முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 2 – உறைந்து நின்ற உருவம் – Govi.Lenin

Share

கலைஞருக்கு தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டு, கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நேரம். எப்போதும் போல அவர் உடல் நிலைப் பற்றிய வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. அலைபேசியில் பல நாட்களாக சேமித்துக் கிடந்த பல எண்களிலிருந்தும் அழைப்புகள்.

“இன்னைக்கு நைட்டு அறிவிச்சிடுவாங்களா?”

”அண்ணா சமாதி பக்கத்திலே இடம் ரெடியாகுதாமே”

“ராஜாஜி ஹாலை க்ளீன் பண்ணி லைட்டு போடுறாங்களாமே?”

-என ஆளாளுக்குத் தங்கள் ‘விருப்பங்களை’க் கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலர் அரசியல் பண்பாட்டுடன் கோபாலபுரம் வீட்டுக்கு வந்து நலன் விசாரித்துச் சென்றது, பரபரப்பை அதிகமாக்கிவிட்டது.

நலன் விசாரிக்க வந்த அனைவருக்கும் பொறுமையாகப் பதில் சொன்ன மு.க.ஸ்டாலின் கவனம் வேறொன்றில் இருந்தது. அது பொதுமக்கள் நலன் சார்ந்தது.

தலைவர் உடல்நலன் குன்றியிருந்த நிலையிலும், செயல் தலைவராக அவர் வெளியிட்ட அறிவிப்பை ஆணையாக ஏற்று தமிழ்நாடு முழுவதும், சொத்து வரியை பல மடங்கு உயர்த்திய அ.தி.மு.க அரசைக் கண்டித்து தி.மு.கவினரின் ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டு அதிர்ந்தது. அது பற்றிய விவரங்களை மாலை வரை விசாரித்தபடி இருந்தார்.

நக்கீரன் ஆசிரியருடன் நான் கோபாலபுரம் சென்றபோது, கமல்ஹாசன் வந்து நலன் விசாரித்துவிட்டுச் சென்றார். வி.ஐ.பி.க்கள் வருகை அதிகமானதால், பிரேக்கிங் நியூஸ்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. கலைஞர் நலமுடன் இருக்கிறார் என்று எங்களிடம் சொன்ன முரசொலி ஆசிரியர் செல்வம் தனது வீட்டுக்கு அழைத்தார். “நேற்றைக்கு இன்று பரவாயில்லை” என்றார்.

இன்று போய் நாளை வந்தது. வதந்தியும் சேர்ந்தே வளர்ந்தது. நேரில் வந்து விசாரித்தவர்களுக்குப் பொறுமையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கழகத்தின் செயல் தலைவர் பொறுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின்.

அன்றிரவும் கோபாலபுரம் சென்றேன். “பரவாயில்லை” என்றார் முரசொலி செல்வம். 10.15 மணி வாக்கில்தான் கோபாலபுரம் வீட்டிலிருந்து நக்கீரன் ஆசிரியரும் நானும் திரும்பினோம்.

வீட்டுக்கு வந்து சோற்றில் கைவைத்த நேரம், “கோபாலபுரத்துக்கு ஸ்டாலின் வருகை” என பிரேக்கிங் நியூஸ் ஓடியது. கோபாலபுரம் இல்லத்தில் இருந்தவர்களைத் தொடர்புகொண்டேன். “தலைவருக்கு ரொம்ப முடியலை..” என தழுதழுத்த குரலில் சொன்னார்கள். நக்கீரன் ஆசிரியருக்குத் தகவல் சொன்னேன். இருவரும் விரைந்தோம்.

கலைஞர் வீட்டு வாசலில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. “வாழ்க.. வாழ்க.. வாழ்கவே.. தலைவர் கலைஞர் வாழ்கவே” என ஓயாமல் ஒலித்த உடன்பிறப்புகளின் உணர்ச்சி முழக்கம்தான் கலைஞருக்கான முதல் மருந்து. கூட்டத்தைக் கடந்து வீட்டுக்குள் சென்றால், எல்லாருடைய கண்களும் கலங்கியிருக்கின்றன.

