையும், பயனும் தரும் என்பதால், அதனைத் தருகிறேன். இயல்புதான் மாறிவிட்டதே தவிர, இடம் நல்லதுதான் என்பதும் விளங்கும்.

சென்ற வாரத்தில் விருதுநகர் வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பேசிய தோழர் காமராஜர் அவர்கள் பின்வருமாறு பேசியிருக்கிறார்:-

“சிமெண்ட், பேப்பர், இரும்புத் தொழிற்சாலைகள் நடத்துவதற்குச் சர்க்கார் லைசென்சுகள் வழங்கியிருந்தும், பலர் வேலையை ஆரம்பிக்கவில்லை. நம்மிடமிருந்து வடநாட்டான், தென்னாட்டான் என்ற வித்தியாசமே கூடாது. இந்தப் பாகுபாடில்லாமல் வியாபாரம் செய்யவேண்டும்.’’

ஏன் இந்த வித்தியாசம் கூடாது என்பதற்குந் தோழர் காமராஜர் விளக்கங் கூறவில்லை.

வடநாட்டாரும் நாமும் பாரத மாதாவின் வயிற்றிலிருந்து பிறந்த புதல்வர்கள் என்பது காரணமா?

வியாபாரம் என்ற தொழிலில், எல்லா வியாபாரிகளும் ஒன்று சேர்ந்துகொண்டு, பொதுமக்களைச் சுரண்டவேண்டுமே யொழிய, அவர்களுக்குள் வேற்றுமையாயிருக்கக் கூடாது என்ற காரணமா?
வடநாட்டு வியாபாரிகளின் தயவில்லாமல், தென்னாட்டு வியாபாரிகள் வியாபாரஞ் செய்யமுடியாது என்பது காரணமா?

வடநாட்டு வியாபாரிகளை விரோதித்துக்கொண்டால், தென்னாட்டுக் காங்கிரஸ் இயக்கம் அழிந்துபோய்விடும் என்பது காரணமா?

வடநாட்டானுக்கும் நமக்கும் வியாபாரத்தில் வேற்றுமை கூடாது என்றால், பிரிட்டிஷாரும், அமெரிக்கரும் அவரவர் இஷ்டம்போல் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்புவதை ஏன் தடுக்கவேண்டும்? மோட்டார்க் கார், கப்பல் முதலியவைகளைக் கூட நாமே இங்கு கட்டிக்கொள்வதற்கு ஏன் முயலவேண்டும்? வியாபாரத்தில் வித்தியாசம் கூடாது என்றால், வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்களை ஏன் தடுக்கவேண்டும்? ஏன் அவைகள்மீது அதிகமான வரி விதிக்கவேண்டும்? ஜப்பானிலிருந்து துணி இறக்குமதி செய்வதைத் தடுக்காவிட்டால், இன்று கெஜம் 4 – 5 அணாவுக்கு ஏராளமான துணி கிடைக்குமே!

இதுமட்டுமல்ல; வடநாட்டு வியாபாரிகள் எல்லாத் துறைகளையும் கைப்பற்றிவிட்டார்கள் என்பதும், அவர்களால் சுரண்டப்படும் செல்வம் வடநாட்டுக்குத்தான் எடுத்துச் செல்லப்படுகிறதேயொழிய, இங்கு செலவழிக்கப்படுவதில்லை என்பதும், தோழர் காமராஜர் அறியாததா என்று கேட்கிறோம்.

இலங்கைக்கும் மலேயாவுக்கும், குடியேறுகிற இலட்சக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர்கூட வடநாட்டாரில்லை, திராவிட நாட்டார்தான் என்பது இவருக்குத் தெரியாதா? இதன் காரணம், இந்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லாததுதான் என்பதும், இவருக்குத் தெரியாதா?

நம் ஏழைகளைப் பொறுத்தவரையில், நம் செல்வத்தை வெள்ளையனாகிய நப்பீல்ட் சுரண்டிப்போவதும் ஒன்றுதான். வடநாட்டுக்காரனான டாட்டா கொண்டுபோவதும் ஒன்றுதான்.

