லெனினுடன் சில நாட்கள் 2 – மாக்ஸிம் கார்க்கி

Share

ஜெர்மன் சமதர்ம ஜனநாயக வாதிகளுடன்..!

விசாலமான வசதிகள் நிறைந்த ஒரு அறையில் உட்கார்ந்து நாங்கள் சாப்பிட்டோம். ஜன்னல்களில் நல்ல சரிகை வேலைப்பாடமைந்த திரைகள் தொங்கவிடப் பட்டிருந்தன. நாற்காலிகளின் முதுகில் சரிகைத் துணியைப் போர்த்தி மாட்டி வைத்திருந்தார்கள்.

உட்காந்திருப்பவர்கள் அதில் சாயும்போது, நாற்காலிகளின் மெத்தையில் அழுக்கோ பிசு பிசுப்போ படியாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு. ஏற்பாடுகள் யாவும் திருப்திகரமாகவே இருந்தன. ஒவ்வொருவரும் பக்தி சிரத்தையுடன் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். அப்பொழுது மிகவும் ஆழ்ந்த குரலில், ஒருவரைப் பார்த்து ஒருவர் ‘மால்ஸீட்’ என்று சொல்லிக் கொண்டார்கள்.

மால்ஸீட் என்ற பதத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் ‘மால்’ என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு ‘மோசமான’ என்பது பொருள் என்றும், ‘ஸீட்’ என்ற ஜெர்மன் வார்த்தைக்குக் ‘காலம்’ என்பது பொருள் என்றும் எனக்குத் தெரியும்- “மோசமான காலம்.”

காட்ஸ்கியை “என் கனவு புருஷன்” என்று இரண்டு முறை குறிப்பிட்டார் ஸிங்கர். கத்தி போன்ற மூக்குடன் இருந்த பெபல், ஏதோ தமக்குத்தாமே திருப்தி கொண்ட மனிதராக எனக்குக் காட்சியளித்தார். ரேனிஷ் ஒயினையும் பீரையும் நாங்கள் அருந்தினோம். ஒயின் புளிப்பாகவும் வெது வெதுப்பாகவும் இருந்தது.

சமதர்ம ஜனநாயகவாதிகள், ருஷ்யப்புரட்சியைப் பற்றியும், ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றியும் பேசினார்கள். ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியை ஏதோ கை கொடுத்துத் தாங்கும் போஷகர்களைப் போல, கொஞ்சம் அனுதாபத்துடனும் அதே சமயத்தில் கசப்பாகவும் பேசினார்கள். ஆனால் அவர்களுடைய கட்சியைப்பற்றி – ஜெர்மன் கட்சியைப் பற்றி – அவர்களுக்குப் பிரமாதமான அபிப்பிராயம்! யாதொரு மாசு மருவும் அற்ற கட்சி அது! பொதுவாக, அங்கு சுய திருப்தியைக் காட்டும் சூழ்நிலையே நிலவியது. நாற்காலிகள் கூட அவர்களைத் தாங்குவதில் சந்தோஷம் அடைந்திருப்பது போலத் தோற்றம் அளித்தன.

எனக்கும் ஜெர்மன் கட்சிக்கும் இருந்த தொடர்பு, அவ்வளவாகச் சுவாரஸ்யமில்லாத தொடர்பாகும். பார்வஸ் என்ற ஒருவன் அந்தக் கட்சியின் பிரதான அங்கத்தினனாக இருந்தான். அவன் பிற்காலத்தில் மகா அயோக்யனாக மாறிவிட்டான். “அதலபாதாளம்” என்ற என் நாடகத்தை, “ஸ்னானி” பதிப்பகம் (போல்ஷ்விக்குகளின் சட்டபூர்வமான பதிப்பகம்) வெளியிட்டிருந்தது.

நாடகக் கம்பெனிகள், உரிமை பெற்று அதை நடித்து வந்தன. அந்தக் கம்பெனிகள் நாடகவசூலில் குறிப்பிட்ட ஒரு பங்கை நாடக ஆசியருக்குக் கொடுக்க வேண்டும். அந்தப் பங்குத் தொகையை வசூலிப்பதற்குரிய அதிகாரத்தை அளித்து, பார்வஸை ஸ்னானிப் பதிப்பகத்தார் அனுப்பி வைத்தார்கள். 1902ம் வருஷத்தில், சட்ட விரோதமாக ஸெபாஸ்டபூல் நகரத்துக்கு அவன் வந்திருந்தபோது, ரயில்வே ஸ்டேஷனில் வைத்து அவனுக்கு இந்த வசூல் – அதிகாரம் கொடுக்கப்பட்டது.

