முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 1 – Govi.Lenin

Share

அவர் எளியவர்களைக் குனிந்து பார்த்து அக்கறையுடன் கவனிக்கிறார். அவரைத் தமிழகம் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கிறது.

முதல்வராகப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் நிறைவடையவில்லை. தேர்தல் களத்தில் பெற்ற வெற்றியைக் கொண்டாடக்கூட முடியவில்லை. நோய்த்தொற்று எனும் பேரிடர் காலத்தைப் போர்க்களத்திற்கான வியூகத்துடன் கையாள்கிறார்.

ஆட்சியின் தொடக்க நிலையில், கட்சி கடந்து அவரது செயல்பாடுகள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனைத் தக்க வைப்பதிலும் மேம்படுத்திக் கொள்வதிலும்தான் அவரது தொடர்ச்சியான வெற்றி உறுதி செய்யப்படும்.

தன்னை இந்த தமிழ்நாட்டு மக்களிடம் மெய்ப்பிப்பதற்கு அவருக்கு அரை நூற்றாண்டு கால இடைவிடாத செயல்பாடுகளும், அசாத்தியமான பொறுமையும் தேவைப்பட்டிருக்கிறது.

கலைஞரின் மகன் என்பது அவரது அரசியல் பயணத்திற்கு வசதியான பாதைதான். அதுவே அந்தப் பாதையில், அவரது வளர்ச்சிக்கு வேகத்தடையாகவும் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

கட்சியின் மூத்த நிர்வாகிகளில் சிலர் அவரது பயண வேகத்தை விரும்பவில்லை. ஒரு கட்டத்தில், கட்சியே பிளவுபட்டது.

குடும்பத்திலும் வேகத்தடைகள் உண்டு. அது அண்ணன்-தம்பி உறவுக்கு வேட்டு வைத்தது.

எதிர்க்கட்சிகள் அவரை எடைக் குறைத்து மதிப்பீடு செய்தன.

பொதுமக்களிடமும் கலைஞர் அளவுக்கு இவர் இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.

கலைஞரின் பன்முகத்தன்மை கொண்ட பேராற்றல் இவரிடம் இல்லாததால், கலைஞரின் மறைவுக்குப் பிறகு தி.மு.க.விலும் தமிழக அரசியலிலும் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகப் பலரும் கணக்குப் போட்டார்கள்.

கலைஞர் இல்லாமல் தி.மு.க சந்தித்த முதல் தேர்தல் களம், 2019 நாடாளுமன்றத் தேர்தல். அதில் தி.மு.க.வை மட்டுமின்றி, கூட்டணி மொத்தத்தையும் தன் தோளில் சுமந்து, இரட்டை ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு எதிராக தமிழகம்-புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்ததுடன், 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, தி.மு.க.வை நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக அமரச் செய்தார்.

அப்போதும் அதை அங்கீகரிக்க அரசியல் விமர்சகர்களுக்கு மனது வரவில்லை. இது அவருக்கு கிடைத்த வெற்றி இல்லை. மோடி எதிர்ப்பலையில் கிடைத்த வெற்றி என வியாக்கியானம் செய்தார்கள்.

தி.மு.க.வுக்கு பயந்து முழுமையான உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், ஊரக உள்ளாட்சித் தேர்தலை மட்டும் நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்தது அ.தி.மு.க அரசு. அதிலும் தி.மு.க.வே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதையும் அவரது வெற்றியாக அங்கீகரிக்கத் தயங்கினர். ஆட்சியாளர்களுக்குப் பயந்து மவுனம் காத்தனர்.

அவரும் மவுனமாகத்தான் தன் பணிகளை செய்து வந்தார். அப்பாவைப் போல பேச மாட்டார் என்பதும் தெரிந்ததுதான். ஆனால், சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றியே கேலி பேசிக் கொண்டிருந்தனர். இதனை முழு நேரத் தொழிலாக மேற்கொண்டவர்களும் உண்டு. அவரது பெயரை-அவரது பேச்சை-அவரது செயல்பாடுகளை கொச்சைப்படுத்தினார்கள்.

அவருக்காக அல்லும் பகலும் ஜோசியம் பார்த்தவர்களும் உண்டு. ராசி இல்லாதவர். கட்டம் சரியில்லை. இலவு காத்த கிளியாக காத்திருக்க வேண்டியதுதான். ஆட்சிக்கு வரவே முடியாது. கூப்புலதான் உட்காரணும் என்று ஆரூடம் கூறியவர்கள் அநேகர்.

அப்படிச் சொன்ன மொத்தக் கூட்டத்தையும் கூப்புல உட்கார வைத்தது, 7-5-2021 அன்று ஒலித்த, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…’ என்ற அவரது குரல்.

‘உளமார‘ உறுதிமொழிந்து பதவியேற்றவரின் உள்ளம் கனிவும் துணிவும் சரிவிகிதமாகக் கலந்த கலவை. அதனை நேரில் கண்ட அந்த நாள், 2018 ஜூலை 28.

நள்ளிரவு கடந்த அந்தப் பொழுதில்… … …
(தொடரும்)

Leave A Reply