வைரக்கடை முதல் வட்டிக்கடை வரையில், சிற்றுண்டிக் கடை முதல் செருப்புக்கடை வரையில், எல்லா வியாபாரங்களையும், வடநாட்டாரே கைப்பற்றிக்கொண்டுவிட்டால், தென்னாட்டின் பொருளாதார நிலை என்னவாகும்?

சிமெண்ட், பேப்பர், இரும்பு ஆகிய தொழிற்சாலைகளை நாம் தொடங்க முடியாமலிருப்பதற்குக் காரணமென்ன? வட நாட்டு முதலாளிகளின் போட்டியும் அவர்களுக்கு டில்லி சர்க்கார் தரும் ஆதரவும் அல்லவா?

தென்னாட்டார் கைராட்டினத்தில் நூற்றுக் கைத்தறியில் நெய்யவேண்டியது, வடநாட்டு முதலாளி நூல் நெசவாலைகளைப் பெருக்கிக் கொண்டிருக்க வேண்டியதுதானா? பிரிட்டனுக்கு இந்தியா மார்க்கெட்டாக இருந்துவந்த அக்கிரமத்தைச் சகிக்காமல், அன்னியத் துணிக்கடைக்கு முன்பு மறியல் செய்த காமராஜர், வடநாட்டுக்குத் தென்னாடு மார்க்கெட்டாக இருப்பதை வெளியே சொல்ல ஏன் வெட்கப் படுகிறார்?

தென்னாடு வளம்பெறவேண்டுமானால், எந்த ஆட்சி எப்பேர்ப்பட்ட திட்டத்தை வகுத்தாலும் முடியாது. வட நாட்டானை வெளியேற்றி, அவனுடைய சுரண்டலையும் நிறுத்தினாலொழிய, திராவிடத்தின் வறுமையை ஒழிக்க முடியாது.

தோழர் காமராஜரோ, அல்லது வேறு எந்தக் காங்கிரஸ் தலைவரோ, எவ்வளவுதான் எதிர்த்தாலும் வடநாட்டுச் சுரண்டல் ஒழிப்புக் கிளர்ச்சியை மறைத்துவிட முடியாது.

பெரியார் வற்புறுத்துவதெல்லாம், தம்பி!

1. தமிழர், தெலுங்கர், கேரளம், கருநாடகர் நால்வரும் ஒரே இனத்தவர்.

2. இவர்கள் வேறுவேறு மொழி பேசுகிறார்கள் – ஆனால், இந்த நான்கு மொழிகளும் ஒன்றேதான்.

3. இந்த நால்வரும் ஒரே இனம் என்ற பிரசாரம் மற்ற மூன்று இடத்தில் வெற்றிகரமாக நடைபெறாததால், இன உணர்ச்சி அங்கு ஏற்படவில்லை.

4. இன உணர்ச்சி ஏற்படாததால், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சியும் திராவிட நாடு அமைப்பு உணர்ச்சியும் அங்கு ஏற்படவில்லை.

5. ஏற்படாததால், நாம் வாளா இருந்துவிடுவது கூடாது; தமிழ் நாடு ஆகிவிட வேண்டும்.

6. தமிழ்நாடு தனி நாடு என்பது நம் திட்டம். ஆனால் நம் இலட்சியம் திராவிட நாடு திராவிடருக்கு என்பதுதான்.

7. அந்த இலட்சியம் வெற்றிபெற்றே தீரும். மற்ற மூன்று மாநிலத்தாரும் உணர்ந்து சேரப்போகிறார்கள்.

8. உடனடியாகத் தேவைப்படுவது, இந்தியாவிலிருந்து நாம் பிரிந்தாக வேண்டும் என்பதாகும்.

9. இந்தியாவில் ஒட்டிக்கொண்டிருக்கிற வரையில் தமிழ்நாடு வாழாது, மற்ற மூன்று நாடுகளும் வாழ முடியாது.