மாடிக்கும் தரைத்தளத்துக்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நெஞ்சு படபடக்கிறது. ஆனாலும், நம்பிக்கை தளரவில்லை. ஓரமாக நின்று கவனிக்க ஆரம்பித்தேன்.

கலைஞரின் கூடவே இருந்து கவனித்துக் கொண்ட செல்வி அக்காவுக்கு கண்ணீர் நிற்கவில்லை. அன்பில் மகேஷ் குலுங்கி அழுகிறார். அசன் முகமது ஜின்னா, இ.பரந்தாமன், தமிழன் பிரசன்னா என நண்பர்கள் எல்லாரும் தழுதழுக்கிறார்கள். ஒருவருக்கும் வார்த்தை வரவில்லை. அங்கிருந்து கவனித்ததில், பதற்றம் குறைவாகவும் பார்க்க வேண்டிய வேலையில் கவனமாகவும் இருந்தவர் கனிமொழி எம்.பி. மட்டுமே.

மாடியிலிருந்து மு.க.அழகிரி இறங்கி வந்தார். கண்ணாடியைக் கழற்றிவிட்டு கண்களை கர்சீப்பால் துடைத்துக் கொண்டார். “தளபதியும் மாடியிலேதோன் தலைவர் பக்கத்தில் இருக்கிறார்’‘ என்றார்கள் அங்கிருந்தவர்கள்.

என்னதான் நிலைமை என்று தெரியவில்லை.

இரவு 1.30 மணி. காவேரி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வந்தது. திரண்டிருந்த உடன்பிறப்புகள் ஓவென அலறினர். சில நொடிகள்தான். மீண்டும், “வாழ்க வாழ்க வாழ்கவே.. தலைவர் கலைஞர் வாழ்கவே” என்ற முழக்கம் அதிர்ந்தது.

சிறிது நேரத்தில், மாடியிலிருந்து கலைஞரை ஸ்ட்ரெச்சரில் கீழே கொண்டு வந்தார்கள். குறுகலானப் படிக்கட்டு என்பதால் மிகுந்த சிரமமாக இருந்தது. படிக்கட்டுப் பக்கத்தில் இருக்கும் சண்முகநாதன் சாருக்கான அலுவல் அறையில்தான் நின்றுகொண்டிருந்தேன். அதனால், கலைஞரை நன்கு பார்க்க முடிந்தது.

அவருக்கு இதயத்துடிப்பு அளவு குறைந்திருந்தது. அங்கிருந்த எல்லோருக்கும் இதயம் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது. ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்த கலைஞரையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறேன். அவரது வாய் அசைந்தது. அந்த அசைவு, “உடன்பிறப்பே…” என்று ஓசையில்லாமல் சொல்வதுபோலவே இருந்தது.

“கலைஞர் இருக்கிறார்“ என்பதே கண்ணீரை மீறிய தெம்பைத் தந்தது. அவரை ஏற்றிய ஆம்புலன்ஸில் துணைக்காகப் பலரும் ஏறிக் கொள்கிறார்கள். உடன்பிறப்புகளின் உணர்ச்சி முழக்கம் ஓயவில்லை. ஆம்புலன்சின் பின்னாலேயே ஓடிய தொண்டர்களும் உண்டு.

கோபாலபுரம் வீட்டின் நிலைப்படியில் ஓர் உருவம் அசையாமல் நின்று கொண்டிருக்கிறது. மாடிப் படிக்கட்டுப் பக்கத்திலிருந்து அந்த உருவத்தையே கவனித்துக் கொண்டிருக்கிறேன். கலங்கிய அலரது கண்களுக்கு நெஞ்சத்தின் உறுதி அணை போடுகிறது.

