புதுச்சேரி மீது கவனம் செலுத்துவாரா மு.க.ஸ்டாலின்? – ஆரோக்கியராஜ் செல்வராஜ்

Share

தமிழ்நாட்டை ஒருவழியாக தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இனி எல்லாம் சுபமாகவே நடக்கும் என்ற நம்பிக் கையை ஏற்படுத்தி இருக்கிறது அவருடைய இந்த 9 மாத ஆட்சி.

மு.க.ஸ்டாலினை தங்களுடைய நெருங்கிய உறவாகவே மக்கள் கருதத்தொடங்கி விட்டார்கள் என்பது அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த மக்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளே தெரிவிக்கின்றன.

அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியா வுக்கே விடியலைத் தரப்போகிற தலைவர் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இப்படிப்பட்ட தலைவருக்கு புதுச்சேரி மக்கள் சார்பில் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.

ஆம், புதுச்சேரியையும் புனரமைக்க உங்களால் தான் முடியும் என்ற நம்பிக்கையுடனு இந்த வேண்டு கோளை முன்வைக்கிறேன்.

புதுவை மாநிலத்தின் இன்றைய அவலநிலைக்கு யார் காரணம் என்பது உங்களுக்கே தெரியும். திமுகவும், அதிமுகவும் பலமாக இருந்த இந்த மாநிலம், புதிய கட்சிகளாலும், காங்கிரஸின் கோஷ்டிகளாலும் நாசமாகிக் கிடக்கிறது. இன்றைய நிலையில் புதுவையை சீரமைக்கிற அளவுக்கு கட்டுமானத்தை உருவாக்கும் ஆற்றல் உங்களுடைய தலைமைக்கு இருப்பதாக கருதுகிறேன்.

காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசல் ரங்கசாமி தலைமையில் ஒரு கட்சியை உருவாக்க வழி அமைத் தது. பாஜக நடத்திய நாடகத்தை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் இல்லாமல் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ்.

இன்றைய நிலையில் பாஜகவின் பொறுப்பில் உள்ள புதுவையில் அந்த மாநிலத்தின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்த கட்சியுடன் சண்டை போடக்கூடிய ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உண்டு.

பாஜகவின் சதியை முறியடித்து, புதுவை மக்களை அவர்களின் தனித்தன்மையை பாதுகாக்க ஓரணியில் திரட்ட திமுகவால் மட்டுமே முடியும். ஏனென்றால், திமுக மட்டுமே அங்கு பாஜகவின் சித்தாந்த எதிரிகளில் பலம் மிக்கதாக இருக்கிறது.

தமிழ்நாட்டைப் போலவே, புதுவையிலும், திராவிட சித்தாந்தத்தில் உறுதிமிக்க இளம் போராளிகளை தேர்ந்தெடுத்து அனைத்து தொகுதிகளிலும் திமுகவை பலப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டின் நகரங்களுக்கு அடிக்கடி போகும் முதல்வர் புதவைக்கு ஏன் ஒருமுறைகூட வர மறுக்கிறார் என்பது புரியவில்லை.

ஸ்டாலின் மட்டுமல்ல, தமிழ்நாட்டு தலைவர்கள் யாருமே புதுவைக்கு வந்ததில்லை. அதை ஒரு புறக்கணிக்கப்பட்ட ஊராகவே பார்க்கிறார்களோ என்பது புரியவில்லை. இன்றைய நிலையில் புதுவையா காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு உண்டு.

புதுவையில் அரசு நிர்வாகம் மந்தமாகியிருக்கிறது. குட்டியூண்டு மாநிலத்தின் பொருளாதார நிலை படுமோசமாக இருக்கிறது. மாநிலத்தில் சித்தாந்த ரீதியாக செயல்படக்கூடிய கட்சி திமுக மட்டும்தான். ஆனால், காங்கிரஸ் சங்கடப்படுமோ என்று திமுக தயங்குவதாக தெரிகிறது. அந்தக் கட்சியை பற்றி கவலைப்படாமல், மாநிலத்தின் நலனை திமுக முன்னெடுக்க வேண்டும்.

வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்களை தப்பான வழிக்கு திருப்புகிறது. சாலையோரத்திலே வேலையற்றதுகள் வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதையெல்லாம் சீரமைக்க வேண்டியது அவசரத் தேவை. மாநிலத்தின் உயர்கல்வி வளர்ச்சி மிகவும் பின்தங்கிவிட்டது. வெறும் 43 சதவீதமாக மட்டும் கல்வி வளர்ச்சி இருக்கிறது.

திமுக மட்டுமே எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் அரணாக நான் நினைக்கிறேன். முதல்வர் ரெங்கசாமி நல்லதொரு நிர்வாகியாக இருந்தாலும், ஏனோ பாஜகவுக்கு துணை போய் விட்டார். அவரை அனுசரித்து போகும் மனநிலை நாராயணசாமிக்கு இல்லையா? காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களுக்கு இல்லையா என்பது தெரியவில்லை.

எனவே, காங்கிரஸைப் பற்றி கவலைப் படாமல் திமுகவை பலப்படுத்த ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும். அவர்கூட புதவைக்கு வரத் தேவையில்லை. உதயநிதியை புதுவைக்கு அடிக்கடி விசிட் அடிக்கும்படி சொல்லலாம்.

தமிழ்நாட்டில் திமுக அரசு மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறார் ஸ்டாலின்.

இந்நிலையில் புதுவை மீது திமுக தனிக்கவனம் செலுத்தினால் மக்கள் ஆதரவு நிச்சயமாக கிடைக்கும். குறிப்பாக இளைய தலைமுறையினரின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கும்.

முதலமைச்சர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், புதுவை மக்கள் ஏற்கக்கூடிய ஒரு இளம் தலைமையை முன்னிறுத்தி வளர்த்துவிட வேண்டும். அவர் இனி பிறக்கப் போவதில்லை. செந்தில்பாலாஜி மாதிரி அடுத்த கட்சியிலோ, அல்லது, ஏற்கெனவே திமுகவிலோ செயல்பட்டுக் கொண்டிருப்பார். அவரைக் கண்டுபிடிப்பது பெரிய வேலையே இல்லை. •

Leave A Reply