அதனால்தான், தம்பி! ஏக இந்தியா எனும் போலியை ஒழித்தாகவேண்டும் என்று சொல்லி, அந்த உணர்ச்சியை உலகுக்குக் காட்ட உள்ள வழி, இந்திய யூனியன் படத்தைக் கொளுத்துவதுதான் என்றார்.

மிகத் தீவிரமாகவே விளக்கம் அளித்தார்.

“இனிமேல் சாதி ஒழிக்கிறோம் என்று சொன்னால் கூட இது சொத்தை விஷயம்; தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரம்பிக்கவேண்டும். நேருவோ அவன் பாட்டனோ வந்தால்கூட, பர்மிட் வாங்கிக்கொண்டுதான் நம் நாட்டில் நுழையவேண்டும். சாதி ஒழிப்பதையே என் திட்டங்களில் முதலில் வைத்தேன்; நாடு பிரிவினையை இரண்டாவதாக வைத்தேன். ஆனால், இப்போது நாடு கிடைத்தால் சாதியை ஒரு வரியில் ஒழித்துவிடலாமென்று நிச்சயம் செய்து கொண்டேன்.

சாதி வேண்டுமென்பவனை வெளியே போ என்றால் போகிறான்போல் தோன்றுகிறது. சில பெரியவர்கள் ஒத்துழைப்பதாக என்னிடம் சொன்னார்கள். அடுத்த காரியம் நாடு பிரியவேண்டும் என்றே ஆரம்பிக்கவேண்டும். சாதி ஒழிப்புச் சங்கதி சப்பையாகிவிட்டது.’’

இது 2-12-57-ல்! ஆனால், இப்போது பெரியார்,

நாடு பிரிவினை

ஜாதி ஒழிப்பு

எனும் இரண்டு திட்டங்களையும்விட,

காமராஜபுரம்

அழிந்துவிடாமல் பாதுகாக்கும் பணியில் இருக்கிறார். காமராஜபுரம் பாதுகாக்கப்படக் கூடாது, இராஜாஜி நகர் ஆகி விடட்டும் என்று யாராரோ சூழ்ச்சிகள் செய்வதாகக் கற்பனை செய்துகொண்டு, அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் காமராஜபுரம். பெரியாருக்குப் பிடித்தமான, நாமும் விரும்புகிற,

ஜாதி ஒழிப்பு

நாட்டுப் பிரிவினை

எனும் இரு திட்டங்களுக்கு வழி அமைக்கிறதா, துணை நிற்கிறதா என்றால், இல்லை! மாறாக, காமராஜரின் கரத்தை வலுப்படுத்த வலுப்படுத்த, அது ஏக இந்தியா கொள்கையைத்தான் வலிவாக்கும் என்பதை, அரசியல் பிரச்சினையின் நுணுக்கம் அறிந்த எவரும் மறுத்திட இயலாது.

தம்பி! எனக்கு இருக்கும் மகிழ்ச்சி, பெரியார் பிரிவினைத் தத்துவத்தை, வடநாட்டுத் தொடர்பு அறுத்துக்கொள்ளும் இலட்சியத்தை விட்டுவிடவில்லை என்பது. ஆனால் எனக்கிருக்கும் பயம், காமராஜபுரத்தைக் கட்டிக் காத்திடும் கடமை உணர்ச்சி காரணமாகத் தனிநாடு வேண்டும் என்ற இலட்சியத்தை, விட்டுவிடத் தக்க மோசமான நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்பதுதான். எனினும், வடநாட்டு எதிர்ப்புணர்ச்சி சம்பந்தமாகப் பெரியார் இம்மி அளவும் விட்டுக் கொடுக்கமாட்டார் என்று இன்றும் நம்புகிறேன்.

அவர் இப்போதும், வடநாடு, காட்டுமிராண்டித்தனமும் சுரண்டும் போக்கும் கொண்ட இடம் என்றுதான் கருதுகிறார்.

