இந்தியப் பிரதமர்கள் – 7.ராஜீவ் காந்தி

Share

ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி இவர்.

இந்திரா காந்தி தனது அரசியல் வாரிசாக சஞ்சய் காந்தியைத்தான் உருவாக்கினார். ஆனால், விமான விபத்தில் அவர் உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து விமான ஓட்டியாக வானில் பறந்து கொண்டிருந்த ராஜிவ் காந்தி அவசர அவசரமாக அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார்.

வந்த வேகத்திலேயே அவர் தனது தாயை இழக்க நேரிட்டது. அந்த துயரமான சூழலிலும் போதுமான அரசியல் அனுபவம் ஏதுமின்றி, நாட்டின் உயர்ந்த பொறுப்பை அவர் ஏற்க வேண்டியதாயிற்று.

1944 ஆகஸ்ட் 20ஆம் தேதி பம்பாய் நகரில் பிறந்தார் ராஜிவ் காந்தி.
ஜவஹர்லால் நேருவின் பேரன், மோதிலால் நேருவின் கொள்ளுப் பேரன், இந்திரா காந்தியின் மகன் என்ற பல்வேறு தகுதிகளுடன் சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர்.

பெரோஸ் காந்திக்கும் இந்திரா காந்திக்கும் பிறந்த முதல் மகன் இவர். இவர் பிறந்து மூன்று ஆண்டுகளில் நாடு விடுதலை பெற்றது.

அதைத் தொடர்ந்து இவரது பெற்றோர் புதுடில்லியிலிருந்து லக்னோவுக்கு குடிபெயர்ந்தனர். இவரது தந்தை பெரோஸ் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அவர் துணிச்சல் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

மாமனார் நேரு பிரதமராக இருந்தாலும், அவருடைய அமைச்சரவையில் நடைபெறும் முறைகேடுகளை பகிரங்கப்படுத்தினார். நேருவுக்கு இது பெரிய தலைவலியாக இருந்தது. கடினமான உழைப்பாளியாக இருந்தார்.

ராஜிவ் காந்தியின் குழந்தைப் பருவம் புதுடில்லியில் அவருடைய தாத்தா வாழ்ந்த தீன் மூர்த்தி பவனில் கழிந்தது. அங்கு அவரது தாய் இந்திரா காந்தி, பிரதமரும் தனது தந்தையுமான நேருவுக்கு செவிலியாக பணிபுரிந்தார்.

முதலில் டேராடூனில் உள்ள வெல்ஹாம் பிரப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ராஜிவ், விரைவிலேயே இமயமலையின் அடிவாரத்தில் உள்ள டூன் உறைவிடப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு தனது வாழ்நாள் முழுவதும் உடனிருந்த முக்கியமான பல நண்பர்களைப் பெற்றார்.

பின்னர் அவரது இளைய சகோதரர் சஞ்சய் காந்தியும் அதே பள்ளிக்கு வந்து சேர்ந்தார். பள்ளி படிப்பு முடிந்த பின்பு ராஜிவ் காந்தி பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். விரைவிலேயே லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரிக்கு மாறினார். அங்கு மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் பிரிவை எடுத்துப் படித்தார்.

பாடங்களை வெறுமனே மனப்பாடம் செய்வதில் ஆர்வம் இருந்ததே இல்லை என்று பின்னர் அவர் ஒப்புக் கொண்டார். அவர் ஒருபோதும் அரசியலில் ஈடுபட ஆர்வத்துடன் இருந்ததில்லை. அவரது புத்தக அலமாரிகள் எப்போதும் அறிவியல் மற்றும் பொறியியல் புத்தகங்களை கொண்டதாகவே இருக்கும். ஒருபோதும் தத்துவம், அரசியல் அல்லது வரலாறு போன்ற நூல்களை கொண்டதாக இருந்ததில்லை.

அவர் மிகவும் ஆர்வத்துடன் இருந்த மற்றொரு விஷயம் இசை. மேற்கத்திய மற்றும் இந்துஸ்தானி இசை ரசிகரான அவர் நவீன இசை குறித்தும் அறிந்து வைத்திருந்தார். புகைப்பட கலை, ரேடியோ ஒலிபரப்பு போன்றவற்றிலும் ஆர்வம் மிக்கவர். எனினும் விமானத்தில் பறப்பது ஒன்றே அவரது இலக்காக இருந்தது.

இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியவுடன் டில்லி பிளையிங் கிளபில் இணைந்த அவர் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் தொழில் முறை பைலட்டுக்கான உரிமத்தையும் பெற்றார். விரைவிலேயே இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஒரு விமான ஓட்டியாக சேர்ந்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, இத்தாலி மாணவியான சோனியா மீனுவுடன் ராஜீவ் காதல் வயப்பட்டார். சோனியா, பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயில வந்திருந்தார். இவர்களது காதலுக்கு சோனியாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனவே, சோனியா ராஜிவ் காந்தியுடன் இந்தியா வந்தார். அவர்கள் இருவரும் 1968ல் திருமணம் செய்து கொண்டார்கள்.

1966ல் தனது தாய் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற சமயத்தில், ராஜிவ் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவத்தில் தொழில்முறை பைலட்டாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. டில்லியில் பிரதமர் இல்லத்தில் தனது தாயுடன் வாழவும் இல்லை.

1970ல் ராஜீவ்-சோனியா தம்பதிக்கு முதல் குழந்தையாக ராகுல் பிறந்தார். 1972ல் இரண்டாவது குழந்தையாக பிரியங்கா பிறந்தார். இந்த குடும்பத்தைச் சுற்றி அரசியல் சூழல் இருந்தபோதிலும் இவர்கள் தனிப்பட்ட முறையில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ஆனால் 1980ல் சஞ்சய் காந்தி ஒரு விமான விபத்தில் இறந்தது, இவர்களது வாழ்க்கையின் திசையை மாற்றியது. தனது தாய்க்கு உதவி செய்யவும், அதன்பொருட்டு அரசியல் நுழையவும் ராஜிவ் காந்திக்கு நிர்பந்தம் அதிகரித்தது.

அந்தச் சமயத்தில் இந்திரா காந்தி பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களால் சூழப்பட்டிருந்தார். முதலில் இத்தகைய நிர்பந்தங்களை ராஜீவ் காந்தி எதிர்த்தார். பின்னர் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டார். தனது சகோதரனின் மரணத்தால் வெற்றிடமான உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலிருந்து இடைத்தேர்தலில் வெற்றிபெற்று முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

1982 நவம்பரில் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. இதற்காக பிரமாண்டமான விளையாட்டு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பணிகளில் ராஜீவ் காந்தி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் எவ்வித தடையுமின்றி சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்தார். முதலில் தனது திறமையை வெளிப்படுத்துவதில் முழுமையான ஒத்துழைப்பு இல்லாத நிலை இருந்தது. எனினும் காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்ற முறையில் தனது கட்சி ஸ்தாபனத்தை முழுமையாக பயன்படுத்தி சவால்களை எதிர்கொண்டார்.

அவரது இந்த திறமைகள் கடினமான சூழலில் தலைமை ஏற்கும் லாவகத்தை அவருக்கு அளித்தது.
இந்தியாவின் பிரதமராகவும், காங்கிரஸின் தலைவராகவும் ஒரே நேரத்தில் இரண்டு பொறுப்புகளையும் ஏற்றுச் செயல்பட வேண்டிய நிலை, ராஜிவ் காந்திக்கு.

1984 அக்டோபர் 31ல் அவரது தாய் மிகக் கொடூரமான நிலையில் படுகொலை செய்யப்பட்டார்.

துயரகரமான சூழ்நிலையில் தனிப்பட்ட தனது துயரத்திற்கு மத்தியில் அதை வெளிப்படுத்தாமல் தேசத்தின் பொறுப்பினை தனது தோல்களில் ஏற்றுக் கொண்டார் ராஜிவ் காந்தி.
அந்த மாதம் முழுவதும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராஜிவ் காந்தி நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஓய்வின்றி பயணித்தார். இந்த பூமியின் ஒட்டுமொத்த சுற்றளவில் ஒன்றரை மடங்குக்கு சமமான தூரம் அவர் பிரயாணம் செய்து மக்களை சந்தித்தார்.

250க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற பொதுகூட்டங்களில் அவர் உரையாற்றினார். இந்த கூட்டங்களிலும் தனது பயணத்தின் வழிநெடுகிலும் கோடிக்கணக்கான மக்களை அவர் நேரில் சந்தித்தார்.

நவீன சிந்தனையும், தீர்மானகரமான உறுதிப்பாடும் கொண்ட மனிதரான ராஜிவ் நவீன தொழில்நுட்ப உலகத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்கும் அதே நேரத்தில், நாட்டை 21ஆம் நூற்றாண்டை நோக்கி அழைத்துச் செல்வதே தனது முக்கிய இலக்கு என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார்.

