உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 6.கரவாஜியோ

Share

இத்தாலிய ஓவியர் இவர்.

மைக்கேல் ஏஞ்சலோ மெரிசி என்பது இவருடைய பெயர். ஆனால், ஓவிய உலகில் ஏற்கெனவே மைக்கேல் ஏஞ்சலோ என்ற புகழ்பெற்ற ஓவியர் இருந்ததால் இவர் தனது பெயரை கரவாஜியோ என்று மாற்றிக் கொண்டார்.

ஓவியத்துறையில் டெனபெரிஸம் என்ற புரட்சிகரமான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தவர். அந்தக் காலத்தில் மதம் தொடர்பான விஷயங்களையே ஓவியமாக தீட்டி வந்தனர். ஆனால், இவர் தனது மாடல்களை தெருக்களில் இருந்து தேர்ந்தெடுத்தார்.

எதார்த்தமான ஓவியங்களை படைத்தார். இவர் வரைந்த செயின்ட் மேத்யூவின் புகழ் பெற்ற மூன்று ஓவியங்கள்(1597&1602) பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந் ஸப்பர் அட் எம்மாஸ் (எம்மாஸில் இரவு விருந்து) (1601&02), டெத் ஆப் விர்ஜின்(கன்னித்தன்மையின் மரணம்)(1605&06) ஆகிய ஒவியங்கள் பெரும் புகழ்பெற்றவை ஆகும்.

கரவாஜியோவின் தந்தை ஸ்டூவார்டை சேர்ந்த பெர்மோ மெரிசி. இவர் ஒரு கட்டிடக் கலைஞர். கரவாஜியோ தனது 11 ஆவது வயதில் பெற்றோரை இழந்தார். அதே ஆண்டு அவர், மிலன் நகரைச் சேர்ந்த சிமோன் பீட்டர்சானோ என்ற ஓவியரிடம் பயிற்சிக்கு சேர்ந்தார். 1588 மற்றும் 1592க்கு இடைப்பட்ட காலத்தில் கரவாஜியோ ரோம் சென்றார்.

ஏற்கெனவே, அவர் ஓவியத்தின் அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் புகழ் பெற்று இருந்த லொம்பார்டு மற்றும் வெனிசை சேர்ந்த ஓவியர்களின் பாணி குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார். இந்த ஓவியர்கள் அதற்கு முன்பு இருந்த பழைய பாணி ஓவியங்களை எதிர்த்தவர்கள். இயற்கை மற்றும் எதார்த்தமான சம்பவங்களை ஓவியங்களில் கொண்டு வந்தவர்கள்.

கரவாஜியோ ரோமுக்கு வந்து காம்போ மார்சியோவில் இருந்த காஸ்மோபாலிடன் சொசைட்டியில் தங்கினார். அங்கிருந்த வழிப்போக்கர்களுக்கான பழைய சத்திரங்கள், உணவு விடுதிகள், தற்காலிக தங்குமிடங்கள், சின்னச் சின்ன ஓவியக்கடைகள் போன்றவை அவருடைய வசதிக்கேற்ற அடைக்கல மையங்களாக இருந்தன. எதற்கும் கட்டுப்படாத, பாரம்பரிய பழைய பழக்கவழக்கங்களை எதிர்க்கும் மனப்பாங்கு கொண்டவராக இருந்தார் அவர்.

ரோமில் தங்கியிருந்த முதல் ஐந்து ஆண்டுகளில் அவர் பல அவமானங்களை சந்தித்தார். எந்த வேலையும் நிரந்தரமில்லை.


அவருக்கு தேவைகள் அதிகமாக இருந்தன. ஆனால், அவற்றை உதறிவிட்டு வெற்று ஆளாக வாழவும் தயாராக இருந்தார். ஒரு வேலையில் சேருவார். அது திருப்தி இல்லை என்று அடுத்த வேலைக்கு செல்வார். பல ஓவியர்களிடம் அவர் உதவியாளராக வேலை பார்த்தார். எந்த இடத்திலும் அவர் சில மாதங்களுக்கு மேல் நீடித்ததில்லை.

1595ல் கரவாஜியோ தனது ஓவியங்களை தானே விற்பது என முடிவு செய்தார். மேஸ்ட்ரோ வாலென்டினோ எனும் விற்பனையாளர் மூலமாக தனது ஓவியங்களை விற்பனை செய்ய துவங்கினார்.

