இந்தியாவின் சாபக்கேடு அதன் நீதிமன்றங்கள்!

Share

கொரோனா சூழல் காரணமாக… இந்த ஆண்டு உச்சநீதிமன்றத்திற்கு ஐம்பது நாட்கள் கோடை விடுமுறை.

வழக்கமாக இது 42 நாட்கள் மட்டுமாம். மே 8-ம் தேதி விடுமுறை தொடங்கி ஜூன் மாதம் 26-ம் தேதிவரை நீடிக்குமாம்.

அதே கொரோனா சூழல்…. எட்டு மணி நேரம் பணி செய்ய வேண்டிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அதன் அடுத்தகட்டப் பணியாளர்கள், சுகாதாரத்துறையின் பல்வேறு நிலையில் இருக்கும் ஊழியர்கள்,காவல்துறையினர் போன்ற எல்லோரும் அல்லும் பகலும் அயராது வேலை செய்கின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொஞ்சமும் சலிப்பின்றி தங்களால் முடிந்த மட்டும் அர்ப்பணிப்போடு உழைக்கின்றனர். இன்னும் எவ்வளவு காலம் நீளுமோ, அவ்வளவு காலமும் அதைச்செய்யத் தயாராகவும் உள்ளனர்.

இதே பார்வையை நீதியரசர்கள் பக்கம் திருப்புவோம்.

நல்ல காலத்திலேயே சாதாரணமான ஒரு தீர்ப்புக்கு பல வருடங்கள் ஆகும். இந்த கொரோனா காலத்தில் இவர்கள் எத்தனை லட்சம் தீர்ப்புகளை வாரி வழங்கியிருப்பார்கள் என்பது அந்த நீதிதேவதைக்கே வெளிச்சம். கீழமை நீதிமன்றங்கள் வருடக்கணக்காக விசாரித்த பிறகு கொடுக்கும் தீர்ப்பை குப்பையில் போட்டுவிட்டு, அதே ஆவணங்களின் அடிப்படையில் நேரெதிர் தீர்ப்பை வழங்கும் மேலமை நீதிமன்றங்கள் நிறைந்த விசித்திரமான நாடு இது.

அதே கீழமை நீதிமன்ற நீதிபதிகள்தான் படிப்படியாக வளர்ந்து உச்சநீதிமன்ற நீதியரசர்களாகவும் மாறுகின்றனர். எல்லா நீதிபதிகளுக்கும் ஒரே சட்டப்புத்தகம்தான். தீர்ப்புகள் மட்டும் ஆம்பூர் மட்டன் பிரியாணியை வாங்கிக்கொண்டுபோய் ஆண்டிப்பட்டியில் திரியும் தெருநாய்க்கு போடச்சொல்வதுபோல இருக்கிறது.

பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும்பாலான நீதிபதிகள் பிரிட்டிஷ் காரர்கள். கோடைவிடுமுறை என்ற பெயரில் தங்கள் சொந்தபந்தங்களைப் பார்க்க, சொந்த நாட்டிற்குச் சென்றுவர இந்த நடைமுறையை வைத்திருந்தார்கலாம்.

செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனாருக்கு சட்டப்படியான தண்டனை கொடுத்த அதே தீர்ப்பில் அவரின் தேசப்பற்றையும், சமூகத்தில் அவருக்கு இருந்த நற்பெயரையும் நினைவுகூர்ந்து, சிறையில் அவரை மிகுந்த கண்ணியத்துடன் நடத்தவேண்டுமென்ற உத்தரவையும் பிறப்பித்தார் ஒரு வெள்ளைக்கார நீதிபதி. அதுபோல அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எத்தனையோ நல்ல நடைமுறைகள் இருக்கும்போது, நம் நாட்டிற்கு தேவையில்லாத, நீதிமன்றத்திற்கு கோடைவிடுமுறை என்ற நடைமுறையைப் பிடித்துக்கொண்டு தொங்குகின்றனர்.

தெளிவான மனநிலையில், தெளிவான தீர்ப்பை கொடுக்கட்டும் என்ற எண்ணத்தில்தான் நீதி வழங்குவதற்கு கால நிர்ணயம் எதுவும் இல்லாமல் வைத்துள்ளனர். அந்த ஒரு பிரிவை மட்டும் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு இவர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. வானிலிருந்து இறங்கி வந்தவர்கள் என்ற நினைப்பு. சரியோ? தவறோ? வழக்கின் தன்மைக்கேற்ப நீதிவழங்க காலநிர்ணயம் நிர்ணயிக்க வேண்டும். நீதிபதிகளுக்கு கடிவாளம் போடவேண்டிய காலம் வந்துவிட்டது.

ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனே சுட்டுக்கொல்ல வேண்டும் என்ற மனநிலை நாடு முழுவதும் இருந்தது. நம் நாட்டு நீதிபரிபாலணத்தின் லட்சணத்தால் அதே குற்றவாளிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்தப் போக்கு தேசத்திற்கு பெரும் ஆபத்து.

தேசப்பற்றுள்ள நீதிபதிகள் சில நூறுபேர்கள் மட்டும் மனதுவைத்தால், தேங்கிக்கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகளை ஒரு சில ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவரலாம்.

இவர்கள் மனதுவைக்கப் போவதுமில்லை. சாமான்யனுக்கான நீதி கிடைக்கப் போவதுமில்லை.
இந்தியாவின் சாபக்கேடு அதன் நீதிமன்றங்கள்.

-Arul Raj

Leave A Reply