திமுகவைப் போல மற்ற கட்சிகள் ஏன் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை? – Muralidharan Pb

Share

தமிழ்நாட்டில் திமுக போன்று மற்ற கட்சியினர் ஏன் தொடர்ந்து, பயணிக்கவோ வெற்றிபெறவோ முடியவில்லை?

பெரியாரிடம் இருந்து திராவிடர் கழகம், முன்னேற்ற கழகமாக பிறந்ததன் நோக்கமே, பெரியார் பேசிய திராவிடம் எல்லாம் நடைமுறைப்படுத்திட வேண்டுமானால்,நமது நாட்டில் இயக்க அரசியல், தேர்தல் அரசியல் கட்சியாக மாறி அரியணையில் அமர்ந்தால் தான் நடக்கும் என்பதில் திண்ணமாக இருந்தார் பேரறிஞர் பெருந்தகை.

பெரியார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் வந்தால் சமரசம் செய்துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதால் இயக்கமாகவே பெரியார் நடத்தினார். திகவில் இருந்து வெளியேறியவர்கள் வந்து துவங்கியவர்கள் திமுகவின் கொள்கைகளை வகுத்தனர். அது பெரியார் பேசியது மற்றும் நீதிக் கட்சி முன்வைத்த கொள்கைகளே ஒழிய வேறில்லை, அண்ணாவின் தொலைநோக்கு திட்டமும் அதில் உள்ளடங்கி இருந்தது.

அது சமூக நீதிக்காக, சமத்துவத்துக்காக, அதிகார குவியலை தடுத்து மாநிலங்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்பது. ஆரம்பத்தில் தனி நாடு கேட்டு, பிறகு இந்தியாவுக்காக அதனை கைவிட்டனர் பேரறிஞர்.

இப்ப எதுக்கு இந்த பழைய கதை அதுவும் எல்லாருக்கும் தெரிந்த கதை?

காரணம் இருக்கு. திமுகவிற்கு பிறகு அதிமுக தவிர்த்துவிட்டு துவங்கப்பட்ட கட்சிகள் எதுவானாலும் அதில் தொலைதூரப் பார்வை இருக்கவில்லை. ஒன்று சாதி அடிப்படையில் அல்லது இன்னொரு கட்சிக்கு நாங்கள் மாற்று என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளே மிக மிக அதிகம்.

அதிமுக, திமுகவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சியானாலும் திராவிட கொள்கைகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் அதன் நிறுவனர் எம்ஜி ராமச்சந்திரனுக்கு இருந்தது. மேலும், எம்ஜிஆர் நேற்று முடிவெடுத்து இன்று கட்சி ஆரம்பிக்கவில்லை. ஒரு சிலர் தூண்டுதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியானாலும் அவர் 20 ஆண்டுகால அரசியல்வாதி. சினிமா புகழ்ச்சியை சரியாக உபயோகித்த அவர் கட்சிக் கட்டமைப்பை திமுகவில் கற்றுக் கொண்டவர். அதனால் இன்றுவரை அவரும் அவருக்கு பின்னர் இருந்த ஜெயலலிதாவும் கட்டமைத்த கட்சி நிலைத்து நிற்கிறது. அது எவ்வளவு நாள் என்பதே கேள்வி!

இன்னோரு கட்சியை எதிர்க்க ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் காணாமல் போயின. உதாரணம், தமிழ் மாநில காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்குடன் கதர் சட்டை கனவான்கள் உருவாக்கிய கட்சி. கடைசியில் இன்று சில தலைவர்களோடு சிறிய கூட்டமாக நிற்கிறது.

இப்படி எல்லா கட்சிகளையும் சொல்லலாம் விஜயகாந்த், சரத்குமார், சீமான், கமலஹாசன் போன்றோர் தங்களது குறிக்கோள், கொள்கைகள் என்னவென்றே தெரியாமல் வந்த வேகத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

சீமான் புதுப்பாதை, புதுப் பயணம் என்று உதார் விட்டுக் கொண்டிருக்கின்றார். அவரது கூடாரம் காலியாகி, கலகலத்துப் போய் பல மாதங்கள் ஆகிறது. அவரது ஒற்றை நோக்கம் திமுகவை மட்டுமே எதிர்ப்பதும். அதோடு திராவிட கொள்கைகளை நீர்த்து போக செய்வதையே முழுநேர தொழிலாக வைத்து கட்சியை நடத்துகிறார். அது மட்டும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை. அது திராவிட மண்ணில் எக்காலத்திலும் நடக்காது.

பெரிய மக்கள் செல்வாக்கு பெற்ற எம்ஜிஆரே தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்து கடைசியில் திமுகவுக்கு அதிமுக மாற்று என மாறியவர்.

