உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 10.மோனெட்

Share

இவரும் பிரான்ஸ் நாட்டு ஓவியர்தான்.

இவருடைய முழுப்பெயர் க்ளாவுட் மோனெட். 1840 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பாரீஸில் பிறந்தார். ஆனால் வளர்ந்தது முழுக்க லே ஹாவ்ரேவில்.

ஓவியம் வரைவதில், ஃபாவுவிஸம், கியூபிஸம், அப்ஸ்ட் ராக்ட் என பலவகையான பாணிகள் பின்பற்றப்பட்டன. 19ம் நு£ற்றாண்டில் பிரான்ஸில் இம்ப்ரசனிசம் எனும் புதிய பாணி அறிமுகமானது. அந்த பாணியை உருவாக்கிய படைப்பாளிக ளில் ஒருவர் மோனெட். மோனெட், தான் இறக்கும் வரையில் ஒரு முழுமையான இம்ப்ரசனிஸ்ட் ஓவியராகவே இருந்தார்.

சிறுவனாக இருக்கும் போது கோட்டு ஓவியங்களை (கேரிகேச்சர்) வரைய ஆரம்பித்தார். அவரது வீட்டிற்கு பக்கத்தில் ஓவியர் யூஜினே பவுடின் குடியிருந்தார். அவர் சிறுவன் மோனெட்டின் கேரிகேச்சர் ஓவியங்களை பார்த்து, அவனது திறமையை மெச்சினார். அவரே மோனெட்டுக்கு ஓவியப் பாடங்களை கற்றுக் கொடுத்தார்.
மோனெட்டின் ஓவியத்திறமை குறித்து அவனது குடும்பத்தினருக்கு பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை.

1860ல் மோனெட் தனது குடும்பத்தினருடன் வட ஆப்பிரிக்காவுக்கு செல்ல நேர்ந்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு பாரீஸ் திரும்பினார். அங்கு க்ளேயரின் ஓவியக் கூடத்தில் ஓவியம் கற்றார். அங்கு ரெனாயிர், சிஸ்லெ, பாசிலி போன்ற ஓவியப் படைப்பாளிகள் குறித்து அறிந்து கொண்டார். இந்தப் படைப்பாளிகள் அனைவரும் பின்னாளில் இம்ப்ரசனிஸ்ட் இயக்கம் உருவாகக் காரணமாக இருந்தவர்கள்.

அந்தக் காலத்தில் ஓவியர்கள் வழக்கமாக தங்களது ஓவியக் கூடத்தில்தான் ஓவியங்களை வரைந்து வந்தனர். இந்த நடைமுறையை மாற்றினார் மோனெட். அருகில் இருந்த ஃபோன்டெய்ன்ப்ளூ எனப்படும் வனப்பகுதிக்கு சென்று, திறந்த வெளியில் ஓவியங்களை வரைந்தார். வழக்கமான ஓவியர்களின் பாணியை மீறிய இந்த புதிய பாணியை பொதுமக்களும், ஓவிய விமர்சகர்களும் கேலி செய்தனர். 1870&71ல் ஃப்ரான்கோ&ப் ரூசியன் யுத்தம் வெடித்தபோது, மோனெட் தனது நண்பர் பிசாரோவுடன் லண்டன் சென்றார். அங்கு உள்ள அருங்காட்சி யகத்தில் அவர் வில்லியம் டர்னெரின் ஓவியங்களைப் பார்த்தார்.


1880க்குப் பிறகு இம்ப்ரசனிஸ்ட் ஓவிய பாணி பொதுமக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற தொடங்கியது. இதையடுத்து, மோனெட் மற்றும் அவரது ஓவிய நண்பர்களின் ஓவியங்க ளுக்கு வரவேற்பு கிடைத்தது. இதனால் மோனெட்டுக்கு கணிசமான வருமானம் வரத்துவங்கியது. 1883ல் பாரீசில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிவர்னி எனும் இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கினார் மோனெட். அதன்பிறகு 1890ல் அதே வீட்டை விலைக்கு வாங்கினார். 1926ம் ஆண்டு இறக்கும் வரையில் இந்த வீட்டில்தான் குடியிருந்தார்.

