ஒரு ஊருக்கு மூன்று பாதைகள்! – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

Share

அப்பா பேரு அலங்காரம். அதோடு சாதிப் பேரும் சேத்து வரும். பள்ளிக்கூடத்திலேயே அப்படித்தான் பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஏன்னா, அப்பாவோட தாத்தா பேரு அதுதானாம். அந்தத் தாத்தாவோட அப்பா பேரு பெருமாள். அதை எனது அப்பாவின் தம்பிக்கு வைத்திருக்கிறார்கள்.

அதுகிடக்கட்டும். அப்பாவோட பேரைச் சொல்லி அப்பத்தா உட்பட யாரும் கூப்பிட்டதில்லை. மாமனாரு பேரை சொல்லக் கூடாதில்லையா? அதுகூட பரவாயில்லங்க. அலங்காநல்லூர் என்ற பேரைக்கூட சொல்லமாட்டாங்க. அதை எப்படி கூப்புடுவாங்கனு சொல்றீங்களா? ஸ்டேஷனூரு என்றுதான் அலங்காநல்லூரை சொல்லுவார்கள்.

எங்கள் பகுதிக்கு போலீஸ் ஸ்டேஷன் இருக்கிற ஒரே ஊர் அலங்காநல்லூர்தான். வாரச் சந்தைகூடும். ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும். யூனியன் ஆபீஸ் இருக்கும். போஸ்ட் ஆபீஸ், மின்சார அலுவலகம் எல்லாமே அங்குதான் இருந்தது.

மதுரையிலிருந்து ஒரே ஒரு தனியார் பஸ் மட்டும் வரும். பாரதா டிரான்ஸ்போர்ட் என்று பெயர். எங்கள் ஒன்றியத்தின் தலைநகர் என்பதால், அங்கு ஒரு மரக்கடை தொடங்கினார் தாத்தா. பள்ளிக்கூடம், பஞ்சாயத்து அலுவலகம் கட்டும் காண்ட்ராக்ட்கூட எடுத்தார்.

அதைக் கவனிக்க அப்பா அலங்காநல்லூரிலேயே இருக்க வேண்டியதாயிற்று. மரம் அறுவை, மரச் சாமான்கள் செய்வதற்கு மலையாளி ஆசாரிகள் சிலர் எங்கள் இடத்திலேயே தங்கி வேலை செய்தார்கள். அதனால, என்னையும் அக்காவையும் அலங்காநல்லூர் பள்ளியிலேயே சேத்துட்டாங்க. நானும் அக்காவும் முதலில் போனது தனியார் இடத்தில் இருந்த கூரைப்பள்ளிக்கூடம். பிறகுதான், இன்றைக்கு இருக்கிற யூனியன் ஆபீஸ் அருகே மாற்றினார்கள்.

அலங்காநல்லூரிலிருந்து எங்க ஆதனூருக்கு 3 கிலோமீட்டர். ஊருக்கு வரனும்னா 3 பாதைகள் இருந்தன. இந்த மூன்று பாதைகளில் ஒன்று காட்டுவழி வண்டிப்பாதையாகவும். இன்னொன்று பஸ், மற்றும் வண்டிகள் போகும் ஒற்றை சாலையாகவும் இருந்தன.

மழைக்காலத்துல ஒரு பாதை, வெயில் காலத்துல ஒரு பாதை, பொதுவா ஒரு பாதைனு பயன்படுத்துவோம். அலங்கநல்லூரிலிருந்து ஊருக்கு வரனும்னா, பஸ்ல வந்து தேவசேரி பிரிவு என்ற இடத்தில் இறங்கி, சாலை வழியா ஒன்றரை கிலோமீட்டர் நடந்து ஊருக்கு வரனும். தேவசேரிக்கும் ஆதனூருக்கும் இடையே ஒரு ஓடைதான் எல்லை. அந்த ஓடையில் தண்ணீர் வந்தால் நனைந்தபடிதான் கடக்கவேண்டும். பாலமெல்லாம் அப்போ கட்டவில்லை.

சமயத்தில் மரம் அல்லது விறகு ஏற்றிய எங்கள் வண்டி வந்தால் அதில் ஏறி வருவோம். திரும்பிப் போகும்போது பஸ்சில் போவோம், அல்லது நடந்து ஒற்றையடிப் பாதையில் போவோம்.

எங்கள் வீட்டிலிருந்தே அந்த ஒத்தையடிப் பாதைகள் இருக்கும். ஒரு பாதை கட்டியாரங் கண்மாய்க்குள் புகுந்து, மருங்குழி ஓடை தாண்டி, சின்ன ஊர்சேரி பிரிவுக்கு அருகில் மெயின் ரோடைத் தொடும். அங்கிருந்து பெரியாறு பாலத்தை தாண்டி, சந்தைமேடு பாதையில் சாத்தையாறு ஓடை வழியாக அலங்நால்லூருக்குள் நுழையலாம்.

