காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கு எல்.சி.குருசாமி அல்லது கலைஞர் பெயர் சூட்டுக – LR Jagdheesan

Share

வரவேற்கப்படவேண்டிய முன்னெடுப்பு. பள்ளிகள் ஒரு சமூகத்தின் நாற்றங்கால்கள் என்கிற நோக்கில் பார்த்தால் அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்; மனம் மற்றும் அறிவு வலிமை மற்றும் நலனே எல்லாவகையிலும் வளமிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான துவக்கப்புள்ளி என்பதால் பள்ளிமாணவர்களுக்கான எல்லா செலவுமே சமூக மூலதனமாகவே பார்க்கப்படவேண்டும்.

அந்த வகையில் இது ஒரு முக்கியமான சமூகநலன்/நீதியின் மைல்கல். கலைஞர் காலத்திலேயே திட்டமிடப்பட்டு கைவிடப்பட்ட திட்டம் இப்போதாவது நடைமுறைக்கு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

இந்த திட்டத்திற்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் உணவுக்காக குரல் கொடுத்த எல் சி குருசாமி பெயர் சூட்டுவது வரலாற்றுக்கடமையாகவும் நன்றிக்கடனாகவும் இருக்கும்.

அத்தோடு சக தலித்துகளாலேயே வந்தேறிகள் என்று இன்அளவும் வசைபாடப்படும் அருந்ததியர்களுக்கு உரிய வரலாற்று அங்கீகாரம் அளிப்பதாகவும் அமையும். அயோத்திதாசரை ஏற்றுக்கொண்டாடுபவர்கள் எல் சி குருசாமியை இன்னும் ஒதுக்குதல் அறமன்று.

ஒருவேளை ஆட்சியாளர்களுக்கு அதில் விருப்பமில்லாவிட்டால் இந்த காலை உணவு திட்டத்தை நிறைவேற்ற விரும்பிய கலைஞர் அல்லது அதை நிறைவேற்றும் மு க ஸ்டாலின் ஆகிய மூன்று பெயர்களில் ஒரு பெயரை சூட்டலாம்.

இதையொட்டி திராவிடர் கழகம் உள்ளிட்ட திராவிடர் இயக்க அமைப்புகளின் போதாமையையும் நினைவுபடுத்தவேண்டிய அவசியம் எழுகிறது. ஒரு சமூகத்தை கைப்பற்றவேண்டுமானால் அதன் நாற்றங்கால்களான பள்ளிகளை கைப்பற்றவேண்டும் என்கிற தொலைநோக்குப்பார்வையோடும் தெளிவான திட்டத்தோடும் திராவிடத்தின் எதிர் முகாமான ஹிந்துத்துவ முகாம்கள் தமிழ்நாட்டுப்பள்ளிகளை ஆக்கிரமிக்கத்துவங்கி ஏறக்குறைய மாமாங்கம் ஆகிவிட்டது.

முதலில் தனியார் பள்ளிகளை கைப்பற்றி வெற்றிபெற்றவர்கள் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அரசுப்பள்ளிகளிலேயே அட்சயபாத்ரா என்கிற முகமூடியோடு தொண்டுநிறுவனமாக காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் நுழைந்தார்கள்.

அதுவும் எப்படி? நுழையும்போதே வெங்காயம் பூண்டு சேர்க்காத சுத்த சைவ காலை உணவு என்கிற தங்களின் ஹிந்துத்துவ திட்டத்தோடு. முந்தைய அதிமுக அரசு அதற்காக கோடிக்கணக்கான மதிப்புள்ள அரசு நிலத்தை வேறு கொடுத்து உதவியது. அந்த அநியாயத்துக்கு எதிராக திராவிடர் இயக்கங்கள் தரப்பில் பெரிய எதிர்வினையில்லை. எதிர்ப்பில்லை. கண்டனக்களங்கள் அமைக்கப்படவில்லை.

அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக அது உணவுப்பாசிசம் என்று எதிர்த்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து சென்னைமாநகராட்சியையும் கைப்பற்றியபின் திமுகவின் வணக்கத்துக்குரிய மேயர் அந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படும் என்று அறிவித்தார். அப்போதும் திராவிடர் இயக்கங்கள் கொள்கைவாதிகளிடம் சின்ன முணுமுணுப்பு கூட இல்லை.

இன்றைக்கு இத்துப்போன மடாதிபதிகளுக்கு எதிராக முண்டாதட்டும் கொள்கைவாதிகள் ஒருவர் கூட அப்போது அதை விமர்சிக்கவில்லை.

முதல்வரின் இன்றைய அறிவிப்புக்குப்பின் அட்சய பாத்ராவையும் அதன் “அதி தூய சைவ/ஹிந்துத்துவ” உணவுப்பாசிசத்தையும் அரசுபள்ளிகளில் இருந்து இந்த ஆட்சி அகற்றும் என்று எதிர்பார்க்கலாம். அத்தோடு அவர்களுக்கு தானமளிக்கப்பட்ட அரசு நிலத்தையும் மீட்டு அரசாங்க பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

ஒருவேளை தமிழ்நாடு அரசு அதை செய்யாவிட்டால் அதை தொடர்ந்தும் எதிர்க்கவேண்டியதும் விமர்சிக்க வேண்டியதும் திராவிடர் இயக்க அமைப்புகளின் முதன்மைப்பணியாக இருக்கவேண்டும்.

மாறாக உப்புப்பெறாத பல்லாக்கு பிரச்சனையை பூதாகரமாக கிளப்புவதில் எந்த அர்த்தமும் இருக்காது. தமிழ்நாட்டின் தலைநகரின் அரசு பள்ளிகளில் பல்லாயிரம் மாணவர்களுக்கு காலை உணவோடு சேர்த்து தினம் தினம் ஊட்டப்படும் இந்துத்துவ உணர்வை எந்த கேள்வியும் கேட்காமல் அனுமதித்துவிட்டு எங்கோ ஒரு ஊரில் இத்துப்போன மடாதிபதியை எதிர்த்து வீரவசனம் பேசுவதெல்லாம் வடிவேலுவின் நானும் ரௌடிதான் வாய்ச்சவடாலைத்தான் நினைவுபடுத்தும்.

எனவே திராவிடர் இயக்க அமைப்புகளும் அதன் கொள்கைவாதிகளும் இனியேனும் தமது முதன்மை இலக்கில் தெளிவடைவது நல்லது.

Leave A Reply