சதிவலையில் சிக்கினாரா நிதியமைச்சர் பி.டி.ஆர்.? பற்றியெரியும் மதுரை அரசியல்!

Share

2021 சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 2வது முறை வென்று தமிழ்நாட்டின் நிதியமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. அவர் நேரடியாக களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக இணையும் அரசியல்வாதி இல்லை. அது மட்டுமன்றி கட்சியில் உள்ள அடித் தட்டு நிர்வாகிகளோடு கலந்து பேசி, மக்கள் மனதை அறிந்துகொள்ளும் அரசியல்வாதியும் இல்லை. கட்சிக் காரர்கள் புடை சூழ அவர் இருந்ததே இல்லை.

மாறாக அவர் ஒரு கார்ப்பரேட் கல்ச்சர் அரசியல் வாதி என்பதே அவரது அடையாளமாக உள்ளது.

தனக்கென ஒரு ரகசிய அணியை சம்பளம் கொடுத்து அவர் வைத்துள்ளார். அவர்கள்தான் மக்களை கையாள்வர். அவர்கள் சொல்வதே இவருக்கு வேதவாக்கு. அந்த அணியில் கட்சி அரசியல் பற்றி தெரியாத நபர்கள் அதிகம். அரசியல் தெரிந்தவர்களை அவர் அருகில் வைத்துக்கொள்வதுமில்லை.

அவரது நேரடி உதவியாளர், அரசியல் பி.ஏ, ரகசிய உதவியாளர்கள் இருவர் யாரும் துளியும் அரசியல் அனுபவமில்லாதவர்கள் என அமைச்சரின் தந்தையாரோடு இணைந்து பனியாற்றிய
கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரே ஆதங்கப் படுகிறார். கரை வேட்டி கட்டிக்கொண்டு கட்சி நிர்வாகிகள் வீட்டுக்குள் வந்தால் கதவு திறப்பதே இல்லை என வருத்தப்படுகிறார் அந்த பெரியவர்.

உதவியாளர்கள் சொல்வதை மட்டும் அப்படியே நம்பும் அரசியல்வாதியாக அவர் இருக்கிறார். அதிலும் தன்னிடம் சொல்லப்படும் விஷயம் குறித்து, மாவட்ட செயலாளர், பகுதி, வட்ட செயலாளர்களிடமோ, மக்கள் பணியில் உள்ள பொதுவான நபர்கள், ஊடக நண்பர்களிடமோ விசாரிக்கும் நபராகவும் அவர் இல்லை என்பது இன்னும் கொடுமை.

கடந்த 2016 முதல் 5 வருட காலமாக அவர் இந்த பார்முலாவை பின்பற்றிதான் அரசியல் செய்து வருகிறார். அடித்தட்டு நிலையில் உள்ள கட்சி தொண்டனின் மனநிலையை அவர் அறிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளவில்லை.

இதை நன்றாக பயன்படுத்திக்கொண்டு பல வேலை களை ஏழுமலையான் பெயர் கொண்ட அவரது ரகசிய உதவியாளர் செய்து வருகிறார் என்கிறது அமைச்சர் வட்டாரம். அதே உதவியாளர்தான் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்த மேயர் தேர்வில் அமைச்சரை நன்றாக சிக்கலில் மாட்ட வைத்துள்ளார் என மதுரை உடன்பிறப்புகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அமைச்சரின் தொகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி பொன் வசந்த் மதுரைக்கு வந்து மிகவும் சொற்பமான வருடங்கள்தான் ஆகின்றன. ஆனால், எத்தனையோ சீனியர்களை பின்னுக்குத்தள்ளி இன்று அவரது மனைவியை மேயராக ஆக்கியிருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013ல் அரசியலில் அடியெடுத்து வைத்த பொன் வசந்த் மேயரானது எப்படி என அவரது பகுதி மக்களே ஆச்சரியப்படுகின்றனர்.

நேரடியாக பகுதிச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் கடந்த 2016 முதல் அமைச்சரோடு தொடர்பில் உள்ளார். அதிலும் அமைச்சர் தொகுதியின் பகுதிச் செயலாளர் என்ற வகையில்தான் தொடர்பு. அரசியல் நிலவரங்களை அடிக்கடி கலந்து பேசி, உரையாடும் தொடர்பு இல்லை.