வலென்டினோ மூலமாக கரவாஜியோவின் ஓவியங்கள் கார்டினல் பிரான்செஸ்கோ டெல் மோன்டோ வின் கவனத்தை பெற்றன. டெல்மான்ட்டோ போப்பாண்டவர் மாளிகையில் செல்வாக்கு பெற்ற மதகுருவாக இருந்தார்.

வெகு விரைவிலேயே கரவாஜியோவுக்கு அவருடைய அரவணைப்பு கிடைத்தது. அதன்பிறகு கரவாஜியோவுக்கு தங்குமிடம் பற்றியோ செலவுக்கு பணம் மற்றும் உணவு பற்றிய கவலை தீர்ந்துவிட்டது. எல்லாவற்றையும் டெல்மோன்டோ கவனித்துக்கொண்டார்.

அவருடைய தொடக்க கால ஓவியங்கள் எதார்த்தத்தையும் நேரடி அனுபவத்தையும் பிரதிபலித்தன. அந்த காலகட்டத்தில் ரோமில் இருந்த ஓவியங்களில் இடம்பெற்றிருந்த செயற்கை தன்மை இவருடைய ஓவியங்களில் இல்லை.

இந்த ஓவியங்களில் பெரும்பாலும் பதின்பருவ சிறுவர்களே இடம் பெற்றனர். குறிப்பாக பழக்கூடையுடன் சிறுவன்(1593) தி யங் பச்சஸ்(1593), மற்றும் தி மியூசிக் பார்ட்டி போன்ற ஒவியங்களில் இருந்தவர்கள் பதின்பருவ சிறுவர்கள். இதில் தி யங் பச்சஸ் படம் கரவாஜியோ தன்னைத்தானே வரைந்து கொண்ட ஓவியம் ஆகும்.


கரவாஜியோவின் இந்த ஓவியங்கள் அவருடைய ஒழுங்கற்ற தான்தோன்றித்தனமான வாழ்க்கை முறைக்கு நேர் எதிராக அமைந்திருந்தன. அவருடைய ஓவியங்களில் நேர்த்தியும் ஒழுங்கும் இருந்தது. பழக்கூடை என்ற ஓவியத்தில் இருந்த பழங்கள் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தன.

கரவாஜியோவின் இந்த எதார்த்தமான படைப்புகள் மரபு வழிப்படைப்புகளை வெற்றி கொண்டன.

ஆனால், அவை அனைத்தும் கான்டாரெலி தேவாலயத்தில் இருந்த புனித மாத்யூவின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாகவே இருந்தன. முதல் முதலாக எதார்த்தத்தை பிரதிபலித்த கரவாஜியோவின் படைப்புகளும் அதுதான். 1597ல் ரோமில் உள்ள சான் லுயிகி டெய் பிரானிசெசி எனும் கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள கான்டாரெலி வழிபாட்டுக் கூடத்தை அலங்கரிக்கும் பொறுப்பு கரவாஜியோவுக்கு கிடைத்தது. டெல்மோன்ட்டோவின் ஏஜென்சி மூலமாக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருக்கு வயது 24. அதன் மூலம் அவர் பிரபலமான ஓவியராக அறியப்பட்டார்.

அவர் வரைந்த புனித மாத்யூவும் தேவதையும், புனித மாத்யூவின் அழைப்பு, புனித மாத்யூவின் தியாகம் ஆகிய மூன்று பெரிய ஓவியங்களும் பெரும் புகழ் பெற்றன. அந்தக்காலத்தில் இதுபோன்ற புனிதர்களை மிகைப்படுத்தி வந்த ஓவியங்களுக்கு மத்தியில் அவர்களை எதார்த்தமாக கரவாஜியோ வரைந்திருந் தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தியது. உருவம், தோற்றம், கருத்து ஆகியவற்றில் மட்டும் இந்தப்படைப்புகள் புதுமையாக இல்லை. படைப்பின் பின்புலமாக இருந்த வெளிச்சமும் காலமும் கூட புதுமையா கவே வடிவமைக்கப்பட்டிருந்தன.

அவர் முதலில் வரைந்திருந்த புனித மாத்யூவும் தேவதையும் என்ற ஓவியத்தில் மாத்யூ ஒரு சாதாரண தொழிலாளி போல வரையப்பட்டிருந்தார். ஒரு புனிதர் அல்லது மதபோதகர் அப்படி ஒரு தோற்றத்தில் அதற்கு முன்பு வரையப்பட்டதே இல்லை. இது சான் லுயிகி டெய் பிரான்செசி தேவாலயத்தின் விதிகளின்படி பார்த்தால் மிகப்பெரிய குற்றம்.

