இந்தியா ஒரு ஒன்றியம் என்பதை வலியுறுத்தி டுவிட்டரில் #INDIAisUNION என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி இருக்கிறது.

திமுக ஆட்சி ஏற்றது முதல் மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று சொல்லி வருகிறது. இதுகுறித்த சர்ச்சை நீடித்து வருகிறது. அப்படி சொல்லக்கூடாது என்று பலர் வலியுறுத்தியும் அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று திமுக தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கிறது.

சட்டசபையில் அமைந்த ஆளுநர் உரையிலும் ஒன்றிய அரசு அமைந்ததால், ’’ஸ்டாலின் மற்றும் அவரது சகாக்கள், தேசத்தை ’இந்தியப் பேரரசு’ என அடையாளப்படுத்தாமல் ’ஒன்றிய அரசு’ என்று இழிவுபடுத்துவதால் இத்தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் பெரும் ஆதங்கத்திற்கு ஆட்பட்டு உள்ள இந்நிலையில் ஒன்றிய அரசு என்ற சொற்றொடர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. சட்டமன்ற பதிவேடுகளிலும் இனி இடம் பெற்று விடும். இந்த ஆட்சேபனைக்குரிய தமிழ் வார்த்தை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு வரவில்லையா? அல்லது தற்காலிகமாகக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என்று தெரியவில்லை’’என்று கவலை தெரிவித்திருந்தார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
பாஜகவினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு ஒன்றிய அரசு என்றால், மாநில அரசு ஊராட்சி ஒன்றியமா? ஸ்டாலின் ஊராட்சி ஒன்றிய தலைவரா? என்று விமர்சித்து வருகின்றனர்.
‘ஒன்றிய அரசு’தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோது, ‘’இந்தியாவில் இருந்து பிரிந்ததுதான் மாநிலங்கள்’’என்றார் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன். இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘’இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிரியவில்லை; எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் இந்தியா’’என்றார்.

சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது உரையில், ஒன்றிய அரசு என்று கூறினார். ’’அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா Union Of States என்றே வரையறுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களால் ஆனதுதான் இந்தியா. ஒன்றியம் என்ற சொல்லில்தான் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதனால்தான் பயன்படுத்துகிறோம். பயன்படுத்துவோம் – பயன்படுத்திக் கொண்டே இருப்போம்’’என்றார் உறுதியாக.
ஒன்றிய அரசு என்ற சொல்லுக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், தி இந்து பத்திரிகை, we will continue to use the term ‘union gov.’, says stalin என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து மேலும் தி இந்து குழும தலைவர் ‘இந்து’என்.ராம், முதல்வர் சட்டப்பேரவையில் பேசும்போது ஒன்றிய அரசு என்று கூறியது முற்றிலும் சரியானது’’என்று தெரிவித்துள்ளார். பாஜக இதனை வெளிப்படையாக, முதன்மையாக எடுத்துக்கொள்ள வேண்டும். குடியரசாகவும் கூட்டாசி அரசியலைப்பு சட்டத்திற்குள்ளும் இருக்கும் இந்தியா, ஒன்றிய அரசுதான் என்பதில் எந்த விதமான சர்ச்சைக்கும் இடமில்லை. பாரத் என்று சொல்லப்படும் இந்தியா ஒன்றிய அரசாகத்தான் இருக்கும்.’’என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று இந்தியா ஒரு ஒன்றியம் என்பதை வலியுறுத்தி என்று டுவிட்டரில் #INDIAisUNION என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி இருக்கிறது.