இந்தியப் பிரதமர்கள் – 8.சமூகநீதி காவலர் வி.பி. சிங்

Share

இவரும் ராஜா வீட்டுக் கன்னுக் குட்டிதான்.

ஆனால், சமூகநீதிக் காவலர் என்று பெயரெடுத்தவர். கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்.

அலகாபாத்தில் மண்டா என்ற சமஸ்தானம் இருந்தது. ரஜபுத்திர கஹர்வால் ரதோர் என்ற அரச குடும்பத்தில் பிறந்தவர் வி.பி.சிங். அந்த அரச குடும்பத்தில் ராஜா பகவதி பிரசாத் சிங் என்பவருக்கு 1931 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி மகனாக பிறந்தார்.

அவருக்கு ஐந்து வயது நிரம்பியபோது, மண்டாவின் ராஜா பகதூர் ராம் கோபால் சிங் அவரை தத்து எடுத்துக் கொண்டார்.

விஸ்வநாத் பிரசாத் சிங் என்று அவருக்கு பெயரிடப்பட்டது.

தொடக்கக் கல்வி முழுவதும் அரண்மனையிலேயே அளிக்கப்பட்டது. பள்ளியில் படிக்க வேண்டும் என்று விரும்பினார் வி.பி.சிங்.

இதையடுத்து, டேராடூனில் உள்ள கர்னல் பிரவுன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஐந்து ஆண்டுகள் படித்தார்.

பிறகு, அலகாபாத் மற்றும் பூனா பல்கலைக்கழகங்களில் படித்தார். 1955ம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி சீதா குமாரி என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

அலகாபாத்தில் உள்ள கொரானில் கோபால் வித்யாலயா என்ற இன்டர் மீடியட் கல்லு£ரியை உருவாக்கியவர். 1947&48ல் வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்தார். அலகாபாத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார்.

1957ல் பூதான இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். அலகாபாத் மாவட்டத்தில் உள்ள பாஸ்னா கிராமத்தில் தனக்கு சொந்தமாக இருந்த ஒரு பெரும் பண்ணையை பூதான இயக்கத்திற்கு தானமாகத் தந்தார்.

நேரு காலத்தில் அவர் அலகாபாத்தில் உள்ளூர் அரசியலில் நுழைந்தார் வி.பி.சிங். அவரது செயல்பாடுகளால் விரைவிலேயே மாநில காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான நபராக உருவானார்.

1969&71ல் அலகாபாத் பல்கலைக்கழக செயற்குழு அரங்கின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினரானானர்.

அதே ஆண்டு, உத்திரப்பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினரானார். 1970&71ல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவரானார்.

1970&74ல் நாடாளுமன்ற உறுப்பினரானார். 1974 அக்டோபர் முதல், 1976 நவம்பர் வரையில் மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.

1976 நவம்பர், 1977 மார்ச்சில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார். 1980, ஜனவரி 3, ஜூலை 26ல் நாடாளுமன்ற உறுப்பினாராகப் பணியாற்றினார். 1983, ஜூலை 16, 1981 ஜூன் 15ல் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

1983 ஜனவரி 29ல் மத்திய வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார். பிப்ரவரி 15ந்தேதி விநியோகத்துறை அவருக்கு கூடுதல் பொறுப்பாக தரப்பட்டது. 1983 ஜூலை 16ந் தேதி மாநிலங்களவை உறுப்பினாரானார். 1984 செப்டம்பர் 1ந்தேதி உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரானார். 1984 டிசம்பர் 31ந்தேதி மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.

நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தபோது தங்கக் கடத்தலை தடுக்க வித்தியாசமான திட்டங்களை அறிவித்தார். தங்கம் இறக்குமதிக்கான வரிகளை குறைத்தார். கடத்தல் தங்கத்தைக் கைப்பற்றும் போலீசாருக்கு அவர்கள் கைப்பற்றிய தங்கத்தில் ஒரு பகுதியை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். நிதி அமைச்சகத்தின் செயலாக்க இயக்குனரகம் வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடிக்கும் துறை ஆகும். இந்தத்துறைக்கு கூடுதல் அதிகாரத்தை வி.பி.சிங் அளித்தார்.