கடந்த 2017ல் அறிவிக்கப்பட்டு பின் நின்றுபோன உள்ளாட்சி தேரதலின் போது அவர் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு கூட அளிக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய செய்தி.

இந்நிலையில் கடந்த 2021 தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகராட்சியை தன் கன்ட்ரோலில் கொண்டு வந்தார். ஏழுமலையான் பெயர் கொண்ட தன் ரகசிய உதவியாளரின் நண்பரான கார்த்திகேயனை மதுரை கமிஷனராக கொண்டு வந்தார். சிறந்த லாபியிஸ்டான அவரது ரகசிய உதவியாளரின் பர்சனல் டீலிங்கில் மதுரை வந்த கமிஷனர் அதிரடியாக மாநகராட்சி அலுவலக பணியாளர்களை களப்பணியாளர்களாகவும், களப்பணியார்களை அலுவலக பணியிலும் அமர்த்தி சர்ச்சையை கிளப்பினார். மதுரை எம்.பி வெங்கடேசன் கவனத்துக்கு செல்லும்வரை இந்த பிரச்சனையை சென்றது.

அடுத்த கட்ட நிகழ்வாக ஒப்பந்த தொழிலாளர் களுக்கான லேபர் காண்டிராக்டர்களை அதிரடியாக நீக்கினார். அதுவரை 15 வருடத்துக்கு மேல் மதுரை மாநகராட்சியில் கோலோச்சி கொண்டிருந்த அதிமுகவின் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஆதரவாளர் பொன்ராம் லேபர் கான்ராக்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இது மாநகராட்சி நிர்வாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை மாநகராட்சியை அதுவரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொன்ராமின் ஒப்பந்தம் ரத்தானது திமுக ஆதரவு ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமன்றி அனைத்து தொழிலாளர்கள் மத்தியிலும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் தொழிலாளர்களின் உண்மையான சம்பளத்தில் 30% பிடித்தம் செய்துகொண்டுதான் இதுவரை தன் பாக்கெட்டை நிரப்பி கொண்டு வந்துள்ளார் பொன்ராம். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்படிய ஈ.எஸ்.ஐ, பி.எஃப் உள்ளிட்ட எந்த பணிபலனும் வழங்கப்படவில்லை.

இதை சுட்டிக் காட்டியே அவரது லேபர் கான்ட் ராக்ட் ரத்து செய்யப்பட்டது. பலரும் அமைச்சரை மனதார பாராட்டினர்.

இந்த தருணத்தில்தான் ஒரு ட்விஸ்ட் உருவானது. தற்போதைய மேயரின் கணவர் பொன் வசந்த் வசம் லேபர் கான்டிராக்ட் பொறுப்பை ஒப்படைத்தார் அமைச்சர். தற்போது அவர் பின்புலத்தில் தான் லேபர் கான்ராக்ட் பணிகள் நடைபெற்று வருகிறது.

மதுரை மேயர் இந்திராணியும் அவருடைய கணவரும்

இதற்கு பின்னால் ஒரு பெரிய திட்டமிடுதலே இருந்தது என்பதை அமைச்சர் தெரிந்து வைத்திருக் கவில்லை என அவரது தீவிர ஆதரவாளர்கள் இப்போது சொல்லி புலம்புகிறார்கள்.

எப்படி பொன் வசந்த்தை அவர் தேர்வு செய்தார் என்பது மர்மமாகவே உள்ளது. இதில் அமைச்சரின் ரகசிய உதவியாளர் மற்றும் உதவியாளரின் நெருங்கிய உறவினரின் கையே ஓங்கி நின்றது என்பது மாநகராட்சி வட்டாரத்தில் பலரும் பேசி வருகின்றனர். உதவியாளர் சொல்வதை அப்படியே ஏற்கும் அமைச்சர் இதற்கும் தலையசைத்துள்ளார்.