ஒரே பொருளை கருவாக எடுத்துக்கொண்டு அதேயே பல்வேறு வெளிச்ச அமைப்பில் வெவ்வேறு ஓவியங்களாக வரைந்தார். இந்த பாணியில் அவரது ஓவியங்களில் இடம் பெற்ற முதலாவது கரு அவரது வீட்டிற்கு பின்னால் இருந்த வைக்கோற்போர். காலையில் அவர் ஓவியம் வரைய ஆரம்பித்தால், அவர் ஓவியம் வரைந்து முடிப்பதற்குள் வெயில் போய்விடும். அவரது திட்டப்படி வைக்கோற்போரை பல்வேறு வெளிச்சப் பின்னணியில் வைத்து வரைய முடியாமல் இருந்தது.

இதற்காக மோனெட் ஒரே சமயத்தில் வெவ்வேறு வெளிச்சப் பின்னணியில் பல ஓவியங்களை வரைந்தார். இறுதியாக வைக்கோற்போரை வெவ்வேறு வெளிச்சப் பின்னணியில் 25 ஓவியங்களாக ஒரே சமயத்தில் வரைந்து முடித்தார்.

1889ல் லண்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் உட்பட முக்கியமான இடங்களை கருவாக எடுத்துக்கொண்டு பல ஓவியங்களை வரைந்தார். அவர் ஏதேனும் ஒன்றைப் பார்த்து அதை ஓவியமாக வரையும்போது அடிக்கடி பனி மூடிவிடும். இதை அவர் ஒருமுறை கிண்டலாக, ‘பனி இல்லாவிட்டால், லண்டன் அழகான நகரமாக இருக்காது’ என்று கூறினார்.


பிறரது ஓவியங்களில் இருந்து மோனெட்டின் ஓவியங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு தனிப் பாணியுடன் அமைந்திருந்தது. அதற்கான காரணத்தை அவரே ஒருமுறை கூறியுள்ளார், ‘யாரும் எளிதில் எடுத்துக்கொள்ள முடியாததை நான் விரும்புகிறேன். மற்ற ஓவியர்கள் ஒரு பாலம், ஒரு வீடு, ஒரு படகு போன்றவற்றை வரைகின்றனர். அவ்வளவுதான் முடிந்தது. ஆனால் நான் அந்த பாலம், அந்த வீடு, அந்தப்படகை சுற்றியுள்ள காற்றையும் சேர்த்து வரைய விரும்புகிறேன்’ என்றார் மோனெட்.

கடைசி காலத்தில் மோனெட் உடல் நலமில்லாமல் அவதிப்பட்டார். 1907க்குப் பிறகு அவரது கண்பார்வை மங்கியது. வாதநோயும் தாக்கியது. அவருக்கு ஓவியம் வரைவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் இறுதிவரையிலும் அவர் ஓவியங்களை வரைந்தார்.

தனது தோட்டத்தின் மத்தியில் லில்லி மலர்கள் பூத்த ஒரு குளத்தை உருவாக்கினார். அதன் ஊடாக ஜப்பானிய மாடலில் அழகிய மரப்பாலம் ஒன்றை கட்டினார். தோட்டத்திலேயே தனக்காக ஒரு ஓவியக் கூடம் ஒன்றையும் கட்டிக்கொண்டார். சுற்றுப்புற தட்ப வெப்பம் தனது ஓவியப் பணிக்கு இடையூறாக இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

1926 பிப்ரவரி மாதம் அவரது 22 அல்லிமலர்கள் ஓவியங்கள் பிரெஞ்சு அரசாங்கத்தின் பாராட்டைப் பெற்றன.
1926 டிசம்பர் 5 ஆம் தேதி நுரையீரல் புற்றுநோயால் மோனெட் இறந்தார்.

Leave A Reply