ஆரியனின் சாதி வெறியும் அமெரிக்காவின் யுத்த வெறியும்! – ஆதனூர் சோழன்

Share

அமெரிக்கா எதை எதிர்க்கிறதோ அதை நாம் ஆதரிக்க வேண்டும் என்பது கம்யூனிஸ சித்தாந்தம். ஆரிய பார்ப்பான் எதை எதிர்க்கி றானோ அதை நாம் ஆதரிக்க வேண்டும் என்பது தந்தை பெரியாரின் சித்தாந்தம்.

இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
உலக மக்கள் அனைவரும் சமம். ஏழை, பணக் காரர் வேறுபாடு பார்ப்பது தவறு. ‘உழைப்பவன் உழைக்க.. உட்கார்ந்து உண்பவன் கொழுக்க..’ என்பது அநியாயம் என்கிறது கம்யூனிஸம். ஆனால், முதலாளிகளின் புண்ணியத்தில்தான் உழைக்கும் வர்க்கம் உண்ணமுடியும் என்கிறது முதலாளித்துவம்.

முதலாளிகளின் பிரதிநிதியாக உருவெடுத்துள் ளது அமெரிக்கா. அந்த நாட்டின் ராணுவ பலத்தின் துணையோடு உலக நாடுகளை முதலாளித்துவம் அச்சுறுத்துகிறது. முதலாளித்துவத்தை எதிர்க்கிற எதையும், எந்த நாட்டையும் சிதைத்து சின்னா பின்னப்படுத்த முடியும் என்று அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நினைக்கிறார்கள்.

மக்களுக்குள் சாதிபேதம் இல்லை. மதபேதம் இல்லை. எல்லோரும் மனிதர்கள்தான். மனிதர்களை சாதிகளாய் பிரித்தாள்வது அநீதி. மதங்களின் பேரில், கடவுள்களின் பேரில் மனிதர்களுக்குள் பிரிவினை செய்வது மடமை. கடவுளுக்கே ஒரு மொழிதான் புரியும் என்று சொல்வது மிகப்பெரிய புரட்டு. மனிதர்கள் அனைவரும் சமம். எல்லோருக்கும் கல்வி கற்கவும், வேலை செய்யவும் சமஉரிமை உண்டு. கடவுள் சிலைகளை எல்லோரும் தொடவும், விரும்பிய மொழியில் வழிபடவும் உரிமை உண்டு. அதை அனுமதிக்காத எதையும் எதிர்த்து போராடு என்றார் தந்தை பெரியார்.

வரலாறுப்படி இந்தியாவுக்கே சம்பந்தமில்லாத ஆரியர்கள், இந்தியாவின் பூர்வகுடிகளை சாதி களாய் பிரித்து, ஆண்டான் அடிமைகளாய் பல பிரிவுகளை உருவாக்கினார்கள் தனது அடிமை களாய் புராணக் கற்பிதங்களை புகுத்திய ஆரியர் களும் முதலாளிகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
உலக அளவில் சிறுபான்மை முதலாளிகளும், இந்திய அளவில் சிறுபான்மை பார்ப்பனர்களும் தாங்கள் நினைத்ததை நிறைவேற்ற காலங்காலமாக பல்வேறு தந்திரங்களை புகுத்தி தங்களை தற்காத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆனாலும் அந்தத் தந்திரங்களை எதிர்த்து உலகை காப்பதில் உலக அளவில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அவ்வப்போது குரல் எழுப்பி முதலாளித்துவ சதிகளை உடைக்கின்றன.

இந்திய அளவிலோ, தமிழ்நாட்டிலிருந்து எதிர்க் குரல் எழுப்பி பார்ப்பன சதிகளை அம்பலப்படுத்தி, எதிர்க்குரல் எழுப்பி பெரியாரிய சித்தாந்தவாதிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர். சமயத்தில் முட்டுச் சந்திலும் விட்டு வெளுக்கிறார்கள்.

ஆகமொத்தத்தில் முதலாளித்துவ விஷத்தையும், ஆரிய பார்ப்பனீய விஷத்தையும் முற்றாக இன்னும் ஒழித்த பாடில்லை.

இதற்கு காரணம், முதலாளித்துவம் தனக்கு கீழே ஏழைகளையும், நடுத்தர மக்களையும் உருவாக்கி வைத்திருக்கிறது.