இதைக் காங்கிரஸ் அமைச்சர்களே எதிர்த்தாலும், பெரியார் போர்க்கோலம் பூண்டுவிடுவது காண்கிறோம். (காமராஜர் விஷயமாக மட்டும் விதிவிலக்கு! அது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு!) தம்பி! தனி நாடு கேட்பதை எதிர்த்துவிட்டு அமைச்சர் கக்கன் பட்ட பாடு தெரியுமா? பெரியார் செம்மையாகக் கொடுக்கலானார், இதோ அது:

“அமைச்சர் கக்கன் எங்கோ பேசினாராம், திராவிட நாடாவது; இது சின்ன நாடு, எப்படி நிர்வகிக்க முடியும்? எங்கே கிடைக்கப் போகிறது?’’ என்று பேசுகிறாராம்.

“அவர் பேசுவார்; வடநாட்டு ஆதிக்கம் இல்லா விட்டால் கக்கன் போன்றவர்கள் மந்திரிகள் ஆகமுடியுமா? திராவிட நாடு வந்தால் ஆதித்திராவிடன் மந்திரியாகவும் மேல் நிலையிலும் இருப்பான். ஆனால் கக்கனைப் போன்ற அறிவற்ற ஆட்கள் இருக்க முடியுமா?’’

தம்பி! நான் ஏதோ, கக்கன் அவர்களைக் குறித்துத் தாழ்வாகப் பேசிவிட்டேன் என்று, முதலில் கருதிய கக்கன் அவர்கள் விளக்கம் பெற்றார் – ஆனால் அதை இன்னமும் பேசுகிறவர்கள், அதைக் காரணமாக்கிக் காட்டி என்மீது பழிபோட எண்ணுபவர்கள், கக்கன் அவர்கள் அறிவற்றவர் என்று பெரியார் பேசியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். புது முயற்சியினர், இந்தப் பழைய பழிபோட்டுத் தலைவாங்கும் முயற்சியிலும் சளைக்கக் காணோம். பெரியார் பேசுவதைக் கேட்போம்; கக்கன்போன்றார்கள், நாட்டுப் பிரிவினை கேட்பவர்களைத் “தேசத் துரோகிகள்’ என்று கண்டிப்பது கேட்டுக் கடுங்கோபம் மூள்கிறது, பெரியாருக்கு; வெளுத்து வாங்குகிறார்; கோபத்திலே ஒன்றை மறந்துவிடுகிறார்; தம் “அர்ச்சனை’ அவ்வளவும் காமராஜருக்கும்தான் என்பதை; ஏனெனில், காமராஜரும்தானே நாட்டுப் பிரிவினையை எதிர்க்கிறார்.

“எங்களைத் தேசத் துரோகி என்கிறாயே! உங்களைப் போன்ற பிறவித் தேசத் துரோகி யார்? உன் தாய் பிறந்த நாடு, உன் பாட்டி பிறந்த நாடு! இதைக் கண்டவன்தான் ஆளவேண்டும் என்கிறாயே துணிந்து, உன்னைப்போலத் துரோகி யார் உளர்?

உனக்கு என்ன தெரியும்? மந்திரி நாற்காலி தெரியும். பணத்தை எண்ணிப் பார்த்திருப்பாய். வேறு என்ன தெரியும்?

பூகோளம் தெரியுமா உனக்கு? சரித்திரம் தெரியுமா உனக்கு? உன் இரத்தம் கொண்டவர் தமிழ் மக்கள் இலங்கையில் நாய்போலத் திண்டாடுகிறார்கள்; அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்பட்டதுண்டா?’’

இவ்விதம் கேட்டு அமைச்சர்களைத் திணற அடிக்கிறார்; நாட்டுப் பிரிவினையே கேட்டினைப் போக்கும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் புதியவர்களின் தீவிரம் – வேகம் – விறுவிறுப்பு – போர்ப்போக்கு – அவர்களை என்ன பேச வைத்திருக்கிறது என்று கவனித்தாயா, தம்பி! சமீபத்திய திருவாசகம், கேள்:

வடநாடு நரகலோகமல்ல, வடநாட்டார் யமகிங்கரரும் அல்ல, நமக்குத் தாழ்வு மனப்பான்மை கூடாது. உலகத்தோடு ஒட்டி வாழவேண்டும் – ஒண்டிக் குடித்தனம் நடத்தக் கூடாது.
ஆந்திர, கேரள, கருநாடகத்தாருடன் சேர்ந்து வாழ முடியும் என்னும்போது, மற்றவர்களுடன் மட்டும் ஏன் வாழக்கூடாது.