பிரதமரான பின்னர் ராஜிவ் காந்தி, இந்திரா காந்தியின் சோஷலிஸ கருத்துக்கள் கொண்ட பாதையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பாதையில் பயணம் செய்தார். இந்திரா காந்தி காலத்தில் சோஷலிஸ கருத்துக்கள் மேலோங்கி இருந்தன. சோவியத் ஒன்றியத்துடன் இந்தியா நெருங்கிய நட்புறவு பாராட்டி வந்தது.

ஆனால், ராஜிவ் காந்தி அமெரிக்காவுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த துவங்கினார். அமெரிக்காவுக்கு நெருக்கமானவராக இந்தியாவை மாறத் துவங்கினார். அமெரிக்காவுடன் பொருளாதாரம் மற்றும் அறிவியல் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொண்டார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அரசின் ஆதரவுகளை அதிகப்படுத்தினார். அது தொடர்பான தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

இறக்குமதி வரிகளைக் குறைத்தார். குறிப்பாக கணிப்பொறிகள், விமானங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு பெருமளவு வரி குறைக்கப்பட்டது. தனிநபர்கள் மூலதனம் போடும் தொழில்கள், நுகர்பொருள் இறக்குமதி போன்றவற்றிற்கு தடையாக இருந்த லைசென்ஸ் ராஜியத்திற்கு கட்டுப்பாடு விதித்தார். அந்நிய நிறுவனங்கள் முதலீடுகளை கொண்டுவர தடையாக இருக்கும் அரசு அதிகாரிகளின் சிவப்பு நாடா முறையினை முடிவுக்கு கொண்டு வந்தார்.

1986ல் இந்தியாவின் உயர்கல்வி துறையை விரிவு படுத்தவும், நவீனப்படுத்தவும் ஒரு தேசிய கல்விக் கொள்கையை அவர் அறிவித்தார். 1986ல் ஜவஹர் நவோதயா வித்யாலயா என்ற கல்வி முறையினை உருவாக்கினார். இந்தியாவில் தொலைத்தொடர்பு புரட்சிக்கு வித்திட்டவர் ராஜிவ் காந்தி என்று கூறலாம்.

1986ல் எம்.டி.என்.எல் நிறுவனத்தை உருவாக்குவதிலும், இன்றைக்கு பொதுதொலைபேசி மையம் என்று அழைக்கப்படும் பொது மையங்களை உருவாக்குவதிலும், கிராமப்புறங்களிலும் தொலைபேசிகள் மிக எளிதில் பரவியதற்கும், காரணமாக இருந்தார். அவர் ஆற்றிய இந்த பணிகள்தான் 1990களில் இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு ராணுவம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் அதிகாரம் அளித்தார். பஞ்சாபில் மதரீதியான சட்டங்களே செல்லும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. குடிமக்களின் உரிமைகள், வர்த்தகம், சுற்றுலா போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்த காலக்கட்டத்தில் அங்கு காவல்துறை அதிகாரிகளால் மனித உரிமை மீறல்களும், அதேபோல பயங்கரவாதிகளின் அட்டூழியங்களும் அதிகரித்தன. பஞ்சாபில் நிலைமையை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டதன் காரணமாக நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து தமிழீழம் அமைத்து போராடும் விடுதலைப் புலிகளுக்கு இந்தியா உதவுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்தியா-இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடந்து அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1987 ஜுலை 29ல் கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தை முடிவில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டில் ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனேயும் கையெழுத்திட்டனர். இந்த சமயத்தில்தான் கொழும்பு நகரில் ராஜிவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்ட போது விஜயமுனிகே ரோகன டி சில்வா என்ற சிங்கள கடற்படை வீரர் ராஜீவ் காந்தியை தனது துப்பாக்கி கட்டையால் திடீரென தாக்கினார்.

அதிர்ச்சி அடைந்த இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனே இந்த தாக்குதல் முயற்சியை கண்டித்தார். இதன்பின்னர் உடனடியாக ராஜிவ் புதுதில்லி திரும்பினார்.