அந்த ஓவியத்தில் ஒரு ஆபாசமான தோற்றத்தில் புனித மாத்யூ கால்களை மடக்கி உட்கார்ந்து கொண்டிருந்தார். அந்த தேவதையும் அருள்பாலிக்-கும் விதமாக நின்று கொண்டிருக்க வில்லை. மாறாக அந்த தேவதை மேலே இருந்து எதையோ சொல்லித்தருவது போலவும், மாத்யூ ஏதோ கல்வி அறிவு இல்லாதவர் போல அதை கேட்டு எழுதிக்கொண்டிருப்பது போலவும் அமைக்கப்பட்டிருந்தது அந்த ஓவியம்.

அதைப்போல புனித மாத்யூவின் அழைப்பு என்ற ஓவியத்தில் இருதரப்பினர் சண்டையிட்டுக் கொள்வது போல அமைக்கப்பட்டிருந்தது. மாத்யூவின் தியாகம் என்ற ஓவியத்தில் மாத்யூவை தண்டிக்க கட்டாயமாக இழுத்துச் செல்கிறார்கள்.

இச்சம்பவம் நடுரோட்டில் நடக்கிறது. அப்போது அவரது உதவியாளர் பீதியுடன் தப்பித்து ஓடுகிறார். அந்த வழியே சென்ற வாழிப்போக்கர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இந்தக் காட்சியை பார்த்துச் செல்கின்றனர்.

கரவாஜியோவின் இந்த மூன்று ஓவியங்களுமே ரோமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரவாஜியோவின் கற்பனைத் திறனில் இருந்த புரட்சிகரமான தன்மைகள் இந்த ஓவியங்களில் வெளிப்பட்டன. அதன்பிறகு அவரது ஓவியங்கள் அனைத்துக்கும் கருவாக மதமே அமைந்தது. மதம் அவரது ஓவியத்திற்கு கருவாக அமைந்தாலும், மதம் தொடர்பான சம்பவங்களை ஒரு புதிய வடிவத்தில் வெளிப்படுத்தினார் கரவாஜியோ. தனது ஓவியங்களுக்கு உரிய மாடல்களை தெருக்களில் இருந்து எடுத்துக்கொண்டு மதம் தொடர்பான ஓவியங்களை அவர் வரைந்தபோது, அது வழக்கமான மதப்புனிதங்களுக்கு மாறாக இருந்தது.

கரவாஜியோவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த கான்டாரெலி வழிபாட்டுக்கூடத்தை ஓவியங்களால் அலங்கரிக்கும் வேலை 1602ல் முடிவடைந்தது. அப்போது அவருக்கு 30 வயது கூட ஆகவில்லை. ஆனால், அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த மூத்த ஓவியர்கள் பலரை இவர் தனது ஓவியக்கலையால் விஞ்சியிருந்தார்.

பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியாரிடம் இருந்து இவரிடம் ஓவியம் கேட்டு ஆர்டர்கள் குவிந்தன. அந்த நேரத்தில் அவர் வரைந்த செயின் பீட்டர் சிலுவையில் அறையப்படுதல் (1601), தி கன்வெர்ஸன் ஆஃப் செயின்ட் பால், தி டெபோசிஸன் ஆஃப் கிறிஸ்ட் (1602–04), டெத் ஆஃப் வர்ஜின்(1605——06) போன்ற ஓவியங்கள் காலத்தால் அழியாத புகழ்பெற்றவை. இந்த ஓவியங்கள் கரவாஜியோவின் ஓவிய மேதைமையை உலகுக்கு பறை சாற்றின. அதே சமயத்தில் பெரும் சர்ச்சைகளையும் தோற்றுவித்தன.

தி மடோன்னா வித் பில்கிரிம்ஸ் அல்லது மடோன்னா டி லோரெட்டோ (1603-06) என்ற ஓவியத்தை சான் அகோஸ் டினோ என்ற தேவாலயத்திற்காக வரைந்தார். அந்த ஓவியத்தில் வயதான இருவர் அழுக்கடைந்த கால்களோடு ஒரு பெண்ணின் முன்னால் மண்டியிட்டு வணங்குவது போன்ற காட்சியை அவர் வரைந்திருந்தார். இந்த ஓவியம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதைப்போலவே தி டெத் ஆஃப் வர்ஜின் என்ற ஓவியம் ஆபாசம் என விமர்சிக்கப்பட்டது.

