மீண்டும் ஒரு வர்ணாச்சிரம அடிமைச் சமூகத்தை நோக்கி…?

Share

நில உடமையாளர்களின் வீடுகளில் ஒரு நேர கஞ்சிக்காக நாள்பூரா உழைத்த காலத்துக்கு மீண்டும் இந்தியாவை கொண்டு செலுத்துகிறது பாஜக அரசு என்கிறார்கள்.

இது கொஞ்சம் அதீதமான கற்பனையாக தோன்றலாம். ஆனால் 1959ல் பிறந்த நான் கண்ட பல காட்சிகளை மீண்டும் நினைவு படுத்திப் பார்க்கிறேன். அந்தக் காட்சிகள், இன்றைய பாஜக அரசின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு ஊர் என்றால் அதில் உள்ள சில நில உடமையாளர்களை நம்பியே பெரும்பான்மையான மக்கள் இருந்தார்கள். அவர்களுடைய நிலத்தில் உழைப்பதும், உழைப்புக்கு ஏதோ சிறிதளவு தானியத்தை கூலியாக பெறுவதுமாய் அவர்கள் வாழ்க்கையை கழித்தார்கள்.

பெரும்பாலன ஆண்களும் பெண்களும் ஒரே உடுத்துடையுடன் வாழ்ந்தார்கள். பள்ளிக்கூடத்திற்கு செல்லும் சிறுவர் சிறுமியரின் உடைகள் கிழிந்தும் அழுக்கடைந்தும் இருந்தன.

இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான வீடுகளில் அடுப்பெரிக்க நெருப்பே ஓசி வாங்கும் நிலையில்தான் இருந்தார்கள். அடுப்பு நெருப்பு கங்குகளை வைக்கோல் அல்லது ஓலையில் எடுத்துச் சென்று தங்கள் வீட்டு அடுப்பை பற்ற வைத்தார்கள்.

அரிசிச் சோறு பெரும்பாலான வீடுகளில் கனவாக இருந்தது. எங்கள் வீட்டில் இன்னிக்கு நெல்லுச் சோறு என்று குழந்தைகள் பேசிக்கொள்ளும் நிலை இருந்தது. நல்ல சாப்பாடு என்பது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்த்த வரமாக கற்பிக்கப்பட்டிருந்தது.

அதேநிலையை மீண்டும் உருவாக்கவே பாஜக அரசு கொடூரமான சட்டங்களை இயற்றுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது, காங்கிரஸ் ஆட்சியில் பேருந்துகளில் 2 படி அரிசிக்கு மேல் யாரும் கொண்டு போக முடியாது. அப்படி கொண்டுபோனால் அது கடத்தல் என்று வரும். அந்த அளவுக்கு பதுக்கலும், அதன் காரணமாக விலை உயர்வும் மக்களை வாட்டின.

அதாவது, உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு வியாபாரிகளே காரணமாக இருந்தார்கள். அதன்காரணமாக உணவுப் பொருட்களை பதுக்குவது சட்டப்படி குற்றம் என்றும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் என்றும் அரசு அறிவித்தது.

பஞ்சம் பட்டினி என்று சுதந்திர இந்தியாவில் மக்கள் மடிந்தார்கள். பிரிட்டிஷ் காலத்தில் மேற்கு வங்கத்தில் விவசாயிகள் நடத்திய தேபாகா போராட்டம், ஐதராபாத் நிஜாம் ஆட்சியை எதிர்த்து தெலங்கானா விவசாயிகள் நடத்திய புரட்சி, திருவாங்கூர் சமஸ்தானத்தில் புன்னபுரா வயலாரில் விவசாயிகள் நடத்திய போராட்டம், தஞ்சை மாவட்டத்தில் தோழர் சீனிவாசராவ் உருவாக்கிய விவசாயிகள் புரட்சி, தமிழகத்தில் இலவச மின்சாரம், இலவச இடுபொருட்கள் கேட்டு மாட்டுவண்டிகளையே பீரங்கிகளாக பாவித்து அரசுகளை மிரட்டி விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் என்று பல்வேறு காலகட்டங்களிலும் விவசாயிகள் தங்களுடைய தீரமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நிலப்பிரபுக்களுக்கு பதிலாக முதலாளித்துவத்துக்கு துணைபோகும் கொடூரமான சட்டங்களை இயற்றி, பொதுத்துறை நிறுவனங்களைக்கூட தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. அதுமட்டுமின்றி, விளைநிலங்களை கார்பரேட்டுகள் எளிதில் கைப்பற்றும் வகையிலும் மூன்று சட்டங்களை, விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் அவசரஅவசரமாக நிறைவேற்றியது.

அந்தச் சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் எழுப்பும் எழுச்சிகரமான முழக்கம் பாஜக அரசின் காதுகளில் விழவே இல்லை. அவர்கள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு 100 நாட்களுக்கு மேலாக நடத்தும் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தாலும், கார்பரேட் அடிமை அரசாக செயல்படும் மோடி தலைமையிலான பாஜக அரசு கண்டுகொள்ளவே இல்லை.

மாறாக விவசாயிகளையே பயங்கரவாதிகளைப் போலவும் பிரிவினைவாதிகளைப் போலவும், தேசவிரோதிகளைப் போலவும் சித்தரிக்க மோடி அரசு முயற்சி செய்கிறது. ஆனால், பாஜக அரசின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி, அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிகளை வென்று, குடியரசு தினத்தன்று ராணுவ அணிவகுப்புக்கு நிகராக லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் அணிவகுப்பு நடத்திக் காட்டினார்கள் விவசாயிகள்.

அந்த அணிவகுப்பையும் சீர்குலைக்க பாஜக நடத்திய சதியையும் உடனுக்குடன் அம்பலப்படுத்தினார்கள். பாஜகவின் கேடுகெட்ட சதிகளையும் மீறி தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்.

பாஜக அரசு நிறைவேற்றியுள்ள கொடூரமான மூன்று வேளாண் சட்டங்களையும், விவசாயிகளை அந்தச் சட்டங்கள் எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதையும் முதலில் பார்த்துவிடுவோம். பின்னர், இந்தியாவில் இதுவரை விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.

தொடரும்

Leave A Reply