அவன் வசூலிக்கும் தொகையைப் பின் கண்டபடி பகிர்ந்து கொள்ளுவது என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வசூலித்த பணத்தில் 20 சதவிகிதம் வசூலிப்பனுக்கும், மீதித்தொகையில் கால் பங்கு நாடக ஆசிரியனாகிய எனக்கும், மிச்சத்தொகையெல்லாம் சமதர்ம ஜனநாயகக் கட்சி நிதிக்கும் என்று முடிவாகி இருந்தது. இந்த நிபந்தனைகள் பார்வஸுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். அத்துடன் இந்த நிபந்தனைகளைக் கண்டு அவன் சந்தோஷப்படவும் செய்தான். ஜெர்மனியில், நான்கு வருட காலத்தில் எல்லா நாடக மேடைகளிலும் இந்த நாடகம் நடைபெற்றிருந்தது. பெர்லின் நகரத்தில் மட்டும் அதை ஐந்நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் நடித்திருக்கிறார்கள். ஆகவே பார்வஸ், ஆயிரக்கணக்கான மார்க்குகள் (மார்க் – ஜெர்மன் நாணயம்,) வசூல் செய்திருக்க வேண்டும். வசூல் செய்த பணத்தை அவன் “ஸ்னானி” பதிப்பகத்துக்கு அனுப்பவில்லை. அதற்குப் பதிலாகப் பதிப்பகத்துக்கு, அதாவது கே.பி. பியாட்னிட்ஸிக்கு, ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தான்.

அதில், தான் ஒரு இளம் பெண்ணுடன் இத்தாலிக்கு உல்லாசப் பயணம் போய் வந்ததில் பணத்தையெல்லாம் செலவழித்து விட்டதாக, கனகுஷியோடு எழுதியிருந்தான். பயணம் அருமையான உல்லாசப் பயணமாகவே இருந்திருக்கும். சந்தேகமில்லை. ஆனால் அவன் மொத்தப் பணத்தில் கால்வாசித் தொகையைத்தான் செலவழித்திருப்பான் என்று நினைத்து, மீதிப்பணம் சம்பந்தமாக ஜெர்மன் கட்சியின் மத்திய கமிட்டிக்குக் கடிதம் எழுதினேன். ஜி.பி. லேடிஸ்னிகாவ் மூலம் கடிதத்தை அனுப்பி வைத்தேன். ஆனால் மத்தியக் கமிட்டியோ, பார்வஸின் உல்லாசப் பயண விஷயத்தைப் பொருட்படுத்தாமல் பேசாமல் இருந்தது. அப்புறம் தான், கட்சி அவனை நடவடிக்கை எடுத்துக் கீழே தள்ளிவிட்டது என்று அறியலானேன். உண்மையில் அவனைக் காதைப்பிடித்து ஆட்டியிருக்க வேண்டும். சிலகாலத்துக்குப் பின் நான் பாரிஸ் நகரில் இருந்தபோது, பேரழகியான ஓர் இளம் பெண்ணை எனக்குச் சுட்டிக்காட்டி, பார்வஸ் இவளைத்தான் உல்லாசப் பயணத்துக்குத் துணையாக இத்தாலிக்கு அழைத்துச் சென்றான் என்று சொன்னார்கள். “ரொம்ப அருமையான பெண்! ரொம்ப அருமை!” என்று நான் நினைத்துக் கொண்டேன்.

பெர்லின் நகரில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், உள்ளிட்ட பலரையும் சந்தித்தேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வேறுபட்ட அளவில் சுயதிருப்தியும், தன் மதிப்பும் குடிகொண்டிருந்தன.