டாக்டர் சுப்பராயனோ, எஸ். வி. இராமசுவாமியோ பேசியிருந்தால், “ஜெய்ஹிந்’தோடு முடித்திருப்பார்கள். புதியவரின் பேச்சில், அந்த ஒரு சொல்தான் சேரவில்லை – இன்னும் கேட்டுவிட்டால் போதும், அண்ணா வாழ்க என்று சொல்லி வாயைக் கெடுத்துக் கொள்வதைவிட, “ஜெய்ஹிந்’ சொன்னால்தான் என்ன தப்பு என்று கேட்டுவிட்டு, போதும்! போதும்! காது குடைகிறது! என்று நேருவே கூறும் வரையில் கூவுவார்கள். ஆமாம் தம்பி! எல்லாம் தலைகீழாக வேண்டுமே – அதுதானே புரட்சியாம்!!

இந்தியாவின் பிரதேச ஒற்றுமைபற்றிய அக்கறையும், கவலையும் பொங்குகிறது; புதியவர்களிடமிருந்து வழிகிறது. ஏற்கனவே நேரு கட்சியாரிடமிருந்து வழிந்தது போதாதென்று. நாட்டுப் பிரிவினை கூடாது – வேண்டுமானால் பிரிந்துபோகும் உரிமையை மட்டும் பெற்றுவைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் – தேர் திருவிழா காலத்திலே சிறுவர்கள் பணம் கேட்பார்கள். தந்திரம் தெரிந்த பெரியவர்கள், பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து; “உனக்குத்தான் – ஜேபியிலேயே வைத்துக்கொள் – ஆனால் செலவழிக்கக்கூடாது – உம்!’’ என்று சொல்வார்கள். அதுபோல, நேரு பண்டிதர், “பிரிந்துபோக உரிமை தருகிறேன்; ஆனால் பிரிந்துபோகக் கூடாது. உம்!’’ என்ற சொல்லவேண்டும் போல் இருக்கிறது. வேடிக்கைதான்.

ஒற்றுமை கெடக்கூடாது – எனவே நாட்டுப் பிரிவினை கூடாது என்று பேசுபவர்கள் எவராயினும், பழையவரோ புதியவரோ, இதுதான் பதில்; அதுவும் குருநாதர் தந்தருளியது.

“நாட்டைத் துண்டுபோடக் கூடாது; ஒற்றுமை கெட்டுப் போகும்‘’ என்று மட்டும், “கிளிப்பிள்ளை மாதிரி’ திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.

“ஒற்றுமை’ என்றால் என்ன என்பதுபற்றி இவர்கள் சரியாகப் புரிந்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எந்த உயிர்களிடத்திலும் இயற்கையாக அமைந்திருக்கும் ஒற்றுமைதான் நீடித்த ஒற்றுமையாயிருக்கும். காட்டிலோ, ஊரிலோ, விலங்குகளும் பறவைகளும் அந்தந்த இனம் ஒன்றுசேர்ந்து கூடி, ஒற்றுமையாக வாழ்வதைக் காண்கிறோம். எறும்புகள், காகங்கள், யானைகள், மான்கள், ஆடுகள் போன்ற எந்தப் பிரிவை எடுத்துக் கொண்டாலும், அவைகளுக்குள்ளே இன ஒற்றுமை இருப்பதைக் காணலாம். காகங்களில் ஒன்றிரண்டுகூட புறாக்கூட்டங்களுடன் சேர்ந்து உறவாடுவதில்லை. யானைகள், மான் கூட்டத்துடன் சேர்ந்து உறவாடுவதில்லை; ஆடுகள் புலிக்கூட்டத்தில் சேர்ந்து உறவாடி வாழமுடியாது. ஆனால் இவைகள் சர்க்கசில் மட்டுந்தான் “சேர்ந்து’ வாழ்கின்றன. இது இயற்கையான உறவு அல்ல. சர்க்கஸ்காரனின் சவுக்கடிக்கும், பிரம்படிக்கும், கைத் துப்பாக்கிக்கும் நடுங்கிக்கொண்டு நடிக்கின்ற போலி ஒற்றுமை, போலி உறவு ஆகும்.’’

