ஆர்எஸ்எஸ் எதற்காக உருவாக்கப்பட்டது? – Vinayaga Murugan

Share

மதியம் பொழுதுபோகாமல் ‘ஹேராம்’ படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனையோமுறை பார்த்திருந்தாலும் இந்தமுறை பார்க்கும்போது இதுவரை தவறவிட்ட ஒரு விஷயம் புரிந்தது.

கதைப்படி கமலஹாசனும், ஷாருக்கானும் தொல்லியல் துறையில் பணிபுரிபவர்கள். படத்தின் முதல்காட்சியே அவர்கள் இருவரும் ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்வதாக தொடங்கும். பிறகு ஒரு வசனம் வரும்.

ஷாருக்கான் சொல்வார்… “ஐயாயிரம் வருஷம் முன்னாடி வாழ்ந்த சிவிலைசேஷன். பசங்க பொம்மை வச்சு விளையாடணும்ன்னு நினைச்ச சிவிலைசேஷன். நம்மளை மாதிரி பெரியவங்க சாமியை வச்சு விளையாடணும்ன்னு நினைக்காத சிவிலைசேஷன்…”

அதற்கு கமல் சொல்வார்… “அதெல்லாம் சரி. ஆனா நாம அந்த சிவிலைசேஷன்ல இல்லையே…”

இந்தக்காட்சிக்கு பிறகு படம் வேறு வேறு சம்பவங்களுக்கு நகர்ந்துவிடும். இந்த படத்துல கமல் ஏன் ஆர்க்கியாலஜி துறையில வேலை செய்பவரா இருக்கணும்? ஒரு போஸ்ட்மேனாகவோ, போலீஸாகவோ, இராணுவத்தை சேர்ந்தவராகவோ இருந்திருக்கலாம்.

இங்குதான் #ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வரலாறு பற்றி பார்க்கவேண்டும். ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்திய சுதந்திர போராட்டத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இல்லை. ஏனெனில் ஏற்கனவே காங்கிரசும், நேதாஜியும் இருந்தார்கள்.

ஆர்எஸ்எஸ் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்துவர்களுக்கு எதிராகவோ இந்துக்களை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கமும் இல்லை. அப்படி என்றால் #ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆரம்பிக்க என்ன தேவை?

1925 -ல் #ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1924-ல்தான் ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வுகள் கண்டுப்பிடிக்கப்பட்டு உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. உண்மையில் இந்த அகழ்வாராய்ச்சிகள்தான் அவர்களை தொந்தரவு செய்திருக்கவேண்டும். தங்களை ஆரிய வந்தேறிகள் என்று சொல்லிவிடுவார்களோ என்று அச்சம் அவர்களை பிடித்திருக்கலாம்.

ஏனெனில் பண்டைய பாரதம் என்பது வேதகாலம். பாரதத்தின் தொன்மையான மொழி சம்ஸ்கிருதம். வேதக்கடவுள்களே முதன்மையானவர்கள் என்பதை எல்லாம் இந்த ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஒரேநாளில் உடைத்துவிட்டது. பத்தாயிரம் வருடங்களாக நாம்தான் இந்த மண்ணின் பூர்வகுடிகள். பிறகு முகலாயர்கள் படையெடுத்து வந்தார்கள். கிறிஸ்துவர்கள் வந்தார்கள் என்றெல்லாம் #ஆர்எஸ்எஸ்சின் கோல்வால்கர் போன்றோர் பிரச்சாரம் செய்துவந்த நிலையில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ அவர்கள் பயத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டது.

வரலாறு அவர்களுக்கு எதிராக திரும்பும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். கற்பனை புராணக்கதைகளுக்கு ஆதாரம் இல்லை. ஆனால் ஆர்க்கியலாஜித்துறையிடம் உள்ளவை எல்லாமே அறிவியல் நியதிக்குட்பட்ட சான்றுகள். அதனால்தான் தங்கள் இருப்பை நிலைநிறுத்த #ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டிருக்கவேண்டும்.

ஆனால் வெறுமனே ஆரியர்களுக்கான அமைப்பு என்று சொல்லி ஆரம்பித்தால் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போவோம் என்று அவர்களுக்கு ஒரு பயம் வந்திருக்கும். அதனால் காங்கிரஸ் தலைவர்களோடு சேர்ந்து கூட்டத்தோடு கூப்பாடுபோட்டு ஒன்றிரெண்டு போராட்டங்களில் கலந்துக்கொண்டு நானும் ஜெயிலுக்குப்போறேன் என்று வண்டியிலேறி போனார்கள்.

ஜெயிலில் பிரிட்டிஷ்காரர்களிடம் அடிவாங்கி மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்து வந்த வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் நம்மிடம் உண்டு.

இப்போதுகூட கீழடி ஆய்வு முடிவுகள் வெளிவந்தபோது இஞ்சி தின்ற குரங்குபோல முகத்தை வைத்திருந்தவர்கள் யாரென்று பாருங்கள். இதன் முழு பின்னணி புரியும்.

Vinayaga Murugan (29-9-2019)

Leave A Reply