உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 11. கவ்குய்ன்

Share

இவரும் பிரான்ஸ் நாட்டவர்தான்.

பால் கவ்குய்ன் பாரீசில் பிறந்தார். தந்தை ஒரு பத்திரிகையாளர். தாயார் பெரூ நாட்டவர். சில அரசியல் காரணங்களுக்காக பிரான்சை விட்டு அவர்களது குடும்பம் பெரூ நாட்டுக்கு சென்றது. கப்பலில் செல்லும் போது கவ்குய்ன்னின் தந்தை கடல் நோயால் இறந்தார். கவ்குய்னுக்கு 19 வயதாகும் போது அவரது தாயார் இறந்தார்.

கவ்குய்னின் இளம்பருவம் மிகவும் கடினமாகவே இருந்தது. தொடக்கத்தில் அவர் ஒரு பிரெஞ்சு வியாபாரியின் கப்பலில் கப்பலோட்டியாக ஆறு வருடங்கள் வேலை செய்தார். பின்னர், வங்கிப்பணிக்கு சென்றார். அதன்பிறகு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு பாரீஸ் பங்கு பரிவர்த்தனை மையத்தில் ஒரு வெற்றிகரமான பங்கு புரோக்கராக இருந்தார்.

1871ல் ஓவியம் வரைவதை ஒரு பொழுதுபோக்காக தொடங்கினார். ஒரு முறை இம்பிரசனிஸ்ட் ஓவியக் கண்காட்சிக்கு சென்றார். அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்து ரசித்தார். அவருக்கும் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் வங்கி வேலையை கைவிடவில்லை. 1873ல் மெட்டே காட் என்ற டானிஷ் பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன.

பங்கு வர்த்தகத்தில் நல்ல வருமானம் வந்தது. மேனார், க்ளாட் மோனெட், அகஸ்டே ரெனாயிர் போன்ற புகழ்பெற்ற இம்ப்ரசனிஸ்ட் ஓவியர்களின் ஓவியங்களை வாங்க முடிந்தது. கவ்குய்ன் வார விடுமுறையில் மட்டுமே ஓவியங்கள் வரைந்தார். பிறகு அங்கிருந்த கொலாரோசி அகாடமியில் மாலைநேர ஓவிய வகுப்புகளுக்கு சென்றார். அவருக்கு பிசாரோ, பால் செசானே ஆகியோர் உதவிசெய்தனர். 1876ல் ஒரு இயற்கைக் காட்சி ஓவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் ஸலோன் டி ஆட்டோம்னெவால் அங்கீகரிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 28.

1883&84ல் கவ்குய்ன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. தனது 35 ஆவது வயதில் கவ்குய்ன் தனது பணக்கார வாழ்க்கையை விட்டு விட்டு பாரீசில் இருந்து ரூயெனுக்கு சென்றார். அவர் வேலை பார்த்த நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் இருந்தது. எனவே அவர் வெகு சுலபமாக இந்த முடிவுக்கு வரமுடிந்தது.


கவ்குய்ன் எடுத்த இந்த திடீர் முடிவு அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை. அவர் டென்மார்க்கில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். 1884ல் அவரையும் குழந்தை களையும் கோபென்ஹெகன் சென்று சந்தித்த கவ்குய்ன் உடனடியாக பிரான்சுக்கு திரும்பினார். அதன்பிறகு இருவருக் கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்தது.

1885ல் கவ்குய்ன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விட்டார். வங்கிப்பணியிலும் பங்கு வர்த்தகத்திலும் ஈடுபட்டபோது இருந்த வாழ்க்கை இப்போது இல்லை. ஒரு ஓவியராக அவரது வாழ்க்கை நிலையில்லாததாக இருந்தது. நிரந்தரமான வருமானம் இல்லை.

பிரிட்டானியில் உள்ள போன்ட்&அவென் சென்று ஓவியர்கள் குழு ஒன்றில் சேர்ந்தார். 6 மாதங்கள் அந்தக் குழுவில் இருந்தார். பின்னர், மீண்டும் பாரீஸ் திரும்பினார். 1887ல் பனாமா சென்றார்.