ஆரியமோ, தனக்கு கீழே மூன்று வர்ணங் களையும் வர்ணத்துக்குள் அடங்காத பஞ்சமர்களையும் உருவாக்கி வைத்திருக்கிறது. அதாவது யாரொருவர் தனக்கு எதிராக குரல் எழுப்பினாலும், தனக்கு ஆதரவு குரல் கொடுக்க சில பிரிவுகளை உருவாக்கி வைத்திருப்பதுதான் அவற்றின் மிகப்பெரிய தந்திரம்.

தனது நாட்டில் உற்பத்தி செய்து குவிக்கப்படும் நவீன ஆயுதங்களை விற்பதற்காக செயற்கையான பதற்றத்தை அமெரிக்கா உருவாக்கும். உள்நாடு களில் அரசு எதிர்ப்பு குழுக்களையும், தீவிரவாத குழுக்களையும் உருவாக்கும். பக்கத்து நாடுகளுடன் மோதல் போக்கை ஊக்குவிக்கும். இதையடுத்து ஒவ்வொரு நாடும் தனது ராணுவத்துக்கு கூடுதல் ஆயுதங்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

பார்ப்பனர்களோ, தங்களுடைய வாழ்வாதாரத்தை செழிப்பாக்க, சாதிகளுக்குள் மோதல்களையும், ஆதிக்க சாதி பெருமைகளுக்கு தூபம் போடுவதையும் வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.

மதங்களுக்கு இடையே பூசல்களை உருவாக்குவார்கள். பார்ப்பனர்களின் இந்த சதிச்செயலை தந்தை பெரியார் மட்டுமே துல்லியமாக அடையாளம் கண்டு தமிழ்நாட்டில் அவர்களுடைய சதியை முறியடித்தார். இன்றுவரை இங்கு அவர்களுக்கு ஆதரவாக போகும் கூட்டம் குறைவாகவே இருக்கிறது.

ஆயுத உற்பத்தி முதலாளிகளின் நலன்களை பாதுகாக்க உலக நாடுகளில் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தி, ஆயுத விற்பனைக்கு வழிசெய்யும் அமெரிக்காவின் சதிகளை பார்த்தால் இந்த உண்மை புரியும்.

மனித உரிமைகளை மீட்கிறேன். ஜனநாயகத்தை காப்பாற்றுகிறேன் என்ற பேரில் நீண்ட நாட்கள், நிலையான அரசுகளை அமைத்திருந்த அரபு நாடுகள் பலவற்றை அமெரிக்க ராணுவத் தலையீடு நாசப்படுத்தியது. அதாவது, எந்த ஒரு நாட்டிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் விரும்பக்கூடிய தலைவர் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்துவிடக்கூடாது. குறிப்பாக, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத அரசு எதுவும் உருப்படியாக இருந்துவிடக் கூடாது.

2011 ஆம் ஆண்டில் மக்கள் எழுச்சி என்ற போர்வையில் அரசு எதிர்ப்பாளர்கள், கார்பரேட் நிறுவன ஊழியர்கள் என்று சில ஆயிரம் பேரை, ஒரே இடத்தில் தொடர்ந்து கூடச்செய்யும் போராட்ட முறை அறிமுகமாகியது. அப்படி போராடுகிறவர்களுக்கு அமெரிக்காவும் நேட்டோவும் துணை நிற்கும் என்று அறிவிப்பது வாடிக்கையாகியது.

இந்நிலையில்தான் 2018 ஆம் ஆண்டு சிரியாவை நாசம் செய்து முடித்தபிறகு, இனியும் உலகப் போலீஸ்காரனாக அமெரிக்கா இருக்க முடியாது என்று அன்றைய அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

சட்டி சுட்டதடா, கைவிட்டதடா என்ற பழமொழிக்கு ஏற்ப, அனுபவம் அமெரிக்காவுக்கு பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறதா அல்லது அமெரிக்காவின் பொருளாதார நிலைமை ட்ரம்ப்பை இந்த முடிவெடுக்கத் தூண்டியதா என்று அன்றைக்கு குழப்பமாக இருந்தது.

குழப்பமெல்லாம் ஒன்றுமில்லை. பெரிய நாடான ரஷ்யா சிரியா விஷயத்தில் தலையிட் டதால், மேலும் பொருளாதார இழப்பை சந்திக்க ட்ரம்ப் விரும்பவில்லை. அதுதான் அப்போதைய காரணம்.

சிரியாவுக்கு முன் அமெரிக்கா தலையீடு காரணமாக, 2011 ஆம் ஆண்டு வரை நல்லாயிருந்து நாசமாப்போன 8 நாடுகளை பார்த்துவிட்டால் அமெரிக்காவின் நாசகார புத்தி தெரியவரும்.

