உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 8. ரெனாயிர்

Share

இவர் பிரான்ஸ் ஓவியர்.

இவருடைய நிஜப்பெயர், பைரே அகஸ்ட்டி ரெனாயிர். பிரான்ஸ் நாட்டில் உள்ள லிமோகெஸ் என்ற ஊரில், 1841 பிப்ரவரி 25 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை லியனார்டு ரெனாயிர். தாயார் மார்க்கரேட் மெர்லெட். இவர்கள் இருவருக்கும் 6 ஆவது குழந்தையாக ரெனாயிர் பிறந்தார். 1844 ஆம் ஆண்டு ரெனாயிர் குடும்பம் லிமோகெஸில் இருந்து பாரீசுக்கு சென்றது. அங்கு லியனார்டு ரெனாயிர் தையல்கார ராக வேலை பார்த்தார்.

1854ல் ரெனாயிர் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு விட்டு லெவி ஃப்ரெர்ஸ் நிறுவனத்தில் பீங்கான் ஓவியராக பயிற்சிக்கு சேர்ந்தார். அவரது திறமைக்கு ஒரு சிறந்த பீங்கான் ஓவியராக வளர்ந்திருப்பார். ஆனால், அவர் வேலை பார்த்த நிறுவனம் 1858ல் திவாலானது. அதன்பிறகு ரெனாயிர் பல்வேறு வேலை களைச் செய்தார். ஆனாலும் ஒரு முழுநேர ஓவியராகவேண்டும் என்பதே அவரது ஆர்வமாக இருந்தது.

1860, ஜனவரி 24ல் ரெனாயிர் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற லாவ்ரே அருங்காட்சியகத்தில் படியெடுக்க அனுமதி அளிக்கப் பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகள் இந்த பணியில் ஈடுபட் டிருந்தார்.

அந்த நேரத்தில் 18ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்களான பிரகோனார்ட், லான்க்ரெட், வாட்டெயு எல்லாவற்றுக்கும் மேலாக பவுச்சர் போன்றவர்களின் ஓவியங்களை ரசிக்க துவங்கினார். பவுச்சரின் பாத் ஆஃப் டயானா ஓவியத்தை தனது வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த ஓவியமாக கொண்டாடினார் ரெனாயிர்.

அடுத்த ஆண்டு 1861ல் மார்க்&காப்ரியல் சார்லஸ் க்லெயர் என்னும் ஒவிய ஆசிரியரின் பள்ளியில் சேர்ந்தார். அந்த ஓவிய ஆசிரியர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர். அதே நேரம் எகோலி டெஸ் பியூஸ்-ஆர்ட்ஸில் தனது பெயரை பதிவு செய்தார். 1862 ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து ஓரிரண்டு வருடங்களுக்கு அவர் பதிவு செய்திருந்தார். 1863ல் பிரான்சில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிக்காக ரெனாயிர் தனது ஓவியத்தை அளித்தார்.

ஆனால், ஜூரிகள் அதை தேர்வு செய்யவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு அவரது ஓவியம் கண்காட்சியில் இடம் பெற்றது. இது ரெனாயிருக்கு கிடைத்த முதல் வெற்றி. எஸ்மெரெல்டா டான்ஸிங் வித் ஹெர் கோட் அரவ்ண்ட் எ ஃபயர் இல்லுமினேட்டிங் தி என்டையர் கிரவ்ட் ஆஃப் வேகபாண்ட்ஸ் என்ற தலைப்பில் இடம் பெற்ற அந்த ஓவியத்தை என்ன காரணத்தாலோ கண்காட்சி முடிந்ததும் அழித்து விட்டார் ரெனாயிர்.

கிலேயர் ஸ்டுடியோவில் ரெனாயிர் மற்ற இளம் ஓவியர்களுடன் பணியாற்றினார். இளம் ஓவியர்களுடன் பணியாற்றும் போது ரெனாயிர் தான் ஒரு பெரிய ஓவியர் என்ற பாணியில் பணியாற்றுவதில்லை. மிகச் சாதாரணமாகவே பணியாற்றுவார்.

Leave A Reply