அவர் நிதி அமைச்சராக இருந்தபோது, திருபாய் அம்பானி உள்ளிட்ட நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர்களின் வீடுகளில் சோதனை நடந்தது. அந்த தொழில் அதிபர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி அளித்தவர்கள்.

எனவே, காங்கிரஸ் தலைமையிடம் அதிருப்தியை சம்பாதித்தார். அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வி.பி.சிங்கின் நிதி அமைச்சர் பதவியை பறிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் தனது துணிச்சலான நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் வி.பி.சிங் புகழ் பெற்றிருந்தார்.

தொழில் அதிபர்களின் வற்புறுத்தலைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ராஜிவ் காந்திக்கு ஏற்பட்டது. எனவே, வி.பி. சிங்கிடமிருந்து நிதி அமைச்சர் பதவியை பறித்து விட்டு, அதற்குப் பதிலாக பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை கொடுக்க வேண்டியிருந்தது.

அந்தப் பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். அங்கும் அவர் தனது தூய்மை முயற்சியை கைவிடவில்லை. தனது நேர்மையான பணிகளை அங்கும் தொடர்ந்தார். வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்புத்துறை கொள்முதல் செய்யும் ஆயுதங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

சுவிட்சர்லாந்தில் இருந்து போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் நடைபெற்ற ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் ராஜீவ் காந்திக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது.

ஆத்திரமடைந்த ராஜிவ் வி.பி.சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து பதவி நீக்கினார். அதற்கு பதிலடியாக, வி.பி.சிங் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

அருண்நேரு, ஆரிப் முகமது கான் ஆகியோரும் வி.பி.சிங்குடன் வெளியேறினர். இவர்கள் இணைந்து ஜன்மோர்ச்சா எனும் புதிய கட்சியை தொடங்கினர். அதன்பிறகு அலகாபாத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அனில் சாஸ்திரியை தோற்கடித்து, மீண்டும் எம்.பி.யானார்.

1988 அக்டோபர் 11ந்தேதி. ஜனதா கட்சியின் ஆதர்ஷத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாள். அன்றைய தினம் ஜனதா, லோக்தள், காங்கிரஸ்(எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கின. ராஜீவ் காந்தி அரசை எதிர்த்து உருவான இந்த புதிய கட்சியில் ஜன்மோர்ச்சாவும் இணைந்தது. இந்தக் கட்சி 1989ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டது.

காங்கிரஸ் எதிர்ப்பாளர்களான பாரதிய ஜனதா கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தன. காங்கிரசை எதிர்த்த இந்த அணிக்கு தேசிய முன்னணி என பெயரிடப்பட்டது. மூன்று முனைகளில் இருந்த எதிர்க்கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்ததால், காங்கிரஸ் கட்சி அந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றது. தேசிய முன்னணி பெரும் வெற்றியை பெற்று புதிய அரசை அமைத்தது. புதிய அரசுக்கு பாஜகவும் இடதுசாரிகளும் வெளியில் இருந்து ஆதரவளித்தனர்.

தேசிய முன்னணி அரசில் யார் பிரதமராவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் டிசம்பர் முதல் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பிரதமர் பதவிக்கு வி.பி.சிங் தன்னைத்தான் முன்னிறுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அரியானா மாநிலத்தில் இருந்து வந்த ஜாட் தலைவர் தேவிலாலை பிரதமர் பதவிக்கு முன் மொழிந்தார் வி.பி.சிங். எல்லோரும் அதிர்ந்தனர். குறிப்பாக சந்திரசேகர் அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை. இதில் முக்கிய திருப்பமாக, வி.பி.சிங்கின் முன்மொழிவை தேவிலால் நிராகரித்தார்.

அரசுக்கு ஆலோசனை சொல்லும் மூத்த மனிதராக மட்டும் நான் இருந்து விட்டுப் போகிறேன் என்று தேவிலால் கூறினார். அதுமட்டுமல்ல, வி.பி.சிங்தான் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர். அவர்தான் பிரதமராக வேண்டும் என்று கூறினார்.