இன்னொரு பாதை வண்டிப்பாதை அளவு இருக்கும். அது கொஞ்சம் கரடு முரடாகவும், ஊரையொட்டிய இருபுறமும் அசிங்கமாகவும் இருக்கும். அந்தப் பாதையை குறுக்கே பிடிக்க, எங்கள் வீட்டிலிருந்து, குறுக்கால வயல் வரப்புகள் வழியாகவும், தண்ணீர் இல்லாவிட்டால் ஓடை பாதை வழியாகவும் கட்டியாரங் கண்மாய் கரைக்கு வருவோம். அங்கிருந்து வயல் வரப்பு வழியாக நொண்டிக்கோவில் அருகே வண்டிப் பாதையில் ஏறுவோம்.

அங்கிருந்து, பெரிய ஊர்சேரிக் கண்மாய் ஓரத்தில் இறங்கி, கேட்கடை வழியாக அலங்காநல்லூர் நுழையனும்.

மழைக்காலத்தில் இந்தப் பாதை வழியாக நடந்தால் பாதை முழுவதும் சலசலவென ஊற்றெடுத்திருக்கும். ஏனென்றால் முழுக்கவும் சரளை நிறைந்த கரட்டுப்பகுதி. அதிலும் ஊர்சேரிக் கண்மாய் அருகில் பால்மாதிரி தண்ணீர் ஊற்றெடுத்து கண்மாய்க்குள்ளும், கண்மாயை ஒட்டிய பாதையிலும் வடிந்து ஓடிக்கொண்டிருக்கும். பெரிய ஊர்சேரி ஊருக்குள் குடிதண்ணீர் கிணறு ஒன்று நிரம்பி, வாய்க்காலில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்.

இப்போது இந்தப் பாதைகள் மறைந்துவிட்டன. பாதைகள் மட்டுமல்ல, எவ்வளவு மழை பெய்தாலும் கரட்டுப் பகுதியில் சலசலத்து வடியும் தண்ணீரை பார்க்கவே முடியவில்லை. காரணம் இரட்டைத் தார்ச்சாலைகள் ஊரைச் சுறறிலும் போட்டுவிட்டார்கள்.

கரடுகளை கரைத்து கிராவல் எடுத்து விற்றுவிட்டார்கள். ஊர் முழுக்க போர் போட்டு, நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டார்கள். தெருக்கள் அனைத்தும் கான்கிரீட் போட்டு மண் தரையை மறைத்துவிட்டார்கள். பேருந்துகளும், ஆட்டோக்களும், டூ வீலர்களும், கார்களும், வேன்களும், டிப்பர் லாரிகளும் எங்கள் ஊரைச்சுற்றி இரைச்சலை ஏற்படுத்தி பறக்கின்றன. சிறுவயதில் நான் பயணித்த அந்த பாதைகளில் இப்போது அதே சுகத்துடன் பயணிக்க விரும்பினாலும், பல இடங்களில் வேலி அடைத்திருக்கிறார்கள்.

ஆனால், நான் பார்த்த நாற்றமெடுத்த ஊர் காணாமல் போயிற்று. வறுமை நிறைந்த வயிறுகளையும், கோவணம் மட்டுமே கட்டியிருந்த பெருசுகளையும், ஒரே வேட்டி, ஒரே சேலையை துவைத்து காயப்போட்டு கட்டிய மனிதர்களையும் காணவில்லை. ஒரு நேரக் கஞ்சிக்காகவும், சிறிதளவு தானியத்துக்காகவும் வேலை செய்த மனிதர்கள் இப்போது இல்லை. அடுப்புப் பற்றவைக்க கொஞ்சம் தீ கங்கு ஓசி கேட்ட, ஒரே ஒரு தீக்குச்சி கடன்கேட்ட, உப்புக்கல்லை கடித்துக் கொண்டு கைகளில் கூழ் வாங்கிக் குடித்த, வருஷக் கூலிக்கு பண்ணை வேலை பார்த்த மனிதர்களை காணவில்லை.

இயற்கையை அழித்துவிட்டதாக இப்போது கூப்பாடு போடும் ஆட்கள், ஓருவேளை அப்போது இருந்திருந்தால், இந்த நிலை வந்திருக்காதோ என்னவோ.

நல்லவேளை இந்த வீணர்கள் அப்போது இல்லை என்பதே மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது. •

Leave A Reply