அமெரிக்கப் பயணம்

அமெரிக்காவில், மாரிஸ் ஹில்க்விட்டைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் நியூயார்க் கவர்னர் பதவியையே தம் லட்சியமாகக் கொண்டு பாடுபட்டு வந்தார். அந்தச் சமயத்தில் சிறையி லிருந்து வெளிவந்த கிழவரான டெப்ஸ், சலித்து ஒதுங்கிய மனிதரைப் போல் ஒவ்வொருவரையும் – ஒவ்வொன்றையும் பற்றி ஏதாவது குறைகூறிய வண்ணமாக இருந்தார்.

அங்கே அநேக மனிதர்களைப் பார்த்தேன். அநேக விஷயங்களைப் பார்த்தேன். ஆனால், ருஷ்யப் புரட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒரு மனிதனைக் கூட நான் சந்திக்கவில்லை. எல்லா இடங்களிலும், ருஷ்யப் புரட்சியை ஐரோப்பிய வாழ்க்கையின் சாதாரண நடைமுறை நிகழ்ச்சி என்றும், “சதாகாலமும் காலரா, இல்லை என்றால் புரட்சி என்று ஏதாவது ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில்” நிகழ்ந்த சாதாரண நடைமுறைச் சம்பவம் என்றும் கருதினார்கள். அங்கே ஒரு “அழகான பெண்” வந்து சோஷலிஸத்துக்குத் தன் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டாள்!

அமெரிக்காவுக்குப் போய், போல்ஷ்விக் கட்சிக்கு நிதி சேர்க்க வேண்டுமென்னும் யோசனையை முதல் முதலில் கூறியவர் எல்.பி. கிராஸின், வி.வி. வரோவ்ஸ்கியை எனக்குக் காரியதரியாகவும், கூட்டங்கள் கூட்டும் ஆர்களைஸராகவும் என்னோடு அனுப்பி வைக்க வேண்டும் என்ற யோசனை இருந்தது. அவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். ஆனால் கட்சி அவருக்கு வேறு வேலைகளைக் கொடுத்துவிட்டதால், அவருடைய பொறுப்பை என்.ஈ. புரேனின் ஏற்றுக்கொண்டார். இவருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் பயணத்தின் போதும், அமெரிக்காவுக்குப் போய்ச் சேர்ந்த போதும் இவர் ஆங்கிலம் கற்றுக் கொண்டிருந்தார். என் பிரயாணத்தின் நோக்கம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டதும், சமதர்ம – புரட்சிவாதிகள் என் பயணத்தில் குழந்ததைத்தனமான அக்கறை காட்டத் தொடங்கினார்கள். வரும் வழியில், செய்கோவ்ஸ்கியும், ஸிட்லோவ்ஸ்கியும் என்னைப் பின்லாந்தில் சந்தித்தார்கள். போல்ஷ்விக்குகளுக்கென்று நிதிவசூல் செய்யாமல் “பொதுப் படையாகப் புரட்சிக்காகவே” நிதி வசூல் செய்ய வேண்டும் என்று எனக்கு யோசனை கூறினார்கள். “பொதுப் படையான புரட்சி” எதற்கும் நிதிவசூல் செய்ய இயலாது என்று நான் மறுத்துவிட்டேன்.

அதனால் அவர்கள் “பாபூஷ்கா”வை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். கடைசியில் இரண்டு பேர் இரண்டு வேறுபட்ட புரட்சிகளுக்காக, பரஸ்பரம் யாதொரு தொடர்பும் சந்திப்பும்கூட இல்லாமல் அமெரிக்காவில் நிதிவசூல் செய்யும்படி நேர்ந்தது. இந்த இரண்டு நிதிகளில் எது அவசியமானது, எது நல்லது என்பதை அறிந்து கொள்வதற்குரிய கால அவகாசமோ, அல்லது ஆர்வமோ அமெரிக்கர்களுக்கு இல்லை. “பாபூஷ்கா”வைப் பற்றி ஏற்கெனவே அவளுடைய அமெரிக்க நண்பர்கள் நன்றாக விளம்பரம் செய்து வைத்திருந்தார்கள். அதனால் அவளை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இவள் யுத்த காலத்தில் சமதர்ம தேசபக்தையாக இருந்தாள். அக்டோபர் புரட்சிக்குப் பிறகு சோவியத் யூனியனின் கொடிய விரோதியாக மாறிவிட்டாள்.