போலி உறவு என்ற சொல் கேட்டதும், தம்பி! என்னிடம் இதுநாள்வரை கொண்டிருந்ததாகக் கூறப்பட்டு வந்தது, இப்போது பேசுவது கேட்கும்போது, போலி உறவாகவே இருந்திருக்கும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறதுபோலும் என்று எண்ணிக்கொள்வாய். அது அல்ல என் உள்ளத்தில் எழுந்தது.

பிரிந்துபோகும் உரிமை பெறுவோம்; ஆனால், பிரிந்து போகமாட்டோம் என்று கூறுவது. இருதரப்புக்கும் காட்டப்படும் போலி உறவாக இருக்கிறது! இதைக் கண்டுபிடித்துவிடவா மாட்டார்கள்? என்றுதான் எண்ணுகிறேன்.

***

“பிரிந்து போகும் உரிமை அளிக்க வேண்டும்?’’

“யாருக்கு வேண்டும் அப்படி ஒரு உரிமை?’’

“ஏன்! எமக்குத்தான். தமிழ் நாட்டாருக்கு’’

“தமிழ் நாடு என்று ஒன்று உளதோ! பாரதத்தில் உள்ள பல இராஜ்யங்களிலே அது ஒன்று. அங்கு உள்ளவர்கள் தமிழ் பேசுவர்.’’

“பாரதத்தில் உள்ளதுதான்; ஆனாலும். . . . .’’

“அது என்னய்யா, ஆனாலும். . . . .’’ “ஆனாலும், தமிழர் ஒரு தனி தேசிய இனம். . .’’

“தமிழ் தேசியமா? அது என்ன, புது தேசியம்?’’

“தமிழ் தேசியம் என்பது திராவிட தேசியம்போலப் போலி அல்ல – கனவு அல்ல – கவைக்கு உதவாததும் அல்ல.’’

“எனக்குத் தெரியாது! எனக்கு ஒரே ஒரு தேசியம்தான் தெரியும் – பாரத தேசியம் – இந்திய தேசியம். சரி! இந்திய தேசியத்தையே உம்முடையது என்று கொண்டால் என்ன தவறு?’’

“எமது தேசியம் அழிந்துவிடும்.’’

“கோபித்துக்கொள்ளக் கூடாது. தமிழ் தேசியம் அழிந்துவிட்டால் என்ன தவறு? எல்லோரும் இந்தியர் என்ற உணர்ச்சி பரவும் – வெற்றி அடையும் – இந்தியாவின் ஒற்றுமை நிலைத்து நிற்கும். காவிரி வேறு, கங்கை வேறா?’’

“இரண்டும் ஆறுகளே – ஒன்று மிகப் பெரியது – மற்றொன்று சிறியது.’’

“அதற்கு என்ன செய்யலாம். இரண்டும், இந்தியருக்குச் சொந்தம் என்று எண்ணிக்கொண்டால், பேத உணர்ச்சி எழாதே.’’

“இல்லையே. பேத உணர்ச்சி இருக்கிறதே. போக்க முடியவுமில்லையே. மேலும், கங்கை மண்டல நாகரிகம் வேறு. காவிரி தீரத்து நாகரிகம் வேறு.’’

“பஹுத் அச்சா! நாகரிகமே இரண்டா? வடக்கு, தெற்கு? என்ன அப்படித்தானே?’’ “ஆமாம் என்றுதான். . . .’’