அண்ணா கட்சி தொடங்கிய காலத்தில் அவருக்கு காமராஜரை, ராஜாஜியை எதிர்க்க வேண்டும் என்று குறுகிய இலக்கு மட்டும் இருக்கவில்லை. அவர் மேற்கொண்ட பயணத்தில் அவருக்கு எதிராக காங்கிரஸ் இருந்தது. அவரது இலக்கு காமராஜரை வென்று ஆட்சி அமைப்பது மட்டுமல்ல.

தெளிவான சிந்தனையை, ஆட்சியில் வந்தால் செய்ய வேண்டியது என்ன என்பதை தெரிவித்தவர் அண்ணா. கலைஞர், நாவலர், பேராசிரியர் என ஒரு பெரும்படையை உருவாக்கி விட்டுச் சென்றார். அதனால் தான் அந்த பாதையை செம்மை படுத்தி அடுத்து 50 ஆண்டுகள் சிறப்பாக தலைமை பதவி வகித்தார் கலைஞர். கலைஞர், முதல்வராக இருந்த போது ஒவ்வொரு இலக்காக அடைந்தார்.

இப்போதும் அடுத்து 50 ஆண்டுகளுக்கும் மேல் திமுக என்பது இருக்கும். இருக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை. இன்னும் திமுக செய்ய வேண்டிய பணிகள் மிக அதிகம், அதைவிட பேராபத்து அதனின் எதிர்த் திசையில் ஆதிக்கக் கூட்டம் பாஜக தலைமையில் அணி சேர்ந்து நிற்கிறது.

இந்த ஒரு பலமான அடுத்த கட்டத் தலைவர்களை மற்ற கட்சிகள், கட்சித் தலைவர்கள் சிந்திக்காமல் போனதால் தான் அவை one man show போல இருக்கின்றன. காட்டுக்கத்தால் கத்திக் கொண்டிருக்கின்றார் சீமான். அடுத்து? கமலஹாசன் கர்ஜிக்கிறார். அடுத்து கட்டத் தலைவர் என்பது அங்கு யார்?

அந்த புள்ளியில் தான் திமுக தனித்துவமாக நிற்கிறது.

எவன் ஒருவன் அடுத்த தலைமுறையை வளர்க்காமல் தன்னை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் செய்கிறானோ அவனது இயக்கம் அவனோடே மறைந்து போகும். மிகச்சிறந்த உதாரணம் கமல்ஹாசன் கட்சி. இன்று ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றனர் அதன் முன்னணி தலைவர்கள்.

இன்று அவர்களது முகத்திரை கிழிக்கப்பட்டு, நிற்கதியாய் நிற்கிறார்கள்.

அதேபோல சீமான் கூவி கூவி அழைத்தாலும், அவர் தேர்தல் அரசியலில் இன்னும் அடிப்படையை தாண்டவே இல்லை. இனிமேலும் நான் புதியவன், சின்னம் மாறி மாறி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிற புளித்துப் போன பழைய வசனத்தை தூக்கிக் கொண்டு வந்தால், அது உதவாது.

கமலும், சீமானும் யாருக்காக வேலை செய்தார்கள் ? கொஞ்சமாக ஆராய்ந்தால் அவர்கள் தமிழ்நாட்டு ஓவைசியாக விளங்கினார்களே ஒழிய ஒரிஜினாலிட்டி இல்லாமல் ஒழிந்து போனார்கள் இந்தத் தேர்தலில்.

எடுத்துக்காட்டாக, இஸ்லாமியர் வாக்குகளை பிரிக்க தொண்டாமுத்தூரிலும், கோவை தெற்கிலும் முறையே மநீம, நாதக இருவருமே இஸ்லாமியர்களை வேட்பாளராக நிறுத்தி தங்களது இந்துத்துவா கொண்டையை வெளிப்பாடையாக காட்டியுள்ளார்கள் கமலும் சீமானும். இது இயல்பாக அமைந்தது அல்ல. மேலிட உத்தரவு.

இந்தத் தேர்தலிலும் திமுகவை தோற்கடிக்க எல்லோரும் சேர்ந்து முயன்று, அம்முயற்சியும் தோற்றுப் போனது.

தமிழ்நாட்டு மக்கள் மிகத் தெளிவாக திமுகவுக்கு ஆட்சியையும் இந்த மநீம, நாதக, அமமுக, தேமுதிக, சமக, தமாக போன்ற இதர கட்சிகளை தோற்கடித்ததும் மிகச் சிறப்பு.

மற்ற தேவையில்லாத ஆணிகளை அடுத்த சுற்றில் தூக்கி வீசி எறிவார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

Leave A Reply