இதைத்தொடர்ந்து சிதையும் ஒரு நிகழ்ச்சியாகக் கருதி, நான் பொதுக் கூட்டங்களில் வசூல் செய்த பணத்தைத் “தாராளமாக”க் கையாண்டு வந்தார்கள். மொத்தத்தில் நான் வசூல் செய்த பணம் மிக மிகச் சொற்பம் – பத்தாயிரம் டாலர்களுக்கும் குறைவு, செய்திப் பத்திரிகைகளுக்கு எழுதிக் கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் அமெரிக்காவிலும் ஒரு பார்வஸ் வந்து சேர்ந்தான். ஆகவே, என் அமெரிக்கப் பயணம் தோல்வியில் முடிந்தது. ஆனாலும் அங்கேதான் “தாய்” நாவலை எழுதினேன். அந்த நாவலில் தவறுகளும் குறைகளும் காணப்பட்டால், நான் இதை அங்கே உட்கார்ந்து எழுதியதுதான் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

சில புரட்சிக்காரர்கள் ருஷ்யாவிலிருந்து வெளிக் கிளம்பி உதிரிகளாக வந்து கொண்டிருந்தார்கள். நசுக்கப்பட்டும், பயமுறுத்தப்பட்டும், தங்கள்மீதும் தங்களை “உதவாக்கரை முயற்சி”யில் ஈடுபடுத்தியவர்கள் மீதும் கோபம் கொண்டவர்களாக வந்து கொண்டிருந்தார்கள்.

“எல்லாம் ஒழிந்து போய் விட்டது. ஒவ்வொருவனையும், நசுக்கியோ, கொன்றோ, நாடு நடத்தியோ, சிறையிலிட்டோ ஒழித்துக் கட்டி விட்டார்கள்” என்று சொன்னார்கள், நாடோடிகளாகக் கிளம்பி அலையும் புரட்சிக்காரர்கள்.

பெரும்பாலான விஷயங்கள் கேலிக் கூத்தாகவே இருந்தது. ஆனால் குதூகலத்தின் சாயல் மட்டும் தென்படவே இல்லை. ருஷ்யாவிலிருந்து வந்த ஒரு திறமைமிக்க எழுத்தாளர், நான் “அதலபாதாளம்” என்ற நாடகத்தில் வரும் லூக்கா என்ற நாடக பாத்திரம் போல நடந்து கொள்ளுவதாகச் சொன்னார். இளைஞர்களின் மத்தியில் சென்று, இனிப்பாகப் பேசி அவர்களைக் கவர்ந்திழுத்து, என்னை நம்பும்படி செய்து, அப்புறம் அவர்கள் மண்டையில் அடிவாங்கியதும் நான் ஓட்டமெடுத்து விட்டதாக அவர் கூறினார்.

மற்றொருவர், நான் கொள்கைகளைப் பேசிப் பேசி உருப்படாமல் போனதாகவும், உள்ள சரக்குகளெல்லாம் காலியாகிப்போன வெற்றுத் தோட்டாவாக நான் இப்போது இருப்பதாகவும் சொன்னார். அத்துடன், மன்னரின் தலைமையில் நடைபெறுகிறது என்ற ஒரே காரணத்திற்காக நான் நாட்டியத்தின் பெருமையையே ஒப்புக்கொள்ள மறுக்கிறவன் என்றும் என்னைக் கூறினார். மொத்தத்தில் முட்டாள்தனமான, கேலிக் கூத்தான விஷயங்கள் பலவற்றை அவர்கள் சொன்னார்கள். ருஷ்யாவிலிருந்து தொற்று நோயைப் பரப்பும் அபாயகரமான புழுதி பறந்து வருவதாக எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது.

இந்நிலையில்தான், திடீரென்று நான் ருஷ்ய சமதர்ம – ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் (லண்டன் காங்கிரஸில்) கலந்து கொண்டேன். இந்தத் திடீர் நிகழ்ச்சி ஏதோ ஒரு கட்டுக் கதையில் நடைபெறக்கூடிய சம்பவம் போலவே எனக்குத் தோன்றியது. அதனால், அந்த நாள் எனக்கு ஒரு மகத்தான, இன்பகரமான, நாளாகவே இருந்தது!

(தொடரும்)

Leave A Reply