“அப்பா என்று அழைத்ததைவிட தலைவரே என்று அழைத்ததுதானே அதிகம்” என்று சொன்ன குரலுக்குச் சொந்தமான உருவம், மு.க.ஸ்டாலின்.

எத்தனை ஆண்டுகள் அந்த நிலைப்படியைக் கடந்து, கலைஞர் புன்னகை தவழ வெளியே சென்றிருப்பார்? அன்று எங்கே செல்கிறோம் என்பதை உணர முடியாத நிலையில் செல்கிறாரே என நினைத்து கலங்கி நிற்பதுபோல இருந்தார். குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகளின் கார்கள் எல்லாம் காவேரி மருத்துவமனை நோக்கிச் செல்கின்றன. அவர் மட்டும், நிலைப்படியிலேயே நிற்கிறார்.

மகனாக பாசத்தை வெளிப்படுத்தவும் முடியாமல், தொண்டனாக உணர்ச்சி வசப்படவும் இயலாமல், தன் தோளில் ஏறியுள்ள பெரும் பொறுப்பை உணர்ந்து, எந்த வகையிலும் உடைந்துவிடக்கூடாது என உறைந்து நின்றார். 10 நிமிடங்கள் கழித்து, தன்னைத்தானே நிலைப்படுத்திக்கொண்டு, “காரை எடுங்க’‘ என்றார் மு.க.ஸ்டாலின். அந்த நாள்.. 2018 ஜூலை 28.

அன்று, சந்திரகிரகணம். கலைஞருக்கு பல ஆண்டுகளாக நாள் குறித்தவர்கள் அன்றும் குறித்து வைத்திருந்தார்கள். “கிரகணம் முடிந்ததும் அறிவிப்பு வரும்” எனப் பரப்பிவிட்டிருந்தார்கள். மருத்துவர் எழிலன் மாடியிலிருந்து இறங்கி வந்தார். “என்ன டாக்டர்?” என்றேன் பதற்றமாக. “பி.பி. குறைஞ்சிடிச்சி.. மருந்து ஏத்தணும். அதுக்கு இங்கே வசதியில்லை.. ஆஸ்பிட்டல் கொண்டு போறோம்” என்றார். நம்பிக்கை வந்தது.

காவேரி மருத்துவமனையின் அடித்தளத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலம் காத்திருக்கிறார்கள். 2.15 மணிவாக்கில், கலைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வார்டிலிருந்து வேக வேகமாக வந்தார் சகோதரர் ஆ.ராசா. “Stable.. Normal” என்றார். அந்த இரண்டே சொற்களில் அத்தனை பேர் முகத்திலும் உற்சாகம். ஆனந்தக் கண்ணீர்.
மருத்துவமனை வாசலில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது, “வாழ்க வாழ்க வாழ்கவே.. தலைவர் கலைஞர் வாழ்கவே”

மணி 3. டாக்டர் எழிலன் வெளியே வந்தார்.. “நல்லா இருக்காரு.. stable” என்றார். சந்திர கிரகணம் முடிந்ததும் ‘அறிவிக்கப்படும்’ என நினைத்திருந்த கூட்டம், வழக்கம்போல சூரியோதயத்தை எதிர்பார்க்கும் வேளை வந்தது.

சூரியன் உதித்தது. தலைவர் தீவிர சிகிச்சையில் இருப்பதால், கழகத்தின் பணிகள் முடங்கிவிடுமா? அதை ஓய்வறியாச் சூரியனான கலைஞர்தான் விரும்புவாரா?

கலைஞரின் உடல் இயக்கம் சீராக இருப்பதை உறுதி செய்தது போலவே, கலைஞர் கட்டிக் காத்த இயக்கம் சீராக செயல்படுவதையும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கவனித்து, நிர்வாகிகளை வேலை வாங்கினார்.
ஸ்டாலின் என்பது பெயரல்ல.. செயல்.

அது புயல் வேகம் காட்டுவதற்கான நிலைமை அடுத்த 10 நாட்களில் வந்தது.

(தொடரும்)

Leave A Reply