பாக்ஸ்கான் விவகாரத்தில் வதந்தியாளர்களை தூக்கில் கூட போடலாம்! – ARULRAJ

Share

எதற்காக இவ்வளவு ஆவேசம் என்று கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள் அதற்கு உண்டான அர்த்தம் புரியும்.

பாக்ஸ்கான் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் தில் உள்ள இந்த நிறுவனத்தில் சுமார் 15,000 பேர் பணிபுரிகிறார்கள்.

இந்தத் தொழிலாளர்கள் தங்குவதற்கு மற்றும் உண்பதற்காக விடுதிகள் ஒப்பந்தக்காரர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.

இதில் நிறுவனத்திற்கே நேரடி தொடர்பு இல்லை என்கிறபோது அரசாங்கத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சனை என்கிற வரும்போது ஒப்பந்ததாரர்கள் மீது நிறுவனம் நடவடிக்கை எடுக்கும். நிறுவனம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசின் தொழிலாளர் நலத்துறை உள்ளே போகும்.

இந்த நிலையில்தான் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் தரமற்ற உணவு அருந்திய 9 பேர் இறந்து விட்டதாக வதந்தியை கிளப்பி விட்டார்கள்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உட்பட 4 இடங்களில் ஊழியர்களின் போராட்டத்தால் அந்தந்த பகுதிகளில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக பல மணி நேரத்திற்கு ஸ்தம்பித்தது. ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

அடிப்படையில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.

தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தரமற்ற உணவைப் போட்டு அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்க வேண்டும் என்று எந்த நிறுவனமும் விரும்பாது.

ஏனெனில் உடல் ஆரோக்கியத்துடன் ஊழியர்கள் இருந்தால்தான் அவர்களால் தொடர்ந்து பணி செய்ய முடியும். நிறுவனமும் தன்னுடைய உற்பத்தியை தடையில்லாமல் மேற்கொள்ள முடியும்.

ஒப்பந்தகாரர் விவகாரத்திற்கு வருவோம். எந்த ஒப்பந்தகாரர் தன்னிடம் சாப்பிடுபவர்களை பிரச்சினைக்கு உள்ளாகி விட்டு தான் கைதாகி உள்ளே செல்ல விரும்புவார்?

உணவு தயாரிப்பில் கோளாறு ஏற்படுவது என்பது தற்செயலாக நடக்கும் ஒன்று. இவ்வளவு நாளாகவும் அதையே ஒப்பந்தகாரர் வழங்கும் உணவை தானே இந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள்?

தினமும் இப்படியா தரமற்ற உணவு மூலம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கொண்டிருந்தார்கள்?

அலட்சியம் காரணமாக ஒரு குற்றம் நடக்கிறது. அப்படி நடந்தால் அது தொடர்பாக நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்துத்தான் விமர்சனங்களை வைக்க வேண்டும்.

ஆனால் பாக்ஸ்கான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஏதோ திட்டமிட்டு தரமற்ற உணவு வழங்கிய ஒன்பது பேரை கொன்று விட்டது போல சித்தரித்து வதந்தியை பரப்பி விட்டு விட்டார்கள்.

திடீரென்று நடந்த சம்பவத்தால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு எந்தெந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு எவ்வளவு பேர் குணமாகி விட்டார்கள் மேலும் எத்தனை பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளார்கள் என்பதை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெளிவாக விளக்கி உள்ளார்.

இறந்து விட்டதாக கூறப்படும் 9 பேரின் செல்போன் நம்பர்களை வழங்கி அவர்களை வீடியோ காலிலும் பேச வைத்துள்ளார்கள்.

இதற்குப் பின்பும் போராட்டத்தை கைவிடாமல் இருக்க ஊழியர்களை பார்த்துக் கொள்கிறது ஒரு தரப்பு.

இன்னொரு பக்கம் திமுக ஆட்சியில் தனியார் நிறுவன ஊழியர்கள் 9 பேர் பலி என வேகவேகமாக ஆட்சிக்கு எதிரான அவர்களால் தகவல் பரப்பப்படுகிறது.

இந்த வதந்திகளை பரப்பியவர்கள் ஒன்றும் சாமானியர்கள் அல்லர் படித்தவர்கள். விவரம் தெரிந்தவர்கள். சமூகவலைத்தளங்களில் ஏராளமான பின் பற்றாளர்களை கொண்டுள்ளவர்கள்.

இப்போது இதுபோன்ற வதந்திகளால் என்ன தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பதை காண்போம்.