ஆப்பிரிக்க நாடான துனிஷியாவில் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில் அந்த நாட்டின் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. துனிஷியாவின் ஜனாதிபதியாக 1987 முதல் 2011 வரை நீடித்த பென் அலிக்கு எதிராகவே இந்தப் போராட்டம் தொடங்கியது. அவருக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. இதையடுத்து, பென்அலி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு, இன்றுவரை அந்த நாட்டில் நிலையான அரசு அமையவில்லை.

துனிஷியாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் கலகச் சதிக்கு இரையானது எகிப்து. அந்த நாட்டில் 1980 முதல் 2011 வரை ஆட்சியில் நீடித்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக, அரசு எதிர்ப்புக் குழுக்களை கொம்பு சீவிவிட்டது அமெரிக்கா. இதன்விளைவாக 2011 ஜனவரி 25 ஆம் தேதி தலைநகர் கெய்ரோவிலும் மக்கள் எழுச்சி என்ற பேரில் பல ஆயிரம் பேர் கூடினார்கள். விளைவாக முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், அவர் மீதும் அவருடைய மகன்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இப்போதும் எகிப்தில் ராணுவத்தின் பொறுப்பில் முபாரக் ஆதரவாளர் களே ஆட்சியில் இருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டு முபாரக் விடுதலை செய்யப்பட்டார்.

எகிப்தைத் தொடர்ந்து லிபியாவில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி ஜனாதிபதி முகமது கடாபிக்கு எதிரான தீவிரவாதக் குழுக்கள் கிளர்ச்சியை தொடங்கின. கார்பரேட் ஊழியர்கள் மற்றும் அரசு எதிர்ப்பு குழுக்களைச் சேர்ந்தவர்கள் நகரின் மத்தியில் கூடி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர். 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடாபி எதிர்ப்பாளர்களுக்கு நேட்டோ ராணுவம் உதவிக்கு வந்தது. 2011 அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி கடாபியை தீவிரவாதக் குழுக்கள் கொன்றன. இப்போது லிபியாவை பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் கூறுப்போட்டு அவரவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

கல்வி, வீடு, வேலை, மின்சாரம் என்று அனைத் தையும் இலவசமாகக் கொடுத்து, நாட்டின் வருமானத்தை மக்களுக்கு பிரித்துக் கொடுத்த கடாபியைக் கொன்று அந்த நாட்டையே நாசப்படுத்தியது அமெரிக்கா.

இந்த மூன்று நாடுகளைத் தொடர்ந்து ஏமன் நாட்டிலும் அந்த நாட்டின் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ் அரசுக்கு எதிராக கிளர்ச்சிகள் வெடித்தன. ஆனால், அரசு எதிர்ப்பாளர்களுக்கு போட்டியாக அரசு ஆதரவாளர்களும் தெருக்களில் இறங்கினார்கள். இதுவரை அங்கு ஜனநாயக அரசு அமையவில்லை. ஏமன் பொருளாதாரம் சீர்குலைந்து கிடக்கிறது.

வளைகுடா நாடான பஹ்ரைனில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஃபாத் கவ்ஸ்வே தலைமையில் மன்னராட்சி நடக்கிறது. இந்த தீவில் பெரும்பான்மையோர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா தங்களுக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பில் கிளர்ச்சியை தொடங்கினார்கள். ஆனால், சவூதி உள்ளிட்ட அரபு நாடுகள் பஹ்ரைன் மன்னருக்கு உதவியாக வந்தன. உடனே நடுநிலை வேடம் போட்ட அமெரிக்கா, அங்கு போராட்டங்களும் பாதுகாப்பு படையினருடன் மோதலும் தொடரும் நிலையில் அமெரிக்கா அதில் குளிர்காய்கிறது.

இந்நிலையில்தான் ஈரானுடன் கூட்டணியில் உள்ள சிரியா மீது அமெரிக்காவின் பார்வை விழுந்தது. சிரியாவில் பல்வேறு மதப்பிரிவினர் வாழ்கிறார்கள். அங்கு பஷர் அல் ஆஸாத் 2000மாவது ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருக்கிறார். அதற்கு முன் 1971 முதல் 2000மாவது ஆண்டுவரை அவருடைய தந்தை ஹஃபிஸ் அல் ஆஸாத் ஜனாதிபதியாக இருந்தார்.

சிரியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையுள்ள அல்வைட் என்ற மதப்பிரிவைச் சேர்ந்த ஆஸாத் குடும்பத்தினருக்கு எதிராக பல்வேறு மதக்குழுக்களில் எதிரிகள் இருந்தனர். அவர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்துவந்தன. 2011 மார்ச் மாதம் அரசு எதிர்ப்பு குழுக்கள் கிளர்ச்சியைத் தொடங்கின.