வி.பி.சிங் பிரதமராவதற்கு ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்தார். வி.பி.சிங் பிரதமரானால் இந்த அரசில் தன்னால் பங்கேற்க முடியாது என்று கூறிவிட்டு ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியேறினார். மற்றவர்கள் அனைவரும் ஒருமனதாக வி.பி.சிங்கை பிரதமராகத் தேர்வு செய்தனர். 1989 டிசம்பர் 2ந்தேதி வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்றார். 1990 நவம்பர் 10ந்தேதி வரையில் அவர் அப்பதவியில் இருந்தார்.

வி.பி.சிங் பதவியேற்ற சில நாட்களிலேயே அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத்(காஷ்மீர் முன்னாள் முதல்வர்) மகள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். வி.பி.சிங் அரசுக்கு ஏற்பட்ட முதல் நெருக்கடி இது.

சயீத்தின் மகளை விடுவிக்க வேண்டுமெனில் அப்போது சிறையில் இருந்த பயங்கரவாதிகள் சிலரை விடுவிக்க வேண்டும் என பயங்கரவாதிகள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி வி.பி.சிங் அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதை ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டுவர பாஜகவின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஜக்மோகனை ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக நியமித்தார் வி.பி.சிங். காஷ்மீர் இஸ்லாம் அமைப்பின் அதிகாரப்பூர்வமற்ற தலைவரான மிர்வாய்சின் இறுதிச் சடங்கின் போது துப்பாக்கிச் சூடு நடத்த ஜக்மோகன் ஆணை பிறப்பித்தார். இது காஷ்மீரில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பஞ்சாப்பில் அப்போது சித்தார்த்த சங்கர் ரே ஆளுநராக இருந்தார். இவர் கண்டிப்பானவர் எனப் பெயர் பெற்றவர். வி.பி.சிங் அவரை மாற்றிவிட்டு நிர்மல் குமார் முகர்ஜியை ஆளுநராக நியமித்தார். அவர் பஞ்சாபில் புதிய தேர்தலை நடத்தத் திட்டமிட்டார். புளூஸ்டார் நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக வி.பி.சிங் பொற்கோயிலுக்கு சென்றார்.

ராஜிவ் பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டது. அங்கு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற சண்டையில் அமைதிப்படை தோல்வியை தழுவியது. சுமார் 1000 இந்தியப் படையினர் இப்போரில் கொல்லப்பட்டனர். சுமார் 5ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அமைதிப் படையை அனுப்பிய வகையில் இந்திய அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவானது. அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசா அமைதிப் படையை வெளியேறும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, வி.பி.சிங் அமைதிப் படையை வாபஸ் பெற்றார்.

வி.பி.சிங் ஒரு சமூகநீதி சிந்தனையாளராக இருந்தார். இடஒதுக்கீடு ஆதரவாளரான அவரை வடநாட்டில் இருந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் பெருவாரியாக ஆதரித்தனர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரை அளித்திருந்தது. இந்திரா காலத்திலிருந்து இந்த பரிந்துரை கிடப்பில் போடப்பட்டிருந்தது. மண்டல் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வி.பி. சிங், மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 29 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை, இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களும் உயர்ஜாதியினரும் கடுமையாக எதிர்த்தனர். வி.பி.சிங் அரசை எதிர்த்து அவர்கள் வட நாட்டில் கலவரத்தை தூண்டி விட்டனர்.

ஏற்கனவே இடஒதுக்கீடு போன்ற சமூகநீதிக் கொள்கைக்கு பாஜகவினர் எதிரானவர்கள். வி.பி.சிங் அரசு மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அரசுக்கு வெளியில் இருந்து அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்ள முடிவெடுத்தனர்.

வி.பி.சிங் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த ராமஜென்ம பூமி பிரச்சனையை கையில் எடுத்தனர்.

