நதிபோல் ஓடும் முதல்வர் ஸ்டாலின்! – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

Share

மருத்துவ கல்லூரிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவீத இடங்களை மோடி அரசு 4 ஆண்டுகளாக விழுங்கிக் கொண்டிருந்தது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்தவுடன் அந்த இட ஒதுக்கீடை மீண்டும் மாநிலத்திற்கு பெற்றுத்தர சட்டப்போராட்டம் நடத்தியது. மாநில உரிமையை பெற்றுக் கொடுத்ததுடன் எல்லா மாநிலங்களுக்கும் அந்த உரிமையை பெற்றுக் கொடுத்தது.

சரி, அது கிடக்கட்டும்…

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அடிமை அரசு, மருத்துவ உயர்படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை மோடி அரசு பிடுங்கியபோது எதிர்ப்பே இல்லாமல் விட்டுக்கொடுத்தது. அதைப்பற்றி அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலும் எந்த மீடியாவோ, எதிர்க்கட்சிகளோ கேள்வி கேட்டிருக்காது. அப்படியே கேட்டாலும், அதிமுக மீது பழி போட்டுவிட்டு கடந்திருக்கலாம்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், மாநிலத்துக்கு உரிய மருத்துவ மேற்படிப்பு இடங்களை மீட்க திமுக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த இடங்கள் மீட்கப்பட்டன.

இதையும், யாரும் கண்டுகொள்ளவில்லை.

சரி, அது கிடக்கட்டும்.

ராஜிவ் கொலையில் கைதாகி மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து வாய்கிழிய கத்தியவர்களுக்கு வருவோம். அந்த 7 பேருக்கும் மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க காரணமானவர் கலைஞர் என்பதை யாருமே பேச மாட்டார்கள்.

சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றால் அவர்களுக்கு விடுதலை கொடுக்க முடியும் என்று கலைஞர்தான் முதலில் சொன்னார். அதையும் யாரும் பேசமாட்டார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பரோலில் வெளிவந்த பேரறிவாளன் சிறைக்கே போகவில்லை. இந்நிலையில்தான், பேரறிவாளன் தனக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுமீதான விசாரணையில் தமிழக அரசு வழக்கறிஞர் பேரறிவாளனுக்கு சாதகமாக, ஒன்றிய அரசுக்கு எதிராக வாதாடி யதால் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்ததிலும் திமுக அரசுக்கு பங்கில்லாதது மாதிரி பேசுவார்கள்.

சரி, அதுகிடக்கட்டும்.

இந்த மூன்று நல்ல விஷயங்களும் அதிமுக ஆட்சியில் ஏன் நடக்கவில்லை? மத்திய அரசை எதிர்த்து ஏன் வாதாடவில்லை? என்றெல்லாம் நாம் கேட்கக்கூடாது. அடிமைகள் எப்படி எதிர்த்து வாதாடமுடியும்?

இந்த லட்சணத்தில்தான் எடப்பாடி பழனிச்சாமியை ஆளுமைமிக்க முதல்வர் என்றெல்லாம் தலையில் தூக்கிக் கொண்டாடினார்கள்.

திமுக அரசு எப்போதுமே, சமூகநீதியைக் காக்கும் அரசாகவே இருந்திருக்கிறது. இப்போ தும் இருக்கிறது. திராவிட மாடலுக்கு முன் மாதிரியான அரசாக எப்போதும் இருக்கிறது.

மருத்துவ இடங்களைத் திரும்பப் பெற்ற திலோ, எல்லா மாநிலங்களுக்கும் 27 சதவீத மருத்துவ இடங்களை பெற்றுக் கொடுத்ததிலோ, மருத்துவ உயர்கல்வி இடங்களில் 50 சதவீத இடங்களை திரும்பப் பெற்றதிலோ நமக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் திமுக அரசு காட்டும் இலகுத் தன்மைதான் வியப்பளிக்கிறது.

