இந்திய பிரதமர்கள் – 5.மொரார்ஜி தேசாய்

Share

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் வரும்.

1896 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர் மொரார்ஜி தேசாய்.

பம்பாய் மாகாணத்தில் இருந்த வல்சாத் பகுதியில் பதேலி எனுமிடத்தில் ஆனவில் பிராமண குலத்தைச் சேர்ந்த குடும்பம் இவருடையது.

இப்பகுதி தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ளது. பம்பாய் வில்சன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், குஜராத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அரசுபணி ஆற்றிய தேசாய், 1924ல் அரசு வேலையைத் துறந்தார்.

1930ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். சுதந்திரப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கூர்மையான தலைமை திறனும் உறுதியான உணர்வும் கொண்டவர். குஜராத் மாநிலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களிடையேயும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலும் குறிப்பிடத்தக்க தலைவராக அவர் பரிணமித்தார்.

1934 மற்றும் 37ல் மாகாண தேர்தல்கள் நடந்தபோது மொரார்ஜி தேசாய் மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய பம்பாய் மாகாணத்தின் வருவாய்த்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் செயலாற்றினார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பம்பாய் உள்துறை அமைச்சராகவும், பின்னர் 1952ல் பம்பாய் மாகாண முதலமைச்சராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மராத்திமொழி இயக்கங்களுக்கு தாயகமாக விளங்கிய பம்பாயில் மொழி வழியில் தனி மாநிலம் உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஒரு கடினமான தலைவராக அறியப்பட்ட தேசாய், அதிகாரத்தை கடுமையாக பயன்படுத்துவதிலும் முதன்மையாக இருந்தார்.

1960ல் சம்யுக்தா மகாராஷ்டிரா சமிதி என்ற அமைப்பு ஒரு கடுமையான போராட்டத்தை நடத்தியது. இதில் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தேசாயின் உத்தரவின்படி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 105பேர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் நாடுமுழுவதும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சம்பவமே, தற்போது அமைந்துள்ள மகாராஷ்டிரா எனும் மாநிலம் அமைவதற்கு அடித்தளமாக இருந்தது. உள்துறை அமைச்சர் என்ற முறையில் பொது இடங்களில் அநாகரீக செயல்கள், திரைப்படங்களில் பாலியல் காட்சிகள் உள்பட எதையும் அனுமதிக்கக்கூடாது என்று தேசாய் தொடர்ந்து கூறிவந்தார்.

ஒரு உறுதியான காந்தியவாதியாக இருந்தபோதிலும், தேசாய் சமூக ரீதியாக ஒரு பழமைவாதியாகவே இருந்தார். பெரும் வர்த்தகர்களுக்கு ஆதரவான அவர், சோஷலிச கொள்கைகளை அமுலாக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு நேர் எதிராக, சுதந்திர வர்த்தக கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

காங்கிரஸின் தலைமைப்பொறுப்புக்கு உயர்ந்த தேசாய், பிரதமர் நேருவுடனும் அவரது ஆதரவாளர்களுடனும் முரண்பாடு கொண்டார். நேருவின் உடல்நிலை பாதிக்கப்பட்ட சமயத்தில் அடுத்த பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு மொரார்ஜி தேசாய்க்கு இருப்பதாகவே கருதப்பட்டது.

ஆனால் 1964ல் நேருவின் மறைவுக்குபின்னால் அவரது இடத்திற்கு யார் வருவது என்பதில் போட்டி ஏற்பட்டது. நேருவின் தீவிர ஆதரவாளரான லால் பகதூர் சாஸ்திரி அந்த இடத்திற்கு வந்தார். தேசாய் தொடர்ந்து ஒரு முரண்பட்ட தலைவராகவே நீடித்தார்.

1966ல் சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர், அவர் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டார். இந்திரா காந்தியுடன் அவர் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் தேசாய் 169 வாக்குகள் பெற்றார். 351 வாக்குகள் பெற்ற இந்திராகாந்தியிடம் அவர் தோல்வி அடைந்தார்.

முதலில் அமைச்சரவையில் அவர் சேராமல் வெளியில் இருந்தார். இந்நிலையில் இளம் இந்திராகாந்தியின் அரசு விளைச்சல் குறைவு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அதிகரிக்கும் பிரச்சினைகள் போன்றவற்றால் திணறிக் கொண்டிருந்தது. அப்போது, தேசாயின் செல்வாக்கு அதிகரித்தது.