அங்கு பனாமா கால்வாய் திட்டத்தில் வேலை செய்தார். ஆனால், இரண்டு வாரங்களிலேயே இவர் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி டிஸ்மிஸ் செய்துவிட்டனர். அதையடுத்து, அவர் மார்ட்டினிக் சென்றார். இந்தக் காலகட்டத்தில் மேற்கத்திய நாகரிகம் மீது அவருக்கு வெறுப்பு வளர்ந்து வந்தது. மீண்டும் பாரீசுக்கு திரும்பினார். ஒரு ஓவியராக நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என விரும்பினார்.


1898ல் கவ்குய்னின் ஓவிய பாணியில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. வன்மையான, அசாதாரணமான வண்ணங்கள், பரந்த தட்டையான வெளிகளுடன் கூடிய பூடகமான கருவைக் கொண்ட ஓவியங்களை அவர் வரைந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் வரைந்த தி யெல்லோ கிரிஸ்ட் மிகவும் புகழ்பெற்ற ஒரு படைப்பு. இந்த ஓவியத்தில் ஜப்பானிய பாணியான இருகோண கலையின் பாதிப்பு இருந்தது. 19ம் நு£ற்றாண்டின் இறுதியில் இம்ப்ரசனிஸ்ட் மற்றும் போஸ்ட் இம்ப்ரசனிஸ்ட் ஓவியர்கள் மத்தியில் ஜப்பானிய ஒவியங்களின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

அதன்பிறகு தெற்கு பிரான்சில் உள்ள ஏர்லஸ் சென்ற கவ்குய்ன் ஒவியர் வின்சென்ட் வான்கோக்குடன் இரண்டு மாதங்கள ஒன்றாகப் பணியாற்றினார். ஆரம்பத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் பணியாற்றினாலும், காலப்போக்கில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. ஒருநாள் இருவருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டு, அதன் விளைவாக வான்கோக் மனநலம் பாதிக்கப்பட்டார். அந்தச் சமயத்தில்தான், தனது காதை தானே அறுத்துக்கொண்டார்.

இந்தச் சம்பவத்தோடு ஏர்லஸை விட்டு வெளியேறிய கவ்குய்ன், மீண்டும் பாரீஸ் வந்தார். 1891ல் கவ்குய்ன் வரைந்த 30 ஓவியங்கள் விற்பனையாகின. இதில் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு தெற்கு கடலில் உள்ள டாகிட்டி தீவுக்குச் சென்றார். அங்குள்ள பாப்பிட்டீயில் இரண்டு வருடங்கள் கிட்டத்தட்ட ஒரு ஆதிவாசி மனிதனை போன்ற வாழ்க்கையை அவர் நடத்தினார். இந்தக் காலகட்டத்தில் அற்புதமான ஓவியங்களை அவர் வரைந்தார்.

1893ல் பிரான்ஸ் திரும்பினார். மீண்டும் 1894ல் தென்கடலுக்கு கப்பலில் சென்றார். அவரது கடைசி ஐந்தாண்டுகால வாழ்க்கை வறுமையுடனும் நோயுடனும் கழிந்தது. அவரை மேகநோய் தாக்கியது. 1897ல் அவர் தற்கொலைக்கு முயன்றார். என்னதான் மன உளைச்சல்கள் இருந்தாலும், ஓவியம் வரைவதை மட்டும் 1903ல் இறக்கும் வரையில் அவர் கைவிடவேயில்லை. இறக்கும் போது அவர் மார்குயீசஸ் தீவுகளில் வசித்து கொண்டிருந்தார்.

அவர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஸலோன் டி ஆட்டோம்னியில் அவரது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

அப்போதுதான் கவ்குய்னின் மேதைமையை உலகம் புரிந்துகொண்டது. கவ்குய்ன் நவீன ஓவிய வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்பை செலுத்தியுள்ளார் என்று அவருக்கு பாராட்டு கிடைத்தது. ஆனால் அவரைப் பொறுத்தவரையில் அது காலங்கடந்த பாராட்டு.

டாகிட்டியில் அவர் வசித்தபோது, மரப்பாளத்தில் சித்திரம் செதுக்கினார். இது தொடர்பாக நோவா நோவா என்ற பெயரில் புத்தகம் ஒன்று வெளிக்கொண்டுவர திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்தப்புத்தகம் இறுதிவரையில் வெளிவரவே இல்லை. கடைசி காலகட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மரப்பாள ஓவியங்களை செதுக்கியிருந்தார்.

Leave A Reply