பொன்ராம் விடுக்கப்பட்டவுடன் மாநகராட்சி நகரப் பொறியாளர் அரசு மூலம் அமைச்சரின் ரகசிய உதவியாளருக்கு தூது விடப்பட்டது. மறைவில் பொன்ராம் வசிக்கும் பகுதியின் செயலாளரான பொன் வசந்த் மூலமும் காய் நகர்த்தப்பட்டது. கோடிக்கணக்கில் பணம் புரளும் காண்டிராக்ட் முதலில் பெறப்பட்டது.

முடிவில் திரைமறைவில் அதே அதிமுக ஆதரவு பொன்ராம் இருந்துகொண்டு வேறொரு பெயரில் பொன் வசந்த்தை முன்னிறுத்தி தற்போது லேபர் கான்ட்ராக்ட் எடுத்துள்ளது மதுரை மாநகராட்சியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

புதிய நிறுவனம் பெயரில் பழைய பொன்ராம் முதலீட்டில் பொன்வசந்த் தான் இப்போது லேபர் காண்டிராக்ட் எடுத்துள்ளார்.

ஏழுமலையான் பெயர் கொண்ட அமைச்சரின் உதவியாளருக்கு இதில் பெரும் தொகை கை மாறியுள் ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள். பொன்ராமின் அதே கே.கே.நகர் அலுவலகத்தில்தான், அதே அலுவலர்களை கொண்டு பொன் வசந்த் புதிய ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இருவரும் ஒரே அறையில் இருந்து கொண்டுதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். இந்த உண்மை யார் சென்று பார்த்தாலும் அப்பட்டமாக தெரியும் விசயமாக உள்ளது. அதிமுக வுக்கு சிகப்பு கம்பளம் விரித்த அமைச்சரை திமுக-வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதெல்லாம் அமைச்சருக்கு தெரிந்துதான் நடக்கிறதா? என்பதே பலருடைய கேள்வியாக இருந்த நிலையில் தற்போது பொன்வசந்த் மேயராகி இருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைச்சரால் லெப்ட் அண்ட் ரைட் வாங்கப்பட்ட நகர பொறியாளர் அரசு இப்போதும் ஸ்மார்ட்டாக பொன் வசந்தை முன்மொழித்துள்ளார்.

நான்கு மாவட்ட செயலாளர்கள், 2 அமைச்சர்கள் சொல்லி நடக்காத மேயர் பரிந்துரை மாநகராட்சி நகர பொறியாளர் சொல்லி நடந்துள்ளது என உடன்பிறப்புகள் கமெண்ட் அடிக்கின்றனர்.

ஒப்பந்த பொறியாளர் பொன்ராம், மாநகராட்சி நகர் பொறியாளர் அரசு, அமைச்சரின் ரகசிய ஏழுமலையான் பெயர் கொண்ட உதவியாளர் மற்றும் தற்போது பதவியேற்றுக்கொண்ட மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் நால்வரும் சேர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிக்கலில் கொண்டுவந்து நிறுத்தியிருப்பது அமைச்சரை எரிச்சலடைய செய்துள்ளது.

இதுபோக, மண்டல தலைவர்கள் நியமனத்திலும் இவர்கள் நால்வரும் சொல்வதே நடக்கும் எனத் தெரிகிறது.

மூச்சுக்கு முன்னூறு முறை நேர்மை பற்றி வகுப்பெடுக்கும் அமைச்சர் தன் காலடியில் நடந்ததை தெரிந்துக்கொள்ளாமல் மேயர் தேர்வில் கோட்டை விட்டது மதுரை திமுக-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் யாரையும் கலந்து பேசாமல் மதுரை அரசியலில் மூக்கை நுழைத்து தன்னிச்சையாக செயல்படுகிறார் நிதி அமைச்சர் என்பதால்தான் மாவட்ட செயலாளர்கள் யாரும் மேயர் பதவி ஏற்பிலும் கலந்து கொள்ளவில்லை. மதுரை திமுகவில் கோஷ்டி பூசலையும் புகைச்சலையும் அப்பட்டமாக கிளப்பியுள்ளது.

‘ட்ராப்’-ல் மாட்டியுள்ளார் அமைச்சர்.