ஒவ்வொரு மாநில அரசும் கடுமையாகப் போராடியே தொழிற்சாலைகளை தங்களது மாநிலங்களுக்கும் கொண்டு வருகின்றன.

இதற்காக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி பின்பு அவர்களிடம் ஏராளமான சலுகைகள் என்று பேச்சுவார்த்தை நடத்தி முதலீட்டை ஈர்த்து தொழிற்சாலையை நிறுவ செய்து பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வாரி கொடுக்கின்றன.

நீண்ட நெடுங்கால போராட்டத்திற்கு முயற்சிக்குப் பிறகு கிடைக்கப்படும் இப்படிப்பட்ட ஒரு அற்புதமான வாய்ப்பை பல்லாயிரம் பேர் பணிபுரிகின்ற வாய்ப்பை சில கயவர்களின் வதந்தியால் தள்ளாட்டம் காணும்போது என்ற அச்ச நிலை வந்துவிடுகிறது.

வதந்திகளைக் கிளப்பி பெரிய நிறுவனங்களுக்கு எதிராக கிளப்பி செயல்படும் சைக்கோக்களால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகள் ஏற்படும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்று பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட நிலைமையை பார்த்து மற்ற நிறுவனங்களும் ஏன்டா இங்கு வந்து தொழிலை ஆரம்பித்தோம் என்று யோசிக்கும்.

அரசின் செயல்பாடுகளை இந்த விவகாரத்தில் பார்ப்போம். ஊழியர்களுக்குப் பிரச்சனை போராட்டம் என்றதும் இரு மாவட்டங்களில் ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கள் சம்பவ இடத்திற்கு ஓடி வருகிறார்கள்.

தங்களிடம் உள்ள விவரங்களை வைத்து உண்மையை விளக்குகிறார்கள் இது போதாது என்று மக்கள் பிரதிநிதியான எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சரும் ஓடோடி வருகிறார்கள் ஊழியர்களிடம் நிலைமையை பற்றி கூறுகின்றனர்.

ஆனாலும் வதந்தி அவர்கள் தொடர்ந்து தங்களது முயற்சியால் ஊதி ஊதிப் பெருக்க பிரச்சனைக்கு உடனடியாக சுமுகத் தீர்வு கிடைக்காமல் போய்க்கொண்டே இருக்கிறது.

ஒரு நாள் முழுவதும் தொண்டைத் தண்ணீர் வற்ற வற்ற அரசு தரப்பினர் விளக்குகின்றனர் தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் கூறுகின்றனர்.

ஏராளமான ஊழியர்களுக்கு ஒருவாரம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டது ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. தரமற்ற உணவு வழங்கியதாக குற்றச்சாட்டின் பேரில் இரண்டு ஒப்பந்தக்காரர்கள் கைது கைது செய்யப்படுகின்றனர்.

ஒருவர்கூட இறக்காத போது 9 பேர் இறந்ததாகவும் வதந்தியை கிளப்பி விட்ட சாட்டை முருகன் வழக்கறிஞர் வளர்மதி என கைது நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

யோசித்துப் பாருங்கள்.. ஒரு வதந்தியால் எவ்வளவு இழப்புகள் என்று.

பல்லாயிரம் ஊழியர்கள் இரண்டு நாட்களாக சாலை மறியல்- போராட்டம்.

இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு. பல்லாயிரம் பயணிகளுக்கு எந்தெந்த வகையில் இழப்பு என்பதை அவர்களிடம் கேட்டால் தான் கண்ணீர் கதைகள் வெளியே வரும்.

பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி பாதிப்பு. இதனால் மற்ற தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் அச்சம்.

இன்னொன்று மாநில அரசுக்கு தொழில் நிறுவனங்கள் மத்தியில் அவப்பெயரைத் தேடித் தரும் முயற்சி.

இது ஏதோ இரு மனிதர்களுக்கு இடையிலான பிரச்சினையில் நடந்த தனிமனித குற்றமல்ல.

சிலர் திட்டமிட்டு கிளப்பி விடப்பட்ட வதந்தியால் விளைந்த குற்றம் சாதாரணமானது அல்ல. பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பை ஏற்படுத்திய குற்றம். நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு மன உளைச்சல்.

இப்போது சொல்லுங்கள் வதந்தியைக் கிளப்பிய அவர்கள் தேச துரோகிகள் தானே. அவர்களுக்கு தூக்கு தண்டனை கூட சாதாரணமானது தானே.

Leave A Reply