ஆனால் ஓவிய உலகத்தில் அது ஒரு நல்ல படைப்பாகவே பார்க்கப்பட்டது. பீட்டர் பவுல் ருபென்ஸ் எனும் பிரபல ஓவியர் பரிந்துரைத்ததன் பேரில் 1607 ஏப்ரலில் டியூக் ஆப் மாண்ட்வா அந்த ஓவியத்தை வாங்கினார். அதை ரோமில் உள்ள ஓவியர்கள் கூடத்தில் ஒரு வாரத்திற்கு பார்வைக்காக அவர் வைத்தார். அதன்பிறகு அந்த ஓவியம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

கரவாஜியோவின் ஓவியத்தில் இருந்தவர்கள் எல்லாம் சாதாரண தொழிலாளிகள், விறைத்த தசைகளை உடைய திடகாத்திரமானவர்கள், கட்டுப் பெட்டித்தனத்திற்கு அடங் காதவர்கள். கரவாஜியோவின் படைப்புகள் கிறிஸ்தவ மதப்பற்றாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானா லும், அவரது வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை. அவருக்கு புகழும் பணமும் குவிந்து கொண்டே இருந்தது. அவரைப் பார்த்து மற்ற ஓவியர்கள் பொறாமை கொண்டனர்.

பழைய ரோமானிய மதப்புனிதர்கள் காலம் முடிந்ததற்கு பிறகு, கரவாஜியோவின் படைப்புகளில் இளவரசர்களும், பாதிரியார்களும் இடம்பெற்றனர். அப்போதும் அதே எதிர்ப்புகள் வந்தன. கன்டாரெலி வழிபாட்டுக் கூட வேலைகள் முடிந்ததற்கு பிறகு, கரவாஜியோவின் ஓவியங்களால் அவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். 1600ல் அவர் மீது மற்றொரு ஓவியர் வழக்குத் தொடுத்தார்.

ஒரு ராணுவ சிப்பாயால் தாக்கப்பட்டார். 1603ல் சக ஓவியர் ஒருவரின் புகாரின் பேரில் கரவாஜியோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார். அதன்பிறகு பிரான்ஸ் து£தரகத்தின் முயற்சியால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

1604 ஏப்ரலில் சர்வர் ஒருவர் மீது தட்டை வீசி எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ரோமானிய காவலர்கள் மீது கற்களை வீசி எறிந்ததாக அக்டோபரில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஆயுதங்களை தவறாக உபயோகித்ததாக 1605 மே மாதம் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே வருடம் ஜூலை 29ம் தேதியன்று ஒருவரால் தாக்கப்பட்டு, அதன் காரணமாக ஊரை விட்டு ஓட வேண்டி வந்தது. அதன்பிறகு ஒரு வருடம் கழித்து மீண்டும் ரோமுக்கு வந்தார். ஆனால் 1606 மே 29ம் தேதி டென்னிஸ் போட்டியில் ஸ்கோர் தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் ரனுக்சியன் டோமாஸோனி என்பவரை கரவாஜியோ கொலை செய்து விட்டார்.

இதையடுத்து அவர் பயந்துவிட்டார். தன்னைததானே காயப்படுத்திக் கொண்டார். காய்ச்சலில் விழுந்தார். பின்னர் ஊரை விட்டு ஓடினார்.

அருகில் இருந்த உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். சில காலம் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார். பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கிய அவர் 1607ல் நேப்பிள்ஸ் சென்றடைந்தார். அந்த சமயத்தில் அவர் மடோன்னா ஆஃப் தி ரோஸரி என்ற ஓவியத்தை வரைந்தார். பின்னாளில் அது அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.


மான்டி டெல்லா மிஸெரிகோர்டியாவின் வழிபாட்டுத்தலத் திற்காக அவர் தி செவன் வொர்க்ஸ் ஆஃப் மெரிஸி எனும் ஓவியத்தை வரைந்தார். இந்த ஓவியத்தில் இருந்த ஒரு அவசரத்தன்மை மற்றும் இருள் ஆகியவை அவரது அவநம்பிக் கையான மனநிலையை வெளிப்படுத்துவதாக இருந்தது. அவரது வழக்கமான ஓவிய பாணியில் இருந்து மாறியதற்கான முதல் அடையாளம் அதுதான்.