இத்தனை நாள் அமைச்ச்ர் மெயின்டெய்ன் செய்த மிஸ்டர் க்ளீன் இமேஜ் இப்போது டேமேஜ் ஆகியுள்ளது.

21 மாநகராட்சியில் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் சாதாரண தொண்டர்களை, எவ்வித பண, இதர பிரதிபலனும் இல்லாமல் தேர்வு செய்தது பலராலும் பேசப்பட்ட நிலையில் மதுரை மேயர் தேர்வு எப்படி இப்படி நடந்தது.? என்பதே பலரும் எழுப்பும் கேள்வி.

மேயர் பதவியேற்பில் பிடிஆர்

ராஜதந்திரமாக நினைத்துக்கொண்டு தன் ஆதரவாளர் பொன்வசந்தை நிறுத்தியதோடு அல்லாமல் வேறு யாருக்கும் – முக்கியமாக மேயர் கணவர் பொன் வசந்த்தின் எதிர்த்துருவமாக விளங்கும் ஜெயராமனுக்கு துணை மேயர் பதவி சென்றுவிடக் கூடாதென, மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனை தூண்டிவிட்டு அவர் கட்சிக்கு துணை மேயர் பொறுப்பை வாங்கி தந்துள்ளார் திமுக அமைச்சர் பிடிஆர்.

ஆனால் உள்குத்து அவருக்கே தெரியாமல் மாநகராட்சி அவருடைய கட்டுப்பாட்டை விட்டு போய்விடுமோ? என்ற பயத்தில் சுதாரித்துக்கொணடு தன் அலுவலகத்தில் பணியாற்றும் தன் உறவினர் பெண் ஒருவரை மேயரை கண்காணிக்க அப்பாயின்ட் செய்துள்ளார் அமைச்சர். மேயரின் முழு கட்டுப்பாடும் அந்த பெண் கையில்தான் என்கின்றனர் திமுகவினர். காலை மாலை அந்த பெண்ணுக்காக மேயரின் கார் அமைச்சர் பங்களாவுக்கு ட்ரிப் அடிக்கிறது.

மாநகராட்சி குழு தலைவர் தேர்விலும் அமைச்சரின் நேர்மைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.

மண்டலம் மற்றும் மேயரின் கீழ் வரும் 6 குழுக்களுக்கும் பேரம் படிந்த பின்புதான் இறுதி செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் துணை மேயர் பாண்டியன் பலருக்கும் படியளந்த பின் இப்போது மத்திய மண்டலத்தை வாங்கியுள்ளார்.

மாவட்ட செயலாளர் கோ.தளபதிக்கு மீனாட்சியம்மன் கோயில் காண்ட்ராக்ட் கொடுப்பதாக சொல்லித்தான் மண்டல ஒதுக்கீட்டில் அவரை ஆஃப் அஎய்துள்ளார் ரகசிய உதவியாளர்.

அமைச்சரின் ரகசிய உதவியாளரின் தங்கை வழி உறவினர் (அட்வகேட்) மூலம்தான் அனைத்து பேரங்களும் நடக்கிறது என புதிதாக கட்சிக்கு வந்து கவுன்சிலர்களுக்கே தெரிகிறது. அமைச்சருக்கு தெரியாதா? என பலமுறை கவுன்சிலரான கட்சியின் மூத்த முன்னோடிகள் புலம்புகின்றனர். இந்த மறைமுக அண்டர்கிரவுண்ட் லாபி அமைச்சருக்கு தெரியுமா? தெரியாதா? என்பது அவர் வணங்கும் மீனாட்சிக்கே வெளிச்சம்.

திமுகவுக்கு சம்பந்தமே இல்லாத யார் யாரோ புதுமுகம், சின்னப்பையன் எல்லாம் மதுரை அரசியலை தீர்மானிப்பதை மதுரை அரசியலுக்கு தொடரும் சாபக்கேடு என புலம்புகின்றனர் உண்மையான திமுக நிர்வாகிகள்.

எப்படியோ! மதுரை அரசியல் பற்றி எரிகிறது. •

-உளவாளி

Leave A Reply