இலங்கை அரசும் இந்திய அரசும் அவசர அவசரமாக ஏற்படுத்திய அமைதி உடன்பாட்டை விடுதலைப் புலிகள் மீது திணித்தனர். அந்த அமைதி உடன்பாடு தமிழ் பகுதியில் இந்திய அமைதிப் படையை நிறுத்த வகை செய்தது. ஆனால், அமைதிப் படை விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் வேட்டையாடியது. அதைத் தொடர்ந்து அமைதிப் படைக்கு எதிராகவே விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ராஜிவ் அரசின் உடன்பாடு குப்பைக்கு போயிற்று. இந்திய அமைதிப் படையின் உதவியோடு இலங்கை அரசு யாழ்பாணத்தை தன்வசப்படுத்தியது.

ராஜிவ் காந்தியின் நிதியமைச்சரா இருந்த விஸ்வநாத் பிரதாப் சிங், அரசுக்கும் அரசியல் ரீதியான ஊழல்களுக்கும் இருக்கும் தொடர்புகள் குறித்த விவரங்களை வெளியிட்டார். இதனால் காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இதையெடுத்து வி.பி. சிங் பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார். அந்த அமைச்சகத்தில் நடந்த ஊழல்களையும் வி.பி. சிங் வெளிப்படுத்தினார்.

இப்படித்தான் போபர்ஸ் பீரங்கி ஊழல் அம்பலமானது. லட்சக்கணக்கான டாலர் சம்மந்தப்பட்ட இந்த ஊழலில் இத்தாலிய வர்த்தக பிரமுகரும் சோனியா காந்தியின் குடும்ப நண்பருமான ஒட்டாவியோ குவாத்ரோச்சி என்பவர், இந்திய ராணுவ தளவாட கான்ட்ராக்டுகளுக்காக ஸ்வீடனைச் சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்துடன் லஞ்ச பணத்தை கைமாற்றும் வேலையை செய்தார் என்பது தெரியவந்தது.

இந்த ஊழல் அம்பலமானதை தொடர்ந்து வி.பி. சிங் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ராஜிவ் காந்தி இந்த ஊழலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.

ஆனால், ஒரு மதிப்பு மிக்க அரசியல்வாதி என்ற ராஜிவின் மாண்பை தகர்க்கும் விதத்தில் போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் அனைத்து விபரங்களையும் துருவித்துருவி ஆராய்ந்து தி இந்து நாளேட்டில் என். ராமும், சித்ரா சுப்பிரமணியமும் முழுமையாக வெளியிட்டனர். எனினும், 2004ஆம் ஆண்டில் இந்த ஊழல் வழக்கில் ராஜிவ் காந்தி குற்றமற்றவர் என்று கூறப்பட்டது.

இதனிடையே அரசின் ஊழல்களை வெளியுலகிற்கு கொண்டு வந்த வி.பி. சிங்கின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்தது. எதிர் கட்சிகள் அனைத்தும் அவரது தலைமையில் ஒன்றிணைந்தன. ஜனதாதளம் தலைமையில் தேசிய முன்னணி என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கின.

1989 தேர்தலில் காங்கிரஸ் மிகக் கடுமையான தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் கம்யூனிஸ்டுகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் வி.பி. சிங் தலைமையில் தேசியமுன்னணி அரசு அமைந்தது. ராஜிவ் காந்தி எதிர்கட்சி தலைவராக செயல்பட்டார். காங்கிரஸ் தலைவராகவும் தொடர்ந்தார்.

ஆனால், 1990ல் வி.பி. சிங்கின் ஆட்சியை கவிழ்க்க ராஜிவ் காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் முயற்சி செய்தனர். ஜனதா தளத்தில் முக்கிய தலைவராக இருந்த சந்திரசேகருக்கு பிரதமர் ஆசை காட்டினர். ஜனதா தளத்திற்குள் இருந்த முரண்பாடுகளை வைத்து அவரை பிரதமராக்குவதாக உறுதி அளித்தனர். ஆளும் கூட்டணிக்குள் புயலை கிளப்பினர்.

குறிப்பாக மண்டல் கமிஷன் பரிந்துரையின் படி மத்திய அரசு பணிகளில் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வி.பி.சிங் வகை செய்தார். இதையே முக்கிய பிரச்சனையாக கிளப்பி விட்டனர். இது அரசு வீழ்வதற்கு காரணமாக இருந்தது.

