1961ல் கலைஞர் பொதுச்செயலாளர் ஆவதை தடுக்க ஈவெகி சம்பத் செய்த சதி! – Athanurchozhan

Share

கலைஞர் தலைமையில் நியமிக்கப்பட்ட பொறுப்புக்குழுவின் பிரச்சாரத்தால் சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியவுடன் கலைஞரின் செல்வாக்கு கட்சியினர் மத்தியில் உயரத் தொடங்கியது. அத்துடன் திமுகவில் கோஷ்டி மனப்பான்மையும் உருவாகத் தொடங்கியது.

இந்நிலையில் மாயவரத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் திமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட முடியாது என்ற திருத்தத்தை இணைக்க ஈ.வே.கி.சம்பத் முன்மொழிந்தார்.

1961ல் நடைபெறவுள்ள திமுகவின் மூன்றாவது மாநாட்டில், நெடுஞ்செழியனுக்கு பிறகு, கலைஞரை பொதுச்செயலாளர் பொறுப்புக்கு தேர்வு செய்ய பெரும்பான்மையான கட்சிக்காரர்கள் முடிவு செய்திருந்தனர்.

சம்பத்தின் தீர்மானத்தின் மூலம் கலைஞர் பொதுச்செயாலாளர் பொறுப்புக்கு போட்டியிடுவதையே தடுக்க முடியும் என்ற நிலை உருவானது. எனவே, சம்பத்தின் தீர்மானம் கட்சிக்குள் அதிருப்தியையும் பகைமையையும் உருவாக்க வழியமைத்துவிடும் என்று அண்ணா சொன்னார். அதேசமயம், சம்பத் முன்மொழிந்த திருத்தத்துடன், மாநாகராட்சி உறுப்பினர்களாக இருப்பவர்களும் கட்சிப் பொறுப்புகளுக்கு போட்டியிட முடியாது என்ற திருத்தத்தையும் இணைக்கும்படி சம்பத்தை அண்ணா கேட்டுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, அந்தத் தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில்தான் திமுகவின் மூன்றாவது மாநாடுக்கு கட்சியினர் தயாராகினர். மாநிலம் முழுவதும் அமைப்புத் தேர்தல் நடைபெற்றது. அப்போதே கலைஞர்தான் அடுத்த பொதுச்செயலாளராக வர வேண்டும் என்றும், மதியழகன் வந்தால் நல்லது என்றும் தொண்டர்கள் மத்தியில் கருத்து பரவத் தொடங்கியது.

இதற்கு மாற்றாக, சம்பத் ஒரு கருத்தை உருவாக்க முயன்றார். அதற்காகத்தான் மாயவரம் பொதுக்குழுவில் அடித்தளம் அமைத்தார். அவருக்கு கட்சியில் சினிமா நடிகர்கள் முக்கியத்துவம் பெறுவதை ஏற்க முடியவில்லை. அவர்கள் எடுத்தவுடனே மேல்மட்டத்திலிருந்து செயல்படத் தொடங்கி விடுகிறார்கள் என்று கூறிவந்தார். அதுமட்டுமின்றி பொதுக்கூட்டங்களில் அவர்கள் வரும்போது ஏற்படும் ஆரவாரம், இடையூறு ஆகியவற்றையும் அவர் குறைகூறினார்.

இத்தகைய கோஷ்டி மனப்பான்மையுடன்தான் மூன்றாவது மாநாடு வேலூரில் கூடியது. திமுகவின் திருத்தப்பட்ட சட்டத்தின்படி, மதியழகன் பொதுச்செயலாளராக வாய்ப்பு இருந்தது. ஆனால், நாள் நெருங்க நெருங்க கழகத்தின் நீண்ட நாள் தோழரான சி.பி.சிற்றரசுவுக்கும், கடமை வீரரான என்.வி.நடராசனுக்கும் பொதுச்செயலாளர் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தது. அவர்களை பலரும் ஊக்குவிக்கத் தொடங்கினர். தேர்தலுக்கு முன் இரவுவரை இழுபறி நீடித்தது. மதியழகனும் சிற்றரசுவும் போட்டியிடுவதென்ற சூழ்நிலை உண்டாகிவிட்டது.

பொதுச்செயலாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. கடுமையான நெருக்கடியைப் போக்க, கோஷ்டி மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிஞர் அண்ணா அவர்களே பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு முன்னணித் தலைவர்கள் வந்தனர்.