பின்னர் அவர் 1967ல் அமைச்சரவையில் சேர்ந்தார். சக்தி வாய்ந்த உள்துறை அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டார். ஆனால், நிதி அமைச்சர் பதவி தரப்பட்டது. துணைப்பிரதமர் என்ற பொறுப்பும் அளிக்கப்பட்டது. இதனால் தேசாய்க்கும், இந்திரா காந்திக்கும் இடையில் ஓரளவு சுமுக நிலை ஏற்பட்டது.

1969ல் இந்திரா காந்தியும், அவரது கூட்டாளிகளும் காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தினர். காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இடதுசாரி ஆதரவாளர்களின் உதவியோடு மறுமலர்ச்சி காங்கிரசை துவக்கினார். (காங்கிரஸ் – ஆர்) பின்னர் அது இந்திரா (காங்கிரஸ் -ஐ) காங்கிரஸ் ஆனது.

தேசாயும், மற்ற தலைவர்களும் சேர்ந்து ஸ்தாபன காங்கிரசை துவக்கினர். ஆனால் 1971 பொதுத் தேர்தலில், போரில் வென்ற தலைவர் என்ற முறையில் இந்திராகாந்தியின் செல்வாக்கு ஆதரித்திருந்ததால், ஸ்தாபன காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. எனவே, மீண்டும் தேசாய் எதிர்க்கட்சி வரிசையில் தலைவராக தொடர்ந்தார். சுதந்திரப் போராட்ட காலத்திய பெருமைகளோடு, வாழும் மூத்த தலைவர்கள் கொண்ட போட்டியின் தலைவராக அவர் நீடித்தார்.

1974ல் பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று அலகபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கில் இந்திரா காந்தி குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது. அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி, ஜெயபிராகாஷ், நாராயணனுடன் இணைந்து நாடு முழுவதும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார் தேசாய்.

இந்த சமயத்தில்தான், எந்த ஒரு எதிர்ப்பையும் எதிர்கொள்ள சகிப்புத் தன்மையற்று, 1975ல் அவசரநிலையை பிரகடனம் செய்தார் இந்திரா காந்தி. அதுமட்டுமின்றி, தேசாய் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

1977ல் இந்திராகாந்தி பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்தபோது ஸ்தாபன காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்கட்சிகளும், நீண்டகால எதிரிகளுடன்கூட கைகோர்த்தன. பிராந்திய கட்சிகள் மற்றும் எதிரெதிர் தத்துவார்த்த சிந்தனை கொண்ட கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஜனதா கட்சியை உருவாக்கின.

இக்கட்சி 356 இடங்களை கைப்பற்றியது. சுதந்திரம் பெற்ற பின்பு இந்தியாவில் முதன்முறையாக கிட்டத்தட்ட முழுமையான பெரும்பான்மை பெற்றது இதுவே முதல்முறை. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் தகர்ந்தது. இந்த அணியில் பேச்சுவார்த்தை நடந்து கடைசியில் பிரதமர் பதவிக்கு மொரார்ஜி தேசாய் தேர்வு செய்யப்பட்டார். கூட்டணியின் ஒற்றுமையை காப்பதில் இவரைப் போன்ற ஒருவரே தேவை என்ற எண்ணத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன் அவரை தேர்வு செய்தார்.

81 வயது ஆனபோதிலும் குறிப்பிட்ட நோய் எதுவும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் தேசாய் இருந்தார்.

முரண்பாடுகள் கொண்ட கூட்டணி அரசை தலைமை ஏற்று நடத்திய தேசாய், முரண்பாடுகள் தொடர்ந்து நீடித்ததால், சாதனை எதுவும் படைக்க முடியவில்லை. கூட்டணிக்கென்று தலைவர் எவரும் இல்லாத நிலையில் எதிர்க்குழுவினர் தேசாயை பதவியிலிருந்து வெளியேற்ற முயற்சித்தனர். முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வழக்குகளில் சிக்கிக் கொண்டனர். அவசரநிலை காலத்தில் இருந்த நிலைமை போலவே தற்போதும் நீடித்தது.

எதிரிநாடுகள் என்று கருதப்பட்ட பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் உறவுகளை மேம்படுத்த தேசாய் முயற்சித்தார். 1962 போருக்குப்பின்னர் முதல்முறையாக சீனாவுடன் உறவுகளை இயல்பாக்க உரிய நடவடிக்கைகளை துவக்கினார். பாகிஸ்தான் பிரதமர் ஜியா-உல்-ஹக்குடன் நட்புறவை ஏற்படுத்த தகவல் அனுப்பினார்.

