4 சதவீத கமிஷன் கேட்டு நலத்திட்டங்களை முடக்கும் ஊராட்சித் துணைத்தலைவர்கள்!

Share

ஊராட்சிகளே ஜனநாயகத்தின் வேர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்களை பணிசெய்ய முடியாமல் ஊராட்சி துணைத்தலைவர்கள் முட்டுக்கட்டை போடுவதாக தமிழ்நாடு முழுவதும் புலம்பல்கள் கிளம்பியுள்ளன.

திட்டப்பணிகளில் கமிஷன் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. 10 சதவீதம் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இந்த 10 சதவீதத்தில் 4 சதவீத பங்கு வேண்டும் என்று ஊராட்சித் துணைத் தலைவர்கள் முரண்டு பிடிப்பதால் பல வேலைகளை நிறைவேற்ற முடியாமல் ஊராட்சித் தலைவர்கள் திணறுவதாக கூறுகிறார்கள்.

இதற்கு காரணம் ஊராட்சித் துணைத்தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் செக் பவர் என்கிறார்கள். இந்த பவரை வைத்துக்கொண்டு எந்த வேலையிலும் இவர்கள் மிரட்டிக் கமிஷன் கேட்பதாகவும், கொடுக்கவில்லை என்றால், செக்கில் கையெழுத்து போட மறுத்து முட்டுக்கட்டை போடுவதாகவும் புலம்புகிறார்கள்.

இந்த செக் பவரை ரத்து செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்தாலும், ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் இதோ அதோ என்று தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது என்கிறார்கள்.

இந்த 10 சதவீத கமிஷனில் ஊராட்சி எழுத்தருக்கு 1 முதல் 2 சதவீதம் வரை போகிறது என்கிறார்கள். இதுதவிர, ஊராட்சித் துணைத் தலைவருக்கு 4 சதவீதம் பிடிஓவுக்கு தனியாக ஒரு அமவ்ண்ட், முரண்டு பிடிக்கும் வார்டு உறுப்பினர்களுக்கு கணிசமான தொகை என்று பங்கு பிரிக்க வேண்டியுள்ளது என்கிறார்கள்.

இப்படி இருந்தால், திட்டப்பணிகள் எப்படி தாமதமில்லாமல் நடக்கும்? ஊராட்சித் தலைவர் எப்படி நிம்மதியாக பணிசெய்ய முடியும்? நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஊராட்சித் தலைவர்களும் ஊழல் செய்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

இந்த ஆட்சியிலாவது இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புவதாக ஊராட்சித் தலைவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Leave A Reply