அந்த அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. புதிய சட்டதிட்டத்தின்படி ஈ.வே.கி.சம்பத் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய தலைமையில் பொதுக்குழு கூடியது. அறிஞர் அண்ணா அவர்கள் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, மாயவரம் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி குறித்து ஈ.வே.கி.சம்பத் கொண்டுவந்து சேர்க்கப்பட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று கே.ஏ.மதியழகன் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது.

அதைத்தொடர்ந்து கலைஞர் கருணாநிதி கட்சியின் பொருளாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கலைஞருக்கு 36 வயதுதான் ஆகியிருந்தது. அண்ணா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கலைஞருக்காக சம்பத்தின் தீர்மானத்தையே திரும்பப்பெற வைத்து பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைமைக்கழகச் செயலாளராக கே.ஏ.மதியழகனும், அமைப்புச் செயலாளராக என்.வி.நடராசனும் பிரச்சாரக்குழுச் செயலாளராக நெடுஞ்செழியனும் தொழிற்சங்கச் செயலாளராக க.அன்பழகனுமாக முக்கியப் பொறுப்புகளுக்கு முன்னணி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

தேர்தல் சுமுகமாக முடிந்தாலும், அண்ணா அவர்களால் 12 ஆண்டுகள் வளர்க்கப்பட்ட குடும்பப்பாசம் சீர்குலைந்தது. கட்டுப்பாடும், ஒற்றுமையும் சீர்குலைந்தது. சம்பத் கோஷ்டி என்றும் கருணாநிதி கோஷ்டி என்றும் மக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் பேச்சு நிலவும் சூழல் உருவாகியது.

ஒருவர் செயலை மற்றவர் குறைகாணும் போக்கு அதிகரித்தது. அமைதியே உருவான அண்ணாவுக்கு இது வேதனை அளித்தது. நல்லதோர் சூழலை உருவாக்க அவர் முயற்சித்தார். ஆனால் கோஷ்டி மனப்பான்மை அதிகரிக்கவே செய்தது.

கட்சிக்குள் மிதவாதத் தன்மை அதிகரித்துவிட்டதாகவும், கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் கலைத்துறையில் ஈடுபடக்கூடாது என்றும் முழுநேரக் கட்சிப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஈ.வே.கி.சம்பத் கூறிவந்தார். இது கோஷ்டிப் பூசலை அதிகரிக்கவே செய்தது.

குறிப்பாக நடிகர்களும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களும் பொதுக்கூட்ட மேடைக்கு வரும்போது மக்கள் மத்தியில் ஆரவாரம் ஏற்படுவதை சம்பத் பெரிய குறையாக கூறி தனது வாதத்தை தோழர்கள் ஒப்புக்கொள்ளும்படி செய்ய முயன்றார்.

இந்நிலையில்தான் ‘திராவிடநாடு’ இதழில் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற தொடர் கட்டுரையை ஐந்து வாரங்கள் எழுதினார். இந்தக் கட்டுரை அறிஞர் பெர்னாட் ஷா எழுதிய ‘ஆப்பிள்ஹார்ட்’ என்ற ஆங்கில நாடகத்தை தழுவி எழுதப்பட்டது.

இந்தக் கட்டுரையை வாசித்த சம்பத், அண்ணா தன்னை தாக்குவற்காகவே இந்தக் கட்டுரையை எழுதியதாக கருதிக் கொண்டு, கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ பத்திரிகையில் ‘அண்ணாவின் மன்னன்’ என்ற கட்டுரையை எழுதி வெளியிட்டார்.

சம்பத்தின் இந்த நடவடிக்கை கழகத் தோழர்கள் மத்தியில் அருவறுப்பை ஏற்படுத்தியது. கலைஞர் கருணாநிதி மீது சம்பத் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு ஏற்பட்ட பொறாமை யுணர்ச்சி அண்ணாவின் மீது திருப்பப்பட்டது. அண்ணாவின் பெருமைகளை குறைத்து சிறுமைப்படுத்த முயன்றனர்.

தனது விருப்பப்படியெல்லாம் கட்சியில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை சம்பத்துக்குள் வளர்ந்தது. ஜனநாயக இயக்கத்தில் பலதரப்பட்டவர்களும் இருப்பார்கள். எல்லோரையும் அனுசரித்து அவரவரின் பங்களிப்பை இயக்கத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற பரந்த சிந்தனை சம்பத்திடம் இல்லாமல் போனது. சம்பத் ஏதோ ஒரு முடிவுடன் கோஷ்டிப் பூசலை வளர்த்து வந்தார் என்பது 1961 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பொதுக்குழுவில் வெளிப்பட்டது.

(அதுபற்றி அடுத்த கட்டுரையில்…)

Leave A Reply