அவர்களுக்கு ஆதரவாக யார் என்ன சொன்னாலும், அவர்கள் ராஜிவ் கொலையில் தொடர்புடையவர்கள்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. பேரறிவாளன் சின்னப்பையன். அவனுக்கு அப்போது சதிகுறித்து ஒன்றும் தெரியாது என்று பேசுவதெல்லாம் நம்பும்படியாக இல்லை.

ஒரு தாயின் நிலையிலிருந்து பேரறிவாளனுக்காக அனுதாபப்படுவதிலும் நியாயமே இல்லை.

ராஜிவ் கொலை என்பது இந்தியாவின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்காக நடந்த கொலை மட்டுமல்ல.

வாராது வந்த மாமணியாய் ஆட்சியை கைப்பற்றி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்குச் சொத்துரிமை என்று சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியது கலைஞர் அரசு. இதேநிலை நீடித்தால், திமுக அரசாங்கத்தை வீழ்த்துவது முடியாது என்று பார்ப்பன கூட்டம் சதித்திட்டம் தீட்டியது. பிரபாகரன் கூட்டம் அவர்களுக்கு தீனி போட்டது. சட்டம் ஒழுங்கு, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு என்ற பிரச்சனைகளை தொடர்ந்து ஊதினார்கள்.

காங்கிரஸ் உதவியுடன் சந்திரசேகர் என்ற பதவிவெறி பிடித்த மனிதரைப் பயன்படுத்தி ஆளுநர் பரிந்துரை இல்லாமலேயே வெங்கட்ராமன் என்ற பார்ப்பன ஜனாதிபதியை வைத்து திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார்கள்.

ஆனால், 1991 தேர்தலில் மீண்டும் திமுக வெற்றிபெறும் என்ற நிலை உருவாவதைத் தடுக்கவே ராஜிவ் கொலைச் சதித் திட்டம் தீட்டப்பட்டது.

அதாவது, ஒரே நேரத்தில் இந்திரா குடும்பத்தை அரசியலில் இருந்து அகற்றிவிட்டு, இந்திய அரசியலை நிலையற்றதாக்குவது, மறுபக்கம், தமிழகத்தில் திமுகவை தோற்கடித்து, கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, கலைஞரை அகற்றுவது என்று திட்டமிட்டார்கள்.

ஆனால், திமுகவின் வாக்குவங்கியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உடனே, திமுகவில் வாரிசுக்கு முடிசூட்ட கலைஞர் முயற்சி என்று வைகோ மூலமாக பிரச்சாரத்தை கட்டமைத்தார்கள்.

புலிகளுடனான உறவை வைத்து வைகோவுக்கு போராளி பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அவரை வீராதிவீரராக சித்தரித்தார்கள். திமுகவை பிளப்பதன்மூலம், எம்ஜியாருக்கு பிறகு அதிகாரமில்லாமல் திமுக இருந்ததைப் போல மீண்டும் ஒரு நிலையை உருவாக்க திட்டமிட்டார்கள்.

1993ல் அதையும் சாதித்தார்கள். இந்த பிளவுக்கு எல்லா வகையிலும் ஜெயலலிதா உதவியாக இருந்தார். ஆனால், திமுக மீண்டும் 1996ல் ஆட்சியைக் கைப்பற்றியது.

ஆக, எல்லா வகையிலும் திமுகவுக்கும் இந்தியாவுக்கும் கேடு விளைவித்த ராஜிவ் படுகொலையில் தொடர்புடைய பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முனைப்புக் காட்டுவது கலைஞருடைய பெருந்தன்மையின் தொடர்ச்சியாகவே கருதுகிறேன்.

இதில் வேதனை என்னவென்றால், திமுகவின் நடவடிக்கைகளை பாராட்ட எதிர்க்கட்சிகளுக்கு மனசே இருக்காது. எதிர்க்கட்சிகள் இப்படித்தான் இருக்கும். கூட்டணிக் கட்சிகள்? ஆம் அவர்களுக்கும் பசிக்கும் இல்லையா? நாளையே கூட்டணி மாறினால், எதிர்ப்பிரச்சாரத்துக்கு கூச்சமாக இருக்கும் இல்லையா? •

-ஆதனூர் சோழன்

Leave A Reply