அயோத்தியை நோக்கி அத்வானி ரதயாத்திரையை துவக்கினார். நாடு முழுவதும் மதக்கலவரத்தை தூண்ட அவர்கள் திட்டமிட்டனர். இதை தடுக்க விரும்பிய வி.பி.சிங் அத்வானியின் ரதயாத்திரையை பாதியில் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்ய உத்தரவிட்டார். பாஜகவினர் தேசிய முன்னணி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

வி.பி.சிங் தான் கொண்டிருந்த மதசார்பின்மை, சமூகநீதி போன்ற கொள்கைக்காக நம்பிக்கை வாக்குகோரும் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் இருந்த மொத்த வாக்குகள் 346ல் 142ஐ மட்டுமே வி.பி.சிங் அரசு பெற முடிந்தது. தேசிய முன்னணி அரசு கவிழ்ந்தது.

இதையடுத்து பதவி வெறிபிடித்து அலைந்து கொண்டிருந்த சந்திரசேகர், ஜனதா தள் கட்சியை விட்டு வெளியேறி சமாஜ்வாதி ஜனதாதள் என்ற கட்சியை தொடங்கினார். அவருடன் 64 எம்பிக்கள் இருந்தனர். ராஜீவ் காந்தி ஆதரவோடு வெறும் 64 எம்பிக்களை மட்டுமே வைத்திருந்த சந்திரசேகர் பிரதமரானார்.

சில நாட்கள் மட்டுமே சந்திரசேகரால் பிரதமராக இருக்க முடிந்தது. அந்த சில நாட்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற திமுக அரசாங்கத்தை ஆளுநரின் கையெழுத்து இல்லாமலேயே டிஸ்மிஸ் செய்ய காரணமாக இருந்தார். ராஜீவ் காந்தியும் ஜெயலலிதாவும் சேர்ந்து இந்த கொடூரமான சதியை அரங்கேற்றினர். அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன், ஆளுநர் கையெழுத்து போடாவிட்டாலும், அதர்வைஸ் என்ற ஒரு வார்த்தை தனக்கு அதிகாரம் அளிப்பதாக கூறி இந்திய வரலாற்றில் கேடுகெட்ட அத்தியாயத்தை தொடங்கி வைத்தார்.

இந்தக் காரியம் முடிந்ததும் சந்திரசேகருக்கு கொடுத்து வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சி திடீர் என்று வாபஸ் பெற்றது. சந்திரசேகர் ஆட்சி கவிழ்ந்தது. அடுத்து பொதுத் தேர்தல் வந்தது.

இந்தத் தேர்தலில் வி.பி.சிங் போட்டியிடவில்லை. தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அவர் அறிவித்தார். அடுத்த சில ஆண்டுகள் அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமூக நீதிக் கொள்கைகளை பிரச்சாரம் செய்தார்.

தேசிய முன்னணியில் அடுத்து வந்த தலைவர்கள் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் 1990 இறுதியில் மத்தியில் ஆட்சிக்கு வந்தனர். அப்போது அரசுக்கு ஒரு நல்ல ஆலோசகராக சிங் செயல்பட்டார். 1998ல் வி.பி.சிங்கை புற்றுநோய் தாக்கியது. இதையடுத்து அவரால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

2003ல் அவரது நோய் கொஞ்சம் தணிந்தது. மீண்டும் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் துவங்கினார். அவரது முந்தைய ஜனதாதளத்தில் இருந்து பிரிந்த பல கட்சிகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வி.பி.சிங்கின் சமூக நீதிக்கொள்கைகளை பின்பற்றி பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகள் புதிதாக உருவாயின. 2005ல் வி.பி.சிங் மீண்டும் ஜன்மோர்ச்சாவை ஆரம்பித்தார்.

உத்திரப்பிரதேசத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக ஆக்ரமிக்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் போராட்டம் நடந்தது. காசியாபாத்தில் நடந்த போராட்டத்தில் வி.பி.சிங் கலந்து கொண்டார். அதில் அவர் கைது செய்யப்பட்டார்.

புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட வி.பி.சிங் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி டில்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

அவர் நல்ல கவிஞராகவும், கற்பனை வளமிக்க ஓவியராகவும் இருந்தார். பல்வேறு நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.

Leave A Reply