இதைத் தொடர்ந்து ராஜிவ் காந்தியின் காங்கிரஸ், சந்திரசேகருக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. இதைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமர் ஆனார். எனினும் இந்த ஆதரவையும் அடுத்த ஆண்டிலேயே அதாவது 1991ல் காங்கிரஸ் வாபஸ் பெற்றுக் கொண்டது. இதனால் சந்திரசேகர் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் புதிதாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்ட அமைதி உடன்படிக்கையை அப்போதைய இலங்கை பிரதமர் ரணசிங்க பிரேமதாசா எதிர்த்தார். ஆனால், அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்தனேயின் நிர்பந்தம் காரணமாகவே அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் 1989ல் இலங்கையில் ஜனாதிபதியாக பிரேமதாசா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய அமைதிப்படை விலகிக்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து இலங்கையில் மேலோங்கியது. இந்த கருத்தை முன்வைத்தே தேர்தலில் இலங்கை சுதந்திரா கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் போட்டியிட்டன. இந்த கட்சிகள் 95 சதவீத வாக்குகளைப் பெற்றன.

இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய அமைதிப்படையை விலக்கிக் கொள்ள ராஜிவ் காந்தி மறுத்தார்.

ஆனால், 1989 டிசம்பரில் இந்தியாவில் நடந்த தேர்தலில் வி.பி. சிங் வெற்றிபெற்று பிரதமரானார். இலங்கை பிரதமர் பிரேமதாஸாவின் விருப்பப்படி இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்த அமைதிப்படையை திரும்ப அழைத்துக் கொண்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் இந்திய அமைதிப்படை நடத்திய நடவடிக்கைகளில் 1100க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ரூ 2000 கோடிக்கும் அதிகமாக செலவானது.

1985ல், விவாகரத்து செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அளித்தது. தனது கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட ஷா பாணு என்ற அந்த பெண்ணுக்கு அவரது கணவர் வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் ஆக்கிரமிப்பு ஆகும் என்று இந்தியா முழுவதிலும் இருந்த முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் கூச்சலிட்டனர். இந்த தீர்ப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். “மதச்சார்பின்மை” என்பதற்கு உதாரணமாகவே அவர்களது கோரிக்கையை ஏற்பதாக கூறினார்.

1986ல் நாடாளுமன்றத்தின் முழுமையான பெரும்பான்மையைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி ஷா பாணு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருந்த அந்த மகத்தான தீர்ப்பினை நீர்த்துப்போகச் செய்யும் விதத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஷா பாணு வழக்கு இந்தியாவில் மிகப்பெரும் வாதப்பிரதிவாதத்தைக் கிளப்பிய குறிப்பிடத்தக்க வழக்காகும்.

இந்த வழக்கு, இந்தியாவில் சிறுபான்மை மதங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ள அடிப்படை வாதிகள் அரசு மற்றும் நீதித்துறை முடிவுகளின் மீது நிர்பந்தங்களை செலுத்தமுடியும் என்பதை நிரூபித்தது. இத்தகைய மோசமான முடிவினை கிட்டதட்ட அனைத்து ஊடகங்களும் எதிர்த்தன. பா.ஜ.க வுக்கு ஆதரவாக சமரசம் செய்து கொள்ளும் போலிமதச்சார்பின்மை பேசி காங்கிரஸ் கட்சி மேற்கொண்டிருந்த கொள்கைகளை எதிர்கட்சிகள் கடுமையாக கண்டித்தன.

இந்த வழக்கின் காரணமாக தங்களது கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் முஸ்லிம் பெண்கள் ஒரே தவணையில் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு விலகிக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவானது. மாதம்தோறும் 500 ரூபாய் ஜீவனாம்சம் பெறுவதற்கு பதிலாக மொத்தமாக பணத்தைக் கொடுத்து விலக்கிவிடுவது என்ற நிலை ஏற்பட்டது. இதற்குப் பின்னர் ஒரே தவணையில் பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு விவாகரத்து வழங்கப்படுவது முஸ்லிம் பெண்களிடையே நடைமுறைக்கு வந்துவிட்டது.

ராஜிவ் காந்தியின் கடைசி பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் நடந்தது.
1991 மே 21 ஆம் தேதி சென்னை மாநகரிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற அந்த பொதுக் கூட்டத்தில்தான் அவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது நடைபெற இருந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவையில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அவர் வந்திருந்தார்.

சமீபத்தில் அவர் படுகொலை செய்யப்பட்ட அந்த இடத்தில் ராஜிவ் காந்தி நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இன்றைக்கு அந்த இடம் ஒரு முக்கிய சுற்றுலா மையமாகவும், தொழில் நகரமாகவும் மாறியுள்ளது.

Leave A Reply