சீனாவுடன் ராஜியரீதியான உறவுகளை மீண்டும் துவக்க தயார் என்று அறிவித்தார். அவசரநிலைக் காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திருத்தங்களை ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் அவசரநிலை பிரகடனத்தை எந்த ஒரு அரசும் பிரயோகிக்காமல் இருக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார்.

1974ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் அணுசோதனை நடைபெற்றது. இந்தியா ஒருபோதும் அணுகுண்டுகளை பயன்படுத்தாது என்றும் இந்தியாவிலுள்ளஅணு உலைகள் ஆக்கபூர்வமான காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தேசாய் அறிவித்தார்.

1977ல் அமெரிக்காவின் ஜிம்மி கார்ட்டர் நிர்வாகம், இந்தியாவிலுள்ள அணுஉலைகளுக்கு கனநீரையும், யுரேனியத்தையும் விற்பனை செய்ய முன்வந்தது. ஆனால், இந்தியாவிலுள்ள அணுசக்தி மையங்களை அமெரிக்கா நேரடியாக கண்கானிக்கும் என்று கூறியது. அதை நிராகரித்த தேசாய், அமெரிக்காவுக்கு முரணான நிலைபாட்டை மேற்கொண்டார்.

1979ல் ஜனதா கட்சியிலிருந்து சரண்சிங் வெளியேறினார். இது, தேசாய் ராஜினாமா செய்யவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தனது 83வது வயதில் தேசாய் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் பம்பாயில் வசித்து வந்தார்.

99வது வயதில் அவர் காலமானார். அவரது தலைமுறையில் கடைசியாக வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட வீரரான தேசாய், தனது வாழ்நாளின் இறுதியில் உரிய கவுரவத்துடன் மறைந்தார். மகாத்மா காந்தியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உறுதியாக பின்பற்றியவர் மொரார்ஜி தேசாய்.

இந்திய உளவுத்துறையின் பிரிவான ரா அமைப்பை இந்திரா காந்தியின் ஏவல் அமைப்பு என்று குறிப்பிட்ட மொரார்ஜி தேசாய், தான் பிரதமரான பின்னர் ரா அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக உறுதியளித்தார். ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவு என்று அழைக்கப்படும் இந்தியாவின் வெளியுறவு உளவு ஸ்தாபனமான ரா அமைப்பின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் தலைவர் பி. ராமன். மொரார்ஜி தேசாயின் நடவடிக்கை பற்றி அவர் இவ்வாறு கூறினார்…

“பாதுகாவலர்கள் இல்லாத தருணத்தில் பாகிஸ்தானிய சர்வாதிகாரி ஜியா-உல்-ஹக்கிடம், அவரது பாகிஸ்தானிய அரசு அணுகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டிருப்பது தனக்கு தெரியும் என்று துணிச்சலுடன் கூறியவர் தேசாய்”

உண்மையான காந்திய சீடரான அவர் ஒரு சமூக செயல் வீரர்: புதிய விஷயங்களை உருவாக்குவதில் வல்லவர்: சிறந்த சீர்திருத்தவாதி. மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட குஜராத் வித்யாபீடம் எனப்பட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக செயல்பட்டார். பிரதமரான பின்னரும்கூட அக்டோபர் மாதங்களில் இந்த கல்வி நிறுவனத்திற்கு வருவதையும், அங்கு தங்குவதையும் வழக்கமாக்கிக் கொண்டார்.

மிகவும் எளிமையான அவர், பிரதமர் பதவி வகித்தக் காலத்திலும்கூட தான் எழுதவேண்டிய கடிதத்தை போஸ்ட்டு கார்டில் தானே எழுதினார். குஜராத்தில் கைரா மாவட்டத்தில் அமுல் எனப்படும் கூட்டுறவு பால் இயக்கத்தைச் சேர்ந்த விவசாயிகளின் கூட்டங்களில் சர்தார் படேலின் வேண்டுகோளுக்கு இணங்க மொரார்ஜி தேசாய் பங்கேற்றார்.

அவரது ஆட்சிக்காலத்தில் பொது விநியோகமுறையில் தேவையற்ற தலையீடுகளை நீக்கினார். வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் சர்க்கரை மற்றும் எண்ணெய் வகைகளை ரேஷன் கடைகளிலும் கிடைக்கச் செய்யும் முறையைக் கொண்டு வந்தார்.

Leave A Reply