1607 ஆம் ஆண்டு இறுதி அல்லது 1608 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கரவாஜியோ மால்ட்டாவுக்கு சென்றார். அங்கு அவரது ஓவியங்களுக்கு பெரும் புகழ் கிடைத்தது. கொண்டா டப்படும் ஓவியராக மாறினார். அப்போது அவர் கடுமையாக உழைத்தார்.

ஏராளமான படைப்புகளை படைத்தார். வாலெட்டாவில் உள்ள மாவட்ட தலைமை கிறிஸ்தவ தேவாலயத்திற்காக அவர் வரைந்த தி பிஹெட்டிங் ஆஃப் செயின்ட் ஜான் தி பாப்டிஸ்ட் என்ற ஓவியம் அவற்றில் குறிப்பிடத்தக்கது.

1608 ஜூலை 14 ஆம் தேதியன்று கரவாஜியோ மீது சாட்டப்பட்ட கொலைக் குற்றம் மால்ட்டா அரசுக்கு தெரிய வந்தது. அதன்பிறகு அங்கிருந்து தப்பித்த கரவாஜியோ, அதே ஆண்டு அக்டோபரில் வடக்கு இத்தாலியில் உள்ள சிராகுஸ் சென்றார். அங்கு சாந்தா லூசியா தேவாலயத்திற்காக தி பரியல் ஆஃப் செயின்ட் லூஸி என்ற ஓவியத்தை வரைந்தார். கரவாஜியோ ஓவியத்தில் மிகச்சிறந்த துன்பியல் ஓவியமாக இன்றளவும் புகழ்பெற்றிருக்கும் ஓவியமாகும் அது.

1609 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவர் மெசினாவுக்கு சென்றார். அங்கு, ஆரடோரியோ டி சான் லோரென்ஸோவுக் காக தி ரிஸரக்ஸன் ஆஃப் லஸாரஸ், தி அடோரேஸன் வித் செயின்ட் பிரான்சிஸ் அண்ட் செயின்ட் லாரன்ஸ் என்ற ஓவியங்களை அவர் வரைந்தார்.

அடுத்த ஆண்டு அக்டோபரில் அவர் நேப்பிள்ஸ் நகருக்குச் சென்றார். அங்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது, யாரோ சிலரால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்தார். அப்போது கரவாஜியோ இறந்தே போய்விட்டார் என ரோமில் வதந்தி பரவியது. அதன்பிறகு கரவாஜியோ நீண்ட நாட்கள் உடல் நலமில்லாமல் இருந்தார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி 1610 ஜூலையில் நேப்பிள்ஸ் நகரில் இருந்து படகு மூலம் ரோமுக்கு சென்றார்.

வழியில் பாலோ என்ற இடத்தில் படகு நின்றபோது, கரவாஜியோ கைது செய்யப்பட் டார். அவரது உடமைகள் அனைத்தும் அந்த படகில் சென்றுவிட்டன. பின்னர் விடுதலையான கரவாஜியோ, படகில் இருக்கும் உடமைகளை எடுப்பதற்காக பாப்பல் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்பட்ட போப் தலைமையிலான நாடுகளில் இருந்த துறைமுகம் ஒன்றுக்குச் சென்றார். அங்கு அவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது. ஒரு சில தினங்களில் அவர் இறந்தார்.

ஆனால், அவர் இறந்த மூன்று நாட்கள் கழித்து ரோமானிய அரசிடம் இருந்து, கரவாஜியோவுக்கு மன்னிப்பு வழங்கி ஒரு கடிதம் வந்தது.

கரவாஜியோவுக்கு பிறகு அவரது பாணியை பின்பற்றி நிறைய ஓவியர்கள் வந்தனர். அவர்கள் தங்களை காரவாஜியோ பாணி ஓவியர்கள் என்று அழைத்துக் கொண்டனர். இத்தாலியில் ஒராசியோ ஜென்டிலிஸ்ச்சி, ஆர்டெமிசியா ஜென்ட்டிலிஸ்ச்சி, இத்தாலிக்கு வெளியே டச்சு நாட்டை சேர்ந்த ஹென்ட்ரிக் டெர்ப்ருகென், டிரிக் வான் பாபுரென் போன்ற ஒவியர்கள் கரவாஜியோ பாணியை பின்பற்றி ஓவியங்கள் வரைந்தனர்.

Leave A Reply