மார்க்ஸ் படத்தை வைத்து அண்ணா தனது கடிதத்தில் சொன்ன கதை!

Share

பூஜா மாடத்துப் படங்களை அருகே சென்று பார்த்தான் வாலிபன். திடுக்கிட்டுப்போய், கிழவியைக் கூப்பிட்டு, ஏசுவின் படத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு படத்தைச் சுட்டிக் காட்டி “இது என்ன?’’ என்று கேட்கிறான்.

இவரும் ஒரு அருளாளர்தான் என்கிறாள் கிழவி. “பெயர்?’’ – “தெரியாது’’. “எப்படிக் கிடைத்தது? யார் கொடுத்தது? – யாரும் கொடுக்கவில்லை – ஊரில் எங்கோ ஓரிடத்தில் இது விழுந்து கிடந்தது, பார்த்தேன்.’’ – “பார்த்து?’’ “இவர் ஒரு அருளாளர் என்று உணர்ந்தேன், எடுத்து வந்தேன்’’

“இவர் அருளாளர் என்று யார் சொன்னார்கள் உனக்கு?’’

“ஒருவரும் சொல்லவில்லை; எனக்கே தோன்றிற்று முகத்தைப் பார்த்ததும். மற்ற அடியார்களைவிட இவர் மேலானவர் என்று தோன்றிற்று. அதனால்தான், முன்பு ஏசுவுக்குப் பக்கத்தில் இருந்த அடியார் படத்தைச் சற்றுத் தள்ளி மாட்டிவிட்டு, இவர் படத்தை ஏசுவுக்குப் பக்கத்திலே மாட்டி பூஜை செய்தேன்.’’

வாலிபன் புன்னகை புரிந்தான் – இந்த முறை ஏளனமாக அல்ல – பெருமிதத்துடன். ஏனெனில் கிழவி கண்டு கொண்டு வந்து பூஜா மாடத்தில் வைத்து, இவர் ஏசுவுக்குப் பக்கத்தில் இருக்கவேண்டிய அருளாளர் என்று கருதி பூஜை நடத்தி வந்தது, – எந்தப் படத்துக்கு என்றால், காரல்மார்க்ஸின் படம்!

“இந்த அருளாளரின் போதனையின்படி நடந்தால் ஏழை எளியவர்கள் புது வாழ்வு பெறுவார்கள்’’ என்று கூறினான் களிப்புடன்.

மழை நின்றது….

ஒரு நாள் கிழவி, வெளியே சென்று அலைந்துவிட்டு, அலுத்துப்போய் வீடு திரும்பினாள். வீட்டு எதிரே சாமான்கள் நிரம்பிய பாரவண்டி நிற்கிறது. வீட்டின் கூரைப் புறத்தில் இரண்டு ஆட்கள் உட்கார்ந்துகொண்டு, பலகைகளைப் பழுது பார்ப்பதும், கெட்டுப்போனவைகளை அப்புறப்படுத்திவிட்டுப் புதிய பலகைகள் அமைப்பதுமாக இருக்கிறார்கள்.

விவரம் புரியாமல் முதலில் காகூவெனக் கூச்சலிடுகிறாள்.

“கிழவி! ஏன் கூச்சல் போடுகிறாய். உன் வீடு மெத்தக் கலனாகிவிட்டிருக்கிறது. அது விழுந்து விடாதபடி, பழுது பார்த்துக் கொடுக்கிறோம். உன்னுடைய வீட்டை யாரும் தூக்கிக்கொண்டு போய்விட மாட்டார்கள், பதறாதே’’ என்று கூறினார்கள்.

“என் வீடு விழாதபடி செய்கிறீர்களா! புதுசாக்குகிறீர்களா! நல்லவர்களப்பா நீங்கள். ஆமாம், யாருடைய உத்திரவு இதற்கு – இந்த ஏழையின் கஷ்டத்தைத் தெரிந்து இந்த உதவியைச் செய்யச் சொன்ன உத்தமன் யார்? அருளாளர் யார்? அடியார் யார்?’’ என்று நெஞ்சு நெகிழக் கேட்கிறாள் கிழவி.

வீடு பழுது பார்ப்பவர்கள், “நாங்கள் மாவட்ட பொது உடைமைக் காரியாலய உத்திரவு பெற்று, இதனைச் செய்கிறோம்‘’ என்றார்கள். கிழவிக்குப் புரியவில்லை.

வீடு செப்பனிடப்பட்டாகிவிட்டது. குளிர் தெரிய ஒட்டாதபடி ஆக்கப்பட்டுவிட்டது. உள்ளே செல்கிறாள் கிழவி; உட்காருகிறாள்; நிம்மதி பெறுகிறாள்; என் பூஜை பலித்தது; என் பிரார்த்தனைக்குப் பலன் கிடைத்தது என்று கூறி தொழுகை நடத்துகிறாள் – குறிப்பாக, பெயர் தெரியாத புதிய அருளாளருக்கு.

காரல்மார்க்சின் படம் கர்த்தரின் படத்துடன் ஒரே வரிசையில் பூஜா மாடத்தில் இருக்கிறது.

அருள் பாலித்தவர் என்று நெஞ்சு நெக்குருகத் தொழுகிறாள் கிழவி – அவள் அறியமாட்டாள் பூஜா மாடங்கள் பணக்காரர் தமது ஆதிக்கத்துக்காக ஏற்படுத்தி வைத்த கபடக் குகைகள் என்று போதித்த காரல்மார்க்சின் திரு உருவப்படம் அது, என்பதை.

Leave A Reply