“டி.எம்.கே. சொல்கிறது. நீங்கள் அதைவிட்டு விலகிவிட்டீர்களே. மழைவிட்டும் தூவானம் விடாதது போல, பிரிவினை கேட்கும் கட்சியைவிட்டு விலகிய பிறகும், பிரிவினைக்கு உரிமை கேட்பதில், பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை; பிரிவினை என்றால் புரிகிறது. – பிரிவினை கூடாது என்றாலும் புரிகிறது. ஆனால், பிரிவினைக்கு உரிமை, ஆனால், பிரிவினை இல்லை என்றால் சரியாகவுமில்லை, நியாயமாகவுமில்லை, தேவை என்றும் படவில்லை.’’

“பிரிவினைக்கு உரிமை கொடுத்தால், பிரிந்துபோகும் நிலையே ஏற்படாது.’’

“அரே, பையா! எப்படி? பிரிந்துபோகும் உரிமை இல்லாதபோதே, பிரிவினை கேட்கிறார்களே, டி. எம். கே. யினர். பிறகு பிரிந்துபோகும் உரிமையும் கொடுத்து விட்டால் சும்மாவா இருப்பார்கள்? தொட்டதற்கு எல்லாம், மிரட்டுவார்கள் – பிரிந்துபோகிறேன் என்று தலாக் சொல்லிவிட்டு, ஒன்றாக வாழ்வது வேடிக்கை மட்டுமல்ல, விபரீதமுமாகும். நை, நை, உம்முடைய யோசனை சரியில்லை.’’

“எங்கள் மக்கள் வற்புறுத்துகிறார்கள்.’’

“உங்கள் மக்கள்! அச்சா! அதென்ன, உங்கள் மக்கள், எங்கள் மக்கள்! இந்த மதராசிவாலா புத்தி மட்டும் போகிறதில்லை உங்களுக்கு. பிரிவினை உரிமை கேட்க, காரணம்?’’

“அப்போதுதான், எம்மை மதித்து, புறக்கணிக்காமல், ஒழுங்காக நடப்பீர்கள்.’’

“இப்போது எப்படி நடந்துகொள்கிறோம்?’’

“ஓரவஞ்சனையாக – மோசமாக – சுரண்டல் நோக்குடன். . . . .’’

***
தம்பி! இதற்குமேல், உரையாடலுக்கே இடம் கிடைக்காது. எனவே பிரச்சினைக்கும் பரிகாரம் கிடைக்காது.

பிரியும் உரிமை என்ற பேச்சு இங்கு உள்ளவர்களை ஏய்க்கவும், உரிமை கொடுத்தாலும் பிரிந்துபோய்விடமாட்டோம், பாரதத்திலேயேதான் இருப்போம் என்ற பேச்சு அங்கே உள்ளவர்களை ஏய்க்கவும், பயன்படுத்தப்படக்கூடும் என்று பேசிடக்கூடும். அதுவும் நடவாது. வடநாட்டுத் தலைவர்கள் ஏமாளிகளுமல்ல, உரிமைகளை வாரி வழங்கும் வள்ளல்களுமல்ல. இது தேசியம் பேசுவோர் அறியாததுமல்ல. எனினும், ஏன் பேசுகின்றனர் அதுபோல? இலட்சியப் பயணத்திலே சலிப்பு வந்துவிட்டது.

“உடனே அவன், அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலவும்.’’

என்று சாலமோன் கூறினார் அல்லவா? இலட்சியப் பாதையை விட்டுச் சிறிது வழுவினாலும் போதும் – சபலம், மயக்கம், ஏற்பட்டுவிடும் – மினுக்குக்கும் தளுக்குக்கும் மனதைப் பறிகொடுக்க வேண்டிவரும் – பயணம் நின்றுவிடும் – வழி தவறிவிடும். அம்மட்டோ! சபலத்துக்கு இரையாகாமல், பயணத்தைத் தொடர்ந்து நடத்துவோர்மீது வெறுப்பே ஏற்படும்.

Leave A Reply