தோழர் ஆர்யா தனி நபர் அல்ல. அதுவே பெரும் நம்பிக்கை! – மாதவராஜ்

Share

“இன்னும் டிகிரி கூட படித்து முடிக்கவில்லை. அதற்குள் திருவனந்தபுர மேயரா? “ என்று ஆச்சரியப்படுவதை, பெருமைப்படுவதை, நம்பிக்கை கொள்வதையும் பார்க்க முடிகிறது. அதுபோல “இந்த சின்ன வயதுக்கு பொருந்தாத பெரிய பணி” என அவநம்பிக்கை கொள்வதை, கம்யூனிஸ்ட்களின் மீதான வெறுப்பில், “இது ஒரு அரசியல் ஸ்டண்ட்” என பொருமுவதையும் பார்க்க முடிகிறது.

கம்யூனிஸ்டுகளை நெருக்கமாய் பார்த்து அறிந்தவர்களுக்கும், கம்யூனிஸ்டு கட்சி கடைப்பிடிக்கும் நெறிமுறைகளை தெரிந்தவர்களுக்கும் சந்தேகமோ, அவநம்பிக்கையோ வரவே வராது. கொண்டாடவேச் செய்வார்கள்.

தந்தை எலக்டிரிசியன், தாய் எல்.ஐ.சி ஏஜண்ட், மாதம் 6000 வாடகை செலுத்தும் வீடு, கூடப் பிறந்த இரண்டு அண்ணன்கள் என்னும் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் வந்தவருக்கு உலகம் குறித்த புரிதலும், எளிய மனிதர்களின் பிரச்சினைகள் குறித்த பார்வையும் மிகத் தெளிவாகவும், அழுத்தமாகவும் இருக்கவேச் செய்யும்.

அப்படிப்பட்ட தோழர் ஆர்யா பி.எஸ்.ஸி கணிதம் இரண்டாமாண்டு படித்துக்கொண்டு இருக்கிறார் என்பதோடு, ஐந்தாம் வகுப்பிலிருந்து கம்யூனிஸ்ட் குடும்பத்திலும் முகாமிலும் இருந்து நம் சமூகத்தையும், வாழ்க்கையையும் கற்று வளர்ந்திருக்கிறார் என்பதையும் சேர்த்துப் வாசித்தால் அவரைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

பாலர் சங்கம், அதன் மாவட்டப் பொறுப்பு, பின் மாநிலப் பொறுப்பு, மாணவர் சங்கம், அதன் மாவட்டப் பொறுப்பு, அதன் மாநிலக் கமிட்டியில் பங்களிப்பு என பயணித்த ஆர்யா, “கேரளாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன்” என்கிறார். அவரது முகநூல் சென்று பார்த்தால், நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்த பிரக்ஞையும், பார்வையும், போராட்டங்களில் பங்கேற்பும் என நிறைந்து கிடைக்கின்றன. போராட்டங்களில் இருந்து பெறும் அறிவும், அனுபவமுமே மக்களுக்கான ஆளுமைகளை உருவாக்கும் வல்லமை கொண்டவை.

”Positive energy -ஐ நம்மிடம் இருக்கும் கடவுளாக நான் பார்க்கிறேன். அதே வேளையில் மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறேன்” என சொல்லும் வார்த்தைகளில் இருக்கும் புரிதல், தோழர் ஆர்யாவுக்கு இருக்கும் பக்குவத்தை தெரிவிக்கின்றன.

கவுன்சலராக போட்டியிடும்போது, தோழர் ஆர்யா இப்படி மேயராவதற்கு வாய்ப்பு இருக்கும் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். அதுபோல அவர்தான் ‘மேயருக்கான வேட்பாளர்’ என கட்சியிலிருந்தும் முன்கூட்டியே அறிவிக்கப்படவுவில்லை. இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பே.

இன்று தோழர் ஆர்யா வசிக்கும் பகுதியில் இருக்கும் கட்சிக் கமிட்டி, மாவட்டக் கமிட்டிகளே அவரை மாநிலக் கமிட்டிக்கு பரிந்துரை செய்திருக்கின்றன. அவரை நெருக்கத்தில் இருந்து அறிந்தவர்களே, அவரைத் தகுதியானவர் என முன்மொழிந்திருக்கின்றனர். திடுமென ஒருநாளில் யாரோ ஒருவர் ஒருபோதும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பொறுப்புக்கு வந்துவிட முடியாது.

திருவனந்தபுரம் மாவட்ட கட்சித் தலைவர்களில் ஒருவரும், கேரள மந்திரியுமான தோழர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் சொல்கிறார்: “அவரது வயது ஒரு பொருட்டே அல்ல. சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்ற மாவட்ட கலெக்டர்களாக இன்றைய இளஞர்கள் பலர் மகத்தான காரியங்கள் ஆற்றுவதைப் பார்க்க முடிகிறது.

சிவில் சர்வீஸில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே அத்தகைய ஆற்றல் இருக்கும்போது, கம்யூனிஸ்ட் முகாமில் இருந்து புடம் போட்டு வந்தவருக்கு எவ்வளவு இருக்கும்.

தோழர் ஆர்யா ஒரு தனி நபர் அல்ல. அதுவே பெரும் நம்பிக்கை.

-தோழர் மாதவராஜ் ,முகநூல் பதிவு

Leave A Reply