முக்கியமான நகர்ப்புறங்களில் பரவிய கிளர்ச்சியை சிரியா ராணுவம் அடக்க முயன்றது. இந்நிலையில் அமெரிக்காவின் ஆயுத உதவிகளைப்பெற்ற குழுக்கள் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டன. அமெரிக்காவின் நேரடி தலையீடைத் தொடர்ந்து சிரியாவின் ஆதரவாளரான ரஷ்யாவும் களத்தில் இறங்கியது. சிரியாவின் முக்கிய நகரங்கள் நாசமடைந்தன. சண்டை தொடர்ந்த நிலையில் அமெரிக்கா ராணுவத்தை திரும்பப் பெற முடிவெடுத்திருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். அது அமெரிக்காவில் பெரிய விவாதத்தை உருவாக்கியது.

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் மன்னர் நான்காம் முகமதுவை கவிழ்க்க அவருடைய எதிராளி களுக்கு அமெரிக்கா உதவியது. ஆனால், தனது அதிகாரங்கள் சிலவற்றை விட்டுக் கொடுக்கவும், புதிய நாடாளுமன்றத் தேர்தல் நடத்தவும் மன்னர் சம்மதித்தார். அத்துடன் வருவாய் குறைந்த குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஏராளமான நிதியை ஒதுக்கினார் மன்னர். அவ்வளவுதான், போராட்டங்கள் பிசுபிசுத்தன.
அரபு நாடுகளில் ஒன்றான ஜோர்டானிலும் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுக்கு எதிராக இஸ்லாமிய மற்றும் இடதுசாரி தீவிரவாதக் குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஊழல், வாழ்க்கை நிலை ஆகியவற்றை சீரமைக்கக் கோரி இந்தப் போராட்டம் என்றார்கள். போராட்டக்காரர்கள் மன்னரை மாற்றக் கோரவில்லை. சீர்திருத்தங்கள் மட்டுமே எதிர்பார்த்தார்கள். மன்னரும் சில சீர்திருத்தங்களை அமல்படுத்தினாலும், பொருளாதார நிலை இன்னும் சீராகவில்லை.

இப்படியாக உலகநாடுகளின் நிம்மதியைக் குலைப் பதே அமெரிக்காவின் வேலையாக இருக்கிறது. உலகில் சண்டைகள் ஓயக்கூடாது. யுத்தப் பதற்றம் குறையக்கூடாது என்பதே அமெரிக்காவின் ஒரே விருப்பம். ஆயுத வியாபாரம்தான் அமெரிக்காவின் மிகப்பெரிய வருவாய் என்பதால் உள்நாட்டுக் குழப்பங்களும், அண்டைநாடுகளுடன் சண்டையும் அவசியம் என்பதே அமெரிக்காவின் லட்சியம்.

ஆனால், அமெரிக்காவின் பொருளாதார நிலை சமீப ஆண்டுகளில் படுமோசமாக சரிந்துள்ளது. இதற்கு காரணம் உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா அமைத்துள்ள ராணுவ தளங்கள்தான் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 150க்கு மேற்பட்ட இடங்களில் அது தனது ராணுவம் மற்றும் கடற்படை தளங்களை அமைத்துள்ளது. சோவியத் ரஷ்யா இல்லாத நிலையில் உலக நாடுகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று அமெரிக்கா தனது வருவாயில் பெரும்பகுதியை செலவிடுகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான், உக்ரைன் யுத்தத்திற்கும் அமெரிக்கா காரணமாகி இருக்கிறது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், உக்ரைன் மக்களுடைய விருப்பத்துக்கு மாறாக செயல்படும் ஒரு அரசு அங்கே இருக்கிறது. ரஷ்யாவிலிருந்து பிரிந்த உக்ரைனை நேட்டோவில் சேரும்படியும், ஐரோப்பிய யூனியனில் இணையும்படியும் தூண்டி விட்டு, இப்போதைய யுத்தத்திற்கு காரணமாகி இருக்கிறது. ஆனால், சண்டை நடத்துவது ரஷ்யா என்பதால் இதில் அமெரிக்கா நேரடியாக தலையிடாமல் ஒதுங்கி இருக்கிறது.

பார்ப்பன ஆதிக்கத்திடம் சமூகநீதியும் அமெரிக்க ஆதிக்கத்திடம் உலகநீதியும் படாத பாடுபடுகின்றன. •

Leave A Reply